குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

சிறுபான்மைக் கட்சிகளின் சிக்கல்!

இலங்கையின் சனாதிபதித் தேர்தல்கள் உண்மையிலேயே சிங்கள பெரும்பான்மை மக்களை நோக்கியே நடத்தப்படுகின்றன. ஆனால், அந்த தேர்தல் முடிவுகளில் சிறுபான்மை மக்கள் அவ்வப்போது பெரும் தாக்கங்களைச் செலுத்தி வந்திருக்கின்றனர்.2005ஆம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் வாக்களிக்காது பகிசுகரித்தமை தேர்தல் முடிவுகளில் பாரிய தாக்கம் செலுத்தியிருந்தது.

மகிந்த ராயபச்ச- மைத்திரிபால சிறிசேன என்று சிங்கள பௌத்த வாக்குகள் பிரிந்திருக்கின்ற நிலையில், இந்தத் தேர்தலிலும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஆற்றலுள்ளவையாக மாறியிருக்கின்றன. இப்படியான தருணத்தில் சிறுபான்மையினரின் இரண்டு பிரதான கட்சிகளின் தேர்தல் நிலைப்பாடும் முக்கியத்தும் பெறுகின்றன.

தமிழ் மக்களின் தேர்தல் நிலைப்பாடு என்பது பெருமளவு மகிந்த ராயபச்ச அரசாங்கத்திற்கு எதிரானது என்பது வெளிப்படை. அப்படியான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் விருப்பங்களை பிரதிபலித்தாக வேண்டும். ஆனால், அதை வெளிப்படையாக அறிவிக்கும் பட்சத்தில் அது தென்னிலங்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்ற காரணத்தினால் அமைதியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படை விருப்பமும் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பதே. ஆக, தவிர்க்க முடியாமல் பொது எதிரணியின் பக்கம் சாயவேண்டிய தேவையுள்ளது. அவ்வாறான நிலையில், தமது தேர்தல் நிலைப்பாட்டினை அறிவிப்பதை தவிர்த்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களை முழு அர்ப்பணிப்புடன் வாக்களிக்கக் கோருகின்றது. இதுவும், மகிந்த ராயபச்சவுக்கு எதிரான நிலைப்பாடுதான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாட்டினை அறிவிப்பதற்குப் பின்னாலுள்ள சிக்கல் இதுவென்றால், சிறீலங்கா முசுலிம் காங்கிரசின் சிக்கல் இன்னொரு மாதிரியானது. பொது எதிரணியில் மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், கிழக்கிலுள்ள முசுலிம் மக்கள் பெரும் ஆதரவை வெளியிட்டிருந்தனர். இதனை, இன்னமும் உணர முடிகின்றது.

முசுலிம் மக்களின் பெரும் நிலைப்பாடு மகிந்த ராயபச்ச அரசாங்கத்துக்கு எதிராக இருக்கின்ற நிலையில், முசுலிம் காங்கிரசின் தேர்தல் நிலைப்பாடு என்பது அந்த மக்களின் கருத்துக்களை புறந்தள்ளியதாக இருக்க முடியாது. அப்படி அமையுமாயின் முசுலிம் காங்கிரசின் எதிர்கால அரசியலில் அது பாரிய சிக்கலை ஏற்படுத்தும். ஆக, மக்களின் முடிவுகளை பிரதிபலிக்க வேண்டிய தேவை முசுலிம் காங்கிரஸூக்கும், அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் உண்டு.

ஆனால், முசுலிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியசுதர்களுக்கிடையில் பெரும் பிணக்கு காணப்படுகின்றது. முசுலிம் காங்கிரசின் தலைமைத்துவம் பொது எதிரணியை ஆதரிக்கும் முடிவை வெளியிட்டால், அந்தக் கட்சி மீண்டுமொடு பிளவைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், முசுலிம் காங்கிரசின் முக்கியசுதர்கள் சிலர் தொடர்ந்தும் மகிந்த ராயபச்சவோடு இருக்க வேண்டும் என்ற முடிவில் தெளிவாக இருக்கின்றார்கள். அந்த முடிவினை கட்சி எடுக்கவில்லையென்றால், பிரிந்து செல்வதற்கும் தயாராக இருக்கின்றார்கள். இந்த நிலையினால் தான் முசுலிம் காங்கிரசு 15 தடவைகள் சந்தித்துப் பேசிய பின்னரும் தேர்தல் நிலைப்பாட்டினை அறிவிக்காமல் இழுத்தடிக்கின்றது.

கட்சியைக் காப்பாற்றுவதா, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதா என்ற சிக்கலுக்குள் முசுலிம் காங்கிரஸூம், அதன் தலைமைத்துவமும் அல்லாடுகின்றது. இதன் போக்கு என்ன மாதிரியான அமையும் என்று தெரியவில்லை. ஆனால், எந்தப் பக்கம் சென்றாலும் அது, முசுலிம் காங்கிரஸூக்கும் இழப்பை வழங்கும். ஏனெனில், பொது எதிரணிப் பக்கம் சென்றால் கட்சி பிளவடையும், மகிந்த ராயபச்சவின் பக்கம் சென்றால் மக்கள் கைவிடுவார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய தேர்தல் நிலைப்பாட்டை மனதார (எடுத்த பின்னரும்) எடுத்தாலும் வெளிப்படையாக அறிவிக்க முடியாது. ஆனால், முசுலிம் காங்கிரசு முடிவை எடுக்க முடியாமலேயே திண்டாடுகின்றது. பாராளுமன்றத் தேர்தல் இவ்வாறானதொரு சிக்கலை இரண்டு கட்சிகளுக்கும் ஏற்படுத்தாது. ஆனால், சனாதிபதித் தேர்தல் இவ்வாறான சிக்கலை ஏற்படுத்தியிருப்பது பரபரப்பினை இன்னும் அதிகரித்திருக்கின்றது!