குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

மலட்டு அரசியல் நடத்தும் பரமார்த்தகுரு சேரமானும் அவரது சீடர்களும்!

தேசியத் தலைவர் ஒப்புதல் அளித்த அவரது வாழ்த்தோடு தொடக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பரமார்த்த குரு சேரமானும் அவரது சீடர்களும் தொண்டரடிப் பொடியாழ்வார்களும் உடைத்தார்கள். அதற்குக் காரணம் தேசியம், கொள்கை, கோட்பாடு அல்ல.

மே 2009 க்குப் பின்னர் – பொதுத் தேர்தலுக்கு முன்னர் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (ததேகூ) ஒரு அரசியல் தீர்வுத் திட்ட வரைவை தயாரித்திருந்தது. முதலில் அதைப் படித்துப் பார்த்த கஜேந்திரகுமார் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட அரசியல் கோரிக்கைகளை அரசு தர ஒப்புக்கொள்ளுமேயானால் அது பெரிய காரியம் எனக் கருத்து வெளியிட்டார். பின்னர் அதில் கூறப்பட்ட சில கோரிக்கைகள் பற்றி தனக்கு மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரிவித்தார். தயாரிக்கப்பட்டுள்ள வரைவில் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், தனித்துவமான இறைமை போன்ற அடிப்படை கோட்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன எனக் கூறினார். தமிழ்த் தேசிய கூட்டமைபபின் மூத்த தலைமைகளினால் இரகசியமான முறையில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈடுபடுத்தாமல் தீர்வுத்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

“ஒன்றும் அவசரம் இல்லை. தேர்தலுக்குப் பின்னர் வெற்றிபெற்று வருகிற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கலந்தாலோசித்து இறுதி முடிவை எடுக்கலாம்” என அவருக்குச் சொல்லப்பட்டது.

தனது கட்சிக்கு (காங்கிரஸ் கட்சிக்கு) யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட மேலும் ஒரு இடம் வேட்பாளர் பட்டியலில் வேண்டும் என்று கஜேந்திரகுமார் கேட்டார். அதில் சிக்கலில்லை, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு இடம் ஒதுக்கித் தருகிறோம் என ததேகூ அவருக்குச் சொல்லியது. ஆனால் அந்த வேட்பாளர் மீனவ சமூகத்தைச் சார்ந்தவராக இருப்பது நல்லது என கஜேந்திரகுமாருக்கு சொல்லப்பட்டது. எதற்கும் தான் தனது முடிவை இரண்டு நாட்களில் தெரிவிப்பதாகக் கூறிச் சென்றார். சென்றவர் சென்றதுதான் அடுத்து கூட்டத்துக்கு தனது செயலாளரை மட்டும் அனுப்பினார். அவர் திரும்பி வரவில்லை. இதன் பின்னர்தான் அவசர அவசரமாக தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற பெயரில் ஒருகட்சி தொடங்கும் முயற்சியில் இறங்கினார்.

முன்னதாக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவர் அ. விநாயகமூர்த்தி, அதன் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவருக்கும் நியமனம் கொடுப்பது என்பதே ததேகூ இன் முடிவாக இருந்தது. ஆனால் அ.விநாயகமூர்த்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவருக்கும் பதிலாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு நியமனம் வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். இந்தக் கோரிக்கையை ததேகூ நிராகரித்தது. செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் இருவருக்கும் மீண்டும் போட்டியிட நியமனம் கொடுப்பதில்லை எனத் ததேகூ முடிவு எடுத்தது. காரணம் இந்த இருவரும் வி.புலிகள் பற்றி வெளிநாட்டில் பரப்புரை செய்வதாகச் சொல்லிக் கொண்டு ஒருவர் இலண்டனிலும் மற்றவர் நோர்வேயிலும் முகாம் இட்டு இருந்தனர். நாடு திரும்பாவிட்டால் நாடாளுமன்றப் பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இருவரும் 2009 இல் அவசர அவசரமாக நாடு திரும்பினார்கள். இந்த இருவருக்கும் தேர்தலில் போட்டியிட யார் காலில் விழுந்தாவது நியமனம் பெற்றுக் கொடுக்கும் முயற்சி கடைசி நாள் வரை நீடித்தது. இதில் உலகத்ததமிழர் ஏட்டு ஆசிரியர் கமலுக்கும் அருமைநாதனுக்கும் பங்குண்டு.

கமல், அருமை இருவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கஜேந்திரன், பத்மினி இருவருக்கும் நியமனம் கொடுப்பது பற்றி என்னை வந்து சந்தித்தார்கள். “இந்த இருவருக்கும் எப்படியும் நியமனம் வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்கள் அங்கிருந்து கொண்டு வற்புறுத்திக் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். நீங்கள் ஒருக்கால் சம்பந்தர் ஐயாவோடு கதையுங்கள்” என்றார்கள். நானோ அல்லது ததேகூ(கனடா)ப்போ, ததேகூ இன் உள்வீட்டு செயற்பாடுகளில் தலையிடுவதில்லை என்று தெரிவித்தேன். குறிப்பாக நியமனம் தொடர்பாக என்னால் தலையிட முடியாது என்று அடித்துச் சொன்னேன். ஆனால் அவர்கள் விடுவதாக இல்லை. சம்பந்தர் ஐயாவோடு நான் கதைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள். வேறு வழியில்லாமல் சம்பந்தர் ஐயாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். பத்மினி சிதம்பரநாதனைப் பொறுத்தளவில் மகளிர் அமைப்புக்கள் அவரை தேர்தலில் நிறுத்துவதை ஆதரிக்கவில்லை என்றார். அதேபோல யாழ்ப்பாணக் பல்கலைக் கழக சமூகம் செல்வராசா கஜேந்திரனுக்கு நியமனம் கொடுப்பதை விரும்பவில்லை என்றார் சம்பந்தர் ஐயா. மேலும் “செல்வராசா கஜேந்திரனுக்கு நியமனம் கொடுத்து அவர் வென்று வந்தாலும் அவரோடு செயல்பட முடியாது” என்றும் மறுமுனையில் சம்பந்தர் ஐயா சொன்னார். கஜேந்திரன் யாழ்ப்பாணத்தில் தற்காலிக விரிவுரையாளராக இருந்த தனது தம்பிக்கு வி.புலிகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி நிரந்தர நியமனம் வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு அவர்மீது அந்தக் காலகட்டத்தில் இருந்தது.

இதன் பின்னர்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற காளான் கட்சி தேர்தல் மழையில் முளைத்தது. இதற்கு சேரமான், கமல், அருமை உட்பட புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் ஆதரவாக இருந்தார்கள். அடுத்த தமிழ்த் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்ற மாயை புலம்பெயர் தமிழர்களிடையே உருவாக்கப்பட்டது. அவருக்குத் தலைப்பாக் கட்டி பப்பாசி மரத்தில் ஏற்றினார்கள். இது தொடர்பாக நான் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு 3 நாள் தொடர்ந்து ஸ்கைப்பில் பேசினேன். ததேகூ யை உடைக்க வேண்டாம், புதுக்கட்சி தொடங்க வேண்டாம், உங்களது கோரிக்கைகளுக்கு கட்சிக்குள் இருந்து கொண்டே ஆதரவு தேடுங்கள். நானும் உங்களுக்கு ஆதரவு தருவேன்” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். கெடுகுடி சொற்கேளாது என்பது போல அவர் எனது பேச்சைக் கேட்கவில்லை.

இந்த இடத்தில் ஒரு வரலாற்றுப் பதிவை பதிவு செய்யலாம் என நினைக்கிறேன். 1996 – 1997 இல் மாமனிதர் குமார் பொன்னம்பலம் சந்திரிகா குமாரதுங்காவின் ஆட்சியை மிகவும் கடுமையாக விமர்ச்சித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக கொழும்பில் இருந்து கொண்டு உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். “சிங்கங்களின் குகையில் ஒரு புலி” (A Tiger in den of the lions) இருந்து கொண்டு குமார் பொன்னம்பலம் வி.புலிகளுக்கு ஆதரவாகப் பேசியும் எழுதியும் வந்ததால் பல தீவிர சிங்கள – பவுத்த இனவாதிகளின் எதிர்ப்பை அவர் சம்பாதிக்க வேண்டியிருந்தது. அவர் சொந்த வாழ்க்கையில் மிதவாதியாகத்தான் இருந்தார். அவரது அரசியல் நிலைப்பாட்டைப் பிடிக்காத சிங்களவர்கள் தொழில் முறையாகவும் வேறு வழிகளிலும் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் மிகப் பெரிய இரசிகரான அவர் இருந்தார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தை எதிர்ப்புக்கு மத்தியில் நானும் நண்பர் குணநாதனும் சேர்ந்து 1997 இல் fகனடா உலகத்தமிழர் நடத்திய மாவீரர் நாளில் கலந்து கொண்டு பேச வைத்தோம். அப்போது நான் உலகத்தமிழர் இயக்கத்தின் துணைத் தலைவராகவும் FACT அமைப்பின் தலைவராகவும் இருந்தேன். எனவே நல்லெண்ணத்தோடு காட்பட்பட்ட எதிர்ப்பைச் சமாளிக்க முடிந்தது.

நொவெம்பர் 1977 இல் குமார் பொன்னம்பலம் ரொறன்ரோவுக்கு தனது குடும்பத்துடன் தனிப்பட்ட செலவை மேற்கொண்டிருந்தார். அதனைக் கேள்விப்பட்ட நான் அவரோடு தொடர்பு கொண்டு மாவீரர் விழாவில் நீங்கள் கலந்து கொண்டு கட்டாயம் பேசவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இங்குள்ள அவரது உறவினரோடு பேசி அவரது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டேன். ஆனால் பின்னர் அந்த முடிவை அவர் மாற்றிக் கொண்டார். குமார் பொன்னம்பலம் உடல்நலக்குறைவாக இருந்த அவரது மாமியார் திருமதி முருகேசம்பிள்ளைரைப் பார்க்கவே வருகிறார், எனவே அவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளமாட்டார் என்ற ஒரு குண்டைப்போட்டார். எனவே அப்போது கொழும்பில் இருந்து புறப்பட்டு இலண்டன் வந்து சேர்ந்த குமார் பொன்னம்பலத்தை இரவு கண்முழித்து அதிகால வேளை (இலண்டன்) தொடர்பு கொண்டேன். திருமதி யோகலட்சுமி குமார் பொன்னம்பலம்தான் மறுமுனையில் பேசினார். இங்கு ஏற்பட்ட சிக்கல்பற்றி சுருக்கமாகச் சொன்னேன். “ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். அவர் வாக்களித்தவாறு மாவீரர் விழாவில் கட்டாயம் பேசுவார்” என்றார். விமானம் வந்து சேரும் நேரத்தையும் விமானம் தரையிறங்கும் இடத்தையும் அவரிடம் கேட்டுக் குறித்துக் கொண்டேன்.

அடுத்த நாள் (நொவெம்பர் 29 ) நானும் குணநாதனும் வேளையோடு விமானநிலையம் சென்று காத்திருந்தோம். எங்களைப் பார்த்த அவரது உறவினரது முகம் மாறியது. “நான் என்ன சொன்னனான்? விமானநிலையத்துக்கு வரவேண்டாம் என்று சொன்னது நினைவில்லையா?” என்று சற்று கோபத்தோடு கேட்டார். திருமதி யோகலட்சுமி குமார் பொன்னம்பலத்தைப் பார்த்தேன். “அவரைப் பொருட்படுத்த வேண்டாம்” என்று கண்ணாலே சாடை காட்டினார். குமார் பொன்னம்பலம் எங்களை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அடுத்த ஒரு மணி நேரம் கழித்து வரும்படி கேட்டுக் கொண்டார். கஜேந்திரகுமார், அவரது சகோதரி இருவரும் பெற்றோர்களுடன் வந்திருந்தார்கள். சொன்ன நேரத்துக்கு ஹோட்டலுக்குப் போனோம். உடைமாற்றித் தேசிய உடையில் எங்களுக்காகத் தயாராகக் காத்திருந்தார். அவரை நேரே ரொறன்ரோ North Albion Collegiate மண்டபத்துக்கு கூட்டிச் சென்றோம். வழக்கம் போல மண்டபம் நிறைய மக்கள். முக்கால் மணித்தியாலம் பேசினார். அடுத்த நாள் ஸ்காபரோ Woburn Collegiate மண்டபத்தில் நடந்த மாவீரர் விழா மேடையிலும் பேசினார். அவரது பேச்சு எந்தவிதமான ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக இருந்தது. இரண்டு மேடையிலும் தமிழீழப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களை ஏற்றியும் போற்றியும் பேசினார். மக்கள் அவர்களது நினைவு நாளில் அவர்களுக்குச் செய்யக் கூடிய மிகப் பெரிய மரியாதை அவர்களது தாயகக் கனவுகளை நினைவாக்குவதே எனக் கூறினார். மக்கள் அடிக்கடி கைதட்டி ஆரவாரித்தார்கள்.

1997 ஆம் ஆண்டு குமார் பொன்னம்பலத்தின் அரசியல் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக இருந்தது. ஒரு சகாப்தத்துக்கு மேலாக அவர் தமிழர்களது அரசியல் வேட்கைக்கு குரல் கொடுத்து வந்தவர். ஆனால் அவரது கருத்துக்களைச் சொல்ல நல்ல மேடை கிடைக்கவில்லை. தேர்தலில் போட்டிபோட்ட ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவிக் கொண்டார். இதற்கு அவரது பிடிவாத குணம் ஒரு காரணம். 1977 தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதி அல்லது பருத்தித்துறை கொடுக்கப்பட்டது. இல்லை யாழ்ப்பாணத் தொகுதிதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அது மறுக்கப்பட்ட போது சுயேட்சை ஆகப் போட்டியிட்டுத் தோற்றார். 1982 ஆம் ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு கணிசமான தமிழ் வாக்குகளைப் (173,934) பெற்றாலும் அதிலும் தோல்விதான். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஹெக்டர் கொப்பகடுவ (77,300) ஜே.ஆர். ஜெயவர்த்தனா (44,780) இருவரையும் விட குமார் பொன்னம்பலம் 87,263 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் வன்னி மாவட்டத்தில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். வன்னி மாவட்டத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா 32,834 வாக்குகள், ஹெக்டர் கொப்பகடுவ 23,221 வாக்குகள் குமார் பொன்னம்பலம் 11,621 வாக்குகள் பெற்றிருந்தனர். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு 47,095 வாக்குகள், திருகோணமலை 10,068 வாக்குகள், அம்பாரை 8,079 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

டிசெம்பர் முதலாம் நாள் FACT அமைப்பு அவரையும் அவரது துணைவியாரையும் மதிப்பளிக்கு முகமாக ஓர் இரவு விருந்தை ஒழுங்கு செய்திருந்தது. அதில் பல மாகாண மத்திய அரசு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். மறைந்த பேராசிரியர் வில்சன் ஜெயரத்தினம் அவர்களும் வருகை தந்திருந்தார். முன்வரிசையில் அமர்ந்திருந்த அவரைக் கண்ட குமார் பொன்னம்பலம் மேடையை விட்டிறங்கி கைத்தாங்கலாக பிடிதது வந்து அவரை மேடையில் இருத்தினார். இம்முறை குமார் பொன்னம்பலம் தனது பேச்சை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா அவர்களது ஆட்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிற மனித உரிமைகளை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். அவரைத் தொடர்ந்து பேச வந்த மாகாண நாடாளுமன்ற அமைச்சர் யோர்ஜ் பிரவுண் பேசும் போது “குமார் பொன்னம்பலத்தின் மேடைப் பேச்சை செவிமடுத்த பின்னர் அவரைப் பின்தொடர்ந்து பேசுவது கடினம்” என்று புகழ்மாலை சூட்டினார். அடுத்த நாள் ஒட்டாவா வெளியுறவு அமைச்சு அதிகாரிகளோடு பேச வைத்தோம். அன்று மாலை கால்டன் பல்கலைக் கழக மாணவர் ஒழுங்கு செய்த கூட்டத்திலும் பேசினார்.

கனடாவைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்றம் (European Parliament (Brussels)அய்ரோப்பிய சபை (Council of Europe (Strasbourg), ஐ.நா. மனித உரிமை பேரவை (ஜெனீவா) பேசினார். அவுஸ்ரேலியா, டென்மார்க், நெதலாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் நடந்த மாநாடுகளிலும் பட்டறைகளிலும் கலந்து கொண்டு பேசினார். இலங்கையில் தமிழ்மக்கள் பொருளாதார தடையினாலும் ஓயாத செல் அடியாலும் குண்டு வீச்சாலும் செத்து மடிவதை அம்பலப்படுத்தினார். கைது, சித்திரவதை, தடுப்புக் காவல், சட்டத்துக்கு அப்பால்பட்ட கொலைகள் பற்றி எடுத்துரைத்தார். ஒவ்வொரு முறையும் குமார் பொன்னம்பலம் வெளிநாடுகளுக்கு சென்று விட்டு நாடு திரும்பும் போத அவர் கைது செய்யப்படுவார் என்ற வதந்தி பரவுவது வழக்கமாக இருந்தது.

இதன் பின்னரே வன்னி குமார் பொன்னம்பலத்தை தன் பக்கம் சேர்த்து வைத்துக் கொண்டது. அவர் சுட்டுக் கொல்லப்பட்ட போது வி.புலிகள் மாமனிதர் பட்டம் வழங்கி குமார் பொன்னப்பலத்துக்கு மதிப்பளித்தார்கள். கஜேந்திரகுமாருக்கு நாடாளுமன்ற பதவி வழங்கப்பட்டது. இவற்றை நான் சற்று விரிவாக எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. எனக்கு குமார் பொன்னம்பலம குடும்பத்தின் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நான் நல்ல மதிப்பு வைத்திருந்தேன். மீண்டும் ஒரு முறை திருமதி குமார் பொன்னம்பலம், கஜேந்திரகுமார் இருவரும் ரொறன்ரோ வந்த போது நண்பர்கள் சகிதம் சந்தித்து பேசும் வாய்ப்புக் கிடைத்தது. திரு சாமி அப்பாத்துரை அந்த ஒழுங்கினைச் செய்திருந்தார். அவர் கொல்லப்படுவதற்கு முதல் நாள் கூட அவருக்கு சந்திரிகா குமாரதுங்கா பேசிய பேச்சை மின்ன அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தேன். “பயங்கரவாதத்துக்கு துணைபோகிறவர்களும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களது நாட்கள் எண்ணப்படுகின்றன (Those who aid and abet terror their days are numbered) என்ற சந்திரிகாவின் எச்சரிக்கை கலந்த பேச்சு அவரைக் குறிப்பிட்டே பேசப்பட்டது எனவும் அவரைக் கவனமாக இருக்குமாறும்”கேட்டிருந்தேன்.

இந்த வரலாற்றை இங்கு நான் பதிவு செய்வதற்குக் காரணம் குமார் பொன்னம்பலம் குடும்பத்தோடு நான் நெருக்கமாக இருந்தேன். அடிக்கடி தொலைபேசியில் கூப்பிட்டுக் கதைப்பார். நான் 1998 இல் அவுஸ்திரேலியாவில் சில மாதங்கள் இருந்த போது அங்கும் தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசுவார். ஒரு முறை, தான் மலேசியா வந்திருப்பதாகவும் அவரது சொத்துக்களைப் பிள்ளைகளுக்கு எழுதப் போவதாகவும் சொன்னார்.

எனவே கஜேந்திரகுமார் அவர்களோடான கருத்து வேற்றுமை தனிப்பட்ட கோபதாபங்களால் எழுந்தது அல்ல. புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் அவரைப் பிழையாக வழிநடத்தி தேசியத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைத்துவிட்டார்கள் என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. இப்படி அவரைத் தங்களது மலட்டு அரசியலுக்குப் பயன்படுத்தியவர்களில் இந்த பரமார்த்தகுருவுக்கும் அவரது சீடர்களுக்கும் முக்கிய பங்குண்டு.

ஏற்கனவே குறிப்பிட்டவாற 2001 ஆம் ஆண்டு ததேகூ தொடக்கப்பட்ட பின்னர் 2004 ஆம் ஆண்டும் அதன் பின்னரும் அது அடிப்படையில் இருந்து விலகிச் சென்றதன் காரணமாகவே வெளியேறும் முடிவை தாம் மேற்கொண்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தாலும் உண்மை அதுவல்ல.

வடமாகாண சபைத் தோதலின் போது ததேகூ வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கும் கஜேந்திரகுமார் சொல்லுகின்ற கோட்பாடுகளுக்கும் வேற்றுமை இல்லை. சொற்கள் வேறுபடலாம் ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதான். உண்மையான நல்லிணக்கத்தையும் நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தையும் இலங்கை மக்கள் அனைவருக்குமான அபிவிருத்தியையும் எய்துவதற்கு அதிகாரப் பகிர்வின் பின்வரும் முக்கிய அம்சங்கள் அடிப்படையாக அமைய வேண்டும்.

1. தமிழ் மக்கள் ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசியமாகும் என்பதோடு சிங்கள மக்களோடும் ஏனையவர்களுடனும் சேர்ந்து இலங்கைத் தீவில் வாழ்ந்தும் வந்துள்ளனர்.

2. புவியியல் ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளதும், தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டதுமான வடக்கு கிழக்கு மாகாணங்களே தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ் விடமாகும்.

3. தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாவர்.

4. தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முறையில், சமஷ்டி கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும்.

5. அதிகார பரவலாக்கமானது காணி, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றின் மீதானவையாக இருக்க வேண்டும்.

கஜேந்திரகுமார் வெளியேறினாலும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி ததேகூ இன் வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் தேர்தலை எதிர்கொண்டார். எதிர்கொண்டது மட்டுமல்லாமல் அவர் தேர்தலில் அமோக வெற்றியும் பெற்றார்.

செல்வராசா கஜேந்திரனுக்கும் பத்மினி சிதம்பரநாதனுக்கும் ததேகூ நியமனம் வழங்கியிருந்தால் தேர்தல் மழைக்கு முளைத்த ததேமமு என்ற காளான் கட்சி தோன்றியிருக்காது. தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, இரண்டு தேசங்கள், தனித்துவமான இறைமை என்ற முழக்கங்கள் எழுந்திருக்காது. தமிழர் தரப்பு வாக்குகளைப் பிரித்து இபிடிபி கட்சிக்கு மேலதிகமாக ஓர் இருக்கையை தாரைவார்த்துக் கொடுத்திருக்க முடியாது. எனவே கஜேந்திரகுமாரும் அவரது கட்சியும் தம்மைப் பத்தரை மாற்றுத் தங்கங்கள், கொள்கைக் குன்றுகள் எனக் காட்டிக் கொள்ள முனைவது ஏமாற்று வேலையாகும்.

கடந்த செப்தெம்பர் மாதம் செய்தியாளர் மாநாட்டில் பேசிய கஜேந்திரகுமார் தான் இன்னமும் அரசியலில் ஒரு குழந்தை, பாலபாடம் கூடத் தெரியாது என்பதை எண்பித்தார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துகளுடன் புதிய இந்தியப் பிரதமர் மோடி நூற்றுக்கு நூறு வீதம் உடன்பட்டுப் போகின்றார் என்று அவரே கூறினார் எனத் தெரிவிக்கப்படுவதில் எமக்கு வியப்பு ஏதுமில்லை. ஏனென்றால் புதுடில்லியின் விருப்பப்படி, அவர்களின் நிகழ்ச்சி நிரல் பிரகாரம், இந்திய எடுபிடிகளாகவே கூட்டமைப்பினர் செயற்படும் போது, அப்படித்தானே உடன்பாடு இருக்கமுடியும். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சிப்பதற்கான ஒரு மிக முக்கிய காரணம், அவர்கள் தமிழ் மக்களின் நலனுக்கு உகந்த ஒரு நிகழ்ச்சி நிரலை முன் வைக்காது, அதற்குப் பதிலாக வெறுமனே இந்தியா கூறுபவற்றை – கேள்வி எதும் எழுப்பாது – அப்படியே ஏற்றுச் செயற்படும் போக்குதான் என்பது உங்களுக்குத் தெரியும்” என்ற தனது பழைய பல்லவியை மீண்டும் வாசித்தார்.

ததேகூ இந்திய தேசத்தின் அடிவருடியாகவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலிற்கேற்ப கூட்டமைப்பு தொழிற்படுவதாகவும் என்ற பல்லவியை ஆதியிலிருந்தே கஜேந்திரகுமார் பாடி வருகிறார். ததேகூ இன் கிளை ஒன்று புது டில்லியில் திறக்கப்பட உள்ளதாக வெளிவந்த போதும் ததேகூ இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய, அதன் விருப்பப்படி செயற்பட்டுவருவதாகவும் குற்றம் சாட்டினார்.

சரி இவர் கூறுவது போலவும் இவரது பரமார்த்த குருவும் சீடர்கள் கூறுவது போலவும் இந்தியாவை உதறிவிடுவோம். கை கழுவி விடுவோம். பின் யாருடைய உதவியைத் தமிழர் தரப்பு நாடுவது? அமெரிக்காவை நாடலாம், ஐரோப்பிய ஒன்றியத்தை நாடலாம் என்றால் அந்த நாடுகளும் இவர்களுக்குப் பிடிக்காது. மாற்று வழி சொல்லாமல், தேர்தல் வரும் போது தேர்தலைச் சந்திக்காது சந்து பொந்துகளில் பதுங்கி விடுவதையே கஜேந்திரகுமார் வழக்கப்படுத்தி வருகிறார். இவை காரணமாகவே அவரது அரசியல் மலட்டு அரசியல் (barren politics) என வருணித்து வருகிறேன். தேசிய நீரோட்டத்தில் எதிர்நீச்சல் அடிக்கிறார் எனக் குற்றம் சாட்டுகிறேன். அப்படி நடந்து கொள்வது எதிரிக்குத்தான் இலாபமாக இருக்க முடியும்.