பிரிஸ்பேன்:ஜி 20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முன் கூட்டியே புறப்பட்டுச் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியது. ''எனக்கு தூக்கம், தூக்கமாக வருகிறது. அதிக தூரம் பயணம் செல்ல வேண்டியிருப்பதால், விரைவாக புறப்படுகிறேன்,'' என, அவர், இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்தது. இதில், ரஷ்ய அதிபர் புடினும் பங்கேற்றார். இந்த மாநாடு துவங்குவதற்கு முன், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள், ரஷ்ய அதிபர் புடினின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தனர்.
'உக்ரைன் விவகாரத்தில் தேவையின்றி தலையிடுவதை நிறுத்த வேண்டும். அண்டை நாடுகளுடன் வலுக்கட்டாயமாக போருக்கு செல்வதை கைவிட வேண்டும்' என, அவர்கள் கூறினர்.இந்நிலையில், மாநாடு இன்று முடிவடைந்தது. இது தொடர்பான இறுதி அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பே, புடின், ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.மற்ற நாடுகளின் தலைவர்களின் விமர்சனம் காரணமாகவே, புடின், முன் கூட்டியே கிளம்பிச் சென்றதாக தகவல் வெளியானது.இதுகுறித்து, புடின் கூறியதாவது; ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு, நல்ல முறையில் நடந்தது. உறுப்பு நாடுகளுக்கு இந்த மாநாடு, மிக உதவிகரமாக இருக்கும். பிரிஸ்பேனிலிருந்து, ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு செல்வதற்கு, 18 மணி நேரம் ஆகும். இதன்பின், மாஸ்கோவில் அதிபர் மாளிகைக்கு சென்று பணிகளை கவனிக்க வேண்டும். இது, மிகவும் களைப்பை ஏற்படுத்தும். எனவே, முன் கூட்டியே கிளம்பிச் செல்வதன் மூலம், நன்றாக தூங்குவதற்கு நேரம் கிடைக்கும். தூங்குவதற்காகவே, முன் கூட்டியே கிளம்புகிறேன். மற்ற எந்த காரணமும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.