டான்ஸ் வேணாம்: எம்.எல்.ஏ., போராட்டம்
பானாஜி: கோவா, கலன்கூட்-பாகா கடற்கரை பகுதியில், சட்டவிரோதமாக டான்ஸ் பார்கள் நடந்து வருகின்றன. இதனால், அப்பகுதி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, பா.ஜ., எம்.எல்.ஏ., மைக்கேல் லோபோ உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாசித் திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில், மாசித் திருவிழாவிற்காக இன்று கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
நிதிஷ்குமாருக்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை: பீகார் முதல்வராக பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து செய்தியில், 'எனது சார்பாகவும், தி.மு.க., சார்பாகவும் முதல்வராக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் முந்தைய ஆட்சி காலத்தில் பீகார் வளர்ச்சி பாதையை நோக்கி சென்றது. வரும் காலங்களிலும் அதே நிலை தொடரவும், பீகாரில் அமைதியும், வளர்ச்சியும் பெருகவும் வாழ்த்துகிறேன்,' என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
கொஞ்ச நாளைக்கு ராகுலை விடுங்க: சோனியா
புதுடில்லி: தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா அளித்த பேட்டியில், 'ராகுலுக்கு சில நாட்கள் விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர், ஏற்கனவே விடுப்பில் சென்றுள்ளார். அவருக்கு சில வாரங்கள் ஓய்வு கொடுங்கள்,' என்றார். இது குறித்து பா.ஜ.,வின் சம்பத் பத்ராவிடம் கருத்து கேட்டபோது, 'ராகுல் ஒய்வெடுத்துக் கொள்வது என்பது அவர்களின் உள்கட்சி விவகாரம்,' என்றார். காங்கிரஸ் கட்சியின் அடுத்தடுத்த தோல்விகளை தொடர்ந்து, ராகுல் மீதான விமர்சனங்கள் கடுமையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.,களுக்கு பிரணாப் வேண்டுகோள்
புதுடில்லி: பல்வேறு விவகாரங்கள் குறித்து பார்லிமென்ட்டில் புயலை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், பார்லிமென்ட்டை சுமுகமாக நடத்த எம்.பி.,க்கள் ஒத்துழைக்க வேண்டும் என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கோரி உள்ளார்.
தி.மு.க.,வினர் வௌிநடப்பு
சென்னை: சட்டசபையில் தே.மு.தி.க., வினர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததாக கூறி, அவை நடவடிக்கைகளில் இருந்து ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.
ஆவண திருட்டில் மேலும் விசாரணை
புதுடில்லி: பெட்ரோலிய அமைச்சக ஆவணங்களை திருடி விற்ற வழக்கில் மேலும் பலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் விசாரணை நடத்த டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், சாஸ்திரி பவனில் உள்ள பெட்ரோலிய அமைச்சக அலுவலத்தை பார்வையிட்ட போலீஸ் அதிகாரிகள், அங்கும் விசாரணை நடத்தினர்.
டில்லி சபாநாயகர் கோயல்
புதுடில்லி: டில்லி சட்டசபை சபாநாயகராக ஆம் ஆத்மியைச் சேர்ந்த ராம்நிவாஸ் கோயல் மற்றும் துணை சபாநாயகராக பந்தனா குமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளீன் இந்தியா திட்டம்: பிரணாப் நம்பிக்கை
புதுடில்லி: பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில், பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது. ஏழைகள் வாழ்வை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லவும், அனைத்து தரப்பினரும் மேன்மையடையவும் எனது அரசு பாடுபடுகிறது. எதிர்காலம் நல்ல பல முன்னேற்றங்களை எதிர்நோக்கி உள்ளது. அரசின் திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிளீன் இந்தியா திட்டம் பாராட்டுதலுக்குரியது. எம்.பி.,க்கள் தங்களின் 50 சதவீத நிதியை தொகுதி தூய்மை படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். வரும் 2019 ல் கிளீன் இந்தியா திட்டம் முழு அளவில் வெற்றி பெறும்,' எனறார்.
பார்லி.,யில் ஜனாதிபதி உரை
புதுடில்லி: பார்லிமென்ட், பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், 'நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு அரசுக்கும் பட்ஜெட் தொடர் என்பது முக்கியமானது ஆகும். வௌிநாட்டு முதலீடுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. உணவு உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சவாலான எதிர்காலத்தை நாடு எதிர் கொண்டுள்ளது,' என்றார்.
காஷ்மீர் ஆட்சி: நாளை அறிவிப்பு
புதுடில்லி: காஷ்மீரில் பி.டி.பி.,கட்சியும், பா.ஜ.,வும் இணைந்து ஆட்சி அமைக்கின்றன. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பி.டி.பி.,யின் முப்தி மெகபூபா டில்லி வந்துள்ளார். கூட்டணி ஆட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவும், முப்தி மெகபூபாவும் நாளை வௌியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் மகாத்மா சிலை வரும் 14-ல் திறப்பு
லண்டன்: இங்கிலாந்து நாட்டின் பார்லிமென்ட் வளாகத்திற்குள் உள்ள மகாத்மா சிலை வரும் 14-ம் தேதி திறந்து வைக்கப்படும் என பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மகாத்மாவிற்கு சிலை வைப்பது இரு நாடுகளின் இடையேயான உறவு குறித்த முக்கியத்துவத்தை எடுத்து காட்டுவதாக உள்ளது. இதன் மூலம் இருநாடுகளிடையேயான உறவு பலப்படும் என தெரிவித்தார். மகாத்மாவின் உருவசிலையை அந்நாட்டின் பிரபல சிற்பியான பிலிப் ஜாக்சன்வடிவமைத்துள்ளார். காந்தியின் சுதந்திர போராட்டம் துவக்கியதன் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு சிலை திறக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹசாரே போராட்டம் : ராகுல் பங்கேற்க நிபந்தனை
புதுடில்லி: மத்திய அரசின் நில கையகப்படுத்துதல் குறித்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்தில் ராகுல் பங்கேற்க அன்னா ஹசாரே நிபந்தனை விதித்துள்ளார். இது குறித்து அன்னாஹசாரே கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நில கையகப்படுத்தும் அவசர சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. இதனை எதிர்த்து விவசாயிகள் உள்பட அனைத்து மக்களும் போராட வேண்டும். தான் நடத்த உள்ள போராட்டத்தில் காங்.,மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதாக கூறுகின்றன. இதன் மூலம் அவைகள் அரசியல் லாபம் அடைய நினைக்கி்ன்றன. போராட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தால் பொதுமக்களில் ஒருவராக அமர்ந்து போராடலாம். அதே நேரத்தில் மேடை மீது அமரக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் சர்ச்சை ஏன்?
புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, முந்தைய காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு, 2013ல், பார்லிமென்டில் தாக்கல் செய்தது. இதன் பின், ஆட்சிக்கு வந்த பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, அதில் சில திருத்தங்களை செய்து, அவசர சட்டம் பிறப்பித்தது. இதன்படி, ராணுவம், ஏழைகளுக்கான வீட்டு வசதி, தொழில் வளாகங்கள் அமைத்தல், அரசு - தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டங்கள், கிராமப்புற கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கு நிலங்களை கையகப்படுத்தும்போது, அந்த நிலங்களுக்கு சொந்தமானவர்களிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை.
இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தை தான், தற்போது எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து, போராட்டம் நடத்தி வருகின்றன.
அமர்த்தியா சென் விளக்கம் சொல்ல வேண்டும்
அமர்தியா சென் ராஜினாமா சர்ச்சை குறித்து, சமூக ஆர்வலர் பானு கோம்ஸ் கூறியதாவது:
* காஷ்மீர் போலவே தொலைநோக்கற்ற அசட்டு ஷரத்துகளால், அரசியல் உள் நுழைந்து மேலாண்மையை சிக்கலாக்கி இருக்கும் இன்னொன்று, நாளந்தா பல்கலைக் கழகம்.
* 'சவுத் ஏஷியன் இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி' என்ற அடையாளத்தின் கீழ், பெருமளவு நிதியை அளிப்பது இந்திய அரசாக இருந்தாலும், அந்த நிதியை செலவழிக்கும் வரைமுறைகளில் இந்திய அரசுக்கு பங்கு கிடையாது. அதனால், மேலாண்மையிலும் ஓரளவு பங்கு தான் உண்டு.
* இந்த பல்கலையில், 2,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை துறையான - சி.ஏ.ஜி., அறிக்கை கூறுகிறது. முறைகேடு அறிக்கைக்கு சரியான விளக்கத்தை, பதவியில் இல்லாவிட்டாலும் அமர்தியா சென் சொல்ல வேண்டும்.
*அரசியல் தனமான பரபரப்பு குற்றச்சாட்டுகளை சொல்வதன் மூலம் கவனத்தை திசை திருப்ப முடியாது.
ஸ்மார்ட் சிட்டி அமையவுள்ள 12 நகரங்கள்
புதுடில்லி: நாட்டில் உள்ள, 12 முக்கிய துறைமுகங்களில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 'ஸ்மார்ட் சிட்டி'களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி,
1. கண்ட்லா (குஜராத்)
2. மும்பை (மகாராஷ்டிரா)
3. ஜே.என்.பி.டி., (மும்பை, மகாராஷ்டிரா)
4. மர்மகோவா (கோவா)
5. புது மங்களூரு (கர்நாடகா)
6. கொச்சி (கேரளா)
7. சென்னை
8. எண்ணுார்
9. துாத்துக்குடி
10. விசாகப்பட்டினம் (ஆந்திரா)
11. பிரதீப் (ஒடிசா)
12. கோல்கட்டா(மேற்கு வங்கம்) ஆகிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படுகின்றன.
2019க்குள், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு: கட்காரி
புதுடில்லி: ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படுவது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், இந்தியாவில் கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்ற கருத்து, சர்வதேச நாடுகளிடம் உள்ளது. எனவே, நாட்டின் கட்டமைப்பு வசதியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறைகளில், 2019க்குள், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றார்.
லோக்பால் திருத்தத்திற்கு சி.பி.ஐ., யோசனை
புதுடில்லி:ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா, கடந்த டிசம்பரில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, அதில் என்னென்ன திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்து, லோக்பால் மசோதா ஆய்வு குழு பரிசீலித்து வருகிறது.தமிழகத்தைச் சேர்ந்தவரும், காங்., ராஜ்யசபா எம்.பி.,யுமான, சுதர்சன நாச்சியப்பன் இந்த குழுவின் தலைவராக உள்ளார். அவர் கூறியதாவது:லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்து, அடுத்த மாதம், 25க்குள் பார்லிமென்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த மசோதாவில் என்னென்ன திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து, பொதுமக்களிடமும், பல்வேறு அமைப்புகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. இதுகுறித்து, பத்திரிகைகளில் விளம்பரமும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சி.பி.ஐ., மற்றும் சி.வி.சி., ஆகிய அமைப்புகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. அந்த அமைப்புகளின் உயரதிகாரிகள், சில யோசனைகளை தெரிவித்து உள்ளனர்; அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மத்திய பணியாளர் மற்றும் பயிற்சியை துறையை சேர்ந்த அதிகாரிகளும், சில கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். ஒவ்வொரு விஷயமாக ஆய்வு செய்து, மசோதாவில் என்னென்ன திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பது பற்றிய அறிக்கையை, பார்லிமென்டில் தாக்கல் செய்யவுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
5000 விவசாயிகளுடன் பார்லி.,யை முற்றுகையிட காங்., திட்டம்
புதுடில்லி: பார்லி., கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படும் எனவும், முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்தவும் அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில், மக்கள் விரோத மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, முக்கிய மசோதாக்கள் நிறைவேற ஆதரவு கேட்டு மத்திய அரசு தங்களை அணுகியதாக கூறியுள்ளது. இதனிடையே, நில கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சி, இந்த மசோதாவுக்கு எதிராக வரும் 25ம் தேதி டில்லியில் போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்தில் காங்., துணைத்தலைவர் ராகுல் பங்கேற்க உள்ளார் எனவும் அறிவித்துள்ளது. தொடர்ந்து வரும் 25ம் தேதி 5 ஆயிரம்விவசாயிகளுடன் காங்., தலைவர்கள் சென்று பார்லி.,யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது.
மாணவர்கள் சாதனையாளராக மாற பிரதமர் மோடி விருப்பம்
புதுடில்லி: தேர்வை சுமையாக கருதாமல் வெற்றிக்கு இலக்காக மனதில் கொள்ள வேண்டும் என ரேடியோ மூலம் பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மன்கிபாத் என்ற நிகழ்ச்சி வாயிலாக ரேடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் பேசி வருகிறார். இன்று தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரதமர் மோடி பேசியதாவது, மாணவர்கள் தேர்வை சுமையாக கருதாமால், வெற்றிக்கு இலக்காக மனதில் கொள்ள வேண்டும். தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்குவழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.படிபடி என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நெருக்கடி தராமல் , மற்றவர்களை விட நம் குழந்தைகள் சிறந்த படிப்பாளியாக வரவேண்டும் என்ற நோக்கத்தில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அணுக வேண்டும். தேர்வுக்கு தயாராக இருக்கும் மாணவர்களின் இலக்கும் சிந்தனையும் தெளிவாக இருக்க வேண்டும்.
குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவது அவர்களுக்கு நெருக்கடியை தரும். குடும்பத்தினர் தரும் நெருக்கடி குழந்தைகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் தேர்வு எழுதும் மாணவர்கள் அழுத்தத்திற்கு ஆளாக கூடாது. தேர்வில் தேர்ச்சி பெறுவது முக்கியம். ஆனால் இதனை சுமையாக கருதக்கூடாது. வாழ்க்கையில் போட்டி சிறந்ததாக அமையும். நாளைய வாழ்க்கை சிறப்பாக அமைய இப்போதே இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். சில நேரங்களில் நமது நடவடிக்கைகள் குழப்பத்தை தரும். நமது சாதனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் சாதனையாளராக மாற வேண்டும் என விரும்புகிறேன். உங்களுடனே நீங்கள் போட்டியிடுங்கள். மற்றவர்களுடன் அல்ல. உங்களுக்கு சகோதரி இருந்தால், அவர் தாயாருக்கு உதவி செய்து கல்வி கற்பதை காணலாம் என கூறினார்.