குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

சிங்கத்திற்கு மணி கட்டுமா மலையக தலைமைகள்?

சனாதிபதி தேர்தல் சம்பந்தப்பட்ட அறிவிப்பு வெளிவரும் என்ற நோக்கில் உற்சாகம் கொண்டிருந்த பல அரசியல் வாதிகளின் கருத்துக்களையும், மலையக தலைமைகளின் அறிக்கைகளையும், சனாதிபதியை சந்தித்தல், அடுத்த சனாதிபதி தேர்தலில் ஆதரவு தொடர்பான….

எதிர்கருத்துக்களை வெளியிடல் என்றெல்லாம் பல்வேறு விடயங்களுக்கு தமிழ் இனத்தின் அத்தனை ஆர்வமும் ,அடங்கி துன்ப நிலையாக மாறிவிட்டது. மீரியபெத்த மண்சரிவு சம்பவம்.

ஆம் அந்த துயர சம்பவம் இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகில் வாழும் தமிழினத்தையும் உலக மக்களையும் கண்மூடினால் கூட மீரியபெத்த மண்சரிவே கனவாக வருகின்ற நிலையை ஏற்படுத்தியது.

இன்று வரை இவர்களுக்கு உதவ துடிக்கும் உறவுகளின் உத்வேகம் எல்லைத்தாண்டி செயற்படுகின்றது.

இதற்கு முக்கிய காரணம் ஊடகங்களின் தொடர்பாடல் முறையாகும்.

ஆகவே நடந்து முடிந்த சம்பவங்களை சரித்திரமாக்கி நடக்க போகும் எதிர்காலத்திற்கு திட்டம் வகுத்து செயல்படவேண்டியதே நமது தமிழினத்தின் சுபீட்சமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.

நடந்த சம்பவங்களை நாம் சிறிது மீளாய்வு செய்து எதிர்காலத்தை திட்டமிட வேண்டும் என்பதே இச்செய்தியாகும்.

மண்சரிவிற்கு பல ஆராய்ச்சிகளும் அறிக்கைகளும் வல்லுனர்களால் கூறப்பட்டாலும் நமது தமிழினத்தின் முன்னோர்கள் மிக இலகுவாக கூறிய வார்த்தைகளில் இருந்து நாம் நமது இனத்தின் விஞ்ஞான வளர்ச்சியை இந்த நவீன காலத்துடன் சற்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

ஆய்வாளர்கள் இப்போது பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பார்த்து கூறுவதை நம் தமிழினம் அன்றே சர்வசாதாரணமாக கூறிவிட்டது. அது தான் ”அடியில் பட்டால் உச்சியில் தெரியும் ”என்பது இந்த மீரிய பெத்த சம்பவத்திலும் நாம் சற்று ஆராய்ந்து பார்த்தாலும் கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் உச்சி பகுதி வரை அதாவது மலை பகுதியில் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்படுவது யதார்த்தமானது.

உதாரணமாக விவசாய பயிர்களில் அரும்பில் ஏதேனும் வாடல் ஏற்பட்டிருந்தால் நாம் வேர் பகுதியுள்ள இடங்களை பறித்து பார்ப்பார்த்தால் வாடலுக்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். அதே போலத்தான் இந்த மண்சரிவும்.

இந்த மண்சரிவு பாரிய நான்காவது சம்பவம்

இந்த மண்சரிவுக்கு முன்பு இதே போன்ற சம்பவங்களை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.இந்த சம்பவங்களில் மனித உயிர்கள் மண்ணோடு மண்ணாக மறைந்தது அதிலும் மலையக மக்களே மாண்டார்கள்.

இப்பொழுது நடைபெற்ற இந்த சம்பவங்கள் வெளி உலகிற்கு வெளிகொணரப்படவில்லை.மீரியபெத்த சம்பவம் போல அச்சம்பவங்கள் வெளிபடுத்தப்படாதது அம்மக்களின் துரதிஸ்டவசமே.

1 அம்புத்தளை பெரகலை மண் சரிவு

2.இராகலை டியனல்ல கல மண்சரிவு

3.அல்மா தோட்ட குளம் உடைப்பால் ஏற்பட்ட மண்சரிவு

இந்த சம்பவங்கள் நடைபெற்ற காலப் பகுதியில் தோட்ட பகுதி மக்களே பலியானார்கள் ஆனால் அன்று தொடர்பாடல் வசதிகள் குறைவான காலப்பகுதி என்பதால் அச்சம்பவங்கள் வெளிப்பிரதேசத்திற்கு தெரியவந்த போது 7 முதல் 10 நாட்கள் கடந்த விட்டது என அறிய முடிகின்றது.

கடந்த 7 நாட்களும் நாம் கற்றுக் கொண்ட பாடங்களும்

மீரியபெத்த மண்சரிவு ஏற்பட்ட ஒரு வார காலத்திற்குள் தமிழினம் அனுபவித்த சோக நிலை இன்றும் தொடர்கின்றது.இதில் என்ன புதுமையென்றால் மலையக தமிழினம் மட்டும் துயர் கொள்ளவில்லை வடக்கு,கிழக்கு, மேற்கு, தெற்கு என்பதுக்கு அப்பால் உலகில் வாழும் அத்தனை தமிழினமும் துடிக்கின்றது இரத்த கண்ணீர் வடிக்கின்றது.

அன்று வடபகுதி இறுதி யுத்தத்தின் போது எப்படி உலகம் முழுவதும் அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதை கண்டு இரத்த கண்ணீர் சிந்தியதோ அதே வழியில் இன்றும் கண்ணீர் சிந்துகின்றது என்ன ஒற்றுமை.

அன்று தமிழினத்தை ஒழிப்பதற்காக பாரிய மனித புதைகுழிகள் தோண்டப்பட்டு புதைக்கப்பட்டார்கள். (ஆனாலும் அதை ஒரு தரப்பு மறுத்தாலும் இதுவே உண்மை)ஆனால் காணாமல் போனோர்கள் என்ற பெயரில் ஆணைக்குழு விசாரணைகள் தொடர்கின்றது.

அதே பாணியில் இன்று மலையக தமிழினம் புதையுண்டு போய்விட்டது.தேடுதல்கள் நடைபெறுகின்றது எனினும் முழுமையாக நடைபெறமாட்டாது.

இறப்பு விகிதத்தை குறைத்து கூற அதிகாரிகள் எடுக்கும் முயற்சி நடாத்தபடுகின்ற ஊடகவியளார்கள் சந்திப்பில் கருத்துக்கூறும் போது கூட ஏதே ஒரு சிறிய விடயம் நடைபெற்றது போல முகத்தில் எதுவித சலனமும் இன்றி சிரித்து கொண்டே பதில் கூறியதை நாம் காணக்கூடியதாக இருந்தது.

 

ஆனாலும் தமிழ் அரசியல் தலைமைகள் பாராளுமன்றத்தில் இந்த சம்பவம் பற்றி உணர்வு பூர்வமாக கருத்துக்களை கூறி வேதனைபட்டதை அவதானிக்க முடிந்தது.

 

இதை கண்ட சிங்கள அடிப்படை வாதிகள் கூறும் கருத்து தமிழ் மக்களின் வேதனையை அதிகரிக்கும் படியாகவே உள்ளது.

 

மனித நேயத்துடன் உதவ துடிக்கும் சிங்கள சாதாரண மக்களையும் நாம் இந்த இடத்தில் மறக்க கூடாது.

 

மீரியபெத்த சம்பவத்தின் தொடர்ச்சியில் நன்மை அடைய போவது சிங்கள மக்களே

 

ஆம் இந்த மண்சரிவிற்கு பின் சிங்கள அரசியல் வாதிகளுக்கு மறைமுகமாக நன்மையடையகூடிய விடயம் ஒன்றை கண்டுபிடித்துவிட்டார்கள். ஆம் அது தான் காணி சுவீகரிப்பு திட்டம்.

 

இப்பொழுது மலையகத்தில் காணி சுவீகரிப்புக்கு பெருந்தோட்டங்களே இருக்கின்றது. இதை எப்படியும் சுவீகரித்து சிறு தோட்டங்களாக்கும் திட்டம் இவர்களிடம் ஏற்கனேவேயுள்ளது.

 

ஆனால் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் ஆதரவை தொடர்ந்து தக்க வைக்க இந்த திட்டத்தை கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றதை மலையக தலைமைகளுக்கு தெரிந்தும் தெரியாதர்வர்கள் போல் நாடகமாடுகின்றார்களா?அல்லது தெரியவில்லையா என்பது புரியாத புதிரே.

 

எனினும் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகள் வாழும் பகுதியில் கட்டம் கட்டமாக செயல்படுத்தினால் தெற்கு, இரத்தினபுரி, கண்டி போன்ற மாவட்டங்களில் துரித கதியிலும் செயல்பட்டு பெருந்தோட்டங்கள் எல்லாம் சிறு தோட்டங்களாக மாற்றி அமைக்கப்பட்டு பெருந்தோட்டங்களின் வருமானம் குறைக்கபட்டு வீழ்ச்சியுறும், சிறு தோட்டங்களில் வளர்ச்சி நாட்டின் தேயிலை உற்பத்தியில் முக்கிய இடத்தை மேலும் அடையும்.

 

இதில் சிறு தோட்ட சொந்தக்காரர்களாக சிங்கள மக்களும் பெருந்தோட்டங்களில் தொழிலாளியாக வாழ்ந்த அதே லயன் அறைகளில் இன்றும் வாழ்ந்து கொண்டு சிறு தோட்டங்களாக மாற்றப்பட்டும் தேயிலை செடிகளில் அன்றாட வாழ்க்கைக்காக தொழில் செய்பவர்களாக இந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் பற்றி எந்த தொழில் சங்கமும் பேசுவது கிடையாது ,பார்ப்பதும் கிடையாது .

 

இவர்களின் வழித் தோன்றல்கள் சிறிது சிறிதாக சிங்கள மக்களுடன் இரண்டரக் களந்துக் கொண்டிருக்கின்றார்கள் எதிர் காலத்தில் இப்பகுதியில் வாழும் இம் மக்கள் சிங்கள பெயர்களுடன் வாழக்கூடியதாக இருக்கும்.

 

தமிழ் தலைமைகள் பிரதிநிதித்துவத்தடன் இருக்கும் பதுளை ,நுவரெலியா மாவட்டத்திலும் இது கட்ட கட்டமாக செயல் படுத்தப்படுகின்றது. உதாரணம் கொத்மலை பகுதி, வலப்பனை பகுதியை குறிப்பிடலாம்.

 

இதை உற்று நோக்கும் அதே வேளை மீரியபெத்த மண் சரிவிற்கு பின் பல சிங்கள மக்கள் வாழும் பகுதியின் மண் சரிவு அபாயம் காரணமாக பொது மண்டபங்களுக்கு சிங்கள மக்களும் இடம் பெயர்ந்துள்ளார்கள்.

 

இவர்களுக்கு மாற்றிடம் வழங்கப்படவிருக்கின்றது இங்கே தான் அரசின் அரசியல் வாதிகளின் கபட நாடகம் ஆரம்பமாக போகின்றது.

 

ஆம் சிங்கள கிராமிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு பல வழிகள் ஏற்கனவே உண்டு.அரசு உதவியும் உண்டு.

 

1.தொழில் செய்பவர்களாக இருப்பார்கள்.

2.விவசாயம் செய்யும் காணிகள் இருக்கும்

 

புதிதாக காணி வீடு கட்ட வழங்கப்பட்டால் அவர்களின் வருமானத்திற்கு மேற்குறிப்பிட்ட வழிவகையுடன் வீடு கிடைத்துவிடும்.

 

ஆனால் பெருந்தோட்ட தொழிலை நம்பி வாழ்ந்த மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு தேயிலை தோட்ட தொழில் வாய்ப்பு குறையும் வீட்டை மாத்திரம் வைத்து கொண்டு வாழ வழியை தேட வேண்டிய நிலை தோன்றும்.ஆகவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசியல் தலைமைகளின் பங்களிப்பு மிக அத்தியாவசியமாகின்றது. இவர்களின் உரிமை குரல் பாராளுமன்றில் கோரிக்கையாக உறுதியாக ஒலிக்க வேண்டும் எப்படி என்றால்.

 

1.ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 38 ஆயிரம் ஹெக்டயர் தரிசு நிலம் மலையக பகுதி வேலையற்று வாழ்கின்ற இளைஞர்களிடையே பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டால் அவர்களின் வேலையில்லா பிரச்சினையில் ஒரு லட்சம் பேருக்கு நிரந்தர வருமானத்துடன் வேலையில்லா பிரச்சினை தீரும்.

 

2.பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறி லாபம் பெற்றுவரும் கம்பனிகளிடம் இருந்து இக்காணிகளை அரசு பொறுப்பேற்று மலையகத்தில் வாழும் மக்களுக்கு சிறு தேயிலை தோட்டங்களாக மாற்றி அவர்களை உரிமையாளர்களாக்க வேண்டும்.

 

உண்மையில் தோட்ட தொழிலாளி என்று கூறுவதை விட தேயிலை செடிகளை வளர்ப்பதில் உற்பத்தியை அதிகரிப்பு செய்யும் இம்மக்கள் அங்கீகரிக்கப்படாத தொழில்நுட்பவியளாளர்கள் என்பதை உணர்ந்து இவர்களுக்கு இந்த காணிகளை வழங்கி தொடர்ந்து தேயிலை வளர்க்க, திறம்பட செய்ய மகிந்த சிந்தனையில் சிங்கள மக்களுக்கு கொடுக்கப்படுகின்ற அத்தனை மானியங்களையும் இவர்களுக்கும் கொடுக்கப்படல்வேண்டும்.

 

மீரியபெத்த சம்பவத்தின் பின் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதை போல் மக்கள் ஒன்றுபட்டதை போல் தமிழ் தலைமைகள் ஒன்றுபட வேண்டிய சூழ் நிலைக்கு இந்த சம்பவம் நடைபெற்றபின் வட பகுதி தமிழின தலைமைகளை முழு மலையக மக்களும் முழு மனதுடன் நன்றி, தெரிவித்தமை அவர்களின் பாராளுமன்ற உரைகள் எல்லாம் சில மலையக சுயநல குறுகிய அரசியல் லாபம் பெற துடிப்பவர்களுக்கும்,அடிப்படைவாத சிங்கள பௌத்த தலைமைகளுக்கும் மன கிலேசத்தை நிச்சயம் உண்டு பண்ணியிருக்கும்.

 

ஆனால் மலையக மக்களுக்கு ஒன்று பட்ட மகிழ்ச்சி ஆரம்பித்திருக்கும் என நம்புகின்றோம்.

 

வடக்கு – கிழக்கு,மேற்கு என்று பிரதேச வாதம் மறந்து சகல தமிழின தலைவர்களையும் இந்த மண்ணோடு மறைந்த மக்கள் ஒன்றுபடவைத்த புனித பூமியாகிவிட்ட மண்மேடுகளை காண கால் பதிக்க வைத்த இம்மக்கள் புதைக்கப்பட்டவர்கள் அல்ல விதைக்கப்பட்டவர்கள் அவர்களின் உடம்பின் மேல் மூடிய மண்ணில் இருந்து வளரும் மரங்கள் செடிகள் எல்லாம் இனி காடாக காட்சியளிக்கும் இதற்கு பின் மலையக தமிழ் தலைமைகளும் வட – கிழக்கு அரசியல் தலைமைகளும் ஒன்றினைந்து ஒரே குரலாக பாராளுமன்றத்தில் மாத்திரம் அல்ல உலகம் முழுதுக்கும் ஒற்றுமையை காட்டக் கூடிய சந்தர்ப்பத்திலேயே எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும்.

 

இந்த தேர்தலுக்கும் முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் நாம் மேற்கூறியுள்ள தேயிலை தோட்ட காணி பகிர்ந்தளிப்பு ,தரிசு நிலை பகிர்ந்தளிப்பு வீட்டு காணி போன்றவைகளை கடந்த காலங்களில் சிங்கள மக்களுக்கு வழங்கியது போல் எதிர் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கும் அழுத்தத்தை பாராளுமன்றில் மாத்திரம் அல்ல ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு சென்று ஜனாதிபதி மேடைகளில் கூறும்.

 

இந்தநாட்டில் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்றால், நீதி.உரிமை சகலருக்கும் ஜாதி, குல, மத மொழி பேதம் இனி இல்லை என்பதை தேர்தலுக்கு முன் அவரின் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு அமுல்படுத்த கோருங்கள்,இதுதான் உயிருடன் இருக்கும் தமிழினித்திற்கு நீங்கள் செய்யப் போகும் உயர் பணி. உடலைவிட்டு பிரிந்த ஆத்மாக்களின் சாந்திக்கு வழி!

 

மீரியபெத்த சம்பவத்தின் எதிரொலி எமது மலையக உணர்வு பூர்வமான நடவடிக்கைகளை நேரில் சென்று பார்த்த போது ஓர் பெண் தொழிலாளி அழுத ஒப்பாரி படித்து தான் பாருங்கள்.

 

*அடிங்க அடிங்க

எம் தமிழினம் ஒன்றுபடும் வரை

கோ என்று அழுத ராசம்மாவின் ஒப்பாரி

அடிக்காதிங்க அடிக்காதிங்க

நீங்க அடித்த வழி இன்னும் மாறவில்லை

அடிக்காதிங்க அடிக்காதிங்க

 

இனிமேலும் அடிக்காதிங்க

அடிக்காதீங்க நான் பாவம்

அடிக்காதிங்க அடிக்காதிங்க

நீங்க அடித்த அடியில்

என் அப்பாவையும் அம்மாவையும் இழந்தேன்

அடிக்காதிங்க அடிக்காதிங்க

நீங்க அடித்த அடியில்

அண்ணனையும் தம்பியையும் இழந்தேன்

அடிக்காதிங்க அடிக்காதிங்க நீங்க அடிச்ச அடியில்

அத்தனை உறவுகளையும் இழந்தேன்.

அடிக்காதிங்க அடிக்காதிங்க

நீங்க அடிக்கிறதில் வில்லன்

என்று உலகம் சொல்லுது

அடிக்காதிங்க அடிக்காதிங்க

நீங்க அடித்த அடியில் வீட்டை இழந்தேன்

அடிக்காதிங்க அடிக்காதிங்க

நீங்க அடித்த அடியில்

சொத்துக்களை இழந்தேன்

அடிக்காதிங்க அடிக்காதிங்க நீங்க அடித்த அடியில்

ஊரை விட்டே ஓடிவிட்டேன்

 

அடிங்க அடிங்க இந்த உலகை விட்டே ஓடிவிட

அடிங்க அடிங்க எம் இனத்தை ஈடுவைத்தவனை

அடிங்க அடிங்க உங்களிடம்

என்னைப்பற்றி சொன்னவனை அடிங்க

அடித்த அடிக்கெல்லாம்

அபகீர்தி சொன்னவனும்

அடித்த உனக்கும் ஆண்டவன் தண்டனையே

நிச்சயம் உண்டு என்று…

 

மறக்காமல் அடிங்க

அடிங்க அடிங்க எம்

இனம் விழிந்தெழும் வரை

அடிங்க அடிங்க எங்களை

எங்கள் இனம் ஒன்றுபடும் வரை

ராசம்மாவின் ஒப்பாரி

 

-மகா-