குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழ்ப் பற்று - தமிழ் வள்ளுவர்

05.01.2015-இல்லாததொன்றில்லை என உலகத்தோரால் உரைக் கப்படும் அகிலப் பொது மறையாம் தெய்வத் திருக்குறளில் கூட வள்ளுவனார் இயம்பாது விடுத்து விட்ட ஒரு துறை; வையத்து மாந்தரால் போற்றப் பட வேண்டிய ஒரு பேரியல்; தாய் மொழிப் பற்று. இற்றைக் காலத்தில் ஒரு மாந்தனின் வாழ்வில் தாய்மொழி யின் பங்கு பெரிதும் வேண்டற்பாலது. இன அடையாளத் தையும்; தனித்துவத்தையும்; சீரிய முன்னேற்றத்தையும் அளிக்க வல்லது தாய் மொழியின் பயன்பாடேயாகும். தமிழர்களைப் பொறுத்த மட்டில் தமிழ்ப் பற்று என்பது இனப் பண்பாட்டோடு இரண்டறக் கலந்த ஒன்றாகும். அண்மைக் காலத்தில் மேல்நாட்டறிஞர் ஒருவர் மொழிப் பற்றுத் தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டார். அவரது ஆய்வின் வழி கண்டறியப் பட்ட உண்மை யாதெனின், மொழிப் பற்றை அதிகம் கொண்டவர்கள் தமிழர்களேயாவர். தமிழர்களின் மொழிப் பற்றைக் காட்ட ஓர் எளிய எடுத்துக் காட்டைக் கூற முடியும். அஃதாவது, தமிழ் மரபின் படி அரசன், அவன் என்ற ஒருமை விளியினாலேயே அழைக்கப் படுவான். அதைப் போலவே, எல்லாம் வல்ல இறைவனும், அவன் என்ற விளியைக் கொண்டு அழைக்கப் படுவதைக் காணலாம். ஆனால் தமிழோதும் புலவர்கள் மட்டும் அவர் என மதிப்போடு அழைக்கப் படுவர். அதுமட்டுமின்றி, உலகிலேயே மொழி தாயாக மதிக்கப் படுவதும் மொழிக்குக் கோயில் கட்டப்படுவதும் தமிழகத்தில் மட்டுமே. இதனின்று தமிழர்களின் தமிழ்ப் பற்றை அறியலாம். நந்தமிழ் முன்னோர்கள் தமிழ்ப் பற்றை எவ்வாறு போற்றினர்; வளர்த்தனர் என இலக்கியங்களின் வாயிலாகவும் வரலாற்றின் வாயிலாகவும் அறிந்து தெளிய வேண்டியது நமது கடமை

 

ஓரினம் பல்லாயிரம் ஆண்டுகள் ஒரே மொழியில் தம் வாழ்வினை மேற்கொண்டிருந்தால் மட்டுமே மொழிப் பற்று என்பது உரு பெறும். பல்லாயிரம் ஆண்டுகள் மொழியோடு இரண்டறக் கலந்த பின்னர், அம்மொழியின் பற்று மரபணுவில் வேரூன்றும். அவ்வாறு வேரூன்றிய மொழிப் பற்று பல்லிடங்களில் வெளிப்படும். தமிழ் மொழியைப் பொறுத்த வரை, தமிழ் மொழி தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகள் பேசப்பட்ட மொழி. ஐயாயிரத்து ஐநூறு ஆண்டுகள் மதிக்கத் தக்கத் தொல்காப்பியத்திலேயே, தொல்காப்பியர் தமிழைத் தொன்மொழி எனப் பகர்கின்றார். அவ்வாறெனில் தமிழ் எத்துணை தொன்மையானதாக இருக்க வேண்டும். மறைமலையடிகள் குமரி மண்பதை வளர்ச்சியின் காலம் பன்னீராயிரம் ஆண்டுகளென இயம்புகிறார். தேவநேயப் பாவாணர் தமிழின் தோற்றம் ஐம்பதாயிரம் ஆண்டுகள் என மொழிகின்றார். அலெக்ஸ் கொல்லியர் போன்ற மேல்நாட்டறிஞர்கள் தமிழே உலக முதற்றாய்மொழியெனச் சாற்றுகின்றனர். ஆதலால்தான், உலகிலேயே மொழிப் பற்று தமிழர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. தற்பொழுது தமிழர்களின் தொடக்கக் காலமாகக் கணிக்கப்படும் சங்க காலத்தில் தமிழின் இனிமையை எடுத்தியம்பியப் புலவர்கள்; பக்தி இலக்கியக் காலமான நாயன்மார்கள் காலத்தில் இறைவன் தமிழாக விளங்குகிறான் எனவும் தமிழ் இறைத் தன்மை உடையது எனவும் பகர்ந்தனர். அதனைத் தொடர்ந்து, பன்னிரண்டாம் நூற்றாண்டு தொடங்கி, உலகில் எங்கும் கண்டிராத வண்ணம் தமிழ் மொழியைத் தாயாக உருவகப் படுத்திப் பற்பல வாழ்த்துப் பாக்கள் புலவர்களால் இயற்றப் பட்டன. தமிழ்த் தாய்க்குக் கோயிலெழுப்பப் பட்டது. தமிழர்களின் இனப் பண்பாட்டின் அச்சாணியாக தமிழ்ப் பற்று உருவாக்கப் பட்டது. தமிழர்களை ஒரு குடையின் கீழ் பிணைக்கும் மாயக் கயிறாகத் தமிழ்ப் பற்று நிலை பெற்றது. அத்தமிழ் பற்று என்றென்றும் தமிழர்களை கோலாட்சி செய்கிறது. தமிழ்ப் பற்றின் தொடக்கம், வளர்ச்சி, உச்சம் ஆகியவற்றை விரிவுறக் காண்போம்.

 

தமிழ்ப் பற்று வெளிப்பாட்டின் தொடக்கமென உரைக்கத் தகுந்தது, மொழியைக் காக்கச் சங்கங்கள் நிறுவப்பட்டமையே ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியை வளர்க்க அகத்தியனார் பொதிகையில் பன்னிரு மாணவர்களைக் கொண்டு முதன் முதலில் மொழிக் காப்பரண் நிறுவினார். அதன் பின் பாண்டியன் காய்ச்சின வழுதியின் துணைக் கொண்டு முதல் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார். ஐநூற்று நாற்பத்தொன்பது புலவர்களைக் கொண்டு தமிழாய்ந்த அச்சங்கம் நாலாயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள் நிலைப் பெற்றிருந்தன. தென் மதுரையில் வீற்றிருந்த அச்சங்கம் கடற்கோளால் அழிவுற்ற பின்னர் பாண்டியன் வெண்தேர்ச் செழியன் கபாட புரத்தில் இடைச் சங்கத்தைத் தோற்றுவித்தான். தொல்காப்பியம் தோன்றியது இச்சங்கத்தில்தான். மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள் செயல் பட்ட இச்சங்கமும் பாண்டியன் திருமாறன் காலத்தே கடற்கோளால் அழிவுற்றது. பாண்டியன் திருமாறன் தொல்காப்பியத்தையும் இன்னும் சில நூல்களையும் காப்பாற்றிக் கொண்டு வந்து இன்றைய மதுரையில் கடைச் சங்கம் நிறுவினான். தொல்காப்பியத்தைக் காக்கும் முயற்சியில் அவன் கை முடமாகியது. அதனால், அவன் முடத்திருமாறன் என அழைக்கப் பட்டான். அவன் தோற்றுவித்த கடைச் சங்கம் ஆயிரத்து எண்ணூற்றைம்பது ஆண்டுகள் செயல்பட்டது. தமிழ்ப் பற்றின் தலையாய வெளிப்பாடு இச்சங்கங்களின் தோற்றுவிப்பே ஆகும்.

 

அற்றை நாள் தமிழ் நிலம் ஆண்ட தமிழ் வேந்தர் அனைவரும் தமிழைப் போற்றும் வண்ணம் தமிழறிந்த புலவர்ளை ஏத்தினர். முதிர மலையை ஆண்ட குமணன் என்பான் வரையாது வழங்கும் வள்ளல். தனது இளையோனான அமணன் எனும் வஞ்சகனின் விருப்பத்திற்கிணங்க கானகம் போந்தான். ஆயினும், ஆட்சிக் கட்டில் ஏறிய அமணன் தனது பதவியை நிலை நிறுத்திக் கொள்ளக் குமணனின் தலைக்குப் பரிசு அறிவித்தான். அச்சமயம். புலவர் பெருந்தலைச் சாத்தனார் தனது வறுமையைப் போக்கிக் கொள்ள கானகம் போந்த குமணனை நாடினார். வழங்குதற்குப் பொருளில்லையே என வருந்திய குமணன்,

 

‘அந்தநாள் வந்திலை அருந்தமிழ்ப் புலவோய்

இந்தநாள் வந்துநீ நொந்த்தெனை அடைந்தாய்

தலைதனைக் கொண்டுபோய்த் தம்பிக்கைக் கொடுத்து

விலைதனை மீட்டுநின் வறுமைநோய் களையே!‘

 

என விளம்பி தனது வாளினைப் பெருந்தலைச் சாத்தனாரின் கரங்களில் வழங்கினான். சாத்தனார், தமிழோதும் புலவரின் வறுமையைக் களையத் தலையையும் வழங்கத் துணிந்த குமணனின் பெருந்தன்மையை அமணனிடம் எடுத்தியம்பி மீண்டும் அரசைக் குமணனிடம் வழங்கச் செய்தார். தமிழுக்காகத் தலை தரத் துணியும் அரசர்களின் தமிழ்ப் பற்றுதான் என்னே!

 

இதைப் போல் அருந்தமிழ்ப் புலவோர்க்கு ஈந்து தமிழ்ப் பற்றினை உலகோர்க்குக் காட்டிய வேந்தர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. அவர்களுள் சிலரைக் காண்போம். பதிற்றுப் பத்தில் தன்னைப் பற்றிப் பத்தே பாடல்கள் பாடிய அரிசில் கிழாருக்குத் தன் அரசையே அன்போடு வழங்கினான், பெருஞ்சேரல் இரும்பொறை. தமிழைப் போற்றுதலே வாழ்க்கைப் பயனென வாழ்ந்து வந்த அச்சேர மன்னன், அரசச் சின்னமான முரசுக் கட்டிலின் மேல் களைப்பு மிகுதியால் துயின்ற மோசிகீரனாரை வெட்டி வீழ்த்தாது, அருகில் கவரி வீசி நின்று புகழ் பெற்றவனாவான். சோழகுல வேந்தன் கரிகாலன், புலவர் உருத்திரங்கண்ணனாரின் பட்டினப் பாலைக்குப் பத்தாயிரம் பொன் பரிசளித்தான். பல்யானைச் சேர்கெழு குட்டுவன், பல்காதமுள்ள முக்தி எனும் ஊரை கௌதமனாருக்குப் பரிசளித்தான். சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதான், கபிலருக்கு நன்றா எனும் மலையில் ஏறி நின்று கண்ணுகெட்டிய நாட்டையெல்லாம் கொடுத்தான். சோழன் செங்கண்ணன் , களவழி நாற்பது பாடிய பொய்கையாருக்காகத் தனது பகைவனான கணைக்கால் இரும்பொறையை சிறை விடுத்தான். கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சி, ஆயிரம் ஆண்டுகள் வாழும் ஆயுளைக் கொடுக்க வல்ல; கிடைத்தற்கரிய கருநெல்லிக் கனியை ஔவை மூதாட்டிக்கீந்தான். மன்னன் ஓரி, தன் அரசையே புலவர்களுக்குப் பகிர்ந்தளித்தான். வள்ளல் காரி, காண வரும் பாவலருக்கெல்லாம் வரையாது வழங்கினான். மன்னன் பாரி, முதுபரிசிலருக்கு முன்னூறு ஊரளித்தான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குமட்டூர் கண்ணனாருக்கு ஐநூறு ஊர்களைப் பரிசளித்தான். இவற்றைக் கொண்டு, வேந்தர்களின் தமிழ்ப் பற்றைக் காணலாம்.

 

உலகில் பொன்னுக்காக; பொருளுக்காக; நிலத்துக்காக; சமயத்துக்காகப் போர் நடந்து கேள்வியுற்றிருப்பீர்கள். ஆனால், மொழிக்காகப் போர் நடந்ததைத் தமிழகத்தில் மட்டுமே காண இயலும். தமிழர்கள் குருதியில் உறைந்ததுத் தமிழ்ப் பற்று. அதிலும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தப் பாண்டியர்களுக்குத் தமிழே உயிர். ஒருமுறை கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்ற பாண்டிய மன்னன் வேற்று நாட்டு மன்னன் ‘தமிழ் மொழி பொதுவானது’ எனவுரைக்கக் கேட்டான்; வெகுண்டெழுந்தான்; போர் தொடுத்தான்! மொழி அனைவர்க்கும் பொதுவானதே என்பதை அவன் உணர்ந்தே போர் தொடுத்தமையைச் சான்றோர் அறிமடம் எனவுரைப்பர். இது அவனது மொழிப் பற்றைப் பறைச் சாற்றுகின்றது. இந்நிகழ்வை ‘தண்தமிழ் பொது எனப் பொறாஅன் போர் எதிர்ந்து’ எனப் புலவர் ஐயூர் முடவனார் புறநானூற்றில் பகர்கின்றார். இதைப் போன்றே தமிழைப் பழித்துப் பேசிய கனகன், விசயன் எனும் வடநாட்டு மன்னர்களைப் போர் தொடுத்து வென்றான் சேரன் செங்குட்டுவன். அவ்விருவரின் தலையில் கல்லைச் சுமக்கச் செய்துக் கண்ணகிக்குக் கோயிலெழுப்பியவன் இம்மன்னனே. இச்செய்தியை,

‘பால குமாரன் மக்கள் மற்றவர்

காவா நாவிற் கனகனும் விசயனும்

விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி

அருந்தமிழ் ஆற்றலர் அறிந்திலர் ஆங்கு எனக்

கூற்றங் கொண்டு இச்சேனை செல்வது...’

 

என்ற இளங்கோவடிகளின் சிலப்பதிகார வரிகளின் வழி அறியலாம்.

 

தமிழ் இலக்கிய வகையில் அறம் வைத்துப் பாடுதல் என்ற முறை உண்டு. அஃதாவது, கொடுங்கோல் ஆட்சி புரியும் மன்னனை இகழ்ந்து; அவனை வசை பாடுவதே அறம் வைத்துப் பாடுதல் ஆகும். நந்திவர்மன் என்ற பல்லவ மன்ன்னை இகழ்ந்து பாடப் பட்டது நந்திக் கலம்பகம் ஆகும். இதனின் சொற்சிறப்பையும் பொருட்சிறப்பையும் கேள்வியுற்று மனம் பறிகொடுத்த நந்திவர்மன், அதனை முழுமையாகக் கேட்க விரும்பினான். நந்திக் கலம்பகத்தை இயற்றிய புலவரே “இந்நூலை முழுமையாகக் நீ கேட்டாயானால் உயிர் துறப்பாய்” என எச்சரித்தும், “தமிழ்ச் சுவையைப் பருகுங்கால் என் உயிரே பிரிந்தாலும் கவலையில்லை” எனக் கூறி அந்நூலை உரைக்கக் கேட்டு உயிர் துறந்தான். ‘கள்ளாரும் செஞ்சொல் கலம்பகமே கொண்டு, காயம் விட்ட தெள்ளாறை நந்தி’ என சரித்திரம் அவனைப் புகழ்கின்றது. இதனைப் போலவே தமிழின் சுவையால் கட்டுண்ட புலவர் ஒட்டக்கூத்தர், தன் மனைவி பருகப் பால் கொடுத்த பொழுது “இன்று அவையில் புகழேந்தி அரங்கேற்றிய நள வெண்பாவில் சில பாடல்களை பிழிந்து கொடுத்தாலாவது பருகலாம். உன் பாலில் என்ன சுவையிருக்கிறது?” எனக் கேட்டார். இதனின்று தமிழர்களின் தமிழ்ப் பற்று நன்கு புலனாகிறது.

 

தங்களின் பாடல்களின் வழி தமிழப் பற்றை வெளிக்காட்டியவர்கள் எண்ணற்றோராவர். பாரதப் போரின் போது பாண்டவர் படைக்கும் கௌரவர் படைக்கும் உணவளித்தவன் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். அப்பணியைப் போற்றிப் பாடிய புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர், அம்மன்ன்னின் புகழை இமயத்துக்கும் பொதியத்திற்கும் ஒப்பிடுகிறார். ‘பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே’ எனப் புகழ்கின்றார். அஃதாவது, உயர்வால் இமயமாகவும் புகழால் தமிழ் வளர்த்தப் பொதியமாகவும் விளங்குகிறான் என அம்மன்னனைப் போற்றுகின்றார். பிங்கலர் என்ற புலவரோ தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருளுண்டு என நவில்கின்றார். ‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்பது அவர் கருத்து. இதனைப் பின்பற்றி திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணியில் ‘தமிழ் தழீஇய சாயலவர்’ என்றும் ‘தமிழினும் இனிய தீஞ்சொற்றையல்’ என்றும், தமிழ் என்றால் அழகு எனப் பொருள்படும் படி பாக்களைப் புனைந்துள்ளார். ‘மலயத்து ஓங்கி மதுரையில் வளர்ந்து புலவர் நாவிற் பொருந்திய தென்றல்’ எனத் தமிழைக் குறிப்பிடும் இளங்கோவடிகள் ‘தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி’ என்ற வரியில் தமிழ் என்ற சொல்லுக்குக் கலைப் புலமை எனப் பொருள் உரைப்பது வியக்கத் தக்கது.

 

மந்திரம் என்பது வடமொழிக்கே உரியது என்ற பொதுவான கருத்து ஒன்று உண்டு. தொல்காப்பியர், மந்திரம் என்பதற்கு ‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப’ என விளக்கம் அளிக்கிறார். இதனைப் பறைச் சாற்றும் ஓர் உன்னதச் சம்பவம். கடைச் சங்க காலத்தில் தலைவராய் விளங்கியவர் அருந்தமிழ்ப் புலவர் நக்கீரனார். அதே காலத்தில் ஒரு வடமொழிச் சங்கமும் நிலவி வந்தது. அதற்குத் தலைவனாய் விளங்கியவனின் பெயர் குயக்கோடன். ஒரு முறை நக்கீரனாரைச் சந்தித்த குயக்கோடன் “மந்திரம் வடமொழிக்கே உரியது” என வாதாடினான். அதனால் சீற்றம் கொண்ட நக்கீரர், “நானே உன்னை நற்றமிழில் இறக்கப் பாடுகிறேன்” என சூளுரைத்து,

 

‘ஆரியம் நன்று தமிழ்த்தீ தென உரைத்த

காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் – சீரிய

அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையாற்

செந்தமிழே தீர்க்க சுவாகா.’

 

என்றப் பாடலைப் பாடினார். உடனே, குயக்கோடன் உயிர் மரித்துப் பிணமானான். உடனே மற்ற சான்றோர்கள் அவனை மன்னித்து பிழைக்கப் பாடுமாறு வேண்டியவுடன்,

 

‘முரணில் பொதியின் முதற்புத்தேன் வாழி

பரணர் கபிலரும் வாழி – அரணிலா

ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன்

ஆனந்தஞ் சேர்க்க சுவாகா.’

 

என்றப் பாடலைப் பாடி குயக்கோடனை உயிர்ப்பித்தார். இந்நிகழ்வு நக்கீரரின் தமிழ்ப் பற்றை வெளிப் படுத்துகிறது.

 

‘கல்லாடம் கற்றவரிடம் மல்லாடாதே’ என்பது முது மொழி. அத்துணை சிறப்பு மிக்க அந்நூலை இயற்றியவர் கல்லாடனார். அவருடைய தமிழ்ப் பற்று உரைத்தற்கரியது. அவரது கல்லாடத்தில் பல்லிடங்களில் தமிழ்ப் பற்று வெளிப்படுவதைக் காணலாம். ஓர் இடத்தில்,

 

‘தேவர் மருந்தும் தென்தமிழ்ச் சுவையும்

என்னுயிர் யாவையும் இட்டடைத் தேந்தி...’

 

என ஓதுகின்றார். இதன் பொருள் ‘அமரர்கள் உண்ணுகின்ற அமிழ்தமும் இனிய செந்தமிழின் சுவையும் என்னுடைய உயிரும் ஆகிய இவையிற்றை யெல்லாம் தமக்குள்ளே பெய்து அடைக்கப்பட்டு இறுமாந்து’ என்பதாகும். அடுத்து,

 

‘அமுதஊற் றெழுந்து நெஞ்சம் களிக்கும்

தமிழ்எனும் கடலைக் காணி கொடுத்த...’

 

என்ற வரியில் ‘கற்போருள்ளத்தே அமிழ்தம்போன்ற இன்ப உணர்ச்சி ஊற்றெனத் தோன்றி மகிழ்தற்குக் காரணமான தமிழ்மொழி என்னுங் கடலை உரிமையாக வழங்கிய’ எனத் தமிழைப் போற்றுகின்றார். தொடரந்து, மற்றோர் வரியில்,

 

‘செந்தமிழ்ப் பாடலும் தேக்கிய பொருளும்

பாலும் சுவையும் பழமும் இரதமும்

உடலும் உயிரும் ஒன்றியது என்ன  ...’

 

என்கின்ற கல்லாடர், மணமக்களை ‘செந்தமிழ்ப் பாடலும் அதன் பொருளும், பாலும் சுவையும், பழமும் அதன் இனிமையும், உடலும் உயிரும் ஒன்றியிருப்பது போல ஒற்றுமையாக வாழுங்கள்’ என வாழ்த்துகிறார். பிரிதொரு அடியில்,

 

‘உவட்டாது அணையாது உணர்வெனும் பசியெடுத்து

உள்ளமும் செவியும் உருகிநின்று உண்ணும்

பெருந்தமிழ் அமுதும் ...’

 

எனப் பகர்கின்றார் கல்லாடர். இதன் பொருள் ‘உண்டு தெவிட்டாத வழி அமையாத அறிவு என்கின்ற பசி தோன்றி நெஞ்சமும் செவியும் இன்பத்தால் உருகி நிலைத்துப் பருகுதற்குக் காரணமான பெரிய தமிழாகிய அமிழ்தத்தையும்’ என்பதாகும். உருக்கமுடன் தமிழ்ச் சுவையைப் போற்றும் அவரது தமிழ்ப் பற்றுக்கு வானமே எல்லை!

 

தொடர்ந்து, முற்றும் துறந்த முனிவர்கள் கூட தமிழ்ப் பற்றைத் துறக்க இயலாது இன்னலுறுவதைக் காணலாம். சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனத் தமிழர்களால் புகழப் படும் தமிழ் மறையை இயற்றிய திருமூலரே ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே’ என்கின்றார்.

அடுத்து, இறைவனை தமிழ் மொழியின் மூலம் உணரலாம் என்பதையும் வலியுறுத்துகிறார். ‘தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலு மாமே’ என நவில்கின்றார். அதுமட்டுமின்றி, எல்லாம் வல்ல இறைவன் செந்தமிழாகவும் விளங்குகிறான் என உரைக்கின்றார். ‘முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்தவர் ஈசனை’ என்ற வரிகளின் வழி இக்கருத்தை உணர்த்துகிறார். இதைப் போலவே பொது மறை பகர்ந்த வள்ளுவனார் தனது ஞானவெட்டியான் எனும் நூலில் ‘அருமலர் மொழியுஞான அமுதச் செந்தமிழைச் சொல்வாம்’ எனப் புகன்று தனது தமிழ்ப் பற்றை உணர்த்துகிறார். இதற்கும் ஒரு படி மேலே ‘பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே’ என மொழிந்து தமிழுணர்ந்தாலே சித்தரெனக் கொள்ளப் படுவர் என்பதைத் தெரிவிக்கின்றார். குதம்பைச் சித்தரோ ‘முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானி’ என்ற வரியில் மெய்ஞானி என்போன் முத்தமிழ் கற்றோன் என்ற கருத்தை விளம்புகிறார். சிவவாக்கியரோ மந்திரங்கள் தமிழிலும் உண்டு என்ற உண்மையை ‘பன்னுகின்ற செந்தமிழ்ப் பதம்கடந்த பண்பென’ என்ற வரியில் இயம்புகிறார். சித்தர்களின் தமிழ்ப் பற்றுக்கு வரம்பில்லை; முடிவில்லை.

 

அடுத்ததாக, மூன்று வயதில் ஞானம் தெளிந்த திருஞானசம்பந்தரின் தமிழ்ப் பற்றைக் காண்போம். சம்பந்தர் தமிழே உருவானவர். மக்கள் அவருக்கு மதிப்பளிக்கும் வண்ணம் திருஞானசம்பந்தர் என அழைக்கின்றனர். ஆனால் அவரோ, தன்னைத் தமிழ்ஞானசம்பந்தர் என்றே தன் பாடல்களில் குறிப்பிட்டுக் கொள்கின்றார். ‘தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்’ , ‘உரைக்குந் தமிழ்ஞான சம்பந் தனொண்மாலை’ , ‘பாரார் விடையான் பனையூர்மேல் சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்’ போன்ற வரிகளில் இதனைக் காண முடிகின்றது. தொடர்ந்து, ‘மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா

அந்தகர்க்கு எளியேன் அல்லேன்’ , ‘தமிழ்ச் சொலும் வடசொலும் தாணிழற்சேர’ போன்ற வரிகளில் தமிழும் வடமொழியும் ஒரே தரத்தவை என்று சாற்றுகின்றார். அதுமட்டுமின்றி, தமிழ் வல்லாரின் அடி பேணலும் தவம் செய்தற்கு ஒப்பாகும் என்ற கருத்தினை ‘சம்பந்தன  தமிழ்வல்லவ  ரடிபேணுதல் தவமே’ என்ற அடியின் வழி நவில்கின்றார். அடுத்து, இறையனாரான ஈசனைக் குறிக்கும் பொழுது ‘தமிழ் விரகன்’ என்றே விளம்புகின்றார். ‘பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழிதகையவே’ , ‘தண்டமிழ் விரகன்மெய்த் தாள்கள் போற்றுவாம்’ ஆகிய வரிகளில் இதனைக் காணலாம். தொடர்ந்து, தனது பாக்களில் தமிழ் என்ற சொல்லை புகலும் பொழுது அடைமொழி கொடுத்தே புகல்கின்றார். அவற்றுள், ஆரா அருந்தமிழ், இசைமலி தமிழ், இன்புறுந்தமிழ், உருவாகும் ஒண்டமிழ், ஏரினார் தமிழ், ஒளிர்பூந்தமிழ், கலைமலி தமிழ், குலமார் தமிழ், குலவேந்தர் செந்தமிழ், குற்றமில் செந்தமிழ், குன்றாத்தமிழ்,

சங்கமலி தமிழ், சந்தநிறை தண்டமிழ், ஞாலமல்குந் தமிழ், ஞானத்தமிழ், தவமல்கு தமிழ், திருநெறிய தமிழ்,

பண்ணாருந் தமிழ், பண்பொலி செந்தமிழ், பரவிய தமிழ், பல்பொருள் முத்தமிழ், பூந்தமிழ், முடிவில் இன்தமிழ் போன்றவையும் அடங்கும். சம்பந்தரும் தமிழும் வெவ்வேறில்ல என்பதில் ஐயமும் உளதோ?

 

அவரைத் தொடர்ந்து, தமிழே உயிராய் விளங்கிய அருந்தொண்டர் இறைவனையே தோழராகப் பெற்ற சுந்தர மூர்த்தி நாயனார் ஆவார். ‘கண்ணாய் ஏழுலகும் கருத்தாய் அருத்தமுமாய் பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே’ என்ற வரிகளில் இறைவன் தமிழாகவும் விளங்குகிறான் என்ற கருத்தை முன் வைக்கும் இவர், தன்னை தமிழூரன் என அழைத்துக் கொள்வதையே பெருமையாக எண்ணுகிறார். இதனை ‘படுந்துறை யூர்மேற் பொய்யாத் தமிழூரன் உரைத்தன’ என்ற வரியில் காணலாம். அது மட்டுமின்றி, ஈசன் தமிழன் என கொள்ளத் தகுந்தவன் என்பதை ‘தங்களூர் தமிழானென்று பாவிக்கவல்ல’ என்ற அடியில் பகர்கின்றார். தொடர்ந்து இறைவறுக்கு உவமை கூறும் சுந்தரர், ‘பண்ணிடைத் தமிழொப்பாய், பழத்தினிற் சுவையொப்பாய்,

கண்ணிடை மணியொப்பாய், கடுவிருட் சுடரொப்பாய்’ என நவில்கின்றார். ‘அற்சனை பாட்டே யாகும்

ஆதலான் மண்மேல் தம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்’ எனும் வரியில் இறைவன் தனக்கு அருள் புரிந்து தமிழில் பாடக் கோரினான் என விளம்புகிறார். ‘திருமிழலை இருந்து நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு நித்தல் நல்கினீர்’ எனப் பாடும் சுந்தரர் தமிழ் கேட்டும் இச்சையாலேயே இறைவன் தனக்குத் திருமழிலையில் காசு வழங்கியதாக இயம்புகின்றார். ‘செந்தமிழ்த் திறம் வல்லிரோ’ என இறைவனைப் போற்றும் சுந்தரர், ஈசன் தமிழால் பாடுவோர்க்கு அருள்பவன் என்பதை ‘பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்’ எனச் சாற்றுகின்றார். தமிழே இறைவன்; இறைவனே தமிழென எண்ணி வாழ்ந்தவர் வண்தொண்டரான சுந்தரர்.

 

‘கற்றூணைப்பூட்டி கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்று பாடியவர் திருநாவுக்கரசர். இறைவன் மேல் அவர் எத்துணை பக்தி கொண்டருந்தாரோ, அத்துணை பக்தியைத் தமிழ் மேலும் கொண்டருந்தார். ‘தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்’ , ‘திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தா ருந்நின்றார்’ போன்ற அடிகளிலிருந்து அவரதுத் தமிழ்ப் பற்றை நன்குணரலாம். அதுமட்டுமின்றி தமிழும் வடமொழியும் ஒரு தரத்தைவை என்ற கொள்கையை உடையவர் அவர். இதனை, ‘வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்’ , ‘கோலமா நீலமிடற்றான் தன்னை செந்தமிழோடு ஆரியனை சீரீயானை’ போன்ற வரிகளில் காணலாம். ‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்று போற்றப் படும் திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகரோ,

 

‘சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்

உறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ

இறைவா தடவரைத் தோட்கென்கொலாம்புகுந் தெய்தியதே.’

 

என இயம்புகின்றார். இதன் பொருள், இறைவா! சிற்றம்பலமாகிய தூய இடத்தும் என் சிந்தையாகிய தாழ்ந்த

இடத்தும் ஒருசேரதங்கியிருக்கும் சிவபெருமான் மதுரையில் ஆய்ந்த தமிழின் துறைக்கண் நுழைந்தாயா? இசைச்சூழலில் ஈடுபட்டாயா? நின் தோள்கள் வாடிய காரணம் என்ன? என்பதேயாகும். பன்னிரு திருமுறை ஆசிரியர்களில் ஒருவரான திருமாளிகைத் தேவர்,

 

‘பாடலங் காரப் பரிசிகா சருளிப்

பழுத்தசெந் தமிழ்மலர் சூடி

நீடலங் காரத் தெம்பெரு மக்கள்

நெஞ்சினுள் நிறைந்துநின் றானை...’

 

என்ற வரிகளில் இறைவனைத் தான் செந்தமிழ் பாக்களையே மாலையாக இறைவனுக்குச் சாற்றுவதாகப் பகர்கின்றார். திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம் நவின்ற சேக்கிழார் பெருமானோ,

 

‘பிறந்த தெங்கள் பிரான்மல யத்திடைச்

சிறந்த ணைந்தது தெய்வநீர் நாட்டினில்

புறம்ப ணைத்தடம் பொங்கழல் வீசிட

மறம்ப யின்றதெங் கோதமிழ் மாருதம்.’

 

என மொழிகின்றார். இதன் பொருள், இனிய தென்றலே! நீ பிறந்தது எங்கள் பெருமானாகிய இறைவனுடைய பொதிய மலையிலேயாம்! சேர்ந்த வழியாவது தெய்வத் தன்மை பொருந்திய சோழநாட்டுத் தடாகங்களின்

வழியாம்! தீக் காற்று வீசும்படியாக நீ வன்மை பழகியது எங்கேயோ தமிழுடன் பயின்ற மாருதமே? அதுமட்டுமின்றி, தமிழுக்கு ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ், எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் இன்தமிழ் போன்ற அடைமொழிகளைத் தந்து போற்றுகின்றார், சேக்கிழார் பெருமான்.

 

கவி உலகின் முடி சூடா மன்னர் எனத் தமிழச் சான்றோர்களால் புகழப் படும் கம்பர், தனது தமிழ்ப் பற்றை கம்ப இராமாயணத்தில் பல்லிடங்களில் வெளிக் கொணர்கிறார். ‘வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே’ என்ற வரிகளில் தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்றப் பொருளைக் காட்டும் கம்பர், தமிழ் முனி அகத்தியனாரைக் ‘நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’ , ‘நீண்ட தமிழ்வாரி நிலமேனி மிரவிட்டான்’ எனக் குறிக்கின்றார். தொடர்ந்து, அகத்தியனார் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவரே அன்றித் தமிழைப் படைத்தவரல்லர் என்ற கருத்தை ‘என்றுமுள தென்தமிழ் இயம்பிசை கொண்டான்’ என்ற அடிகளில் மொழிகின்றார். பலவாறு தமிழைத் துதித்துப் போற்றும் கம்பரின் தமிழ்ப் புகழாரங்களில் ‘தமிழ் நிகர் நறவம்’ , ‘ஆரணத்தின் மும்மைத் தமிழ்’ , ‘தமிழெனு மளப்பருஞ் சலதி’ , ‘எத்திறத்தினு மேழுலகும் புகழ்முத்து முத்தமிழ்’ போன்றவையும் அடங்கும். தொடர்ந்து, தனது தமிழ்ப் பற்றைப் பறைச் சாற்றும் வண்ணம் ஒரு கதைச் சூழலையும் கம்ப இராமாயணத்தில் சித்தரித்துள்ளார். அஃதாவது, எங்கெங்கெல்லாம் சீதையைத் தேட வேண்டுமென அனுமனுக்கு எடுத்தியம்பும் இராமன், “தமிழகத்துப் பொதியத்தில் அகத்தியர் தமிழோதிக் கொண்டிருக்கிறார். அங்கு மட்டும் சென்று விடாதே! அவ்வழியே சென்றாயானால் தமிழின் இன்சுவையில் மயங்கி உனது கடமையை மறப்பாய்” என எச்சரிக்கிறான். இச்சூழலை விளக்கும் பாடல் இதோ!

 

‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திருமுனிவன்

தமிழ்ச் சங்கம் சேர்கிற்றீரேல்

என்றும் அவன் உறைவிடமாம் ஆதலினான்

அம்மலையை இடத்திட்டு ஏகி...’

 

கிட்கிந்தா காண்டத்தில் இடம்பெற்றிருக்கும் இக்கதைச் சூழல் கம்பரின் தமிழ்ப் பற்றைத் தெளிவுறக் காட்டுகின்றது.

 

தமிழ் மூதாட்டி என அழைக்கப் படுபவர் ஔவையார். ‘அவிச்சுவை யல்லது தமிழ்ச்சுவை தெருளீர்’ என்ற வரிகளின் வழி தமிழறிவு அற்றோரை வைதிடும் ஔவையார், தமிழ்ப் பற்று மிக்க அருஞ்சான்றோர் ஆவார். இறைமொழியாகத் தாய்மொழி விளங்க வேண்டியதன் இன்றியமையாத் தன்மையை ஔவையார் இரு பாடல்களின் வழி எடுத்தியம்புகிறார்.

 

‘ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெரிதமைந்த

செம்பொருளை எம்மரைக்கும் சேட்பொருளை தன்குருகூர்ச்

சேய்மொழிய அதென்பர்  சிலரியான் இவ்வுலகில்

தாய்மொழிய தென்பேன் தகைந்து.’

 

‘சேய் மொழியோ தாய் மொழியோ  செப்பில் இரண்டும் ஒன்றே

வாய் மொழியை யாரும் மறைஎன்பர்  -வாய் மொழி போல்

ஆய் மொழிகள் சால  உளவெனினும் அம் மொழியும்

ஆய் மொழி என்பேன் தகைந்து.’

 

ஐவகைப் பூதங்களும் நால்வகைப் பேறுகளும் மூவகை மெய்ப்பொருள்களும் உலக்குக்கீந்த இறைவன் அனைத்து வேதங்களையும் கடந்து நிற்பவன். அவனை வேதமொழி கொண்டே வணங்குதல் சிறப்பெனப் பகர்வர் சிலர். ஆயினும் தாய்மொழியில் வணங்குதலே சிறப்பு என முதல் பாடலில் இயம்புகிறார். அடுத்தப் பாடலில், தூரத்து மொழியோ தாய் மொழியோ சொல்லப் போனால் இரண்டுமே கடவுளுக்கு ஒன்று தான். முனிவர்களின் வாய்மொழியைப் பாமர மக்கள் அறிய முடியாத காரணத்தால் அதனை மறை என உரைக்கின்றனர். அதுபோன்ற மறைகள் நாளுக்கு நாள் பல்வேறு மொழிகளிலும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. எவ்வாறாயினும் அவை அனைத்தும் தாய் மொழியோடு ஒப்பு நோக்கின் தள்ளப் பட வேண்டியவையே எனச் சாற்றுகின்றார். இறைவனைத் தமிழால் வணங்க உரைக்கும் அவரது தமிழ்ப் பற்றுதான் என்னே!

 

தமிழே உருவான மற்றொரு அருளாளர் முருகனடியாரான அருணகிரிநாதர். இறையனாருக்கும் அகத்தியனாருக்கும் இனிய தமிழை கற்பித்தவன் முருகனே என்பதை

 

‘சிவனைநிகர் பொதியவரை

முனிவன் அகம் மகிழஇரு

செவிகுளிர இனிய தமிழ் பகர்வோனே.’

 

‘கொன்றைச் சடையர்க்கு

ஒன்றைத் தெரியக்

கொஞ்சித் தமிழைப் பகர்வோனே.’

 

ஆகிய பாடல்களில் சான்றுரைக்கிறார். முருகன் தமிழில் உறைபவன் என்பதை ‘செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி செந்திற் பதிநக ருறைவோனே’ என்ற வரியில் விளம்புகின்றார். அதுமட்டுமின்றி, தமிழால் வைதாலும் இறைவனுக்கு அது புகழாரமே என்பதை

 

‘மொய்தா ரணிகுழல் வள்ளியை

வேட்டவன் முத்தமிழால்

வைதாரையும் அங்கு வாழவைப்போன்.’

 

எனப் பகர்கின்றார். வினாயகர் மாபாரதத்தை தன் தந்தத்தால் எழுதினார் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் அதற்கு முன்பே அவர் தமிழில் எழுதினார் எனப் பகர்கின்றார். ‘முத்தமிழ் அடவினை முற்படுகிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே’ என்ற வரிகளினின்று இதனை உணரலாம். தமிழைப் போற்றும் அடியவர்கள் பிறப்பையும் இறப்பையும் வெல்வர் என்பதை ‘தமிழினில் உருகிடும் அடியவர் இடமுறு சனனமரணமதை ஒழிஉற சிவமுற’ என்ற வரிகளில் காணலாம். தான் தமிழால் முருகனைப் பாடுவதையே பெரும்பேறாகக் கருதுவதாக

 

‘அருணதள பாதபத்மம்

அதுநித மேதுதிக்க

அறியதமிழ் தான்அளித்த மயிர்வீரா.’

 

‘செந்தமிழ் நாளும்ஓதி

உய்ந்திட ஞானம்ஊறும்

செங்கனி வாயில்ஓர் சொல் அருள்வாயே.’

 

‘அம்புவி தனக்குள்வளர்

செந்தமிழ் வழுத்திஉனை

அன்பொடு துதிக்கமனம் அருள்வாயே.’

 

போன்ற பாக்களின் வழி எடுத்துரைக்கின்றார். அருணகிரிநாதர் இயம்பும் சிலத் தமிழ் அடைமொழிகளைக் காண்போம். ‘தெள்ளுதமிழ், சந்தச் செந்தமிழ், கனத்த செந்தமிழ், பல்கு தமிழ், முதியமா தமிழ், ஏழிசைத் தமிழ், பெரிய தமிழ், வழுதியர் தமிழ், சுத்தச் சித்தித் தமிழ், அரிய தமிழ், சித்திரத் தமிழ், புகலரியதான தமிழ்,

அண்டர்கள் அறியா முத்தமிழ்’ மற்றும் பல உண்டு. தமிழ்ப் பற்றின் உச்சத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு அருணகிரிநாதரே ஆவார்.

 

தொன்மையானத் தமிழ்த் தாய் வாழ்த்துகளாக நமக்கு மூன்று பாடல்கள் காணக் கிடைக்கின்றன. முதலாவது, வில்லிப் புத்தூராரின் மாபாரதத்திற்கு வரந்தருவார் இயற்றிய பாயிரத்தில் காணப்படும் தமிழ் வாழ்த்து.

 

‘பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்

திருப்பிலே இருந்து, வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை,

நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன

மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலேவளருகின்றாள்.’

 

பொதிகை மலையில் பிறந்து, பாண்டியர்களின் அரவணைப்பிலே வளர்ந்து, முச்சங்கத்தின் கவனிப்பிலே இருந்து, திருஞானசம்பந்தர் சமணர்களுடன் பொருதிய சமயம் வைகை ஏட்டிலே தவழ்ந்து, நெருப்பிலே கருகாது நின்று, கற்றோர் நினைவிலே நடந்து,  திருமால் பூமியை மீட்டுக் கொணர்ந்த பொழுது, அந்த பூமா தேவியோடு கூடவே பிறந்து வளர்ந்து வந்தவள் இந்த தமிழ் தாய் என்று தமிழின் பெருமையை எடுத்து உரைக்கிறார்.  அதைத் தொடர்ந்து, தண்டி அலங்கார உரையில்,

 

‘ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது

தன்னேர் இல்லாத தமிழ்.’

 

மலையினூடே தோன்றி வையத்து இருளைப் போக்குவது இரண்டு. ஒன்று மலையிற் தோன்றி உலகத்து இருளைப் போக்கும் கதிரவன். மற்றொன்று பொதிய மலையிற் பிறந்து மக்களின் அகத்திருளைப் போக்கும் தமிழ் மொழி. இதுவே இத்தமிழ் வாழ்த்தின் பொருள். அடுத்து, பழம்பாடலாக ஒரு தமிழ் வாழ்த்து காணக் கிடைக்கின்றது.

 

‘வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினை

கையினாலுரை காலம் இரிந்திட

பைய நாவை அசைத்தப் பழந்தமிழ்

ஐயை தாள் தலை கொண்டு பணிகுவாம்.’

 

மக்கள் உணர்ச்சிகளைச் சைகை மொழியினால் உணர்த்திய காலம் மறைந்த பொழுது, முதன்முதலாக நாவசைவினில் பிறந்த மொழியாம்; பழந்தமிழை; தமிழ்த்தாயின் திருத்தாள்களைச் சிரம் தாழ்த்தி வணங்குவோம். இப்பாடலின் ஆசிரியர் பெயர் தெரியாவிடினும் அவரோர் அருந்தமிழ்ப் பற்றாளர் என்பது வெள்ளிடை மலை.

 

மதுரையில் ஈசன் நிகழ்த்திய அற்புதத் திருவிளையாடல்கள் அறுபத்து நான்கினை எடுத்தியம்பும் நூல் திருவிளையாடல் புராணம். இதனை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர். தமிழின் மீது ஈடிலா பற்று கொண்ட அவர் ஒரு பாடலில், “ஈசனே சங்கத்தில் புலவராய் வீற்றிருந்து மொழியாய்ந்த அருந்தமிழ் இவ்வுலகில் இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணப் படுமோ” எனக் கூறி வருந்துகிறார். அப்பாடல் வரிகள் இதோ.

 

‘கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து

பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை

மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?’

 

ஆனால், தொடர்ந்து வரும் பாடலில்,

 

‘யார் அறிவார் தமிழருமை என்கின்றேன் என்

அறிவீனம் அன்றோ? உன் மதுரை மூதூர்

நீர் அறியும், நெருப்பறியும், அறிவுண்டாக்கி

நீ அறிவித்தால் அறியும் நிலமுந்தானே.’

 

யார் அறிவார் தமிழருமை என வருந்துவது மடமையன்றோ! அந்நாள் மதுரையில் சம்பந்தர் சமணருடன் பொருதிட்ட காலத்தே தமிழ்ச் சுவடிகளின் அருமை அருமையை அறிந்ததனாலன்றோ ஆற்று நீர் அதனை எதிர் ஏற விட்டது; நெருப்பு சுட்டெரிக்காது நின்றது! ஈசன் இனி அறிவித்தால் நிலமும் தமிழின் பெருமையை உணர்ந்து கொள்ளும் எனக் கூறி மகிழ்கின்றார். வடமொழி மோகம் வலுத்திருந்த அக்காலத்தே கிரந்தத்தைக் காட்டிலும் தமிழ் உயர்ந்தது என்பதனை வலியுறுத்துகிறார்.

 

‘தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை

உண்ட பாலனை அழைத்ததும், எலும்புபெண் ணுருவாக்

கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்

தண்ட தமிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.’

 

‘கடுக்க வின்பெறு கண்டனும் தென்திசை நோக்கி

அடுக்க வந்துவந் தாடுவான் ஆடலின் இளைப்பு

விடுக்க ஆரம்மென் கால்திரு முகத்திடை வீசி

மடுக்க வும்தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ.’

 

“சுந்தரர் ஈசனைத் தூது விடுத்ததும்; முதலையுண்ட பிள்ளையை மீட்டுக் கொணர்ந்ததும், சம்பந்தர் சாம்பலைக் கன்னிப் பெண்ணாக தோற்றுவித்ததும், அப்பர் திருமறைக்காட்டு பெருங்கதவினைப் பாடித் திறந்ததும் தமிழில் பாமாலை இயற்றித்தானே? பிற மொழிகளிலா பாடினர் சொல்லீர்” என வினவுவதோடல்லாமல் “ஈசன் தமிழகத்தில் நடம் புரிவதற்குக் காரணமே இன்பமான தென்றலையும் இனிய தமிழையும் அனுபவித்து தனதுக் களைப்பைப் போக்கிக் கொள்ளவே ஆகும்” எனவும் சாற்றுகின்றார். தமிழில் இறைவனைக் கண்டு களித்த அருந்தவத்தோர் அவர்.

 

பிறவி ஊமையாய் இருந்து ஐந்து வயதில் திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறன் பெற்று பெரும் புலவராய் ஒளிர்ந்தவர் குமரகுருபரர். ‘தலைப் பாவலர் தீஞ்சுவைக் கனியும் தண் தேன் நறையும்     வடித்தெடுத்த சாரம் கனிந்தூற்றிருந்த பசுந்தமிழ்’ என நற்றமிழைப் போற்றுகிறார் குமரகுருபரர். அதுமட்டுமின்றி, ‘பாட்டுக்கு உருகும் தமிழ்ச் சொக்கநாதர்’ என்ற வரியில் இறைவன் தமிழுக்கு உருகுபவன் என்றும் ‘தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால்’ என்ற வரியில் மீனாட்சியம்மை தமிழொடு பிறந்தவள் என்றும் நவில்கின்றார். தொடர்ந்து, ‘நறைபழுத்த துறைத்தீம் தமிழின் ஒழுகுநறும் சுவையே’ என்ற அடியின் வழி “தேன் நிரம்பித் ததும்புகின்ற இனிய தமிழின் சுவையாகத் திகழ்கிறாய்” என மீனாட்சியம்மையைப் போற்றுகின்றார். ‘பொழிந்தகு முதுமறையின் சுவைகண்டும் பூத்தமுதம் வழிந்தொழுகுந் தீந்தமிழின் மழலை

செவிமடுத்தனையே’ என ஈசனைப் பணிகிறார் குருபரர். அஃதாவது, “வேதங்களின் சுவையில் மனம் நிறைவடையாது, அருஞ்சுவை கொண்ட தமிழின் மழலை மொழியைச் செவி மடுப்பவன் ஈசன்” எனப் பகர்கின்றார். தொடர்ந்து, மீனாட்சியம்மை மதுரையில் பிறந்ததற்குக் காரணம் இனிய தமிழின் சுவையை பருக வேண்டும் என்ற ஆவலினால்தான் எனச் சாற்றி, அத்துணைச் சிறப்பு மிக்க தமிழின் அருமையை யார் அறிவார் எனவும் வினவுகிறார். அந்தப் பாடல் இதோ.

 

‘தமரநீர்ப் புவன முழுதொருங் கீன்றாள்

தடாதகாதேவி யென் றொருபேர்

தரிக்கவந் ததுவுந் தனிமுத லொருநீ

சவுந்தர மாறனா னதுவுங்

குமரவேள் வழுதி யுக்கிரனெப்பேர்

கொண்டதுந் தண்டமிழ் மதுரங்

கூட்டுண வெழுந்த வேட்கையா லெலிலிக்

கொழிதமிழ்ப் பெருமையா ரறிவார்.’

 

அனைத்திற்கும் மேலாய் பிரம்மனைக் காட்டிலும் தமிழ்ச் சான்றோர்கள் சிறந்தவர்கள் என இயம்புகிறார் குருபரர். ஏனெனில், பிரம்மன் படைக்கும் மனிதர்கள் அழியக் கூடியவர்கள், ஆனால் தமிழ்ச் சான்றோர்கள் படைக்கும் தமிழ்க் கவிதைகள் அழிவிலாத் தன்மை கொண்டவை என மொழிகின்றார்.

 

‘கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும்

மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன்செய்

வெற்றுடம்பு மாய்வனபோன் மாயா புகழ்கொண்டு

மற்றிவர் செய்யு முடம்பு.’

 

இறைஞான மிக்கக் குமரகுருபரரும் தமிழ்ப் பற்றின் பால் கட்டுண்டு கிடப்பது வியன்மை மிகு ஒன்றே!

 

பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகத்தை இயற்றியப் பெரும்புலவர் படிக்காசப் புலவராவார். ஆழந்த தமிழ்ப் பற்றினைக் கொண்ட அவர் தனது தமிழ்ப் பற்றினை ஆங்காங்கே வெளிப் படுத்துகிறார். ஓரிடத்தில்,

 

‘தாய் அறிவாள் மகள் அருமை! தண்டலைநீள்

நெறிநாதர் தாமே தந்தை

யாய் அறிவார் எமது அருமை! பரவையிடம்

தூது சென்றது அறிந்திடாரோ?

பேய் அறிவார் முழுமூடர்! தமிழ் அருமை

அறிவாரோ? பேசுவாரோ?

நாய் அறியாது ஒரு சந்திச் சட்டிப் பானையின்

அந்த நியாயம் தானே!’

 

எனச் சாற்றுகின்றார். இதன் பொருள், “தன் மகளின் அருமையைத் தாயே அறிவாள். அடியவர்களின் அருமையை தந்தையாக விளங்கும் இறைவனே அறிவான். அதைப் போலவே, பேய்க் கதைகள் எத்துணை மூடத்தனமோ; அத்துணை அறிவீனமானச்  செய்திகளை அறிந்த முழுமூடர்கள் எவ்வாறு தமிழ் மொழியின் பெருமையை உணர்வர்? எவ்வாறு தமிழைப் பேசுவர்? இது, தெருவில் எச்சில் சோற்றை உண்ணும் நாய்க்கு, சமைக்கும் சட்டிப் பானைகளின் அருமை தெரியாது இருப்பதற்கு ஒப்பாகும்.” தொடர்ந்து, தமிழ்க் கவிதைகளின் இலக்கணங்கள் சில போலிப் புலவர்களால் குலைவதைக் கண்டு வெகுண்ட படிக்காசுப் புலவர் கீழ் கண்ட பாடலைப் பாடுகிறார்.

 

‘குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியன்சங் கில்லை

குறும்பியளவாக காதைக் குடைந்து தோண்டி

எட்டினமட டறுப்பதற்கோ வில்லி யில்லை

இரண்டொன்றாய் முடிந்துதலை இறங்கப் போட்டு

வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்த னில்லை

விளையாட்டாய்க் கவிதைதனை விரைந்து பாடிந்

தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகளுண்டு

தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே.’

 

அஃதாவது, “அதிவீரராம பாண்டியர் பிழையான கவிதைகளைப் புனைபவர்களைச் சங்கைக் கொண்டு தலையில் கொட்டுவார். மாபாரதம் இயற்றிய வில்லிப் புத்தூராரோ போலிப் புலவர்களின் காதைத் துறடு கொண்டு அறுப்பார். ஒட்டக் கூத்தரோ போலிப் புலவர்களைச் சிறையிலடைத்து நால்வர் நால்வராக குடுமியை முடிந்து ஒரே வெட்டில் காளி தேவிக்குப் பலியிடுவார். அது போன்ற புலவர்கள் தற்காலத்தில் இல்லாத காரணத்தினால்தான் இலக்கணம் பயின்றிடாத அறிவிலிகளும் தங்களைப் புலவரெனக் கூறித் திரிகின்றனர்” என்கின்றார்.

 

உடலைச் சுடராய் மறைத்த இராமலிங்க அடிகளாரை அனைவரும் அறிவோம். ‘மெய்யடியார் சபை நடுவே எந்தை உனைப் பாடி மகிழ்ந்தின்புறவே வைத்தருளிச் செந்தமிழின் வளர்க்கின்றாய்’ என்ற வரிகளின் வழி தனக்குச் செந்தமிழால் இறைவன் அருள் பாலிப்பதாக இயம்புகிறார் அவர். தனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் தமிழால் இறைவன் அருள் புரிவதாகப் பகர்கின்றார். ‘வடிக்குறும் தமிழ்க் கொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே’ என்ற அடியில் இதனைக் காணலாம். தமிழைப் பற்றிய அவரது ஆணித்தரமான கருத்து “சாகாக் கலை தந்தது தமிழ்; ஆரவாரமில்லாதது தமிழ்; எம்மொழிக்கும் பித்ரு தமிழே” என்பதேயாகும். அவரைத் தொடர்ந்து சோணசைல மாலை இயற்றிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளும்,

 

‘விரைவிடை யிவரு நினைப்பிற வாமை

வேண்டுநர் வேண்டுக மதுரம்

பெருகுறு தமிழ்ச்சொன் மலர்நினக் கணியும்

பிறவியே வேண்டுவன் றமியேன்.’

 

என்ற பாடலில் தான் இறைவனுக்குத் தமிழ்ப் பாமாலைச் சூட்டும் பிறவியையே வேண்டுவதாக விளம்புகிறார். திருக்கயிலாய ஞானவுலா இயற்றிய சேரமான் பெருமாள் நாயனாரோ ‘தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர் வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள்’ என்ற அடியில் உமையவள் தமிழாய் உருப் பெற்றவள் எனப் போற்றுகின்றார். வைணவ அடியாரான சடகோபரோ தமிழைப் பால்போன்ற தமிழ்; ‘பாலேய் தமிழ்’ என மொழிகின்றார். நாலாயிரத் திவ்யப் பனுவல் ஆசிரியர்கள் ‘நல்ல தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்’ , ‘செந்திறத்த தமிழ் ஓசை வடசொல்லாகி...’ போன்ற வரிகளின் வழித் தமிழ்ப் பற்றை வெளிக் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் ‘தமிழ்’  எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு “விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நாமருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்” எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர்.

 

தமிழ்ப் பற்றின் உச்சமாக, தமிழ் மொழியின் சிறப்பினைப் போற்றும் வகையில் மதுரைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய, தமிழ் விடு தூது எனும் நூலினை உரைக்கலாம். ஈசன் மேல் காதல் கொண்ட ஒரு பெண் தமிழ் மொழியை இறைவனிடத்துத் தூது அனுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது. தமிழைத் தூது போகச் சொல்லும் அப்பெண் தமிழின் பெருமைகளை எடுத்தியம்புகிறாள். அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

 

‘தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்ளமுதின் மேலான

முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள்

உண்ணப்படும் தேனே!’

 

எனத் தமிழைப் போற்றும் அம்மடந்தை,

 

‘மண்ணில் புகழ்உருவாய் வாழ்வதற்கும் வாழுநர்

விண்ணில் போய்த் தேவுருவாய் மேவுதற்கும் - எண்ணிஉனைக்

கொண்டு புகழ் கொண்டவர்க்கே கூடும் உனைக்கூடாத

தொண்டருக்குத் தென்பாலே தோன்றுமால்!’

 

என மொழிகின்றாள். அஃதாவது, உலகில் புகழ்பட வாழும் வாழ்வும் விண்ணில் நற்கதியை அடையும் நிலையும், தமிழாகிய உன்னைக் கொண்டு இறைவனைப் போற்றியவருக்கேக் கிடைக்கும். அவ்வாறு உனைக் கொண்டு இறைவனைப் போற்றாதவருக்கு எமன் வாழும் கொடுநரகமே கதி என விளம்புகிறாள். அதுமட்டுமின்றி, “உலகையே திருக்குறள் தன்னகத்தே கொண்டுள்ளது என அறிஞர்கள் மொழிவர். அவ்வாறெனில், நான்கு வரிகளினான நேரடிப் பாக்களுக்கு வேறு நிலங்கள் உண்டோ?” என வினவுகிறாள்.

 

‘ஈரடிக்குள்ளே உலகமெல்லாம் அடங்கும் எனின்

நேரடிக்கு வேறே நிலன்உண்டோ!’

மேற்கண்ட அடியில் அக்கருத்தைக் காணலாம். அடுத்து, வடமொழியே இறைமொழி என வாதிடுபவர்களை நோக்கிக் கூறுகிறாள், “அற்றைநாள் சமணரை எதிர்த்த சம்பந்தர், தனது சுவடியை வையை ஆற்றிலே விட்டபொழுது அவ்வேடு நீரை எதிர்த்தேறியது. அச்சுவடியே, தமிழின் வல்லமையைச் செழுமையுற எடுத்துரைக்கும்” எனப் பகர்கின்றாள்.

 

‘வடமொழியில் வேத வசனமே ஈசர்

திட மொழியா என்பார் சிலரே - அடரும்

பரசமய கோளரியாய்ப் பாண்டி நாடுஎங்கும்

அரசமயம் நீ நிறுத்தும் அந்நாள் - விரசு நீ

ஆதிக்கண் வையையில் வேதாகமத்தைத் தாபித்தாய்

சோதிக்கிந் ஏடகமே சொல்லாதோ!’

 

என்ற வரிகளின் வழி இதனை அறியலாம். தொடர்ந்து,

 

‘செய்தாய் நால்வேதம் திகைத்து ஒதுங்கப் பித்தன்என்று

வைதாய் நீ வைதாலும் வாழ்த்தாமே’

 

என்ற வரியில் “இறைவனை வடமொழியில் வேத மந்திரங்களைக் கொண்டுதான் வணங்க முடியும், ஆனால் தமிழில் “பித்தா” என இறைவனை வைதால் கூட அதனை வாழ்த்தாக இறைவன் ஏற்றுக் கொள்வான்” என இயம்புகின்றாள். இறுதியில் தனது முடிந்த முடிபாக,

 

‘அரியாசனம் உனக்கே ஆனால் உனக்குச்

சரியாரும் உண்டோ தமிழே!’

 

என்ற வரியில் ‘தன்னிகரில்லாத் தமிழ்’ என வாழ்த்தும் அந்நங்கை, “என்றும் இருந்த; இருக்கின்ற; இருக்கும் தமிழே! நான் வாழ்வதற்குக் காரணம் நீயே! உனை விடுத்து அமர உலகத்து அமிழ்தத்தையும் நான் வேண்டேன்”  எனச் சாற்றுகின்றாள்.

 

‘இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்

விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்!’

 

எனும் அவ்வரி கேட்போருள்ளத்தை உருக்கக் கூடியது. தமிழ் மணம் கமழும் அத்தமிழ் விடு தூது காலத்தால் அழியாதது.

 

தற்பொழுது நாம் தமிழ்த் தாய் வாழ்த்தாக கொண்டிருக்கும் பாடல் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது ஆகும். அவரது மனோன்மணீயம் என்ற நாடக நூலினின்று எடுக்கப்பட்ட பாயிரப் பாடலே இத்தமிழ்த் தாய் வாழ்த்து.

 

‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே

தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்

அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற

எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே!’

 

“கடலெனும் உடையை உடுத்திய புவித் தாய்க்கு எழில் முகமாக விளங்குவது பாரதத் திருநாடு. அவ்வெழில் முகத்தின் பிறையொத்த நெற்றியாக விளங்குவது தெக்கண பீடபூமி. திலகமாகத் திகழ்வது திராவிட நாடு. அத்திலகத்தின் வாசனையாக வையத்து எத்திசையும் மணம் பரப்புபவள் தமிழ் மடந்தை” என நவில்கின்றார்.

இதன் அடுத்த கண்ணியில்,

 

‘பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்

கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலையாளமுந்துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்

ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்துசிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!’

 

எனப் பகர்கின்றார். இதன் பொருள், “ அனைத்துலகையும் படைக்கும் இறைவன் என்றும் அழிவில்லாதுத் திகழ்பவன். அதைப் போலவே தமிழும் என்றும் இளமை மாறாத கன்னியாகவே விளங்குகிறாள். கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழினின்று பிரிந்து சென்ற போதிலும், தமிழ் மொழியானது வடமொழியைப் போல் வழக்கொழிந்துப் போகவில்லை; சிதையவில்லை. ஆதலால், அத்தமிழணங்கின் இளமைத் தன்மையைக் கண்டு வியந்து; யான் செய்யும் செயல்களையும் மறந்து வாழ்த்துகிறேன்!” என்பதே ஆகும். இதனின்று அமரர் சுந்தரர் பிள்ளை அவர்களின் ஆழ்ந்த செந்தமிழ்ப் பற்று நன்குப் புலப்படுகிறது.

 

அவரைத் தொடர்ந்து தங்களின் தமிழ்ப் பற்றைப் பாடல்களின் வழி உலகுக்குப் பறைச் சாற்றியவர்கள் பல்லோராவர். அவர்களுள் சிலரைக் காண்போம். மகாகவி எனப் புகழப் படும் அருங்கவிஞர் பாரதியார், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ எனப் பெருமிதத்தோடு உரைக்கின்றார். அதுமட்டுமின்றி, ‘தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்பு கண்டார்’ என தமிழின் அருங்குணத்தை எடுத்தியம்புகிறார். ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என முழக்கம் செய்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரோ, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’ எனப் பறைச் சாற்றுகின்றார். ஈழத்துப் புலவர் சச்சிதானந்தம் அவர்களின் கவிதை வரிகள் தமிழ்ப் பற்றை செம்மையுற விளம்ப வல்லவை.

 

‘சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல்

சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்

பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்

பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்

ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்

ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்.’

 

என்னே அவரதுத் தமிழ்ப் பற்று! கவிஞர் வாலியோ, ‘தமிழா! தமிழா! உனக்கும் எனக்கும் தாயால் வந்தது யாக்கை; தமிழால் வந்தது வாழ்க்கை’ என ஓதுகின்றார். பல்தமிழிலக்கியங்களுக்கு உரை விளக்கம் அளித்த தமிழறிஞர் புலியூர் கேசிகனார்,

 

‘என்று தோன்றினள் எனவகுத் துரைத்திட

இன்றும் என்றும் இயன்றிடாத் தொன்மையள்!

என்றும் மாறா இளமையள், பொலிவினள்!

நன்றுபல் இலக்கியம் இலக்கணம் பெற்றவள்!

குன்றாக் கொள்கையின் குவலயம் வென்றவள்!

தனக்குத் தானே இணையெனத் தமிழர்தம்

வணக்கம் கொண்டே வாழ்பவள்!’

 

எனத் தமிழைப் போற்றுகின்றார். திருக்குறளுக்குப் பேருரையாகக் ‘குமரேச வெண்பா’  எனும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நூலை இயற்றிய அரும்புலவர் கவிராச செகவீர பாண்டியனார். அவர் தமிழின் அருமையை,

 

‘அமிழ்தம் அனைய அரிய சுவையால்

தமிழினிமை என்னும் தகையாய் – இமிழ்திரைசூழ்

ஞாலம் புகழ நளின நடம்புரியும்

கோலம் தெளிக குவிந்து.’

என்ற பாடலின் வழிச் சாற்றுகின்றார். இரா.வாசுதேவ சர்மா அவர்களோ,

 

‘பொன்னும் புவியும் புதை பொருளும் யான் வேண்டேன்

துன்னுஞ் சுடர்விழியாய்த் தமிழணங்கே – நின்னடிக்கீழ்

பன்னுந் தமிழ்ப் பனுவற் பாடிடவுங் கேட்டிடவு

மின்னும் மென வெழுஞ்சீ ரிதயமே வேண்டுவனால்.’

 

எனத் தமிழ்த் தாயைப் பணிகின்றார். இதனின்று தமிழர்களின் உள்ளத்தே தமிழ்ப் பற்று ஆழப் பதிந்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

 

தமிழ்ப் பற்றின் உச்சக் கட்ட வெளிப்பாடாக சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நடைப் பெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தைத்தான் குறிப்பிட வேண்டும். உலகிலேயே எங்கும் நடந்திராத மாபெரும் மொழிப் போர். இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப் பட்டதாலும் தேசிய மொழியாக அறிவிக்கப் பட்டமையாலும் கிளர்ந்த கிளர்ச்சி. தமிழர்களின் மொழிப் பற்றின் ஆழத்தை அறிதற்கு மொழிப் போராட்டத்தின் வரலாற்றை அறிவது மிகவும் இன்றியமையாததாகும். சுதந்திரத்திற்கு முன், பல்வேறு இனம்; மொழி; மதம்; பண்பாடு ஆகியவற்றைக் கொண்ட இந்திய மக்களை எவ்வாறு ஓரணியாய் ஒன்று திரட்டுவது எனச் சிந்தித்தார். சிந்தனைக்குப் பின் இந்தி மொழி எனும் ஆயுதத்தைக் கையிலெடுத்தார். இந்தியர்கள் அனைவரும் ஒருமனதோடு இந்தி பயில வேண்டும் என முழங்கத் தொடங்கினார். 1915 ஆம் ஆண்டு காந்தி அவர்கள் உருவாக்கிய அந்தத் தீப்பொறி 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தலில் வென்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய பொழுதுக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. சென்னை மாகாண முதல்வராக இராசகோபாலாச்சாரியார் பதவியேற்றார். அவர் தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்திப் படிப்பதைக் கட்டாயமாக்கியது. இதனால் தமிழ் மொழியின் பயன் குறைந்து தமிழ் அழிவு நிலைக்குத் தள்ளப் படும் என்று தமிழ்க் கடல் மறைமலையடிகளார், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். இவர்களே  திருச்சியில் முதலாம்  இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள் மற்றும் வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது. இந்த எதிர்ப்புகளுக்கு இடையே ராஜாஜி 21 ஏப்ரல், 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார். அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது. இப்போராட்டத்தில் பெண்களும் பெரும்பான்மையாகப் பங்கேற்றமைக் குறிப்பிடத் தக்கது. 3, திசம்பர் 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. 1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் காவல் நிலையத்திலேயே இறந்தனர். பிற்பாடு இவர்கள் மொழிப்போர் தியாகிகள் என்றழைக்கப்பட்டனர். ஈ.வெ.ரா உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்; அவர்களில் 1,179 பேர் தண்டிக்கப்பட்டனர். சிறைத்தண்டனை வழங்கப்பட்டவர்களில் 73 பேர் மகளிராவர். அவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளுடன் (32 குழந்தைகள்) சிறை சென்றனர். 29 அக்டோபர் 1939 அன்று இராசாசியின் காங்கிரசு கட்சி ஆட்சி இரண்டாம் உலகப்போரில் இந்தியா ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்து பதவி விலகியது. மாநில ஆட்சி, ஆளுனரின் மேற்பார்வையில் அமைந்தது. மேலும் வலுவுற்ற எதிர்ப்பின் காரணமாக 21 பிப்ரவரி 1940 அன்று ஆளுனர் 'எர்ஸ்கின்' கட்டாய இந்திக்கல்வியை விலக்கி விருப்பப் பாடமாகக் கற்கும் வகையில் இதழ்க் குறிப்பொன்றை வெளியிட்டார்.

 

1948 இல் சென்னை மாகாண அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ஆகியிருந்தார். மீண்டும் மறைமுகமாக இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப் பட்டது. மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலையில் 17 ஜூலை 1948 அன்று சென்னையில் உள்ள புனித மேரி மண்டபத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திராவிடர் கழகத்தினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். மறைமலை அடிகள் தலைமையில் தொடங்கிய அந்த மாநாட்டில் ஈ.வெ.ரா, திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ம.பொ. சிவஞானம், கவிஞர் பாரதிதாசன், அண்ணா, நாரண. துரைக்கண்ணன், டாக்டர் தர்மாம்பாள், அருணகிரி அடிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தித் திணிப்புக்கு எதிராக முக்கியத் தலைவர்கள் பலரும் பேசினர். அண்ணா பேசும்போது,

‘மறைமலை அடிகளாரும் திரு.வி.க அவர்களும் இந்தி நுழைவால் தமிழ் கெடும், தமிழ் கலாசாரம் கெடும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டபிறகு, அவர்கள் சாட்சியம் நமக்குக் கிடைத்துவிட்ட பிறகு போர் முழக்கம் செய்வது தவிர நமக்கு வேறென்ன வேலையிருக்கிறது?’ என்று கேட்டார். அதைத் தொடர்ந்து, சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே மறியல் நடத்துவது என்றும் அந்தப் போராட்டத்துக்கு அண்ணா ‘சர்வாதிகாரியாக’ செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி 10 ஆகஸ்டு 1948 அன்று போராட்டம் தொடங்கியது. சர்வாதிகாரி அண்ணா, படைத்தலைவர் சி.டி.டி. அரசு உள்ளிட்டோர் மாணவர்களைச் சந்தித்து, ‘கட்டாய இந்தியை எதிர்க்கவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர். காலையிலும் மாலையிலும் தொடர்ச்சியாக மறியல்கள் நடந்தன. மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது மட்டுமல்ல, கண்ணீர்ப்புகை வீச்சும் தடியடியும் துப்பாக்கிச்சூடுகளும் நடந்தன. 23 ஆகஸ்டு 1948 சென்னை வரவிருந்த இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தடியடிகளுக்கும் கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கும் மத்தியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் வைத்து கவர்னர் ஜெனரல் ராஜாஜி, மாகாண ஆளுநர் பவநகர் மகாராஜா ஆகியோருக்குக் கறுப்புக்கொடிகள் காட்டப்பட்டன. ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டிய தமிழ்ப்புலவர் கா. அப்பாத்துரையும் அவரது மனைவியும் காவலர்களின் கடுமையாக தாக்குதலுக்கு ஆளாகினர். தொடர்ந்து, அண்ணாதுரை,  ஈ.வெ.ரா உட்பட பல தி.க.வினர் ஆகஸ்ட் 27 அன்று கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், போராட்டம் தொடர்ந்தது. டிசம்பர் 18 ஆம் தேதி ஈ.வெ.ரா மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் விரைவில் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் சமரச உடன்பாடு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்; அரசும் அவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்னர் இந்திப் பாடத்தை 1950-51 கல்வியாண்டிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றி விட்டது. இந்தி கற்க விரும்பாத மாணவர்கள் இந்தி வகுப்புகளின் போது பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்நிலை சிறிது காலமே நீடித்தது. இந்தியுடன் ஆங்கிலமும் இணை அலுவலக மொழியாக விளங்கியதை இந்தி ஆதரவாளர்கள் குறை கூறி வந்தனர்; பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி, இந்தி மட்டுமே தேசியமொழியாக வேண்டும் என்று கோரினார். இந்தியக் குடியரசு 1950, சனவரி 26-இல் நிறுவப்பட்டப்பின்னர், இந்தியை அலுவலக மொழியாகப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1952 ஆம் ஆண்டு மத்திய கல்வித்துறை, விருப்பமாக இந்தி பயிலும் திட்டத்தைத் துவக்கியது. 27 மே, 1952ல் நீதிமன்ற பிடியாணைகளில் இந்தி அறிமுகப்படுத்தப்பட்டது. 1955ஆம் ஆண்டு அனைத்து மத்திய அரசுத்துறைகளிலும் இந்தி பயிலும் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. 3 திசம்பர் 1955 முதல் அரசு ஒன்றியத்தின் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு இந்தியை ஆங்கிலத்துடன் பயன்படுத்தத் துவங்கியது. முதல் அலுவலக மொழி ஆணையத்தை பி. ஜி. கேர் என்பவர் தலைமையில் 7 சூன், 1955ல் நேரு அமைத்தார். ஆணையம் தனது அறிக்கையை 31 சூலை, 1956 அன்று அளித்தது. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைக் கொணர ஆணையம் பல வழிகளைக் குறிப்பிட்டிருந்தது. கேர் ஆணைய அறிக்கையை ஆய்வு செய்ய கோவிந்த் வல்லப் பந்த் தலைமையிலான அரசுமொழிக்கான நாடாளுமன்றக் குழு செப்டம்பர் 1957ல் அமைக்கப்பட்டது. அக்குழு இரு ஆண்டுகள் விவாதித்து 8 பிப்ரவரி 1959ஆம் ஆண்டு தனது அறிக்கையை வெளியிட்டது. அது இந்தியை முதன்மையான அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தை துணைமொழியாகவும் பரிந்துரைத்தது. கேர் மற்றும் பந்த் அறிக்கைகள் இரண்டுமே சுனிதி சாட்டர்ஜி, சுப்பராயன், பிராங்க் அந்தோணி போன்ற இந்தி பேசாத அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1956ஆம் ஆண்டு நடந்த ஓர் மாநாட்டில் 'தெலுங்கு அகாதெமி' இந்தி மட்டும் அலுவலக மொழியாவதை எதிர்த்தது. முன்பு தீவிரமாக இந்தியை ஆதரித்த ராஜாஜி இவ்வமயம் ஆங்கில மாற்றாக இந்தி அமைவதற்கு எதிராக, தமிழ், தெலுங்கு, மலையாளம், அசாமி, ஒரியா, மராத்தி, கன்னட மற்றும் வங்காள மொழியினரைக் கொண்ட அனைத்திந்திய மாநாடு ஒன்றை 1958ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று நடத்தினார். அப்போது "இந்தி ஆதரவாளர்களுக்கு எவ்வாறு ஆங்கிலம் அந்நிய மொழியோ அதேயளவில் இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழியே என முழங்கினார்.இந்தி எதிர்ப்பு வலுத்து வந்த நேரத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாதவர்களின் கவலையைப் போக்குவதற்கு முயன்றார். 'பந்த் குழு அறிக்கை' மேலான நாடாளுமன்ற விவாதத்தில், செப்டம்பர் 1959இல் பின்வரும் உறுதிமொழியைக் கொடுத்தார். “ஆங்கிலம் தரும் வசதிகள் போன்றவற்றிற்காக அல்லாது இந்தி பேசா மக்கள் அரசுடன் இந்தி மொழியில் தொடர்பு கொள்ள கட்டாயப்படுத்தப்படுவதால் தங்கள் முன்னேறும் வழிகள் அடைபட்டுள்ளதாகக் கருதுவதை நான் விரும்பாததால் காலவரையின்றி - எத்தனை காலம் என்று நானறியேன் - ஆங்கிலம் இணை, கூடுதல் மொழியாக இருக்க வேண்டும், இருக்கும். அவர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளலாம். ஆகவே மக்கள் விரும்பும்வரை அதனை மாற்று மொழியாக வைத்திருப்பேன்; இதற்கான முடிவு எடுப்பதை இந்தி பேசும் மக்களிடம் அல்லாது இந்தி பேசாத மக்களிடமே நான் விடுவேன்.இந்த உறுதிமொழி தென்னிந்தியர்களுக்கு சற்றுகாலம் ஆறுதல் அளித்தது.

 

ஆட்சிமொழி ஆணையம், நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி 13 ஏப்ரல் 1963 அன்று ஆட்சி மொழி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின்படி, 26 ஜனவரி 1965 முதல் இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும். இந்திக்குத் துணையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். நேருவின் முந்தைய வாக்குறுதி ஏன் மசோதாவில் இணைக்கப்படவில்லை என்ற கேள்வி நாடாளு மன்றத்தில் பலத்த விவாதத்தைக் கிளப்பியது. மக்களவை உறுப்பினர் ஃப்ராங்க் அந்தோனிக்கும் பிரதமர் நேருவுக்கும் இடையே நேருக்கு நேரான விவாதம் நடந்தது. உச்சக்கட்டமாக, ‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டம், மசோதாவுக்கும் உறுதிமொழிக்கும் தொடர்பு இல்லை. நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய அமைப்புகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது முட்டாள்தனம்’ என்று பதில் சொல்லி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பிரதமர் நேரு. ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்ற நேருவின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டதால் அடுத்தக் கட்ட மொழிப் போர் தொடங்கியது. 7 மார்ச் 1964 அன்று, மாநில சட்டப்பேரவையில் முதல்வர் எம். பக்தவத்சலம் மும்மொழி திட்டத்தைப் (ஆங்கிலம், இந்தி, தமிழ்) பள்ளிகளில் கற்பிக்க முன்மொழிந்தார். மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழக மாணவர்களிடையே இந்தி எதிர்ப்பினை அதிகரித்தது. திமுக நடத்திய மொழிப்போரின் தாக்கம் தமிழ் இளைஞர்களைக் கொதித்தெழச் செய்தது. தமிழ் காக்கும் போராட்டத்தில் தங்களையும் ஈடுபடுத்திக்கொள்ளத் தயாராகினர். அவர்களில் ஒருவர் சின்னச்சாமி. வயது இருப்பத்தியேழு. திருச்சி மாவட்டம் கீழப்பழுவூர்கிராமத்தைச் சேர்ந்தவர். திருமணமானவர். தமிழ்ப் பற்றாளரான இவருக்கு மனைவியும் திராவிடச் செல்வி என்ற இரண்டு வயது மகளும் இருந்தனர். சொந்த வேலை காரணமாக திருச்சியில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்றிருக்கிறார் சின்னச்சாமி. முதலமைச்சர் பக்தவத்சலமும் அதே ரயிலில்தான் பயணம் செய்கிறார் என்ற செய்தி காற்றுவாக்கில் காதில் விழுந்தது சின்னச்சாமிக்கு. உற்சாகம் வந்துவிட்டது சின்னச்சாமிக்கு. எப்படியாவது முதலமைச்சரைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டார். ரயில் சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் வந்து நின்றதும் முதலமைச்சரை நோக்கி ஓடினார். பாதுகாவலர்கள் புடைசூழ எதிரே வந்துகொண்டிருந்தார் முதலமைச்சர் பக்தவத்சலம். அவரைப் பார்த்த மாத்திரத்தில் மனத்துக்குள் எழுந்த கேள்வியைக் கேட்டார் சின்னச்சாமி. “அய்யா, நீங்கள் தமிழைக் காப்பதற்காக இந்தித் திணிப்பைத் தடுக்கக்கூடாதா?” ஏற்கெனவே திமுக நடத்திக்கொண்டிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் கண்டு எரிச்சலில் இருந்தார் பக்தவத்சலம். இப்போது வழியில் தென்பட்ட யாரோ ஒருவர் இந்தித் திணிப்பு பற்றிக் கேள்வி கேட்டதை அவர் கொஞ்சமும் ரசிக்கவில்லை. சின்னச்சாமியின் கேள்வியை அலட்சியம் செய்துவிட்டு மின்னல் வேகத்தில் நகர்ந்து விட்டார். முதலமைச்சர் காட்டிய அலட்சியம் சின்னச்சாமியை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குத் தன்னால் ஆன காரியத்தைச் செய்யவேண்டும். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவர் தன்னுடைய நண்பருக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தின் முக்கியப்பகுதி இதோ, “ஏ, தமிழே! நீ வாழவேண்டும் என்பதற்காக நான் துடியாத் துடித்துச் சாகப்போகிறேன்.. காலை 11 மணிக்குள் என் உடல் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு செத்துவிடுவேன். இதைப் பார்த்த பிறகாவது ஏன் இந்தி? எதற்காக இந்தி? என்று மக்கள் கேட்கட்டும்.” எழுத்தில் சொன்னதைச் செயலில் காட்டத் தயாரானார் சின்னச்சாமி. 25 ஜனவரி 1964 அன்று காலை திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்த சின்னச்சாமி தன்னுடைய உடலுக்குத் தீ வைத்துக்கொண்டார். இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என முழக்கம் எழுப்பியபடியே எரியத் தொடங்கினார். சில நிமிடங்களில் கோஷம் நின்றது. உயிர் பிரிந்தது. இந்தித் திணிப்பைக் கண்டித்து முதல் களபலியாக மாறியிருந்தார் சின்னச்சாமி!

 

16 சனவரி அன்று அண்ணாதுரை, எதிர்வந்த குடியரசு நாளைத் துக்கநாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். முன்னதாக அவர் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்குத் தமிழக மக்கள் குடியரசு நாளைக் கொண்டாட ஏதுவாக மொழி மாற்ற நாளை ஒருவாரம் தள்ளிப்போடுமாறு கோரியிருந்தார். அதற்கு பிரதமர் ஒப்பாதது மோதலுக்கு வழி செய்தது. சென்னை மாநில முதல்வர் எம். பக்தவத்சலம் குடியரசு நாளை அவமதிப்பதை அரசு அனுமதிக்காது என்றும் மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். திமுக துக்கநாளை ஒருநாள் முன்னதாக சனவரி 25 க்கு முன்னேற்றியது. 25 சனவரியன்று கா. ந. அண்ணாதுரையும் 3000 திமுக தொண்டர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். மதுரை , கோவை, திருச்சி, மேலூர், மாயவரம், தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், விருதுநகர், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மாணவர் போராட்டங்கள் ஆக்கிரமித்தன. மாணவர்கள் தலைவர்கள் முதலமைச்சர் பக்தவத்சலத்தைச் சந்தித்துப் பேச விரும்பினர். ஆனால் அதற்கு மறுத்துவிட்டார் பக்தவத்சலம்.

26 ஜனவரி 1965 அன்று அதிகாலை நான்கு மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்ற இளைஞர் இந்தித் திணிப்பைக் கண்டித்துத் தீக்குளித்துவிட்டார் என்ற செய்தி பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் விருகம்பாக்கம் அரங்கநாதன் தீக்குளித்தார். இந்தித் திணிப்பை எதிர்த்து தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்தன. அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், பீளமேடு தண்டபாணி என்று தமிழுக்காகத் தம்மைப் பலிகொடுத்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. ஜனவரி 26 அன்றுதான் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் முந்தைய நாளில் இருந்தே திமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரையும் கைது செய்தது பக்தவத்சலம் அரசு. ஆனாலும் போராட்டம் தடைபடவில்லை. திமுகவினர் தமது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். சட்டையில் கறுப்பு அடையாள அட்டையை அணிந்தனர். திமுகவினர் ஒருபக்கம் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மாணவர்களின் போராட்டமும் தொடர்ந்துகொண்டிருந்தது. முதல்வர் இதனைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி கட்டுக்குள் கொண்டுவர துணைராணுவத்தினரை அழைத்தார். விளைவு, துப்பாக்கிச் சூடுகள் நடைபெறத் தொடங்கின. ஏழு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபத்தைந்து பேர் கொல்லப்பட்டனர். இது அரசாங்கம் சொன்ன கணக்கு. ஆனால் அசல் கணக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் உயிரைப் பலி கொடுத்தனர். மாணவர்களின் போராட்டம் தொடர்ந்ததால் துப்பாக்கிச்சுடுகளும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன.

 

14 மார்ச் 1965 அன்று இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். உலகில் நடந்த மொழிப் போராட்டங்களிலேயே அதிகமான உயிர்ப் பலிகளைக் கொண்ட கிளர்ச்சி இதுவே. அளவுக்கு மீறிய அடக்குமுறை காரணமாகப் போராட்டங்கள் நசுக்கப்பட்டன என்றாலும் மனத்துக்குள் எரிந்துகொண்டிருந்த போராட்ட நெருப்பை அரசாங்கத்தால் அணைக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து நடந்த பொதுத்தேர்தலில் அந்த நெருப்பு தனது பலத்தை நிரூபித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அப்புறப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்றுவரை சுமார் நாற்பது ஆண்டுகளாக ஆட்சியின் அருகில்கூட வராமல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. தொடர்ந்து தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அறிஞர் அண்ணா நடுவன் அரசின் மும்மொழித் திட்டச் சட்டத்தை மீறி தமிழ் மற்றம் ஆங்கிலத்தைக் கொண்ட இருமொழிக் கொள்கைச் சட்டத்தை நிறைவேற்றினார். அதன் விளைவு இன்று இந்தியாவிலேயே இந்தி முழுமையாக இல்லாத ஒரே மாநிலமாகத் தமிழகம் விளங்கி வருகின்றது. இந்தியாவில் இந்தி எழுத்துகள் பொறிக்கப் படாத ஒரே அரசுச் சின்னம் தமிழகத்தின் அரசுச் சின்னம் மட்டுமே! இந்தி மொழி பயிற்றுவிக்கப் படாத ஒரே மாநிலம் தமிழ் நாடு மட்டுமே! அரசு ஆணைகள் தாய் மொழியால் பிறப்பிக்கப் படும் மாநிலமும் தமிழகம் ஒன்றே! மொழிக்கு என தனிப் பல்கலைக்கழகம் நிறுவி மொழியைப் பாதுகாக்கும் மாநிலமும் மொழியைக் காக்கக் கணக்கிலடங்காச் சங்கங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள மாநிலமும் தமிழகம் மட்டுமே! அற்றை நாள் சான்றோர் முதற்கொண்டு இற்றை நாள் தமிழர்கள் பல்லோரும் தமிழ் மொழியைப் பாதுகாக்க தமது உடல் பொருள் ஆவியை ஈந்துள்ளனர். தமிழர்களாகிய நமதரும் கடன் யாதெனில் தமிழ் மொழி இலக்கியங்களை அழியாது பாதுகாத்தலும்; அவற்றை ஆய்ந்து உய்த்துணர்தலும்; செம்மையுறக் கற்றுத் தேர்தலும்; தமிழ் மொழியைப் பிழையறப் பேசுதலும்; தாய் மொழியின் அவசியத்தையும் தமிழ் மொழியின் மாண்பையும் உலகரியச் செய்தலும்; மாணவர்களிடம் தமிழ்ப் பற்றை ஊட்டுதலுமேயாகும். தமிழால் உயர்வோம் வாரீர்!

 

-எழுதியவர் தமிழ் வள்ளுவர்