குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யாத வரையிலும்? தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தில்லை!

தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங் கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான விடயமாகவே அமையும்.

அவ்வாறு பதிவுசெய்யப்படவேண்டுமாயின் ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியையையும் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. அவர் அதற்கெதிராகவே செயற்பட்டுவந்த ஒருவரும் கூட. பொதுவாக இக்கட்சிகள் அனைத்தும் ஒருகுடையின் கீழ் பதிவுசெய்யப்படுமாயின் தமிழரசுக்கட்சியினால் இக்கட்சிகள் அனைத்தும் ஓரங்கட்டப்படும். இறுதி யில் துரோகிகள் என்கின்ற பட்டமே இவர்களுக்குச் சூட்டப்படும்.

இதேவேளை தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளை விட்டுப் பிரிந்துசெல்லுமாயின் அவர்களுக்கும் துரோகிகள் என்கின்ற பட்டமே சூட்டப்படும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்ட மைப்புக்களை எவ்வாறு உடைக்கலாம் என அரசு திட்டம் தீட்டிவருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே இக்கட்சிகளிடையே குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழரசுக் கட்சியிலுள்ளவர்கள் தமது கட்சி எந்தவொரு ஆயுதகலாசாரங்களிலிருந்தும் வர வில்லை. அஹிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுத்தே வந்திருக்கின்றது. ஆகவே நாங்கள் தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்கின்ற போர்வையில் அவர்களுடைய நிலைப்பாடுகள் இருக்கின்றது.

ஆயுதக்கட்சிகளைப் பொறுத்தவரையில் ஒருகுடையின் கீழ் நின்று தேர்தலில் போட்டியிட்டாலும் கூட, அகழிக்குள் காலை வைத்து மீளமுடியாததொரு சூழல் உருவாகும். ஆகவே கட்சிகள் அனைத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அங்கத் துவக் கட்சிகளாக செயற்படுவதே சிறந்தது.

தற்போதைய காலகட்டத்தில் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கின்றது. மீளவும் தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தத்தினை ஆரம்பிப்பதாகவிருந்தால் ஆயுதக்குழுக்கள் இலங்கையரசினால் வரவேற்கப்பட்டு அதிகாரங்களை அவர்களுக்கு கையளிப்பார்கள். இவ்வாயுதக்குழுக்களும் பழையகுருடி கதவைத் திறடி என்ற நிலையில் கொலை, கொள்ளை, கப்பம், ஆட்கடத்தல் என்கின்ற செயற்பாடுகளில் இறங்கக்கூடும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்குள் குழப்ப நிலையினை உருவாக்கி அரசு அதில் குளிர்காயலாம் என நினைக்கிறது. மூத்த அரசியல்வாதிகள் மற்றும் பல ஆய்வாளர்களுடைய கருத்தின்படி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை பல வீனப்படுத்தும் அனைத்து திட்டங்களையும் அரசு ஆரம்பித்துள்ளது. குறிப்பாக வடமாகாணசபைக்குள் உள்வாங்கப்பட்டவர்கள் அரசின் நிகழ்ச்சிநிரல்களுக்கேற்ப செயற் படுமளவிற்கே உள்ளனர்.

வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர். சி.வி.கே.சிவஞானம், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் போன்றோர் இவ்வாறு செயற்பட்டுவருவதாகவும் இராஜதந்திர வட்டாரங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலைமையும் விரைவில் மாற்றியமைக்கப்படவேண்டும். ஒரு வகையில் சி.வி.விக்னேஸ்வரன் சிங்களப் பேரினவாதிகளோடு இரண்டறக் கலந்தே இருக்கின்றார். எதிர்வரும் காலகட்டங்களில் எதுவும் இடம்பெறலாம். நீதியரசராகவிருந்த சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் குறித்து நம்பிக்கையில்லாப் பிரே ரணை கொண்டுவரப்போவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

எது எவ்வாறாகவிருப்பினும் வட மாகாணசபையில் உள்ள ஒருசிலர் மாத்திரமே தமிழ் மக்களுக்காக குரல் எழுப்புகின்றார்கள். குறிப்பாக ரெலோ கட்சியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட என்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் ரவிகரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக அனந்தி சசிதரன் ஆகிய மூவருமே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றார்கள். அவ்வாறு பிரச்சினைகளைக் கூறும் பொழுதும் அவர்களை அதிகமாக கதைப்பதற்கு சி.வி.கே.சிவஞானம் அவர்கள் அனுமதி வழங்குவதில்லை.

ஆனால் அரச தரப்பினர் உரையாற்றும் பொழுது மாத்திரம் அதி கமாக உரையாற்ற அனுமதியுண்டு. வடமாகாண ஆளுநரும் அரச பக்கம் சார்ந்து இருப்பதனால் சி.வி.கே. சிவஞானத்திற்கோ, விக்னேஸ் வரனுக்கோ அவருடைய அதிகாரத்தினை மீறி செயற்படமுடியாதுள்ளது. அதற்காக இருவரும் தமிழ்த்தேசியத்தில் பற்றில்லாதவர்கள் அல்ல என்று கூறிவிடமுடியாது. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் காரணம்.

ஆகவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை பதிவு செய்யாது இவ்வாறே இழுத்தடித்துக் கொண்டு செல்கின்றபொழுது அரசினால் இதரகட்சிகளை உடைக்கமுடியாத சூழ்நிலை உருவாகும். அவற்றை மனதிற்கொண்டே மாவை சேனாதிராஜா கட்சியை பதிவுசெய்யவேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை என்ற பொருட்பட தெரிவித்திருக்கின்றார் எனலாம்.

இயக்கக்கட்சியிலுள்ளவர்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களின் படி தமிழீழ விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டதே இந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. ஏன் அவர்கள் இக்கட்சியினை உருவாக்கி ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டார்கள்.

ஆயுதப் போராட்டங்கள் ஒரு கட்டத்தினை கடந்து சென்றுகொண்டிருக்கின்றபொழுது பேச்சு வார்த்தைக்காக அரசியல் கட்சிகளை உருவாக்கி அதனூடாக தமது உண்மைகளை உலக அரங்கிற்கு எடுத்துரைக்க முடியும் என்கின்ற காரணத்தினால் தமி ழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், முன்னாள் புளொட் உறுப்பினர் டி.சிவராமுடன் இணைந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை உரு வாக்கினார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கிய டி.சிவராம் பாராளுமன்ற எல்லைக்குள் வைத்து அரசினால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிலைமை இவ்வாறிருக்க, ஆயுதக்குழுக்களை பதிவு செய்வதனூடாக தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பார்க்கின்றபொழுது பொதுவாக கூட்டமைப்பு என்றே பார்க்கமுடியும். தமி ழரசுக் கட்சியிலுள்ளவர்களுக்கு கூடுத லான அங்கத்துவம் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும்.

அதுமட்டுமல்லாது தமி ழரசுக் கட்சியினுடைய பழைய கோட்பாடுகளை தூக்கியெறியவேண்டிய நிலை தோன்றும். ஆனால் விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இன்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பாரிய பலமாக திகழ்கின்றது. இதில் யாரே னும் தவறுகள் இழைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசெல்வார்களாகவிருந்தால் அது ஆபத்தாகவே முடியும். அத னைத் தவிர்த்துக்கொள்வது தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும், இதர கட்சிகளுக்கும் சிறந்தது.

ஆனால் இயக்கக் கட்சிகளிலுள்ளவர்கள் தமி ழரசுக் கட்சியிலுள்ளவர்களுடன் எதிர்த்துப்பேசுவதற்கு தயங்கு கின்றார்கள். ஒரு சிலர் எதிர்த்துப்பேசுகின்றார்கள். அவர்கள் பேசினாலும் அது பெரியளவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இதற் குக் காரணம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் அதனது சின்னம் வீடு என்பதும் தமிழ்மக்கள் மத்தியில் ஆழப்பதிந்ததொன்றாகும். இதற்கெதிராக யார் செயற்பட்டாலும் துரோகி கள் என்றே கருதப்படுவார்கள். காரணம் ஒட்டுமொத்தத்தில் தமிழினம் பாதிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள சூழ்நிலையில் ஆயுதப்போராட்டத்தின் வழியே வந்தவர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளமுடியாதென முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியவிடயத்தில் தமி ழீழ விடுதலைப்புலிகளும் உள்ளடக்கப்படுகின்றனர். அவர்களி னுடைய செயற்பாடுகள் தற்பொழுது இல்லை என்ற காரணத்தினால் முதலமைச்சர் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் வடமாகாணசபை, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆயுத கலாசாரத்திலிருந்து நாங்கள் வந்தவர்களென பல வழிகளிலும் சுட்டிக்காட்டி தமது அரசியலை மேற்கொண்டுவருகின்றனர். அதற்கு இசைவாக்கமாக ஏனைய கட்சிகள் நடந்துகொள்வதே அவர்களுக்கு சிறந்தது. அதனை மீறிய செயற்பாடுகளில் இறங்குவார்களாகவிருந்தால், உதாரணம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தங்கேஸ்வரி, பத்மினி, சிவநாதன் கிஷோர் போன்றவர்களுக்கு என்ன நடந்ததோ அதேநிலைதான் மீதமாகவிருக்கின்ற இயக்கக்கட்சிகளுக்கும் நடக்கும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினுடைய நட வடிக்கைகள் தமிழ்த்தேசியத்திற்கு உட்படாமல் அதற்கப்பால் அரச நிகழ்ச்சிநிரல்களுக்கேற்ப செயற்படுகின்றார்கள் எனக் காரணங்காட்டி அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அவர்கள் அரசிற்கு ஒட்டுக்குழுக்களாக செயற்படவில்லை. ஆனாலும் அவர்கள் கூட வடமாகா ணசபையில் போட்டியிடமுடியாத நிலையேற்பட்டது. அதற்கு இக்கட்சி தொடர்பாக ஊடகங்களும் பெரியளவில் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர்களுடைய அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியிலுள்ளவர்கள் குறிப்பாக மாவைசேனாதிராஜா, சுமந்திரன், சம்பந்தன், அரியநேந்திரன், பொன்.செல்வராசா, சரவணபவான், சிவஞா னம் சிறிதரன், சி.வி.கே.சிவஞானம் போன்றோர்கள் தாம் தமிழரசுக்கட்சியின் வழியே வந்தவர்கள் என்ற பெருமையு டன் இருப்பதுடன் அதனை அவர்கள் பல இடங்களிலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடமாகாணசபைத்தேர்தலிலும் கூட ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக்கூட்டணி இந்த நான்கு கட்சிகளும் முழுமூச்சாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டன. ஆயுதக்கட்சிகளுடன் நாம் சகவாசம் வைத்துக்கொள்வது ஆகாதென்று விக்னேஸ்வரன் அவர்கள் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் இக்கட்சிகள் தனித்துப்போட்டியிட வாய்ப்புக்கள் இருந்திருக்கலாம் என தற்பொழுது கூறப்படுகின்றது.

பல்வேறு காரணங்களைக்காட்டி எதிர்ப்பினை தெரிவித்திருந்த ஆனந்தசங்கரி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இணைந்து கொண்டு வடமாகாணசபையில் போட்டியிட்டது வரவேற்கத்தக்கது. அவரை சபைகுழப்பி என பல கட்சிகளும் தெரிவித்திருந்தன. ஆனாலும் அவர் தமிழ் மக்கள் வெற்றிபெறவேண்டும் என்றவொரு நோக்கத்தோடு இணைந்துகொண்டார். அவருக்கு தேசியப்பட்டியல் கூட வழங்கவில்லை. பழம்பெரும் அரசியல்வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அரசியலில் பழம் தின்று விதையினை விதைத்தவர். குறிப்பாகச் சொல்லப்போனால் அரசி யலில் சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொன்.செல்வராசா இந்த ஐவரும் தலைசிறந்த அரசியல்வாதிகளாவர்.

ஆனந்தசங்கரி தேசியப் பட்டியலூடாக மாகாணசபைக்கு தெரிவுசெய்யப்படுவாரென செய்தி கள் தெரிவித்தபோதும் அவர் புறக்கணிக்கப்பட்டார். யாழ் மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் ஐங்கரநேசன் அவர்களுக்கு விவசாயத் துறை அமைச்சு வழங்கப்பட்டபோதிலும் அவ்வமைச்சு சித்தார்த்தன் அவர்களுக்கே வழங்கப்பட்டிருக்கவேண்டும். தமிழரசுக் கட்சி தனது வல்லாதிக்கத்தினை பெரும்பான்மையாக வைத்துக் கொண்டதன் ஊடாக தமக்கு சாதகமானவர்களையே உள் வாங்கிக்கொண்டது.

அந்த வகையில் கல்வியமைச்சராக குருகுலராஜா, மீன்பிடி அமைச்சராக டெனீஸ்வரன், சுகாதார அமைச்சராக சத்தியலிங்கம், விவசாய அமைச்சராக ஐங்கரநேசன் போன்றோர் நியமிக்கப்பட்டனர்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால் இவ்வாறான நிலைமைகள் அனைத்தும் சமமான முறையில் வழங்கப்பட்டிருக்கும். தமிழரசுக்கட்சியின் வல்லாதிக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக தமது நிகழ்ச்சிநிரல்களுக்கேற்ப செயற்படக்கூடியவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் 89,000 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற அனந்தி சசிதரனுக்கே அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. காரணம் விடுதலைப்புலிகளின் பிரதிநிதித்துவத்திற்குட்பட்டவர் என்ற காரணத்தினால் தமிழரசுக்கட்சி அவரை விலக்கிவைத்திருக்கலாம்.

தமது சொற்படி மேற்குறிப்பிடப்பட்ட கட்சிகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகவிருந்தால் தமிழரசுக்கட்சி என்ற கடிவாளத்தினை தளர்த்தக்கூடாது. தளர்த்துமாகவிருந்தால் தமிழரசுக்கட்சிக்கு ஆபத்து.