குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

பட்டுவேட்டியை மைத்திரி தரப்போவதில்லை – கட்டி இருக்கும் கோவணத்தையாவது மகிந்த உருவக் கூடாது அல்லவா....

நடராயா குருபரன்:-2005ஆம் ஆண்டு சனாதிபதி தேர்தல் இடம்பெறும் போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த காலம்... மீண்டும் போர் ஒன்று வெடிக்கப் போவதான ஏக்கங்கள் நாடுபூராகவும் சூடுபிடிக்கத் தொடங்கிய காலம்...முசுலீம் காங்கிரசை பல குழுக்காளாக உடைத்தார் - ஜேவீபியை 3 பிரிவுகளாக தகர்த்தார் - மலையகக் கட்சிகளை சிறு சிறு குழுக்களாக பிரித்தெடுத்தார்... ஐக்கியதேசியக் கட்சியில் இருந்து 67 பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கினார். பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் உருவாக்கி  அனைத்து சனநாயக விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைக்கும் சட்ட திருத்தங்களை கொண்டு வந்ததன் மூலம் தனி நபர் சர்வாதிகார ஆட்சியை குடும்பத்தின் துணையுடன் நிறுவினார்.... அம்பாறை பியசேனவைத் தவிர கூட்டமைப்பை மட்டும் உடைக்க முடியாது விழிபிதுங்கினார்....

சனாதிபதி தேர்தலில் அனைத்து கடும்போக்குவாதக் கட்சிகளும் ஓரணியில் சங்கமித்தன. சமாதானப் பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும்.. றணில் பிரபா கூட்டு நாட்டை இரண்டாக பிளவுபடுத்தப் போகிறது என மிகக் கடுமையான பிரச்சாரங்களை ஜே.விபி – ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் கட்டவிழ்த்து விட்டன... இலங்கையின் தேர்தல் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு நாடுபூராகவும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அநாகரீகமான முறையில் இனவாதத்தை உமிழ்ந்தன... இன்று எதிரணியில் இருக்கும் மங்கள சமரவீரவும் - மறைந்த சிறீபதி சூரியாராட்சியும் வியர்வை சிந்தி மகிந்தவை ஆட்சிப்பீடம் அமர்த்த உழைத்தனர்... ஜே.வி.பீ – ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் மகிந்தவை சிம்மாசனத்தில் அமர வைக்க கிராமங்கள் தோறும் மக்களிடம் மன்றாடி நின்றனர்...

இப்போது அலரிமாளிகையில் நடக்கும் சிங்களத்தில் தன்சல என்று சொல்லப்படும் தானமும், கலந்துரையாடலும் அன்றும் களைகட்டியிருந்தது. அதில் முதலாவது தானம் நாடுபூராகவும் உள்ள ஊடகவியலாளர்கள் அனைவருக்குமானதாக அமைந்திருந்தது. ஆதற்காக அனைவரும் அழைக்கப்பட்டு இருந்தனர்.. தலைநகரின் பிரதான ஊடகங்களின் தலைமையாளர்களும் அழைக்கப்பட்டனர்.. நானும் போயிருந்தேன். அங்கே மகிந்தவின் அன்றைய நண்பர்கள் மங்கள மற்றும் சிறீபதி நெற்றியில் வியர்வைத்துளிகள் பனிக்க உழைத்ததை என் கண்ணால் கண்ட ஞாபகம் வருகிறது.....

தேசத்தின் மீட்பராக களமிறக்கப்பட்ட மகிந்தவின் அவரது குடும்ப ஆட்சியின் கோரங்களை அவரது நண்பர்களாலேயே தாங்க முடியாமல் ஆரம்பத்தில் மங்களவும் சிறீபதி சூரியாராட்சியும் வெளியில் வந்தனர்...

போரின்  வெற்றியை ராயபக்ச குடும்பம் தமதாக்கி அதன் அறுவடையை முழுமையாக ருசிக்கத் தொடங்க ஏனைய பங்காளிகளும் அவரை விட்டு மெல்ல மெல்ல நகரத் தொடங்கினர்... முடியாதவர்கள் மௌனித்திருந்தனர்...

ஆனாலும் குடும்ப ஆட்சியையும், சர்வாதிகார ஆட்சியையும் தக்க வைக்க முனந்தவர்கள் நின்று நீடித்ததாக வரலாறுகள் இல்லை... யுத்த வெற்றியின் பின்னராக ஜே.வி.பியும் மகிந்த அரசாங்கத்துடன் இருந்த உறவை முறித்துக்கொண்டது... அது மட்டும் அல்லாது ஜேவிபியை பிளந்தெடுத்தார் மகிந்த.... தனது கட்சியின் தலைவியை தூக்கி எறிந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தனதாக்கிய மகிந்த மற்றைய கட்சிகளை பணத்தாலும் - பதவிகளாலும் - சலுகைகளாலும் சின்னாபின்னமாக்கினார்...

முசுலீம் காங்கிரசை பல குழுக்காளாக உடைத்தார் - ஜேவீபியை 3 பிரிவுகளாக தகர்த்தார் - மலையகக் கட்சிகளை சிறு சிறு குழுக்களாக பிரித்தெடுத்தார்... ஐக்கியதேசியக் கட்சியில் இருந்து 67 பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கினார். பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் உருவாக்கி  அனைத்து சனநாயக விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைக்கும் சட்ட திருத்தங்களை கொண்டு வந்ததன் மூலம் தனி நபர் சர்வாதிகார ஆட்சியை குடும்பத்தின் துணையுடன் நிறுவினார்.... அம்பாறை பியசேனவைத் தவிர கூட்டமைப்பை மட்டும் உடைக்க முடியாது விழிபிதுங்கினார்....

ஆனால் இத்தனை வீரப் பிரதாபங்களை நிகழ்த்திய அசைக்க முடியாத இரும்பு மனிதன் என்ற ஆணவத்தை அகங்காரத்தை உடைத்து ராஜபக்ஸ சாம்ராட்சியத்தை ஆட்டம் காண வைத்தது சந்திரிக்கா மைத்திரி மங்கள கூட்டு.... கடந்த 9 வருடங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்துதான் ஆளும் கட்சிக்கு உறுப்பினர்கள் தாவினார்கள்... ஆனால் இப்போ நேற்றைய (18.12.14) நிலவரத்தின்படி 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் 50ற்கு மேற்பட்ட உள்ளுராட்சி மாகாண சபை உறுப்பினர்களும் மகிந்தவுக்கு எதிரான அணியில் துணிந்து களம் இறங்கியுள்ளனர்... இதனை மகிந்த கனவிலும் நினைத்திருக்க மாட்டார்... “நேற்று இரவு என்னுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்த மைத்திரி காலையில் எனக்கெதிரான சந்திரிக்கா அணியில் இறங்கினார்”; என்ற அதிர்வில் இருந்து தன்னை சுதாகரிக்க சிலநாட்களை எடுத்துக்கொண்டார் மகிந்த...

நாட்டின் புத்திஜீவிகள், அரசியல் நாகரீகம் உடையோர், பல்கலைக்கழக கல்வி – கல்வி சாரா ஊழியர்கள், சட்டத்தரணிகள், ஊடக நிறுவனங்கள், தொழிற்சங்கஙக்ள், ஊடகவியலாளர்களின் அமைப்புகள், முன்னாள் ராஜதந்திரிகள், மேலைநாடுகள்.. என அனைத்து தரப்பினரும் ஒரு குடும்பத்தின் ஊழல் நிறைந்த எதேட்சாதிகார ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளன....

அரசாங்கத்துடன் விரும்பியோ விரும்பாமலோ இருக்கும் மலையக மற்றும் முஸ்லீம் தலைவர்கள் சிலரைத் தவிர இரண்டு இன மக்களுடைய மனோ நிலையும் எதிரணி வேட்பாளர் மைத்திரியை ஆட்சிக்கு கொண்டு வருவதாகவே இருக்கிறது...

நாடே ஒரு ஆட்சிமாற்றம் தேவை என அல்லும் பகலும் உழன்று கொண்டிருக்கும் போது மீண்டும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்ற கோசங்கள் ஆங்காங்கே வெளிக்கிளம்பி உள்ளன. ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனிநபர்களுக்கும் தமது கருத்தை ஓங்கி ஒலிப்பதற்கான உரிமை உண்டு...

ஆனால் வரலாறு கற்றுத் தந்த பாடங்களை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.... 2005 ஆம் ஆண்டு மகிந்தவை ஆட்சிப்பீடம் ஏற்றிய ஜேவிபி – ஹெல உறுமய – மங்கள போன்றோர் அதன் விளைவுகளை முழுமையாக அனுபவித்தனர்....

அதே வேளை மறுபக்கம் வடக்கு கிழக்கில் தேர்தலை புறக்கணித்ததனால்;, அழிக்க முடியாத மிகப் பலம் பொருந்திய இயக்கம், அமைப்பு, – நிழல் அரசைக் கொண்டிருந்தவர்கள் என உலகமே நினைத்த விடுதலைப் புலிகளை ஆட்சிப் பீடம் ஏறி  நான்கே வருடங்களில் மகிந்த அழித்தொழித்தார்... 30 வருடங்களாக உலகுக்கே சிம்ம சொப்பணமாக இருந்த மாபெரும் இயக்கம் கண்முன்னே அழிந்து போயிற்று....

மீண்டும் 2005ற்கு பின்னோக்கிச் செல்கிறேன்... கொழும்பின் உலக வர்த்தக மைய்ய கட்டடத்தின் 35ஆவது மாடியில் இருந்து வன்னியின் கேந்திர மையம் கிளிநொச்சியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின முன்னாள்  அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் அலுவலகத்துடன் பலமுறை தொலைபேசியில் உரையாடிய ஞாபகத்தை இங்கே மீட்டுப் பார்க்கிறேன்..

ஜனாதிபதி தேர்தலைப்  பகிஸ்கரிப்பதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி பலமுறை பல முக்கியஸ்த்தர்களுடன் பேசியிருந்தேன்.. விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினர் சிலருடனும் அதுபற்றி பேசியிருந்தேன்... பேசியவர்கள் பலர் இப்போ உயிருடன் இல்லை... பலருக்கு நடந்தது என்ன என்று தெரியாது.. ஆக உயிருடன் இருப்பவர் புலிகளின் முன்னாள்  ஊடகப் பேச்சாளர் தயாமாஸ்ரர் மட்டுமே...

அவரும் சொன்னார் தேர்தலைப் பகிஸ்கரிப்பது என தலைமை முடிவெடித்தாயிற்று... அதில் இனி மாற்றத்திற்கான வாய்ப்பே இல்லை... இந்த பகிஸ்கரிப்பின் மூலம் றணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதே புலிகளின் ராஜதந்திர இலக்கு எனத் தெரிவித்தார்...

மறைந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரம் எனது நெருங்கிய நண்பர்... அவர் இந்த தேர்தல் பகிஸ்கரிப்பை கைவிடும்படி கோரி கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியற் துறை அலுவலகத்தில் முக்கியஸ்தர்களுடன் பேசக் காத்திருந்தார்... காலையில் இருந்து மாலைவரை காத்திருந்த சந்திரசேகரனை முக்கிய தலைவர்கள் எவரும் சந்திக்கவில்லை... சாதாரண மட்டத்தில் இருந்தவர்களே சந்தித்து தேர்தல் முடிவில் மாற்றம் இல்லை... எனக் கூறியதுடன் மற்றயவர்கள் சந்திக்க முடியாத தூரத்தில் இருப்பதாக கூறி அனுப்பி விட்டார்கள்... இதனால் விடுதலைப் புலிகளுக்கு மிகப்பெரிய உதவிகளை வழங்கி பின்னாளில் அதற்காக பல இடர்களைச் சந்தித்த சந்திரசேகரன் மிகவும் மனமுடைந்துபோய்  என்னிடம் பேசியிருந்தார்... அவரது மரணம் கூட றணிலின் தோல்வியும் அதனால் ஏற்பட்ட மன உழைவும், மகிந்த சகோதரர்களின் கடுமையான அழுத்தங்களினால் ஏற்பட்டதொன்று என்பதனை நான் அறிவேன்...

இந்தப் பகிஸ்கரிப்பு குறித்து என் அன்பு நண்பர் மனோகணேசன் உள்ளிட்ட பலர் தமது கடுமையான மனவருத்தத்தை என்னுடன் பேசும் போது பகிர்ந்து கொண்டனர்.... முஸ்லீம் காங்கிரஸ் உள்ளிட்ட மலையகக் கட்சிகளும் அப்போது றணில் விக்கிரமசிங்கவையே ஆதரித்து நின்றார்கள்... விடுதலைப் புலிகளின் தேர்தல் பகிஸ்கரிப்பு முடிவால் தோற்கடிக்கப்பட்ட றணில் விக்கிரமசிங்கவோடு நின்ற மனோ கணேசன் தவிர்ந்த - தமிழ் முஸ்லீம் கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் நாட் செல்ல செல்ல மகிந்த சகோதர அழுத்தத்தால் வேறு வழியின்ற மகிந்தவுடன் சங்கமமாகினர்...

இந்த தேர்தல் பகிஸ்கரிப்பு குறித்து யுத்தம் கடுமையாகி நான் கடத்தப்பட்டு சிறிது காலம் ஐரோப்பாவில் நின்ற போது இணைத் தலைமை நாடுகளின் சார்பாக சமாதான பேச்சுவார்த்தையின் ராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்ட சில ராஜதந்திரிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

அதன்போது அவர்கள் சொன்னார்கள்... இந்தக் கடும்போக்காளரை ஆட்சிப்பீடம் ஏற்றியது தமிழ் மக்களே... குழம்பியிருந்த சமாதானப் பேச்சை தொடர்வதற்காகவும் ஓரளவு ஜனநாயக மரபுகளுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கக் கூடியவருமான றணில் ஆட்சிக்கு வருவார் என எதிர்பார்த்தோம் ஆனால் விடுதலைப் புலிகள் மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை தடுத்தனர்... அதனை இணைத்தலைமை நாடுகள் மிகவும் வன்மையாக எதிர்க்கிறோம்... புலிகளுடனான யுத்தத்தில் வகைதொகையின்றி மக்கள் கொல்லப்படுவது வேதனை அளித்தாலும் இது தவிர்க்க முடியாதது என மறைமுகமாக புலிகளின் அழிவை தவிர்க்க இயலாது என்ற பொருள்பட கூறினார்கள்...

அன்றைய சர்வதேச அரசியலை சரியாக மதிப்படாததன் விளைவு – குறிப்பாக நோர்வேயின் 3ஆம் தர ஏற்பாட்டுடனான சமாதானப் பேச்சுவார்த்தையை இந்தியா முற்றாக நிராகரித்து இருந்தது... அதனை மீறி றணில் அரசாங்கம் மேற்கத்தேய ஆதரவுடன் பேச்சை முன்னெடுத்தது. அதன் காரணமாக றணிலை தோற்கடிப்பதில் அன்றைய சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் முன்னின்றது.. அத்துடன் மேலைத் தேயத்தை எதிர்த்த சீனா உள்ளிட்ட நாடுகளும் றணிலின் தோல்வியை விரும்பியிரு;தன... அதன் மூலம் மகிந்தவை ஆட்சிப்பீடம் ஏற்றியதன் மூலம் தமது மேற்கத்தேய மற்றும் புலி எதிர்பு நிலைப்பாட்டை வெற்றி கொண்டனர்...

அன்றைய சூழலில் நேபாள நாட்டின் மாவோயிசப் போராளிகள் தீர்க்க தரிசனத்துடன் எடுத்த முடிவைப் போன்றதொரு ராஜதந்திர முனைப்பை மேற் கொண்டிருந்தால் நிலமை வேறாக இருந்திருக்கும்...

இதேவேளை றணில் ஆட்சிக்கு வந்திருந்தால் புலிகளை அழிக்காமல் விட்டு இருப்பார் அல்லது சமாதானத்தை ஏற்படுத்தி இருப்பார் எனச் சொல்லவில்லை... ஆனால் புலிகளை அழிக்கும் அணுகு முறை நிட்சயமாக மாறுபட்டு இருக்கும்... விடுதலைப் புலிகள் சிந்திப்பதற்கும் அடுத்தகட்ட நகர்வை திட்டமிடுவதற்கும் குறைந்தது கால அவகாசம் கிடைத்திருக்கும்... தற்காப்பிற்கான சூழலை உருவாக்கி இருக்க முடியும்.. தவிரவும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தைப் போன்றதொரு அவலத்தை தமிழ் மக்கள் எதிர் கொண்டிருக்க மாட்டார்கள்... மகிந்தவைத் தவிர்த்து முன்னைய ஆட்சியாளர்களின் காலங்களில் மக்கள் எதிர்கொண்ட இழப்புக்களைப் போலான இழப்புகள் நிகழ்ந்திருக்கும்...

(இங்கே எனது மௌனம் கலைகிறது தொடரில் றணில் விக்கிரசிங்க குறித்த எனது பார்வை தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது... இணைப்பை பாருங்கள்...)

மௌனம் கலைகிறது....2 - நடராஜா குருபரன் - மகிந்த ராஜபக்ஸ அன்றன்றே கொல்வார் றணில் நின்று கொல்வார்.

சரி விமர்சனங்களுக்கு அப்பால் அன்று ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முடிவின் போது அவர்களுக்கான கட்டுப்பாட்டு பிரதேசம் இருந்தது. ஒரு நிழல் அரசு – அதற்கான நிர்வாக பரிபாலனம் அதற்கான தலைமை – அந்த தலைமையின் கீழ் கட்டுப்படும் மக்கள் கூட்டம் இருந்தது. பேரம் பேசும் வலு இருந்தது. அதன் வாயிலாக மகிந்தவுடன் பேரமும் பேசினார்கள் விடுதலைப் புலிகள்...

ஆனால் இன்று தமிழ் மக்களின் நிலை கையறு நிலை... ஒரு கடும் போக்குவாத நிலைப்பாடில்லா, மிதவாதத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுள் வந்த மாகாண சபையையே மகிந்த அரசாங்கம் இயங்க விடாமல் தடுக்கிறது... அந்த மாகாண முதல்வராக அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிங்களதேசத்தின் முழுமையையும் ஏற்று பணிபுரிந்த உயர் நீதிமன்ற நீதியரசருடன் கூட இணங்கிச் செல்ல முடியாத மகிந்த அரசாங்கத்தின் கீழ் மக்கள் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றனர்.

எஞ்சியிருக்கும் கோவணத்தையும் உருவி எடுக்காமல் விடமாட்டோம் எனக் கங்கணம் கட்டி நிற்கும் ராஜபக்ஸ கொம்பனியிடம் இருந்து குறைந்தது கோவணத்தையாவது காப்பாற்ற வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்...

அவர்களிடம் போய் தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொல்பவர்கள் அதற்கான நியாயபூர்வமான காரணத்தை, உள்நாட்டு பிராந்திய சர்வதே – அரசியலுடன் இணைத்து தெளிவுபடுத்த வேண்டும்...

பாராளுமன்ற கதிரைகளைக் கைப்பற்றுவதற்கான தேர்தலுக்கு ஒரு நியாயம் - உள்;ராட்சி – மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு ஒரு நியாயம், ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு நியாயமாக இருக்க முடியாது... ஜனாதிபதி தேர்தலில் இருண்டு இனவாதிகள் போட்டியிடுகிறார்கள். அது தமிழ் மக்களுக்கு அவசியம் இல்லை எனின் 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்ற தேர்தலில் ஆகக் கூடிடியது 15 ஆசனங்களை கைப்பற்றி என்ன ஈழப் போராட்டமா பாராளுமன்றில் நடத்தப் போகிறீர்கள்..? அங்கு போய் பேசி கன்சாட்டில் இடம்பெற்றால் தான் அதனை சர்வதேசம் பார்க்குமா? பாராளுமன்றில் பேசுவதை மக்கள் முன் பேசி சர்வதேச ஊடகங்கள் வாயிலாக உலகுக்கு தெரியப்படுத்தலாமே?; சிங்கள பொத்த  நாடு ஒன்றின் பாராளுமன்றில் 6 ஆவது திருத்தச் சட்டத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்கும் போது இலங்கையின் ஒருமைப் பாட்டையும், ஒற்றை ஆட்சியையும் ஏற்று ஈழக் கோரிக்கையை கைவிடுகிறேன் என சத்தியம் செய்ய முடியுமாயின் விரும்பியோ விரும்பாமலோ இலங்கைப் பிரஜைகளாக இருக்கும் மக்கள், இருக்கிற பிசாசில் கோவணத்தையாவது உருவாமல் விடக் கூடிய பிசாசு எது எனத் தெரிவு செய்ய ஏன் வாக்களிக்க கூடாது?

மேலை நாடுகளும், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியநாடுகள் - அமெரிக்கா – பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள், ஜனநாயகபூர்வமான தேர்தலையும் அதனூடான ஆட்சி மாற்றத்தையும் விரும்புகின்றன... இந்திய மனநிலையும் அதுவாகத் தான் இருக்கிறது.. அப்படி இருக்க பிராந்திய சர்வதேச விருப்பங்களை மீறி தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தால் அதனூடாக மீண்டும் மகிந்த ஜனாதிபதியாகி தமிழ் மக்களை வதைத்;தெடுக்கும் போது சர்வதேசம் கைகட்டித்தான் நிற்கப் போகிறது... அந்த வேளையில் அடுத்து வரும் காலப் பகுதியில் மேலைத்தேயம் மகிந்தவுடன் நல்லுறவைப் பேணித்தான் ஆகவேண்டும். மாறாக தமிழ் மக்கள் வாக்களித்தும் மகிந்த தேர்வானால் அது தமிழ் மக்களது பிரச்சனை அல்ல... அவர்களை நோக்கி எவரும் விரல் நீட்ட முடியாது....

முல்லைத் தீவில் நேற்று (18.12.14) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் “நீங்கள் எடுக்கப் போகும் முடிவு முழு நாட்டுக்கான முடிவாக இருக்கப் போகிறது”  என மகிந்த உரையாற்றியுள்ளார்.. இணைப்பை பாருங்கள்

(தேர்தலில் நீங்கள் எடுக்கும் முடிவு முழு நாட்டுக்குமான முடிவாகும் : முல்லைத்தீவில் மஹிந்த:-)

அதன்மூலம் விளங்குவது என்ன சிறுபான்மையினரின் வாக்கே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப் போகிறது... இங்கு தேர்தலை புறக்கணித்தால் அத்தனை வாக்குகளையும் படையினரும் அரசாங்க சார்புக் குழுக்களும் மகிந்தவுக்கு சார்பாக போடத்தான் போகிறார்கள்... முடிவு என்னவாக அமையும்?

ஒருபுறம் மகிந்தவை தண்டியுங்கள் - போர்க் குற்றங்களை புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் இலங்கை ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என சர்வதேசத்தின் கால்களில் வீழ்ந்து புலம்புகிறோம்... மறுபுறம் ஜனநாயகபூர்வமான தேர்தல்களில் பங்குகொண்டு அரசியல் பங்களிப்பை வழங்குங்கள் என சர்வதேசம் கூறுவதை துரோகம் என்கிறோம்... இங்கே ஒரு இரட்டை நிலைப்பாடு தெரிகிறதல்லவா?

உலக அரசியல்   பல பாடங்களை எமக்கு நாளுக்கு நாள் கற்றுத் தருகிறது.... பிராந்தியத்தில் தமிழகத்தின் (வெறுமனே ஒரு மானிலம்) ஆதரவைத் தவிர அனைத்து நாடுகளும் மகிந்தவின் கைகளை இறுகப் பற்றி நிற்கின்றன. (இந்திய நிலைப்பாட்டில வெளிப்படையாக இல்லாவிட்டாலும்; இப்போ மாற்றம் ஏற்பட்டுள்ளது) குறிப்பாக வீட்டோ அதிகாரம் உள்ள சீனா மற்றும் ரஸ்யா மகிந்தவை தாங்கி நிற்கின்றன...

புலம்பெயர் மக்களின் போராட்டங்களும் கவன ஈர்ப்புகளும், அந்த நாடுகளின் பிரஜைகளாக மாறி, அரசியலில் தாக்கம் விளைவிப்பவர்களாக இருப்பதனாலும், நாடுகளின் அணிச் சேர்க்கைகளினாலும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் ஐநாவரை சென்றுள்ளன... மீண்டும் இந்த மேலைத்தேயத்தை பகைத்து தேர்தலைப் புறக்கணித்தால் தமிழர்கள் கேட்பாரற்றவர்களாக மாட்டார்களா?

2005ல் கொழும்பில் சூரியன் எவ்.எம் வானொலியில் இருந்த போது எதனை சொன்னேனோ அதனைத்தான் மீண்டும் 9 வருடங்கள் கடந்தும் சொல்கிறேன் பிராந்திய சர்வதேச எதிர்பார்புகளை மீறி தேர்தலைப் புறக்கணிப்பது என்து தந்திரோபாய ரீதியாக மிகவும் பாதகமான நிலமைகளை ஏற்படுத்தும் அப்போ.. மீண்டும் ஒருமுறை நம் தலையில் நாமே மண்ணை அள்ளிக் கொட்டுவதாக அமைந்துவிடும்...

மக்கள் தம் மனச்சாட்சியின்படி வாக்களிப்பதுவே காலத்தின் கட்டயமாகிறது.....

நடராயாகுருபரன்

18.12.14