குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

தகவல் தொழில்நுட்ப கலைச் சொற்களை வளப்படுத்துங்கள்!

தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி அனைத்து துறையையும் அசர வைத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பத்துகோடி தமிழனிடமும் தகவல்தொழில்நுட்பம் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

பொறியியல், மருத்துவம் ஆகியன நம்மிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழன் தன் வசப்படுத்திய ஒரே புரட்சி தகவல் தொழில் நுட்பம்தான். அதற்கேற்ப தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்களின் புழக்கம் மற்றும் பயன்பாடு அதிகரித்தாலே, சர்வதேச அளவில் தமிழன் பயன்பாடு மிக அதிக அளவில் உயரும். தமிழில் தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்களை வளர்த்திட்டால், உலக அளவில் தமிழன் மத்தியில் ஒருங்கிணைப்பும், பயன்பாடும் உயரும். இவற்றிற்கு அடிப்படையாக நாம் எதிர்நோக்க வேண்டியவை என்னென்ன என்று ஆய்வோமா?

 

பாடங்கள் வாயிலாக வளர்த்தல்

ஒரு மருத்துவரின் குறிப்பும், மருந்தும் பிறகு புரியாததன் காரணம் அவற்றிற்கான தமிழ் சொற்கள் இல்லாமையே ஆகும். தகவல் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை ஆயிரக் கணக்கில் தமிழ்மொழி சொற்கள் புழக்கத்தில் உள்ளது. குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே புழக்கத்திலுள்ள இச்சொற்கள் வெளிக் கொண்டு வரவேண்டும். பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்குக் கலைச் சொற்களைப் பொருள்பட போதித்தால் நம் மொழி, மேலும் வளர்ச்சி பெறும். தொடக்கப்பள்ளி அளவிலேயே படத்துடன், பொருள்பட கணினி பயன்பாட்டை மாணவர் களுக்கு விளக்கி கற்பித்தால், மாணவ பருவத்திலேயே தமிழ் சொற்கள் ஆழமாகக் குழந்தைகள் மனதில் பதியும்.

 

உலக குழுமங்களுடன் உருவாக்க விவாதித்தல்

தமிழ் தொழில்நுட்ப அமைப்புகளான உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசு அமைப்புகள், தமிழ் அமைப்புகள் மற்றும் புதிய கலைச்சொற்களை உருவாக்க பாடுபடும் மையங்கள் என அனைத்தையும் இணைக்க பாடுபடுதல் அவசியமாகும். இவ்வமைப்புகள் மூலமாக உருவாக்கப்படவுள்ள சொற்களை உருவாக்கிட இணையம் வாயிலாகவோ அல்லது நேரிடையாகவோ விழைய வேண்டும். ஆழமாக விவாதித்தால் பொருள்பட அழகிய தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்களையும் உருவாக்க முடியும்.

 

உலக குழுமங்களுடன் விதிகளைப் புதுப்பித்தல்

கலைச்சொற்களை பல துறைகளுக்கும் தொகுக்க மற்றும் உருவாக்க, தமிழக அரசு முனைவர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் அறிஞர்கள் குழுவை நியமித்து. இக்குழுவில் கலைச் சொற்களை உருவாக்க மற்றும் தொகுக்க பொதுவான விதிகளாக அனைவரும் கடைபிடிக்கும் பொருட்டு 2000-ஆம் ஆண்டு முனைவர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் புதிய விதிகளை உருவாக்கியது. இவை தகவல்தொழில் நுட்பம் மட்டுமின்றி; பொதுவாக 14 துறைகளுக்காக உருவாக்கப்பட்டது. இவற்றின் விதிகள் பலருக்கும் பரப்பப்படுதல் வேண்டும். மேலும் காலமாற்றத்திற்கேற்ப விதிகளில் மாற்றத்தைக் காண ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். கலைச் சொற்கள் உருவாக்கம் குறித்த விதிகள் அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆசிரியர் பெருமக்களும் அரசு அதிகாரிகளும் அறியும் வகை செய்தல் வேண்டும்.

 

தகவல்தொழில்நுட்பத்துறை, படைப்புகளையும் தொகுத்தல்

தமிழில் வெளியான அனைத்து தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளையும், தொகுப்பு களையும், ஆய்வுகளையும் சொற்களையும் தொகுத்தல் வேண்டும். அண்ணா பல்கலைக் கழக வளர்தமிழ் மன்ற தகவல்தொழில்நுட்ப கையேடு, 2000-ஆம் ஆண்டின் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப தொகுப்பு, இலங்கை தகவல் தொழில்நுட்ப அகரமுதலி மற்றும் பிற பல்கலைக்கழகங்களும் பதிப்பகங்களும் வெளியிட்டுள்ள அனைத்து கலைச்சொல் படைப்புகளைத் தொகுத்தல் வேண்டும். இப்பணியின் மூலமாக புதிய சொற்களின் வரவு, வேறுபாடு, சிறப்பு ஆகியவற்றை ஆராயலாம்.

 

தமிழ்வழி மற்றும் பிறமொழி படைப்புகளையும் தொகுத்தல்

இந்திய மற்றும் பிற உலக மொழிகளில் வெளியான அனைத்து தகவல் தொழில் நுட்ப செயல்பாடுகளையும், தொகுப்புகளையும், ஆய்வுகளையும், சொற்களையும் தொகுத்தல் வேண்டும். பன்னாட்டு மையங்கள், அரசு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள அனைத்து கலைச்சொல் படைப்புகளைத் தொகுத்தல் வேண்டும். இப்பணியின் மூலமாக புதிய சொற்களின் வரவு, வேறுபாடு, சிறப்பு ஆகியவற்றை ஆராயலாம். அனைத்து பிறமொழி கலைச்சொல் படைப்புகளையும் தொகுத் தால் அதன் வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் அறிய முடியும்.

 

இணையங்களை தொகுத்து பாமரருக்கும் அளித்தல்

தமிழில் செயல்படும் இணையங்களின் அனைத்து தகவல் தொழில்நுட்ப தொகுப்பு களையும், ஆய்வுகளையும், சொற்றொடர்களையும் தொகுத்தல் வேண்டும்.  www.infitt.org, www.tcwords.com, www.tamilvu.org, www.bhasaindia.com, www.micro soft.com மற்றும் பிற பல்கலைக் கழகங்கள் வெளியிட்டுள்ள அனைத்து இணையம் சார்ந்த கலைச் சொல் படைப்புகளைத் தொகுத்தல் வேண்டும். இப்பணியின் மூலமாக இணையம் வாயிலாகவே புதிய சொற்களின் வரவு, வேறுபாடு, சிறப்பு ஆகிய வற்றை ஆராயலாம்.

சர்வதேச மென்பொருள் மற்றும் வன்பொருள் நிறுவனங்களை பயன்படுத்தக்கோரி வலியுறுத்தல்

மைக்ரோசாப்ட், ஐ.பி.எம். மற்றும் லைனக்ஸ் குழுக்கள் பிரத்யேக கலைச்சொல் குழுக்களையும் பிரிவுகளையும் இயக்கி வருகின்றன. உலகின் அனைத்து மென்பொருள், வன்பொருள் மற்றும் கையேடுகளில் தமிழ் கலைச்சொற்களைப் பயன் படுத்த வலியுறுத்த வேண்டும்.

 

அரசுகளின் பயன்பாட்டில் வளர்த்தல்

அரசாங்கத்தின் பயன்பாட்டில் தமிழ்மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ள நாடுகளில் தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். தமிழ்வளர்ச்சித் துறை, கல்வித்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ஆகியவற்றில் ஒருங்கிணைந்து கலைச்சொற்களின் பயன்பாட்டை வளர்த்தல் வேண்டும்.

""தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்கள் வளர்ச்சி பெற்றாலே வருங்காலத்தில் தமிழ் அறிவியல் மொழியாகப் போற்றப்படும்.''