குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

சிறுபான்மையினர் சனநாயக உரிமையை சிந்தித்து செயற்படுத்தும் நேரமிது! – மகா

சனாதிபதி தேர்தல் வேட்பு மனுதாக்கல் செய்யும் முன்பே கடும் சுறுசுறுப்பும் விளம்பரங்களாலும், கட்அவுட்டுகளால் மூடப்பட்டிருக்கும் நகரங்களும் இன்று இலங்கையில் எங்கும் பேசப்படுகின்ற விடயங்களாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பான தேர்தலாகவே இருக்கப் போகின்றது.

இந்த நிலையில் நான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். சனாதிபதிக்கு தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்காவிட்டால், இம் மக்கள் வாக்களிக்க தடைகளை அரசாங்கம் ஏற்படுத்தலாமென்று. அன்று கூறிய கருத்து இப்பொழுது உண்மையாகிக் கொண்டிருக்கின்றது போல் எண்ணுவதற்கான பல சம்பவங்கள் நடந்துக்கொண்டிருக்கின்றது.

சிறுபான்மை தலைமைகள் சில தற்போதைய சனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிக்கைகள் மூலம் சம்மதங்கள் தெரிவிக்கின்ற போதும் அதை அடிப்படைவாத பெரும்பான்மைகள் ஒரு பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளவில்லை.

அவர்கள் நினைப்பது எல்லாம் எந்த வழியிலாவது அல்லது எந்த வகையிலாவது தற்போதைய சனாதிபதி மகிந்தவிற்கு வாக்குகளை சிறுபான்மை மக்கள் அளிக்க வேண்டும் ஆனால் வெளிப்படையாக இம்மக்களின் வாக்குகளால் மகிந்த வெற்றியடையவில்லை என்ற பிரச்சாரத்துடன் இனப்பிரச்சினைக்கு எப்பொழுதும் தீர்வின்றி இந்த நாடும் சிங்கள அடிப்படைவாதிகளும் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்ல வழியேற்படுத்த வேண்டும்.

ஆகவே, இன்றைய சனாதிபதி மகிந்தவிற்கு சிறுபான்மை மக்கள் வாக்குகளை அள்ளி கொடுத்தாலும் திருப்தியுடன் நன்றி என்ற வார்த்தைகள் என்றும் அவர்களிடமிருந்து வரப்போவதில்லை.

பௌத்த அடிப்படைவாதிகளினால் முன்னெடுத்து செல்லப்படும் சிங்கள பௌத்த பேரினவாதமே எதிர்காலத்தையும் சிறுபான்மை மக்கள் சம்பந்தமாக முடிவு செய்யும் நிலையே இந்த நாட்டில் இருக்கப் போவது நிச்சயம்.

இன்று சனாதிபதி தேர்தலில் இரண்டு பெரும்பான்மை சிங்கள தலைமைகளே போட்டி இடுகின்றார்கள் அவர்களில் ஒருவரே இந்நாட்டு சனாதிபதியாவார். இதில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

ஆனால் அவர்கள் இரு சாராருமே வெளிப்படையாக ஆதரவை தமிழ் தலைவர்களிடம் கோரவில்லை ஆனால் மறைமுகமாக பல கோடி ரூபாய்க்கு பேரம் பேசுகின்றர்கள் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

தற்போதைய சனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருக்கும் அரசியல், தொழிற்சங்க தலைமைகளுக்கு இம் மக்கள் முன் சென்று வாக்கு வேட்டையாட தனியார் ஒப்பந்தம் (private contract) செய்து கொண்டுள்ளது.

தமிழ் பிரதேசங்களில் இவர்கள் சென்று வாக்குகளை பெறுவதற்கு வாகனங்கள் மற்றும் ஏனைய செலவுகளை கருத்தில் கொண்டு பல கோடிக் கணக்கான ரூபாய்களை பெற்றுக்கொண்டே இவர்களும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பார்கள் எனினும் பொது மக்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விடயமாகும்.

சனாதிபதி வேட்பாளர்களுக்கான இடைத்தரகர்களாக செயற்பட போகும் அரசியல் தலைமைகளே இந்த தேர்தலில் அதிக இலாபம் பெறுவார்கள் ஆகவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்கள் இவர்களுக்கு கொடுத்த தொகைக்கு கணக்கு கேட்கமாட்டார்கள் மாறாக இன்னும் இவர்களுக்கு அதிக வசதி வாய்ப்புக்களையே அள்ளி கொடுப்பார்கள் இதில் ஆட்சி செய்ய போகும் ஜனாதிபதிக்கு எந்த ஒரு நட்டமும் கிடையாது.

ஆம், இலட்ச கணக்கான மக்களுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும், ,உரிமைகளுக்கும் பதில் கூறுவதை விட இந்த தனியார் ஒப்பந்தம் மூலம் எழுத்து வடிவம் இல்லாது செய்கின்ற செலவுகளை கொடுத்து சில அமைச்சு பதவிகளையும் காணிகளையும் கொடுத்து விட்டால் முடிந்து விடும் ஜனாதிபதியாக வரப்போகின்றவரின் கடமை.

பொதுவாக இலங்கை என்ற நாடு மூன்று நாடாகவே இருந்திருக்கின்றது என்பது ஆதாரபூர்வமான சாட்சிகள் பல இருக்கின்றனர். ஆனால் ஆங்கிலேயரால் நிர்வாகத்தையும் செலவுகளையும் இலகுபடுத்தவே இந்த மூன்று நாடுகளும் ஒரே நிர்வாக கட்டமைப்பாக்கப்பட்டுள்ளது. இது சரித்திர உண்மையாகும்

இதை உணர்ந்தும் உணராதவர்க்ள போல் நாடகமாடும் சிங்கள அடிப்படைவாதிகள் இங்குள்ள சிறுபான்மை மக்களை அடிமைகளாக்க கடந்த கால உண்மை சரித்திரத்தை மறந்து இன்று பேயாட்டம் ஆடுகின்றார்கள். அத்தோடு சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கி அவர்கள் கட்டளைக்கு ஏற்றபடி ஆட்டுவிக்கின்றார்கள். இதில் ஆடுபவர்கள் சிலர் இருப்பதை இன்றும் காண்கின்றோம்.

அவர்களே தேர்தல் நடைபெற ஒரு மாதம் இருக்கும் போது வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்னரே ஆதரவை வழங்குவதாக கூறிவிட்டார்கள், அதிலும் ஒரு சிலர் அபிவிருத்திக்காக ஆதரவு என்றும் கூறுகின்றார்கள், யாருடைய அபிவிருத்திக்காக ஆதரவு என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பொது மகனைவிட இராணுவ உயர் அதிகாரிகளையும் படைகளையும் பயன்படுத்தி பிரச்சாரங்களை நடைமுறைபடுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையிலேயே சிறுபான்மை தலைமைகள் யாருக்கு சார்பாக ஆதரவை வழங்க வேண்டும் என்பதை இந்த பெரும்பான்மையே தீர்மானக்கும் முயற்சியை ஏற்படுத்தும் வழிகளை செய்ய பார்க்கின்றது.

அதே நேரம் இன்றைய சூழ்நிலையில் சிறுபான்மை மக்களோ தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மிக தெளிவாக எடுத்துக்கொண்டிருக்கின்றது இதை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருப்பது மிகவும் நன்மையாகும்.

அரசியல் தலைமைகளோ பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டிக்கொண்டு செயற்படவேண்டிய நிலைமையில் இருக்கவேண்டும்.

இந்த தேர்தலில் யார் ஜனாதிபதியானாலும் பயன் பெறப்போவது அடிப்படை வாத சிங்கள பௌத்தமே ஆகவே நாம் நமது ஜனநாயக உரிமையை சிந்தித்து செயற்படுத்தும் காரியத்தை ஜனாதிபதி தேர்தலில் செய்வோம். அதுவே நமது உரிமைக்கும், ஒற்றுமைக்கும், உயர்விற்கும் சான்றாக எதிர்கால ஜனாதிபதிக்கு உணரவைப்போம்.

--மகா--