குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழ்- முசுலிம் வாக்களிப்பு!

தேர்தல் சட்டங்களின் மீறல், அவதூறுகளை பேசும் அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என்று இலங்கையின் தேர்தல்கள் வழமையாகக் கொண்டிருக்கும் அனைத்து அத்துமீறல்களையும் இந்த சனாதிபதித் தேர்தலும் பிரதிபலித்து வருகின்றது.

அதுபோக, தேர்தலுக்கான நாட்கள் நெருங்க நெருங்க தேர்தல் களம் பரபரப்புக்களோடு விசித்திரமானதாக மாறி வருகின்றதோ?, என்று எண்ணத் தோன்றுகின்றது.

சிங்கள பௌத்த தேசியவாதம் பிரிந்து நின்று எதிர்கொள்ளும் இந்த சனாதிபதித் தேர்தலை சிறுபான்மையினரின் வாக்குகளே இறுதியாகத் தீர்மானிக்கப் போகின்றது என்ற நிலையில், அரசாங்கத்தையும், பொது எதிரணியையும் சிறுபான்மையினரை நோக்கி நேசக்கரங்களை தவிர்க்க முடியாமல் நீட்ட வைத்திருக்கிறது.

போர் வெற்றி வாதம் தேர்தல் வெற்றிகளுக்கான வகிபாகத்தை பெருமளவு இழந்துள்ள நிலையில், சிறுபான்மையினரின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக மாறியது ஒன்றும் விசித்திரமானது அல்ல. ஆனால், சிங்கள பௌத்த தேசியவாதம் இம்முறை சிறுபான்மையினருக்கு எதிரான தமது வெளிப்படையான நிலைப்பாட்டை வெளியிட முடியாமல் திண்டாட வைத்திருக்கின்றது. அதுதான், எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட சிறுபான்மையினருக்கு எதிரான கோஷமும், போர் வெற்றி வாதமும் அமுங்கிப் போயிருக்கின்றன. தேர்தல் மேடைகளில் போர் வெற்றிக் கோஷம், புலி எதிர்ப்பு என்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டாலும் அது, எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை என்றே தோன்றுகிறது.

இலங்கை பௌத்த சிங்களவர்களின் நாடு. கிறிசுதவ சிங்களவர்கள், தமிழர்கள், முசுலிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் இரண்டாம் நிலை பிரஜைகள் என்கிற அடிப்படை எண்ணக்கருவை முன்வைத்து தன்னுடைய அரசியல் பயணத்தை ஆரம்பித்த யாதிக கெல உறுமய, தமிழ் மக்களின் வாக்களிப்பின் அவசியம் தொடர்பில் அக்கறை வெளிக்காட்டும் அளவுக்கு இந்த சனாதிபதித் தேர்தல் விசித்திரமானதாக மாறி வருகின்றது.

அரசியல் அதிகாரங்களைத் தக்க வைப்பதற்கான அல்லது அடைவதற்கான பயணங்களில் யார் காலிலும் விழும் நிலைக்கு அடிப்படைவாத கட்சிகளும், அதன் தலைமைகளும் தயாராக இருக்கின்றன. அப்படியான நிலையுள்ள நாட்டில், தமிழ்- முசுலிம் சிறுபான்மை மக்களின் வாக்குகள் அதிகம் பெறுமதி வாய்ந்தவை. அரசியல் அதிகாரங்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற சிறுபான்மைச் சமூகங்கள் தங்களிடமுள்ள அதிகபட்ச ஜனநாயக உரிமையான வாக்குரிமையை போராயுதம் போன்று தருணங்களை உணர்ந்து பாவிக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களை தவிர்க்கும் போது அது, பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

மகிந்த ராயபச்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் மலையகத் தமிழ்க் கட்சிகளையும் முசுலிம் கட்சிகளையும் தன்னுடைய ஆதரவுத் தளத்தில் வைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கின்றன. ஆனாலும், மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட மலையகக் கட்சிகள் சிலவும், உறுப்பினர்களும் பொது எதிரணிப் பக்கம் சாய்ந்துவிட்டனர்.

முசுலிம் கட்சிகளைப் பொறுத்த வரையில் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசியக் காங்கிரசும், அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசும் எந்தவொரு தருணத்திலும் அரசாங்கத்தைவிட்டு விலகாது என்ற நிலையில், ஸ்ரீ லங்கா முசுலிம் காங்கிரஸே இறுதி நேர ஆட்டத்தில் இருக்கின்றது. ஆனால், முசுலிம் காங்கிரசின் நிலை என்பது பெரும் சிக்கலானது. ஏனெனில், அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் கட்சி இன்னும் பல துண்டுகளாக உடையும். வெளியேறாமல் தவிர்த்தால் முசுலிம் மக்கள் இந்தத் தேர்தலில் நிச்சயம் கைவிடுவார்கள் என்ற பயம். அது, அடுத்த பொதுத் தேர்தலில் முசுலிம் காங்கிரசின் வகிபாகத்தை குறிப்பிட்டளவில்  குறைக்கும்.

சனாதிபதி மகிந்த ராயபச்சவுக்கு ஆதரவாக பிரதியமைச்சர் கிசுபுல்லாவினால் அண்மையில் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட சந்திப்பொன்றில் ‘இம்முறை மகிந்தவுக்கு இல்லை’ என்று வெளிப்படையாகவே முசுலிம் மக்கள் கருத்தை வெளியிட்டிருக்கின்றார்கள். தன்னுடைய ஆதரவாளர்களை இணைத்து நடத்தப்பட்ட சந்திப்பொன்றிலேயே இவ்வாறான கருத்தை முசுலிம் அமைச்சர் ஒருவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது என்றால், முசுலிம் மக்களின் மன வெளிப்பாடு என்பது அரசாங்கத்துக்கு எதிராக எவ்வளவு தூரம் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அதனைவிடவும், பொது எதிரணியின் அசாத் சாலி உள்ளிட்ட கிழக்கு மாகாணத்துக்கு வெளியிலுள்ள முசுலிம் முக்கியசுதர்கள் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மக்களினால் பெரும்பங்கெடுப்போடு நடத்தப்பட்டதை காணக் கூடியதாக இருந்தது. முசுலிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகள் மகிந்தவுக்கு இல்லை என்ற நிலையில் இருக்கும் போது, அனைத்து முசுலிம் கட்சிகளையும் தன்னுடைய ஆதரவுத் தளத்தில் வைத்துக் கொள்ளும் போது முசுலிம் மக்களின் வாக்குகளை சரிபாதி அளவில் பெற்றுக் கொள்ளலாம் என்று மகிந்த ராயபச்ச அரசாங்கம் கருதுகின்றது. அதற்கான அனைத்து விட்டுக் கொடுப்புக்களுக்கும் இப்போது தயாராக இருக்கின்றது.

அது எப்படி என்றால், கிழக்கில் சில ஆண்டுகளாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் திறக்கப்படாமலிருந்து பள்ளிவாசலை மக்களின் பாவனைக்காக அனுமதிக்கும் அளவுக்கும், பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனாவை அடங்கி வைக்கும் அளவுக்கும். இன்னொரு முக்கிய விடயம், அளுத்கம கலவரங்களின் போது முசுலிம் அமைச்சர்கள், நாடாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியசுதர்கள் சனாதிபதி மகிந்த ராயபச்சவை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கித் தருமாறு கோரி எழுதிய கடிதத்துக்கு பதிலளிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. அதற்கான நேரம் இன்று வரையும் ஒதுக்கித் தரப்படவில்லை என்பது வேறு விடயம்.

ஆனால், இன்று தேர்தல் காலம் என்ற நிலையில் சனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியசுதர்கள் முசுலிம் கட்சிகளின் தலைவர்கள், முக்கியசுதர்களை தொடர்ந்து சந்திக்க தயாராக இருக்கின்றார்கள். அதன் உச்ச காட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனித்தனியாக சந்தித்து பேரம் பேசி தங்களோடு தக்க வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் மீதான முசுலிம் மக்களின் அதிருப்தி பொது எதிரணிக்கு வாக்குகளாக மாறிவிடும் என்ற நிலையில், அரசாங்கம் அதனைப் பெறுவதற்கான அனைத்து கட்டங்களையும் தாண்ட முயற்சிக்கின்றது.

பொது எதிரணியைப் பொறுத்த வரையில் தன் மீதான அதிருப்தி பெருமளவு இல்லை என்ற நிலையை அப்படியே தக்க வைத்துக் கொண்டு வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றது. அது, பௌத்த சிங்கள மக்களிடம் அவர்களின் ஒட்டுமொத்தமான பிரதிநிதி என்று காட்டிக் கொண்டு, சிறுபான்மை மக்களிடம் திடீர் தோழன் என்ற வேடத்தோடு அணுகுகின்றது. மகிந்த ராயபச்சவுக்கு எதிரான நிலைப்பாடு என்பது பொது எதிரணியையும், மைத்திரிபால சிறிசேனவையும் சிறுபான்மை மக்களிடம் சேர்ப்பித்திருக்கின்றது. அது, அவரை ஆபத்பாண்டவன் என்று நம்பிக்கையின் பிரகாரம் எழுந்தது இல்லை. மாறாக, சிறுபான்மை மக்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்குவாரங்களிலிருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள எடுக்கின்ற இடைவெளி.

மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்தளவிலும் மகிந்த ராயபச்சவுக்கு எதிரான நிலைப்பாடு அதிகளவில் உண்டு. ஆனால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு என்கிற அவர்களின் பரம்பரைக் கட்சியின் மீதான நம்பிக்கை(!) அல்லது அபிமானத்தின் அடிப்படை அவர்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு சார்ந்திருக்கின்ற பக்கத்திற்கு குறிப்பிட்டளவில் சாய வைத்துவிடும். அது, தவிர்க்க முடியாததுதான். இவ்வாறான நிலைமையை மாற்றுவதற்கான அரசியல் சூழல் இன்னமும் மலையகத்தில் பெருமளவில் உருவாகவில்லை. என்னதான் பேசிக் கொண்டாலும் மலையகத் தமிழ் மக்களின் பெருமளவு வாக்குகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கே விழுகின்றன. மாற்று அரசியல் களம் அங்கு தோற்றம் பெற்றாலும், அவை காலப்போக்கில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அரசியல் நிலைப்பாடுகளையொத்த நிலைப்பாட்டினை எடுத்து அரசாங்கங்களில் கலந்து காலப்போக்கில் காணாமற்போகின்றன.

மலையகத் தமிழ் மக்களின் 50 சதவீதமான வாக்குகளை பெற்றுக் கொள்ளலாம் என்று இப்போது அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக்கின்றது. அதுபோல, முசுலிம் மக்களின் 50 சதவீதமான வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சிகளிலும் வெற்றிபெற்றுவிட்டால் இந்த சனாதிபதித் தேர்தலில் வெற்றிக் கோட்டை கடந்துவிடலாம் என்பது சனாதிபதி மகிந்த ராயபச்சவின் எண்ணம். ஏனெனில், அவரோ, அரசாங்கமோ எந்தவொரு தருணத்திலும் மலையகத்துக்கு வெளியிலுள்ள தமிழ் மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பவில்லை. அதற்கான சாத்தியங்களும் மிகவும் குறைவு.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்பதை பொது எதிரணி எதிர்பார்த்திருக்கின்றது. அது, சாத்தியமானதுதான். ஆனால், முசுலிம் மக்களிடம் இருக்கின்ற பொது எதிரணிக்கான ஆதரவுத் தளத்தை இன்னும் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இல்லையாயின், முசுலிம் கட்சிகளின் தீர்மானங்களின் பக்கம் குறிப்பிட்டளவான முசுலிம் மக்கள் தவிர்க்க முடியாமல் செல்வார்கள்.

தமிழ் சமூக ஊடகச் சூழலைப் பொறுத்த வரையில் முசுலிம் இளைஞர்களே அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அதிகமாக வெளியிடுகிறார்கள். அது, மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக பெருமளவு ஏக்கம் கொள்கிறது. இதேநிலைப்பாடு, யதார்த்த களத்தில் இருக்கும் போது முசுலிம் கட்சிகளின் அரசாங்கத்துக்கு ஆதரவான தீர்மானம் பெரிய தாக்கத்தைச் செலுத்தாது போகலாம். ஆனாலும், முசுலிம் மக்களின் வாக்குகளில் 40 சதவீதம் இழக்கப்பட்டாலே அது, பொது எதிரணியின் தோல்வியை உறுதி செய்வதற்கான சூழலை ஏற்படுத்திவிடும்.

மலையக தமிழ் மக்களினதும், முசுலிம் மக்களினதும் வாக்களிப்பு சதவீதம் இந்தத் தேர்தலிலும் பெருமளவில் இருக்கும். ஆனால், வடக்கு, கிழக்கு, மேற்கு தமிழ் மக்களின் வாக்களிப்பு என்பது எதிர்பார்க்கப்படும் அளவுக்கு இல்லாமற் போனால் அது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேசுவரன் வார்த்தைப் பிரயோகங்களின் போக்கில் சொல்வதானால், ‘சனாதிபதித் தேர்தலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய தேர்தல் நிலைப்பாட்டினை அறிவிக்காமல் தவிர்த்துவிட்டு, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களை முழுமையாக வாக்களிக்கக் கோருவதன் பின்னாலுள்ள சூத்திரம் என்பது நாட்டில் அதிகார மாற்றமொன்றை எதிர்பார்த்தே. அந்த அதிகார மாற்றம், ஜனநாயக இடைவெளியோன்றை ஏற்படுத்தி, எமது அடுத்த கட்ட போராட்டங்களை நோக்கிச் செல்வதற்கான சூழலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே. அதுதான், தமிழ் மக்களின் முழுமையான வாக்களிப்பை வலியுறுத்துகின்றது. அது, உண்மையில் அவசியமானதும் கூட.

தமிழ், முசுலிம் சிறுபான்மைச் சமூகங்களின்  முழுமையான வாக்களிப்பு இந்த சனாதிபதித் தேர்தலில் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை உண்டு. ஆனால், அதற்கான அர்ப்பணிப்பை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். இல்லாது போனால், சிறுபான்மைக் கட்சிகளின் பலம் நாடாளுமன்றத்தில் இன்னமும் சிதறடிக்கப்பட்டுவிடும். அப்போது, சிறுபான்மை மக்கள் இன்றிருக்கும் நிலையைவிட மோசமான நிலைக்கு செல்ல வேண்டி ஏற்படும்.

நிறைவேற்று அதிகாரத்தினை ஒழித்து, நாடாளுமன்றத்துக்குள் சிறுபான்மைக் கட்சிகளின் அதிகாரத்தை அதிகப்படுத்துவது என்பது இப்போதைக்கு எந்த விதத்திலும் தட்டிக்கழிக்க முடியாத ஒன்று. சந்தர்ப்பங்கள் எல்லா நேரங்களிலும் வாய்த்துவிடுவதில்லை. அதனால், கிடைக்கும் சந்தர்ப்பங்களை முழுமையாக பயன்படுத்தி சிறுபான்மைச் சமூகம் தன்னுடைய அடுத்தகட்ட அரசியல் போராட்டத்துக்கு தயாராக வேண்டும். அதற்கு அர்ப்பணிப்பான வாக்களிப்பு அவசியம்!