குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 16 ம் திகதி வியாழக் கிழமை .

சர்க்கரை நோயா? கவலையின்றி சாப்பிடுங்க...

சர்க்கரை நோய் பாதிப்பில் சிக்கும் மக்கள் பெருகிக்கொண்டே வருகின்றனர். மருந்துகளைக் கூட முறையாக பயத்தோடு எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், என்ன உணவு உட்கொள்வது என்பதில் குழம்பியே இருக்கின்றனர். எனவே, ஒரு சில உணவு குறிப்புகளும், ஆலோசனை குறிப்புகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. மனிதனுக்கு இருக்கும் முதல் ஆசை அவன் விரும்பியதை சாப்பிடுவதுதான். நோய் என்ற பெயரால் மனிதனை மிகவும் கட்டுப்படுத்தும் பொழுது அவன் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகிறான்.

அதனை நீக்க முயலும் சிறு முயற்சியே இந்த மருத்துவ கட்டுரை. சர்க்கரை நோயினை கையாள டிப்ஸ்...

1. சர்க்கரை நோய்க்கு சரியான உணவு முறையே முதல் தீர்வு. எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்பதனை நன்கு அறிய வேண்டும்.

2. நிறைய நார்ச்சத்து உணவு, கொழுப்பில்லாத பால், மோர், குறிப்பிட்ட பழங்கள், காய்கறிகள் இவை அனைத்தும் தேவையே.

ஆனால் அளவோடு உண்ண வேண்டும்.

3. இந்திய உணவில் 60:20:20 என்ற அளவில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு கலந்த உணவு இருக்கவேண்டும். 1500 - 1800 கலோரி சத்து நாள் ஒன்றுக்கு போதுமானது. மூன்று வகை காய்களும், இரண்டு வகை பழங்களும் நாள் ஒன்றுக்குத் தேவை.

4. பாதாம் போன்ற கொட்டை வகைகள் உடலுக்கு நன்மையே. இதிலுள்ள ஃபரக்டோஸ் இரத்தத்தில் சர்க்கரையை கூட்டி விடும். மிகக் குறைந்த அளவில் இவைகளை பயன்படுத்தலாம். 5-6 பாதாம் எடுத்துக் கொள்ளலாம்.

5. ஒரு டீஸ்பூன் வெந்தயத்தினை 100 மி.லி., நீரில் இரவில் ஊற வைத்து காலையில் நீரோடு வெந்தயத்தினையும் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

6. காலையில் தக்காளி ஜுஸ் மிளகுத்தூள், உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.

7. முழு தானியம், ஓட்ஸ், சிறு தானியங்கள் இவை சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம்.

8. கொழுப்பற்ற பால் தினம் இரண்டு க்ளாஸ் குடிக்க வேண்டும்.

9. முளை கட்டிய பயறுகள், பட்டாணி, பீன்ஸ், பசலை, காய்கறி போன்றவை ஆரோக்கியத்தினை கூட்டும்.

10. பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா, பேரிக்காய் இவைகளை எடுத்துக் கொள்ளலாம்.

11. நாள் ஒன்றுக்கு சிறிது சிறிதாக 5 முறை உண்ண வேண்டும்.

12. செயற்கை சர்க்கரை ஓரளவு பயன்படுத்தலாம்.

* அதிக நீர் குடிக்க வேண்டும்.

* ஆல்கஹால் தவிர்ப்பதே நல்லது.

* சிக்கன், கடல் உணவு இவை உண்ணலாம். சிகப்பு மாமிசம், முட்டையின் மஞ்சள் கரு இவற்றினை அடியோடு தவிர்த்து விடுங்கள்.

* மாறுதலான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் மனச்சோர்வு ஏற்படும்.

சர்க்கரை நோய்க்கு சிறப்பான சில உணவுகள் :

முட்டை கோஸ்: வைட்டமின் கே மற்றும் சி கொண்டது. மக்னீசியச் சத்து நன்கு உடையது. வைட்டமின் பி6 இதன் சிறப்பு அம்சம். பச்சை காலிப்ளவர் எனப்படும் ப்ரோகோலி இதில் வைட்டமின் ஏ மற்றும் டி அதிகம். சமைத்தவுடன் சாப்பிட வேண்டும்.

முளை கட்டிய பயறு: வைட்டமின் ஏ மற்றும் சி, ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து மிகுந்தது.

வெள்ளரி: வைட்டமின் கே, பொட்டாசியம், வைட்டமின் சி சத்து கொண்டது.

காலிப்ளவர் : ஒரு கப் அளவு எடுத்துக்கொள்ளும் பொழுதே அன்றைக்குத் தேவையான வைட்டமின் `சி' சத்தில் பாதி அளவு கிடைத்துவிடும். இரும்புச்சத்தும், நார்ச்சத்தும் கொண்டது.

பசலைக் கீரை: ஃபோலேட், வீட்டா கரோடின், வைட்டமின் கே என சத்து நிரம்பியது. அன்றாடம் கூட ஒரு கைப்பிடி அளவு இலைகளை சமையலில் சேர்க்கலாம்.

தக்காளி: வைட்டமின் `சி', பொட்டாசியம், நார்ச்சத்து கொண்டது. மிகக் குறைந்த கலோரி சத்து உடையது. இதிலுள்ள லைகோபேன் உடலை பாதிப்பிலிருந்து வெகுவாய் காக்கும்.