குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் நிறுத்துவதி​ல் உள்ள அனுகூலங்கள்​!

04.12.2014- அவசியம் மகிந்த அரசுக்கு இல்லை என்றும், தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான வழிமுறைகள் மகிந்த அரசுக்கு தெரியும் என்றும், மகிந்தவின் பேச்சாளர் மமதைப்பேச்சு பேசியுள்ளார்.

பதிலுக்கு, மைத்திரி பாலசிறீசேனவை முன்னிறுத்தும் பொது எதிரணியினர், சமஸ்டி அரசியல் அமைப்பு முறையை எவருக்கும் வழங்க முடியாது என்றும், முற்றுமுழுதாக அதை தாம் நிராகரிப்பதாகவும், இரகசிய ஒப்பந்தங்கள் எதனையும் தாம் எவருடனும் செய்துகொள்ளத்தயாரில்லை என்றும் ஆணவத்துடன் கர்ஜித்துள்ளனர்.

அதே பொது எதிரணியைச்சேர்ந்த சஜித் பிறேமதாச இன்னும் ஒருபடி மேலேபோய், தாம் அதிகாரத்துக்கு வந்தால் புலம்பெயர் நாட்டிலுள்ள புலிகளையும் அழித்தொழிப்போம் என்று கொட்டம் அடித்துள்ளார்.

ஆனால் இந்த இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும், தம்மை ஆதரித்து வாக்களித்தால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை பயக்கும்? என்று இதுவரையில் கூறவில்லை.

மாறாக, தமிழ் மக்களுடன் பேசவேகூடாது எனும் நிலைப்பாட்டில் மகிந்தவும், கொடுக்கவே கூடாது எனும் நிலைப்பாட்டில் மைத்திரியும் கடுமையாக உள்ளனர்.

யார் உண்மையான தனிச்சிங்கள பௌத்த மேலாதிக்கவாதி? என்பதை நிரூபிக்கும் போட்டிப்பலப்பரீட்சையில் இருவரும் அதிதீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கும் இரண்டு பெரும் இனவாதிகளுக்கும் சார்பான முடிவை, தமிழ் மக்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் எடுக்க முடியாத நிலைமையில் உள்ளனர்.

தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கான அடிப்படைத்தகுதிகளை இரண்டு பிரதான வேட்பாளர்களும் கொண்டிருக்கவில்லை. வெறுமையான இத்தகைய ஒரு சூழமையில் இரண்டு கட்சிகளினதும் அதிதீவிர தனிச்சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாடுகளை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தி, தமிழ் மக்கள் சார்பாக மூன்றாவது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு வாக்களிக்குமாறு கோரும்பட்சத்தில் அதிலுள்ள அனுகூலங்கள்!

முதலாவதாக,

தமிழ் மக்களுக்கான தீர்வு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இது அமைவதோடு, தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கான அடிப்படைத்தகுதிகளை இரண்டு பிரதான வேட்பாளர்களும் கொண்டிருக்கவில்லை என்பதையும் பறைசாற்றும். கூடவே இலங்கை அரசியல் அமைப்பு சாசனத்தையும், அதனூடான தேர்தல் முறைமைகளையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு, அவர்கள் கோரிவரும் சர்வஜனவாக்கெடுப்புக்கான அவசியத்தையும் வலுப்படுத்தும்.

இதைவிடுத்து எத்தகைய கோரிக்கைகளும் வலியுறுத்தல்களும் இல்லாமல் தமிழ் மக்கள் இரண்டு பிரதான வேட்பாளர்களும் வாக்களிப்பதானது, தனிச்சிங்கள பௌத்த மேலாண்மையை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அர்த்தம் கொள்ளப்படும்.

கடந்த 2005ம் வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து, தமிழ் மக்கள் தாம் தனித்துவத்துக்குரிய தேசிய இனம் என்பதையும், தமது சுதந்திர வேட்கையையும் வெளிப்படுத்திய அணுகுமுறையை விடவும், இது பெரும்பான்மையான உலகத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகச்சிறந்த ஜனநாயக முறைமையாகும்.

இரண்டாவதாக,

தமிழ் மக்கள் தமது முதலாவது வாக்கை, கட்டாயம் தம்மை பிரதிநிதித்துவம் செய்யும் வேட்பாளருக்கு அளித்த பின்னர், இரண்டாவது விருப்பு வாக்கை யாருக்கு அளிப்பது அது மைத்திரிக்கா? மகிந்தவுக்கா? என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு கனகச்சிதமாக தெளிவுபடுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும். நெஞ்சுரமற்று இதில் எந்த வளைவு நெளிவு சுழிவுகளையும், நெகிழ்வு போக்கையும் கடைப்பிடிக்க கூடாது. ஏனெனில் நாம் மேற்கொண்டுள்ள மூன்றாவது வேட்பாளரை களமிறக்கும் நடவடிக்கையின் உயிர்ப்பு, வெற்றி, பேரம் பேசும் சக்தி எல்லாமே இந்த விருப்பு வாக்குகளில் தான் தங்கியுள்ளது. (இதன் பலாபலனை பத்தியின் முடிவில் கண்டுகொள்ளுவீர்கள்)

மூன்றாவதாக,

இறந்தவர்கள் அனைவரும் எழுந்துவந்து வாக்களித்தாலே ஒழிய,(முறைகேடான வாக்குகள்) 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப்பெறும் வல்லமையில் மகிந்தவும், மைத்திரியும் இல்லை. இலங்கையில் இன்றுள்ள அரசியல் சூழலில் அதற்கான வாய்ப்புகள் மழுங்கடிக்கப்பட்டு விட்டன. (மூன்றாவது வேட்பாளரை தமிழ் மக்கள் களம் இறக்கும் பட்சத்தில் மாத்திரமே இந்த கணிப்பு சாத்தியமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.)

எனவே 50 வீதத்துக்கும் குறைவான வாக்குகளையே இரண்டு வேட்பாளர்களும் பெறுவார்கள். அவ்வாறு பெறும் சந்தர்ப்பத்தில் இரண்டாவது சுற்று விருப்பு வாக்குகள் எண்ணும் இடர்நிலைமை ஏற்படும். இங்குதான் நாம் மேலே இரண்டாவதாக வலியுறுத்திக்கூறிய “தமிழ் மக்களின் விருப்பு வாக்குகள்” செல்வாக்கு செலுத்தப்போகின்றன. அதாவது இலங்கையின் ஆட்சியாளரை தீர்மானிக்கப்போவது தமிழர்களின் வாக்குகளே!

தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் “தமிழர்கள்” என்ற சொல்லை உச்சரித்தாலே அது தமது தோல்விக்கான காரணமாக அமைந்துவிடும் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி, சிங்கள மக்களை திருப்திபடுத்தியவாறு வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டும், தமிழ் மக்களை தீண்டத்தகாதவர்களாக சித்திரித்தும் அருவருப்பான அரசியல் செய்துகொண்டிருக்கும் சிங்களத்தலைமைகளுக்கு, தமிழ் மக்கள் நாம் மிகப்பெரிய சேதியை கன்னத்தில் பலமாக அரைந்து சொல்ல முடியும். அந்த அரை அவர்களின் ஆன்மாவை உலுப்ப வேண்டும்.

இலங்கையின் ஆட்சியாளர் யார்? என்பதை தீர்மானிப்பது சிங்கள மக்கள் அல்ல, தமிழ் மக்களே! தமிழ் மக்களிடமே அந்த பலம் இருக்கிறது! என்பதை அவர்களுக்கு நிரூபிப்பதோடு அது ஒரு வரலாற்றுப்பதிவாகவும் அமைந்துவிடும்.

நான்காவதாக,

தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியானவர் என்ற உருத்து அவர்களை துரத்திக்கொண்டேயிருக்கும். அது ஒருவகை சங்கடத்தையும், கூச்சநாச்சத்தையும் ஆட்சியாளருக்கு கொடுக்கும். தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என்பதால், தமிழ் தேசியக்கூட்டமைப்பும் ஒரு திமிருடன் உயர்ந்த தரத்திலிருந்துகொண்டு காத்திரமான பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியும். தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையால் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தங்களை அகப்புறச்சூழல்கள் உருவாக்கும்.

இதைவிடுத்து எத்தகைய கோரிக்கைகளும், நிபந்தனைகளும், வலியுறுத்தல்களும், சவால்களும் இல்லாமல் இரண்டு பிரதான வேட்பாளர்களும் வாக்களித்து தனிச்சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை தமிழர்கள் ஆதரிக்க போகிறார்களா?

ஐந்தாவதாக,

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, “மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் களமிறக்கிறார்கள்” என்ற தீ பற்றி எரியத்தொடங்கியவுடன், இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றத்தை விரும்புகின்ற, அதனை முழுமையாக ஆதரிக்கின்ற, அதற்காக முயற்சிக்கின்ற அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகள் சிலவும் தமிழர்களின் முடிவு தமது நோக்கத்தை சிதறடித்து திசை திருப்பி விடுமோ என்ற கலக்கத்தில், “உங்களுக்கு என்ன வேண்டும். உங்கள் தேவைகள் எதிர்பார்ப்புகள் என்ன” என்றவாறு இறங்கி வருவார்கள்.

இப்போது வாசகர்களாகிய நீங்கள் அவசியம் செய்ய வேண்டியது,

மீண்டும் இந்த பத்தியின் தொடக்கத்துக்கு செல்லுங்கள். இரண்டு பிரதான வேட்பாளர்கள் தரப்பும் கூறிய பேச்சுகளை மறுபடியும் வாசியுங்கள்.

இங்கு தான் தமிழர்கள் தமது அரசியல் பலத்தை, பேரம் பேசும் சக்தியை சிங்கள தலைமைகளுக்கு உணர்த்தப்போகிறார்கள். அவர்களை தமது காலடிகளுக்கு தமிழர்கள் கொண்டு வரப்போகிறார்கள். “அந்த இரண்டாவது வாக்கை இன்னவருக்கு அளியுங்கள்” என்ற வேண்டுதலோடு மேற்குலக நாடுகளின் சுட்டுவிரல் யாராவது ஒருவரை நோக்கி நீளும். அந்த சுட்டுவிரல் யாரை நோக்கி நீண்டதோ அத்தரப்பும், தமிழ் தேசியக்கூட்டமைப்பும் சர்வதேச மத்தியஸ்தத்துடன் ஒரு (இரகசிய) கனவான் ஒப்பந்தத்துக்கு செல்ல முடியும்!

அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கான பிரகாசமான வாய்ப்புகளும் உண்டு.

எனவே மூன்றாவது வேட்பாளரை களமிறக்கும் முடிவில், தமிழ் மக்களின் நலன், பலம், பாதுகாப்பு, பேரம் பேசும் சக்தி, கிடுக்குப்பிடி போடும் திறன் எல்லாம் ஒருங்கே இருப்பதால்தான், இங்கு “மூன்றாவது வேட்பாளர்” தெரிவு முக்கியத்துவம் பெறுகிறதே தவிர,

இது ராஜபக்ஸவை மறைமுகமாக ஆதரிக்கும் முடிவு, ராஜபக்ஸ வீசியெறிந்த கோடிகளுக்கு விலைபோனவர்களின் முடிவு என்றெல்லாம் விமர்சித்து பேசுவது, “தேத்தண்ணிக்கடை பெஞ்ச்” அரசியலுக்கு சரிப்பட்டுவருமே தவிர, அறிவுபூர்வமான அரசியல் நடவடிக்கைகளுக்கு பொருத்தி வராது.