தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு முடித்து தேர்வு பெற்ற தகுதியான இலங்கை அகதி மாணவர்களை, மற்ற மாணவர்களோடு அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், நேரடி இரண்டாம் ஆண்டிற்கான என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர்த்துக் கொள்ளலாமா என்பது குறித்தும், தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்து, தேர்வு பெற்ற தகுதியான இலங்கை அகதி மாணவர்களை மற்ற மாணவர்களோடு சேர்த்துக் கொள்ளலாமா என்பது குறித்தும் அரசுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கடிதம் எழுதியிருந்தார்.
அவரது கோரிக்கையை நன்கு பரிசீலனை செய்த அரசு, 2011 2012 ம் கல்வியாண்டு முதல் இலங்கை அகதிகள் முகாம்களில் இருந்து என்ஜினீயரிங் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட தலைமையிடத்து வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட ஆளறிச் சான்றிதழுடனும்,
அகதிகள் முகாம்களில் பதிவு செய்யப் பெறாதவர்கள், அவர்களுடைய விசா மற்றும் கடவுச் சீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், என்ஜினீயரிங் கல்லூரிகளில் மற்ற மாணவர் சேர்க்கை முடிவுற்ற பின், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மிகாமலும், பொதுப்பிரிவின் கீழ் காலியிடங்கள் ஏதும் இருந்தால் அதில் இலங்கை அகதி மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.