24.07. 2011 இனப்படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் -திமுக பொதுக்குழு தீர்மானம்.இன்று காலை திமுக தலைவர் கலைஞர் தலைமையில் கோவையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கிடையில் கோவையில் துவங்கிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 2,000 மேற்பட்ட திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் இன்று 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தங்களுக்கு வாக்களித்த ஒரு கோடியே 45 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் இறுதிப்போரின் போது போர்குற்றங்களில் ஈடுபட்டோரை தண்டிக்க இந்தியா சர்வதேச நாடுகளையும் ஐநா அவையையும் நிர்பந்திக்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த முன் வரவேண்டும் என்று இதற்கு சர்வதேச அழுத்தங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதி முக்கியமான இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுள்ளதோடு, கச்சத்தீவை மீட்கவும், சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவும் சட்டரீதியான முயற்சிகளை இந்திய அரசு செய்ய வேண்டும் என்றும்,சமச்சீர் கல்வியில் நீதிமன்றங்களின் உத்தரவை அவமதிக்கும் வகையில் நடக்கும் தமிழக அரசுக்கு கண்டனமும், முல்லை அணையில் தமிழக விவசாயிகளின் உரிமையை மீட்க நடவடிக்கை கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இத்தீர்மானங்களோடு மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட கலைஞருக்குப் பின்னர் திமுகவின் தலைமை ஸ்டாலினுக்கா? அழகிரிக்கா என்ற சர்ச்சைக்கு பொதுக்குழு தற்காலிக ஒய்வு கொடுத்துள்ளது. நேற்று கோவை சென்ற கலைஞரை அழகிரி, ஸ்டாலின் ஆகியோர் தனித்தனியாக சந்தித்துப் பேசியதில் கலைஞர் இப்போதைக்கு கட்சி கடும் நெருக்கடிகளை சந்திப்பதால் தலைமை தொடர்பான விவாதங்களை இப்போதைக்கு எவரும் பொதுக்குழுவில் எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
ஸ்பெக்டரம் வழக்குகள்,கைதுகள், ராஜிநாமாக்கள் என கட்சியின் சூழலை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கும் படி கலைஞர் இரு புதல்வர்களிடமும் கேட்டுக் கொண்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கட்சியின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு ஆலோசனைக்குழு ஒன்றை அறிவித்திருக்கிறது.
பொதுக்குழு பாராளுமன்ற உறுப்பினரான டி.கே.எஸ், இளங்கோவன் தலைமையிலான அக்குழுவில் ஷா,பிச்சாண்டி, முக்கமது கனி, வி,பி.ராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு தமிழகம் முழுக்க கட்சி சந்திக்கும் பிரச்சனைகள் சவால்கள் குறித்து விசாரித்து தலைமைக்கு கொடுக்கும் அறிக்கை தொடர்பாக கட்சியில் மாற்றங்கள் செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்படுள்ளது.