குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

செம்மொழி என்றால் என்ன?

செம்மொழி என்றால் என்ன?

03.01.கிறிசுஆண்ட2012தமிழாண்டு2042-செம்மொழியென்றால் முதலில் தெளிவாக சொல்வதானால் பிறமொழி எழுத்துக்கள் சொற்கள் இன்றி மொழிபெயர்புகளற்ற சுயஇலக்கண விருத்தி, சுயமான இலக்கியங்கள் கொண்டு 1000 ஆண்டுகள் முதல் 2000ஆண்டுகளுக்கு முற்பட்டவையான செம்மையான  மொழியே செம்மொழி அவற்றில் தலைசிறந்து நிற்பதாக தமிழ் இருப்பது பெருமைக்குரியது. (சிவந்தமொழியல்ல) தமிழ்நாடெங்கும் கோலாகலம். படித்தவர்கள்,படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது செம்மொழி மாநாடு நடப்பதுப் பற்றி.

அரைத்த மாவையே அரைக்கும் மசாலா சினிமாவுக்கு சென்றால் கூட படம் ஆரம்பிக்கும் முன்பு ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ என ஏ. ஆர். ரஹ்மான் பாடி செம்மொழி மாநாட்டைப் பற்றி தெரியப்படுத்தி விடுகிறார்.

ஆனால் மாநாடு பற்றித் தெரிந்திருந்தாலும் பெரும்பாலானோருக்கு செம்மொழி என்றால் என்ன என்று தெரியவில்லை. செம்மொழி என்பதற்கு பலரும் விளையாட்டாய் ஏதாவது விளக்கம் கொடுத்து பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் இதன் பொருளுணர்ந்தவர்கள் நெஞ்சை நிமிர்த்தி தமிழனாய் பிறந்ததற்கு பெருமிதம் கொள்வார்கள்.

சரி. செம்மொழி என்றால் என்ன? ஆங்கிலத்தில் classical language என்பதை தான் தமிழில் செம்மொழி என்கிறோம். உலகில் தமிழையும் சேர்த்து 9 மொழிகள் செம்மொழியாக உள்ளன. கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், பாரசீகம், சீனம், அரேபியம், எபிரேயம், தமிழ் ,கன்னடம் ஆகிய மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றுள்ளன. ஒரு மொழி செம்மொழி ஆக வேண்டும் என்றால் குறைந்தது 1000 ஆண்டுகளாவது பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். அந்த பழமையைப் பறைச்சாற்ற இலக்கிய படைப்புகளும், கலைகளும் இருக்க வேண்டும். இவை இருந்தால் அம்மொழி செம்மொழி அந்தஸ்தைப் பெறும்.

 

நம் தமிழ் மொழியோ 4000 ஆண்டுகள் பழமையானது. அதற்கு திருக்குறள், சிலப்பதிகாரம் போல ஏராளமான இலக்கியச் சான்றுகளும் இருக்கின்றன. கலைகளிலும் நம் தமிழ் கலாச்சாரம் கோலோச்சுகிறது. கட்டடக் கலைக்கு ஸ்ரீவில்லிப்புதூர், தஞ்சாவூர் போன்ற பழமையான ஆலயங்களும், சிற்பக் கலைக்கு மாமல்லப்புரம் போன்ற அற்புதங்களும் நம் கண் முன்னே இருக்கிறது. எங்கிருந்தோ தேடிப் பிடித்து ஆராய்ச்சி செய்தெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. தமிழின் பெருமையை உணர்த்த ஏராளமான இலக்கிய, கலைச் சான்றுகள் இருக்கின்றன.

செம்மொழி என்றால் சிவந்த மொழி என்று பொருளல்ல. செம்மையான மொழி என்று அர்த்தம். அதாவது ஒரு மொழி போதிய அளவு வாழ்ந்திருந்தால்தான் அதில் ஒரு முதிர்ச்சியிருக்கும். அதாவது அதற்கு போதுமான இலக்கண விதிகள் இருக்கும். நேற்று புதிதாக ஒரு மொழி உருவாகியிருந்தால் அதில் ஒரு மொழிக்கு தேவையான அளவு இலக்கண இலக்கியங்கள் இருக்காது. அந்த மொழி பக்குவப்பட பல ஆண்டுகள் நிச்சயம் தேவை. அதனால்தான் குறைந்தது 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டுமென்பது விதி.

தமிழில் இலக்கணங்கள் தெளிவாக இருக்கிறது. உதாரணமாக ஆண்பால் எது? பெண்பால் எது? அஃறிணை எது? எது என பிரித்துக் கூறுவதில் குழப்பமேயில்லை. வண்டி (காடி) எனும் சொல் பெண்பால் என இந்தியில் இருப்பது போன்ற குழப்பங்கள் தமிழில் இல்லை.

செம்மொழிகளில் பல இன்று வழக்கொழிந்து விட்டன. அவற்றை இன்று பேசக் கூட ஆளில்லை. ஆனால் இன்றும் நம் தமிழ் பீடுநடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. அதை நாம் இன்றும் பேசவும் எழுதவும் செய்கிறோம். அது மட்டுமின்றி கணிணி பயன்பாட்டில் கூட தமிழ் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அதாவது தமிழ் தவிர வேறு மொழி எதுவுமேத் தெரியாதவர்கள் கூட முழுமையாக கணிணியை பயன்படுத்தும் அளவு பல மென்பொருள்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

நம் தமிழின் சிறப்புகள் இத்தோடு நின்று விடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழ் இன்று முற்றிலுமாக மாறிவிடவில்லை. உதாரணமாக கிரேக்க காவியங்களை கிரேக்கர்கள் இன்று படித்தால் ஒரு வார்த்தை கூடப் புரியாது. ஆனால் தமிழில் சங்கப் பாடல்களை இன்று படித்தாலும் ஏதேனும் ஓரிரு வார்த்தைகள் தவிர மற்றவை நன்கு புரியும்.

செம்மொழியால் என்ன பயன்?

தமிழ் செம்மொழி அந்தஸ்துப் பெற்றதால் இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அதனை ஏற்கும். அதன்பின், அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களிலும், தமிழ்த்துறை உருவாகும். தமிழ் மொழி, தமிழ்க்கலை, இலக்கிய ஆய்வுகள் முனைப்பாக நடைபெறும். இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு, தமிழைச் செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதை ஏற்கும். உலகப் பல்கலைக்கழகங்களில் இப்போது, கீழ்த்திசை மொழிகளில் ஒன்றாக தமிழ் இருந்துவரும் நிலைமை மாறி, தனியே தமிழ்த் துறைகள் உருவாக்கப்படும்.

மேலும் செம்மொழி இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சில விஷயங்கள் இன்று நவீனத்துவம் அடைந்து அதை நாம் ஏதோ ஜப்பான்காரன் கண்டுப்பிடித்ததாக நினைத்துக் கொண்டு பயன்படுத்திக் கொண்டிருப்போம். இதுப் போன்ற சங்கதிகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு பல புதுப்புதுத் தகவல்கள் வெளிவரும். அதனால் இன்று நம்மிடையே இருக்கும் பல பழக்க வழக்கங்களுக்கு காரணக் காரியங்கள் புரியும். இதுப் போன்ற பல ஆராய்ச்சிகள் செய்வதால் தமிழறிஞர்களுக்கு உலகளவில் மவுசுக் கூடும்.

’செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுதுக் காதினிலே...’ என்பதற்கிணங்க நம் தமிழின் பெருமைகளைப் பற்றிப் பேசினால் நம் காதுகளுக்கு இனிமையாக தானிருக்கிறது. ஆனால் தமிழை வாழ வைக்க இத்தனை செலவு செய்து செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசு ஒரு விஷயத்தில் இன்னும் கொஞ்சம் அக்கறைக் காட்ட வேண்டும். இன்றும் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் பலர் தமிழில் எழுதப் படிக்கவேத் தெரியாது என்கின்றனர். அவர்கள் இனி வீட்டிலும் வெளியிலும் சமஸ்கிருதத்திலேயே பேசப் போவதுப் போல பள்ளியில் சமஸ்கிருதம் எடுத்துப் படிக்கின்றனர். அல்லது பிரெஞ்சு, இந்தி என தமிழ் தவிர மற்ற மொழிகளை எடுத்துப் படிக்கின்றனர். அவர்களால் பேருந்துகளில் எழுதியிருக்கும் ஊர் பெயரைக் கூடப் படிக்கத் தெரியாது என மிகப் பெருமையாகக் கூறிக் கொள்கின்றனர்.

உலக மொழிகள் அனைத்தும் வேண்டுமானாலும் படித்துக் கொள்ளட்டும். ஆனால் தமிழ்நாட்டிலேயே படித்துவிட்டு தமிழில் எழுதப் படிக்க தெரியாதவர்களை என்னவென்று சொல்வது. இதுப்போலக் கூறி தமிழைப் புறக்கணிக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் சமுதாயமாவது நூறு சதவீதத்தினருக்கும் தமிழில் எழுதப் படிக்க தெரியும் என்ற நிலையை உருவாக்குவோம்.

செம்மொழிகளில் வாழும் மொழியாக இருப்பது தமிழ் மட்டுமே: ஆய்வரங்கத்தில் தமிழுக்கு புகழாரம்.......................................................................................

கோவை: ""கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, 70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்,'' என்று, கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் ஆனந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க துவக்கவிழா, கொடிசியா வளாகத்திலுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நடந்தது.  இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சிவத்தம்பி தலைமை வகித்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

 

கிரிகோரி ஜேம்ஸ்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்; தற்போது ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார். அகராதி ஆய்வில் தலை சிறந்தவர். அவரது பேச்சு: மொழி என்பது ஆன்மா பயணத்தின் பாதை. தமிழைக் காக்கவும், தமிழை வளர்க்கவும் புதிய துணிச்சலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓராயிரம், ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட மொழியை, மேலும் பாதுகாக்க, இந்த ஆய்வரங்கத்தின் கருத்துக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

 

உல்ரிக் நிக்லாஸ்: (ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், அங்குள்ள தமிழர் ஒருவரை மணந்து, தமிழை முறையாகப் பயின்று, அங்குள்ள கலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.) நீண்ட காலத்துக்குப் பின், தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்கு கருணாநிதியின் முயற்சியால் செம்மொழித் தகுதி கிடைத்து இருக்கிறது. தமிழ்த்தாய்க்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. ஜெர்மனுக்கும், தமிழகத்துக்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. 17வது நூற்றாண்டிலேயே ஜெர்மனியைச் சேர்ந்த அறிஞர், தரங்கம்பாடிக்கு வந்து தமிழ் மொழி பயின்று, தமிழ் மொழியில் நூல்களை எழுதியுள்ளார். அதிலிருந்து, 300 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழி அங்கு மதிக்கப்பட்டு வருகிறது. கலோன் பல்கலைக்கழகத்தின் 1943லிருந்து தமிழ்த்துறை செம்மையாக செயல்படுகிறது. தமிழில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப்படிப்பு வரை அங்கே படிக்கும் வசதியுள்ளது. தமிழகத்துக்கு வெளியே உள்ள தமிழ் நூலகங்களில் பெரிய நூலகம் அங்குள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அங்குள்ளன.

 

ஜெர்மனியில் தமிழ்த் தாய்க்கு கோவில் கட்ட முயற்சி எடுத்து வருகிறோம். எட்டாவது தமிழ் இணைய தள மாநாட்டை நாங்கள் நடத்தினோம். தற்போது செம்மொழி மாநாட்டுடன் இணைந்து 9வது இணைய தள மாநாடு நடத்துவது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவுள்ளது. தமிழ்மொழி, பழம் பெருமை வாய்ந்த மொழி என்பதோடு, நவீன கணினி யுகத்துக்கு ஏற்ற மொழியாகவும் உள்ளது.  எனது தாய் வீடு ஜெர்மனி என்றாலும், புகுந்த வீடு இந்த தமிழகம் தான். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் மருமகள் நான். தமிழ்த்தாயின் வளர்ப்பு மகளாகவே நான் வாழ்கிறேன்.

 

ஆனந்தகிருஷ்ணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர்: தமிழ்மொழி வரலாற்றில் இலக்கியமும், இணையமும் சேரும் முதல் நிகழ்வு இங்கு நடக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்த, சீரிய முயற்சியாக இந்த இணைய தள மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த 1997ல் கணினித் தமிழ் குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பியபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த கோவிந்தசாமி, முதன் முதலாக அங்கு இணையதள மாநாட்டை நிகழ்த்தினார். தமிழ் இணையதளம், பல மைல்களைத் தாண்டி, சில மைல்களை தவற விட்டுள்ளது. இதை உணர்ந்த இளைஞர்கள், புதிய முயற்சிகளை எடுத்துள்ளனர்.

 

தமிழ் இணைய மாநாட்டில் 15 தலைப்புகளில் கணினித் தமிழ் பற்றி ஆய்வு நடக்கிறது.  இதில் தரப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் மீது விவாதம் நடந்து, அவை செயல்பாடுகளாக மாற வேண்டும். மாநாட்டுக்குப்பின், இந்த தீவிரம் மங்கி விடக்கூடாது. கணினி மொழியியல் மையத்தை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்த வேண்டும், வடிவமைப்பு, எழுத்து வடிவங்கள் குறித்த ஆய்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும்.  ஏழு விதமான ஆராய்ச்சிகளுக்கு தலா 10 கோடி ரூபாய் வீதம் 70 கோடி ரூபாய் நிதியை கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, பல்கலைக்கழகங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும்.

 

வா.செ.குழந்தைசாமி, துணைத்தலைவர், உலகத் தமிழாய்வு நிறுவனம்: சிந்து வெளி நாகரிகம், சீன நாகரிகம், மெசபடோமியா நாகரிகம் உள்ளிட்ட உலகின் பழமையான ஆறு நாகரிகங்களில், நான்கு நாகரிகங்கள் அடையாளம் தெரியாமல் மறைந்து விட்டன. சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம் மட்டுமே உயிர்ப்புடன் உள்ளன. இந்த நாகரிகத்தை அடித்தளமாகக்கொண்ட மொழிகளில், சீன மொழியும், இந்திய மொழிகளில் வடமொழியும், தமிழ் மொழியும் தான் அழியாமல் உள்ளன. அந்த மொழி, நம் தாய் மொழி என்பதால், நாம் ஓர் அங்குலம் உயர்ந்திருக்கிறோம். இந்த பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டியது முக்கியம். ஆரிய நாகரிகத்துக்கு அடிப்படை சமஸ்கிருதம்; திராவிட நாகரிகத்தின் அடையாளம் தமிழ் மொழி. ஆனால், இந்திய நாகரிகம், தத்துவத்துக்கு அடிப்படையாக தமிழ் மட்டுமே விளங்குகிறது என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் தொன்மை வாய்ந்த இரு மொழிகளுக்குள் 2000 ஆண்டுகளாக போட்டி இருந்து வருகிறது. அது இப்போது பகைமையாக மாறும் சூழல் உள்ளது.  உண்மையில், இந்த இரு மொழிகளும், இந்திய நாகரிகத்தின் தூண்கள். அதற்கு மாறாக, தமிழின் தொன்மை குறித்து, சில கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

 

தமிழ் இலக்கிய நூல்கள், பாண்டிய மன்னர்கள் காலத்தில், 9வது நூற்றாண்டில் கற்பனையாக எழுதியவை என்று ஹெர்மன் டிக்கன் எழுதியுள்ளார். ஷெரிலேக் என்ற அறிஞர், இந்திய மொழிகள் அனைத்தும் வட்டார மொழிகள் என்று கூறுகிறார். ஆனால், தமிழ் பற்றி தனியாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை. வடமொழி ஆதரவாளர்கள் இயக்கம், வெளிநாடுகளில் புதிய கருத்தைப் பரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது என்று தமிழின் தொன்மைக்கு ஆதரவாக வாதிடும் மொழி வல்லுனர் ஜார்ஜ் ஹார்ட் கூறுகிறார். சங்க கால இலக்கியங்களின் தொன்மையை நிலை நாட்ட வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. இவ்வாறு தமிழறிஞர்கள் பேசினர். விழாவில் பங்கேற்ற தமிழறிஞர்களுக்கு ஆய்வரங்க அமைப்புக்குழு செயலர் கனிமொழி பொன்னாடை மற்றும் நூல்களை வழங்கினர். ஆய்வரங்க சிறப்பு மலரை நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட, முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார். ஆய்வரங்க பொருண்மைகளை முதல்வர் வெளியிட, சிவத்தம்பி பெற்றுக் கொண்டார்.  பொன் கோதண்டராமன் (பொற்கோ) வரவேற்றார்; அவ்வை நடராசன் நன்றி கூறினார். மொரீஷியஸ், மலேசியா வாழ் தமிழர்களின் சார்பில், முதல்வருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.


தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? – விளக்கக் கட்டுரை!!

தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?


மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும்.

இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு?

இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்.

இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா?

இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது. ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன. எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது. அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது. ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.

நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார். இப்படி உருவாகும் தாழ்வு மனப்பான்மை அவருடைய வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும்.

அது சரி, அப்படியானால் உயர்வான மொழி என்று எதைக் கருதலாம்?

அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது. நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை. ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தங்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள்.

சான்று: நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா? தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார். அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார்.

இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன சிக்கல்?

இன்னொரு மொழியில் பெயர் வைக்கும் போது பல நேரங்களில் அப்பெயர்களின் பொருளே தெரியாமல் வைத்து விடுவோம்.

அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க. சியாமளா என்பதன் பொருள் கறுப்பாயி என்பதாகும். கறுப்பாயி எனத் தமிழில் பெயர் வைக்கத் தயங்கும் ஒருவர் இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர் வைப்பதை விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா? ‘கனவு’ எனப் பெயர் வைக்கத் தயங்கும் நாம் ‘சுவப்னா’ என்று அதே பொருள் தரும் பெயரை வேறு மொழியில் வைப்பது அடிமை மனப்பான்மையே அன்றி வேறென்ன?

சில நேரங்களில் நம்முடைய குடும்பப் பெரியவர்களே அப்பெயர்களைச் சொல்லத் தடுமாறுவார்கள். நம்முடைய குழந்தைகளின் பெயரை நம் இல்லப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவது நன்றாக இருக்குமா?

அதற்காக, ‘ஞான பிரகாசு’ என்னும் பெயரைத் தமிழாக்கி ‘அறிவு வெளிச்சம்’ என்று வைக்கச்சொல்கிறீர்களா?

நீங்கள் ‘ஞான பிரகாசு’ என்று இன்னொரு மொழியில் பெயர் வைப்பதற்குக் காரணமே அப்பெயர் ஒயிலாக இருப்பதாக எண்ணும் சிந்தனைதான்! ‘ஞான பிரகாசு’ என்று உங்களுக்கு ஒயிலாகத் தெரியும் இந்தப் பெயரை ஓர் அமெரிக்கரிடமோ செருமானியரிடமோ சொல்லிப் பாருங்கள். அவர்களுக்கு இந்தப் பெயர் பெருமைப்படும் பெயராகவோ ஒயிலாகவோ தெரியாதது மட்டுமில்லை, வாயில் கூட நுழையாது. உங்களுடைய அதே சிந்தனை ஏன் ஓர் அமெரிக்கருக்கோ செருமானியருக்கோ வரவில்லை? ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மொழியை விட, ‘ஞானப் பிரகாசு’ என்னும் பெயரைக் கொண்டுள்ள மொழியை உயர்வாகக் கருதும் மனப்பான்மையில் இருக்கிறீர்கள். இது தாழ்வு மனப்பான்மை தானே!

‘ஞான பிரகாசு’ என்னும் பெயரை ‘அறிவொளி’ என்று அழகு தமிழில் வைக்கலாம் அல்லவா?

அதற்காகக் கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், ஒளவையார் எனப் பழைய பெயர்களையா வைக்கச் சொல்கிறீர்கள்?

உங்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொன்னோமேயன்றிப் பழந்தமிழ்ப் பெயர்களைத் தாம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. பழந்தமிழ்ப் பெயர்களை வைப்பது, புத்தாக்கச் சொற்களை வைப்பது, பெரிய பெயரை வைப்பது, சிறிய பெயராக வைப்பது என்பதெல்லாம் உங்களுடைய விருப்பத்தைச் சேர்ந்ததாகும்.

பழந்தமிழ்ப்பெயர்களை விடுங்கள். ‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா? சிரிப்பு வருகிறது அல்லவா? அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது! அவருடைய பெயர் ‘Tiger Woods’. அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே! பெயர் பழையது, புதியது என்பதெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்! எப்படிச் சிந்தித்தாலும் தாய்மொழியில் இருப்பது தான் முறையாகும்.

‘மோகன்’ என்று பெயர் வைக்கிறோம். அப்பெயரைத் தமிழில் ‘கவின்’ என்றோ ‘எழில்’ என்றோ வைக்கலாம் அல்லவா? ‘கண்ணன்’ எனப் பொருள் தரும் ‘கிருட்டினன்’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கண்ணன்’ என்றே வைக்கலாம் அல்லவா? ‘விசய்’ என்று பெயர் வைப்பதற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைக்கலாம் அல்லவா? ‘குமார்’ என்பதற்குக் ‘குமரன்’ என்று வைக்கலாம் அல்லவா? ‘உசா’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கதிர்’ என்று கூப்பிடலாம் அல்லவா!

சரி! என்னுடைய குழந்தைக்குத் தமிழில் பெயர் வைக்க ஆசைதான்! ஆனால் எங்கு தேடுவது?

ஏன் கவலைப்படுகிறீர்கள்? முனைவர் பா. வளன் அரசு(நெல்லை), முனைவர் மு. தெய்வநாயகம்(சென்னை), புலவர் இரா. இளங்குமரன்(திருச்சிராப்பள்ளி), முனைவர் தமிழண்ணல்(மதுரை), முனைவர் ந. அரணமுறுவல்(சென்னை) எனத் தமிழறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை அணுகலாம். இன்னும் பல இயக்கங்கள் இருக்கின்றன. பல இணையத் தளங்கள் இருக்கின்றன.http://www.tamilkalanjiyam.comhttp://www.peyar.inhttp://wapedia.mobi/ta,http://thamizppeyarkal.blogspot.comhttp://tamilsaral.com/news%3Fid%3D3857.do,http://www.sillampum.com/http://pagalavan.in/archives/328 எனப் பல தமிழ்த்தளங்களில் நீங்கள் தமிழ்ப்பெயரைத் தேர்ந்துகொள்ளலாம்.

குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் மட்டும் தானே இதைச் சொல்கிறீர்கள்?

இல்லை. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது, வணிக நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது, திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பது என எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான் சொல்கிறோம்.

வணிக நிறுவனங்களுக்குமா?

ஆம். வெளி மாநிலத்திற்கு வந்து பிழைக்கும் தெலுங்கரான ‘உம்மிடி பங்காரு’ம் கன்னடரான ‘உடுப்பி’ உணவகத்துக்காரரும் தத்தம் மொழியிலேயே பெயர் வைக்கும்போது நாம் நம்முடைய மாநிலத்தில் இருந்துகொண்டே வணிக நிறுவனங்களுக்கு வேற்று மொழியில் பெயர் வைப்பது சரியா?

வேற்று மாநிலத்திலோ நாட்டிலோ இருக்கும்போது வணிக நிறுவனங்களுக்கு எப்படித் தமிழில் பெயர் வைப்பது?

ஒன்றும் கவலையில்லை. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே ‘உம்மிடி பங்காரு’ என்று தெலுங்கில் பெயர் வைத்துக் கடை நடத்தவில்லையா? ‘உடுப்பி’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உணவகங்கள் இல்லையா? ‘அகர்வால்’ இனிப்பகங்கள் இல்லையா? ‘நாயர்’ கடைகள் இல்லையா?

திரைப்படங்களுக்குமா சொல்கிறீர்கள்? இது கருத்துரிமையில் தலையிடுவது ஆகாதா?

தமிழில் படம் எடுக்கிறார்கள். கதை தமிழர்கள் பற்றிய கதையாக இருக்கிறது. படத்தைத் தமிழகத்தில் தமிழர்களுக்குத் தான் வெளியிடுகிறார்கள். ஆக, எம்மொழியில் படம் இருக்கிறதோ, யாருக்காக எடுக்கப்படுகிறதோ அம்மொழியில் பெயர் வைப்பது தானே பொருத்தமாக இருக்கும். நாம் ஒன்றும் சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்கவில்லை.

தமிழில் பெயரை வைப்பதால் நட்டம் ஏற்படும் சூழல் வரும்போது என்ன செய்வது?

அப்படிப்பட்ட சூழல் இதுவரை வந்ததேயில்லை. எத்தனையோ ஆங்கிலப் படங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். அப்படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கிறார்கள். ‘300’ என்று ஓர் ஆங்கிலப் படம் வந்தது. அப்படத்திற்கு ‘300 பருத்தி வீரர்கள்’ என்று பெயர் வைத்தார்கள். பெயர் தமிழில் இருந்ததால் அப்படம் ஓடவில்லையா என்ன?

அப்படியானால் தமிழில் பெயர் வைக்க வேண்டுமா? தாய்மொழியில் பெயர் வைக்க வேண்டுமா?

அவரவர் தத்தம் தாய்மொழியிலேயே பெயர் வைக்க வேண்டும். நாம் தமிழர் அல்லவா! எனவே தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும்.

 

தமிழில் பெயரிடுவோம்…. என்னும் நூலுக்குத

தொடர்பு கொள்க…


தழல் தா.பெ.அ. தேன்மொழியம்மையார் – 88 25 25 98 36 .

கொழுமம் ஆதி – மலரினியன்,

பாவலரேறு தேன்தமிழ்ப் பாசறை,

உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.

98422 18014 , 9750 35 9749