குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

அரசியல் நாகரிகம்

கடந்த சில தினங்களாக நடந்து வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, இம்முறை சனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகளை சிதறடிக்க அரசாங்கம் வகுத்திருந்த திட்டமொன்றிலிருந்து எதிர்க்கட்சிகள், தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டு இருப்பதாகவே கூற வேண்டும்.

இம்முறை சனாதிபதித் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியத் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க போட்டியிட முன்வந்தால், திஸ்ஸ அத்தநாயக்க மூலம் அவரது வேட்பு மனுவை நிராகரிக்கச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டு இருந்ததா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது.

முன்னாள் சுகாதார அமைச்சராகவும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமாக இருந்த மைத்திரிபால சிறிசேன, கடந்த நவம்பர் 21ஆம் திகதி, தாம் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக  சனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அதுவரை, எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் ஒருவரை போட்டியில் அமர்த்துவதைப் பற்றியோ பொது வேட்பாளராக ஐ.தே.க அல்லாத ஒருவரை நிறுத்துவதைப் பற்றியோ ஐ.தே.க.வின் பொதுச் செயலாளராக இருந்த அத்தநாயக்க, எவ்வித எதிர்ப்பையும் தயக்கத்தையும் தெரிவித்திருக்கவில்லை.

ஆனால், எதிர்க்கட்சிகளை பன்மடங்கு ஊக்கப்படுத்திக் கொண்டு, அரசாங்கத்தின் முதல் வரிசை தலைவர் ஒருவர், எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட முன்வந்த போது, அதுவரை சண்டைபிடித்துக் கொண்டிருந்த ஐ.தே.க. பிரதித் தலைவர் சயித் பிரேமதாச மற்றும் உதவித் தலைவர் ரவி கருணாநாயக்க போன்றோர், தங்களது கருத்து வேறுபாடுகளை உதறித் தள்ளிவிட்டு ஒற்றுமையாகும் போது, அத்தநாயக்க மட்டும், இந்த தீர்மானத்தால் ஐ.தே.க பாதிக்கப்படும் என்று திடீரென கூறத்தொடங்கினார்.

அது மட்டுமன்றி அவரது புதிய கருத்தை பகிரங்கமாகக் கூறி, மைத்திரிபாலவின் வருகையால் புத்துயிர்பெற்ற எதிர்க்கட்சிகளின் ஆர்வத்தை சிதறடிக்கவும் அவர் முற்பட்டார். அவருக்கும் அரசாங்கத்துக்;கும் இடையிலான இரகசியத் திட்டம், அப்போதே வகுக்கப்பட்டு இருந்ததையே அது காட்டுகிறது.

நவம்பர் 21ஆம் திகதியளவில் அரசாங்கம், அத்தநாயக்கவை தம் பக்கம் வளைத்துப் போட்டுக் கொண்டிருந்தால் அதேவேளை, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க நிறுத்தப்பட்டிருந்தால், அத்தநாயக்க மூலம் விக்கிரமசிங்கவின் வேட்பு மனுவை இரத்துச் செய்விக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்து இருக்கலாம்.

ஏனெனில், ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் என்ற வகையில் விக்கிரமசிங்கவின் வேட்பு மனுவில் அத்தநாயக்கவே கைச்சாத்திட்டிருக்க வேண்டும். அவர் கடைசி நேரத்தில் அதனை கைச்சாத்திட மறுத்தால் அல்லது அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளில் இந்த மனுவோடு மாயமாகி மறைந்தால், விக்கிரமசிங்கவால் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியாது போயிருந்திருக்கும்.

அவ்வாறு இடம்பெற்றிருந்தால், இம்முறை சனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான மகிந்த ராயபச்சவும் ஏனைய 17 சில்லறை வேட்பாளர்களும் மட்டுமே களத்தில் இருப்பர். அது நிச்சயமாக தனிக் குதிரையின் போட்டியாகவே அமையும்.

தமது திட்டம் சிதறடிக்கப்பட்டதால், அத்தநாயக்க குழப்பமடைந்திருக்கலாம். அந்த விரக்தியிலேயே பல மாதங்களாக தான் வரவேற்ற பொது வேட்பாளர் என்ற கருத்தை அவர் திடீரென எதிர்க்க முற்பட்டார் போலும்.

இது போன்ற திட்டங்கள் நடைமுறை சாத்தியமற்றவையல்ல. அவ்வாறான சம்பவங்கள், இலங்கை வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இது போன்றதோர் இரகசியத் திட்மொன்றின் மூலம், 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், சிறி லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பொதுசன ஐக்கிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்விக்க, அப்போதைய ஐ.தே.க. தலைவர் காமினி திஸாநாயக்க நடவடிக்கை எடுத்தார்.

அந்த தேர்தலின் போது, வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதி நாளில் தமது கண்டி மாவட்ட வேட்பு மனுவை கையளிக்க பொதுசன ஐக்கிய முன்னணி திட்டமிட்டு இருந்தது. அன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டியிருந்தது. மு.ப. 11.30 மணி வரையிலும் பொதுசன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்களில் ஒருவரான கெகெலிய ரம்புக்வெல்ல வேட்பு மனுவில் கையொப்பமிட கண்டி கச்சேரிக்கு வரவில்லை.

அக்காலத்தில் கையடக்க தொலைபேசி வசதிகள் பரவலாக இருக்கவும் இல்லை. ஏதோ நடந்திருக்கிறது என்று நினைத்த டீ.எம்.யயரத்ன, அனுருத்த ரத்வத்த போன்ற பொதுசன ஐக்கிய முன்னணியின் தலைவர்கள், வேறு வழியின்றி அவசரமாக ரம்புக்வெல்லைக்குப் பதிலாக மற்றொருவரின் பெயரை உள்ளடக்கி புதிய வேட்பு மனுப் பத்திரமொன்றை தயாரித்து தெரிவத்தாட்சி அதிகாரியிடம் கையளித்தனர். கெகெலிய ஏற்கெனவே, ஐ.தே.க.வில் இணைந்துள்ளமை பின்னர் தான் தெரியவந்தது.

காமிணி திஸாநாயக்கவின் அந்த திட்டம் வெற்றியடைந்திருந்தால், அப்போதைய தேர்தலில் கண்டி மாவட்டத்துக்கான 12 ஆசனங்களையும் ஐ.தே.க.வே கைப்பற்றியிருக்கும். அவ்வாறு நடந்திருந்தால் அது அன்று முழு நாட்டினதும் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தி, ஐ.தே.க முழு நாட்டிலும் வெற்றி பெற்றிருக்கவும் கூடும். அவ்வாறு நடந்திருந்தால் நாட்டின் வரலாறே மாறியிருக்கலாம். அந்தத் திட்டத்தைப் போல், திஸ்ஸ அத்தநாயக்க மூலம் ரணில் விக்கிரமசிங்வின் வேட்பு மனுவை இரத்துச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டதோ என்ற சந்தேகம் நியாயமற்றதல்ல.

இம்முறை சனாதிபதித் தேர்தல் காலத்தின் போது,இரு பிரதான கட்சிகளினதும் இரு பிரதான (பொது) செயலாளர்களும் பரஸ்பரம் கட்சித் தாவல்களில் ஈடுபட்டமையே இம்முறை தேர்தலின் சுவாரஸ்யமான விடயமாகும். ஐ.ம.சு.கூ. பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சியில் சேர்ந்தது மட்டுமல்லாது, எதிர்க் கட்சிகளின் பொது சனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டும் இருக்கிறார். ஐ.தே.க.வின் பொதுச் செயலாளராகவிருந்த திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கத்தில் சேர்ந்து மைத்திரிபாலவின் அமைச்சுப் பதவிக்கே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மைத்திரிபாலவின் கட்சித் தாவலால் எதிர்க் கட்சிகள் பெற்ற உத்வேகம், அத்தநாயக்கவின் கட்சித் தாவலால் சற்று குறைந்திருக்கலாம். ஆனால், அது அரசாங்கம் எதிர்பார்த்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகள், அத்தநாயக்கவின் தாவலுக்கு முன்னர் இருந்ததைப் போலவே நம்பிக்கையுடன் செயற்படுவதாகவே தெரிகிறது. அதேவேளை, இருவரினதும் கட்சித் தாவல்களால் இரு சாராரினதும் வாக்கு வங்கிகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றங்களும் சமமானதாக கருத முடியாது.

தேசிய பட்டியல் மூலமே அத்தநாயக்க, நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டதால் அவருக்கு வாக்கு வங்கியொன்று இல்லை என எதிர்க் கட்சிகள் முன் வைக்கும் வாதம் சரியானதாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை, அமைச்சர் விமல் வீரவன்ச வாதிடுவதைப் போல் பலமான வாக்கு வங்கியொன்று அத்தநாயக்கவிடம் இருந்தமையால் தான், அவர் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தேர்தல்களில் போட்டியிடாத பலர், ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர்களாக முன்னர் இருந்துள்ளனர். கர்ச அபேவர்தன, நந்தலால் பெர்னாண்டோ மற்றும் தகம் விமலசேன ஆகியோரை அதற்கு உதாரணம் காட்டலாம். அவர்களிடம் பாரியளவிலான வாக்கு வங்கி இருந்திருந்தால், ஐ.தே.க. அவர்களை களத்தில் இறக்காமல் இருந்திருக்காது. எனவே, சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், அத்தநாயக்கவிடமும் பாரியளவிலான வாக்கு வங்கியொன்று இருந்தால் அவர் தேசிய பட்டியலில் வரத் தேவையில்லை. ஆனால், அவர் மக்கள் மத்தியில் மிக மோசமான நிலையில் இருந்தவருமல்ல.

அத்தநாயக்கவினதும் மைத்திரிபாலவினதும் கட்சித் தாவல்களினால் ஏற்பட்டிருக்கக்கூடிய வாக்கு வித்தியாசங்களை பொறுத்தவரை, எதிர்க்கட்சிக்கு சாதகமான நிலைமையே ஏற்பட்டிருக்கிறது எனலாம். ஏனெனில், அத்தநாயக்கவின் கட்சித் தாவலால் ஆகக் கூடியது ஓர் அமைச்சர், எதிர்க் கட்சிக்கு தாவிய போது வாக்குகள் எவ்வாறு அசையுமோ அந்தளவு தான் வாக்குகள் அசைந்திருக்கும்.

ஆனால், மைத்திரிபாலவின் கட்சித் தாவலோடு அவர் சனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதும்; அவரோடு முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இருப்பதும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியில் குறிப்படத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஏனெனில், மைத்திரிபால கட்சித் தாவியது மட்டுமல்லாது, அடுத்த சனாதிபதியாகும் வாய்ப்பும் இருக்கிறது என சிறி.ல.சு.க.வின் ஒரு சிலராவது நினைக்கலாம். எனவே, அவர்கள் அவரை ஆதரிக்கலாம்.

‘ரய ரட்டட்ட ரஜெக்’ (ரய ரட்ட என்னும் வட மத்திய மாகாணத்துக்கு ஒரு மன்னர்) என்று கடந்த 30ஆம் திகதி மைத்திரிபால, தமது மாவட்டமான பொலன்னறுவையில் நடத்திய கூட்டத்தின் போது முன்வைத்த சுலோகம், வட மத்திய மாகாண மக்கள் மீது ஓரளவுக்காவது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மைத்திரிபாலவை வளைத்துப்போட, ரணில் விக்கிரமசிங்கவுக்கு சந்திரிகாவே முக்கிய உதவியாளராக இருந்துள்ளார். அதாவது சந்திரிகாவுக்கு இன்னமும் சிறி.ல.சு.கவுக்குள் ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. அந்த செல்வாக்கு இருந்த போதிலும், ஐ.தே.க. தலைவர் ஒருவருக்கு வாக்களிக்க சிறி.ல.சு.க. காரர்கள் தயங்குவார்கள். ஆனால், மைத்திரிபாலவுக்கு வாக்களிக்க தயங்க மாட்டார்கள். எனவே மைத்திரபாலவின் வருகையினால் சந்திரிகாவின் அந்த செல்வாக்கும் தேர்தலின் போது வாக்குகளாக மாறலாம்.

இம்முறை இந்தக் கட்சித் தாவல்களை ஆரம்பித்தவர், முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவராக இருந்து பின்னர் சிறி.ல.சு.க.வில் இணைந்து பாணந்துறை நகர பிதாவாக நியமிக்கப்பட்ட நந்தன குணதிலக்கவே. அவர் கடந்த நவம்பர் 14ஆம் திகதி எதிர்க் கட்சியில் சேர்ந்து கொண்டார்.

பின்னர் யாதிக்க கெல உறுமய கட்சியின் தலைவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகினர். அவர்களில் முன்னாள் மேல் மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில கடந்த வியாழக்கிழமை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொண்டார். கெல உறுமய தலைவர்களை அடுத்து தான் வசந்த சேனாநாயக்க, மைத்திரிபால சிறிசேன, ராயித்த சேனாரத்ன, பெருமாள் ராயதுரை ஆகியோர் அரசாங்கத்தில் இருந்து எதிர்க் கட்சிக்குத் தாவினர்.

தற்போது ஆளும் கட்சியில் இருந்து 5 அமைச்சர்கள் 3 பிரதி அமைச்சர்கள் உட்பட 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மாகாண அமைச்சர் உட்பட 8 மாகாண சபை உறுப்பினர்களும் இரண்டு பிரதேச சபைத் தலைவர்கள் உட்பட சுமார் 40 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சியிலிருந்து எதிர்க் கட்சிக்குத் தாவியுள்ளனர். இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில பிரதேச சபை உறுப்பினர்களும் மட்டுமே எதிர்க் கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் சேர்ந்துள்ளனர்.

அவ்வாறு மக்கள் பிரதிநிதித்துவ சபைகளின் உறுப்பினர்கள் அந்த பக்கமும் இந்த பக்கமுமாக மாறுவதால், தேர்தல் நாள் வரும் போது வாக்காளர்களும் தாம் எந்தப் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது முழிக்கும் நிலை உருவாகினாலும் உருவாகலாம். ஏனெனில்,  அவர்களின் மனதை வென்றவர்கள் இரண்டு புறத்திலும் இருக்கலாம்.

ஒருவர் எதிர்க் கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவுவதற்கு மனதை மாற்றிக் கொள்வது இலகுவானதாகும். ஏனெனில், கட்சி மாறுவதால் அவர் எதனையும் இழக்கப்போவதில்லை. மாறாக நாடாளுமன்றத்தை கலைக்கும் வரையிலாவது அவர் சிலவேளை அமைச்சராக இருக்கலாம். அடுத்த தேர்தலில், இந்த ஆளும் கட்சி தோல்வியடைந்தாலும் அவர் தமக்கு பழக்கமான இடத்திலேயே, அதாவது எதிர்க் கட்சியிலேயே இருப்பார்.

ஆனால், ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு மாறுவதால் தமது பாதுகாப்பை இழக்க வேண்டி வரும். இந்த நாட்டில், அச்சுறுத்தல் உள்ளவருக்கு அன்றி, ஆளும் கட்சிக்காரரா இல்லையா என்பதைப் பார்த்தே பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதேவேளை, மேலும் பல சிறப்புரிமைகளை கைவிட வேண்டி வரும். இவ்வாறானதொரு நிலைமையிலும், கூடுதலானவர்கள் எதிர்க்கட்சிக்கே சென்றுள்ளனர்.

ஆனால், இந்தக் கட்சித் தாவல்களினால் அரசியல் நாகரிகம் என்றால் என்ன என்ற கேள்வியை பலமாக எழுப்ப வேண்டியுள்ளது. ஒருபுறத்தில் நேற்று வரை, எதிர்க் கட்சியினரைப் பார்த்து புலிகள் என்றும் வெளிநாட்டு சதிகாரர்கள் என்றும் கூறியவர்கள், அதே எதிர்க் கட்சியில் சேர்ந்து அதுவரை தாம் இருந்த அரசாங்கத்தைப் பார்த்து ஊழல் மலிந்தவர்கள். குண்டர்கள் என்கிறார்கள். எதிர்க் கட்சியினரும், அவர்கள் இதுவரை தம்மைப் பார்த்துக் கூறியவற்றை மறந்து அவர்களை வரவேற்கிறார்கள்.

மறுபுறத்தில், நேற்று வரை ஆளும் கட்சி ஊழல் மலிந்தது என்றும் இது குண்டர்களின் ஆட்சி என்றும் கூறியவர்கள், இன்று அதே ஆளும் கட்சியின் தலைவர்களை கட்டி அணைக்கிறார்கள். நேற்று வரை தம்மை அவ்வாறு ஊழல்மிக்கவர்கள், குண்டர்கள் என்றெல்லாம் கூறியவர்கள் தம்மோடு இணையும் போது ஆளும் கட்சியினர் அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பை வழங்குகிறார்கள். ஆளும் கட்சியில் சேர்நதவர்கள் இனி எந்த அட்டகாசம் நடந்தாலும் அது சரி என்பார்கள். அரசியலுக்கு வெட்கம் தேவையில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

ஆயினும், ஆளும் கட்சியும் மறுக்காது ஏற்றுக்கொள்ளும் சில கொள்கைகளை எதிர்க் கட்சி தற்போது முன்வைத்துள்ளது. எனவே, எதிர்க் கட்சியில் சேர்ந்தவர்கள் வேண்டும் என்றால் அதிலாவது தமது பங்களிப்பை வழங்கி அந்தத் தலைவர்களும் வழி தவறிச் செல்லாது கவனித்துக் கொள்ளலாம். ஆனால், ஆளும் கட்சியில் சேர்ந்தவர் நாட்டுக்கு எந்த நன்மையைச் செய்யப் போகிறார்கள் என்பதற்கு காலம் தான் பதில் தர வேண்டும்.