குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

திறக்கப்படும் தேர்தல் கடைகள்

தேர்தல் திருவிழாவை முன்னிட்டு பல கடைகள் அரச தரப்பினரால் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாழ்க்கைச் செலவு உயர்வு, இனவாதம்,தனிநபரின் சாதனைகள், குறைபாடுகள் என பலவிதமான பொருட்களும் அமோகமாக விலை போகவுள்ளன. இந்த வியாபாரத்தில் வெற்றிபெற கொலைகள் உட்பட வன்முறைகள், இலஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் என்பன தாராளமாகவே கட்டவிழ்த்து விடப்படும்.

அண்மையில் வெளியிடப்பட்ட வரவுசெலவு திட்டமும் இந்தக் கடை விரிப்பின் ஒரு பகுதியயன எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எதிர்க் கட்சியினர் இதை ஒரு பெரும் ஏமாற்று என்று கூறுகின்றனர். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, சமயாசமய ஊழியர்களை நிரந்தரமாக்குவது போன்ற சில கவர்ச்சிகரமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது உண்மை தான்.

எனினும் நாட்டுக்கு அந்நியச் செலாவாணியை ஈட்டித் தரும் மலையக மக்களோ, தனியார் துறை ஊழியர்களோ கவனிக்கப்படவில்லை. அதே வேளை, வடக்கு கிழக்கு மக்களின் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் என்பன பற்றியும் இந்த பட்ஜெட்டில் எதுவுமே பேசப்படவில்லை.

இருப்பினும் அரச பணியாளர்களின் சம்பள உயர்வு என்பது கவர்ச்சிகரமானது என்பதை எவரும் மறுத்து விட முடியாது. ஏனெனில் மக்கள் மத்தியில் கருத்துருவாக்கத்தை சாதாரணமாக விதைப்பவர்கள் அவர்களே. எனவே இந்த வியாபாரத்தில் அரசாங்கத்துக்கு லாபம் கிட்ட வாய்ப்புண்டு.

ஆனால் தேர்தல் முடிந்த பின்பு எவர் ஆட்சிக்கு வந்தாலும் மெல்ல மெல்ல பொருள்களின் விலைகள் உயர்கின்ற வேளையில் வர்த்தகமானி அறிவிப்புக்கள் வெளிவரும். இதில் எரிபொருள் விலையேற்றம் என்பது லாபகரமானதாகும். அது போக்குவரத்து, பாவனைப் பொருள்கள் , விநியோகம் என பல முனைகளில் ஆட்சி செலுத்துவதால் பிரகடனப்படுத்தப்படாமல் வாழ்க்கைச் செலவு உயர்வு தானாகவே ஏற்படும். மேலும் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பது போன்ற காரணங்கள் காட்டப்பட்டு பல பொருள்களின் விலைகள் நேரடியாக அதிகரிக்கப்படும். ஒட்டு மொத்தத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை விட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு சுமையாக வந்து விடும்.

இது ஒரு வழமையான நடைமுறையாக இருந்த போதும் அது தொடர்பாக பெரிதாக யாரும் அலட்டிக் கொள்வதில்லை.சிறிய அளவிலேனும் சம்பளம் அதிகரிக்கப்பட்டு விட்டதேயயன்ற திருப்திப்படுபவதை விட வேறு வழியில்லை.

இதைவிட இன்னொரு கடையும் உண்டு.இந்தக் கடை தான் மிகப் பிரபலமான கடை. இந்த வியாபாரத்தை நம்பியே இந்தத் தேர்தல் திருவிழாவில் பல கடைகள் திறக்கப்படுகின்றன. அது தான் இனவாதத்தை விற்பனை செய்யும் கடை.

ஏற்கனவே இந்தக் கடையில் நல்ல வியாபாரம் போனாலும் கூட, இப்போது புதிய முறையில் அலங்கரிக்கப்பட்டு பளபளப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சியும், அரசாங்கமும் போட்டி போட்டுக் கெண்டு இந்த இனவாத வியாபாரத்தில் இறங்கிவிட்டனர். “””புலம்பெயர் தமிழர்” எனக் கூவிக் கூவியே வாடிக்கையாளர்கள் அழைக்கப்படுகின்றனர்.

அண்மையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு வெளிவருவதற்குச் சில நாள்கள் முன்பு தான் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க லண்டன் பயணத்தை மேற்கொண்டு திரும்பியிருந்தார். உடனடியாகவே ஐரோப்பிய நீதிமன்றத் தீர்ப்புக்கும் , ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணத்துக்கும் முடிச்சுப் போட்டு கொழும்பெங்கும் சுவெராட்டிகள் ஒட்டப்பட்டன. அதாவது ரணில் விக்கிரமசிங்க லண்டனில் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து புலித்தடை நீக்கத்துக்கு ஆதரவு வழங்கினார் எனக்குற்றம் சாட்டப்பட்டது.

உடனடியாகவே ரணில் விக்கிரமசிஙக அதை மறுத்து விட்டார். அது மட்டுமன்றி புலம் பெயர் தமிழர்கள் தம்மைச் சந்திக்க விரும்பியதாகவும் ஆயினும் தான் அதற்கு மறுத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கு கொள்ள அமெரிக்கா சென்ற னாதிபதி மஹிந்த  ­ அங்கு சந்தித்த புலம்பெயர் தமிழர்கள் யார் எனவும், ஏன் சந்தித்தார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் ரணில்.

அதாவது னாதிபதியயன்றால் என்ன எதிர்கட்சிகள் என்றாலென்ன புலம்பெயர் தமிழர்களைச் சந்திப்பது என்ற வகையில் ஒருவரை குற்றம் சாட்டியுள்ளார்.

புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் பிறந்து இலங்கையில் வளர்ந்து பின்பு புலம்பெயர்ந்து சென்ற வெளிநாடுகளில் வாழ்பவர்கள். அவர்களின் பெற்றோரும், உறவினர்களும் இங்கு தான் வாழ்கின்றனர். அவர்களின் உழைப்பின் ஒரு பகுதி தான் இந்த நாட்டில் வீடுகளாக உயர்ந்துள்ளன. வாகனங்களாக வீதியில் ஓடுகின்றன. அதாவது அவர்கள் வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகள். அவர்களை னாதிபதியோ எதிர்க்கட்சித்தலைவரோ சந்திப்பதில் தவறு இல்லைத்தான்.

ஆனால் புலம் பெயர் தமிழரைச் சந்திப்பது என்பது இனவாத அரசியலில் தோற்கச் செய்து விடும் என பேரினவாத அரசியல் வாதிகள் எண்ணுகிறார்கள். அதனால் தான் அரச தரப்பினரும், எதிர்க்கட்சியினரும் போட்டிபோட்டிக் கொண்டு சிங்கள மக்களிடம் தமிழ் மக்களையும்,புலம்பெயர்ந்தோரையும் தேசவிரோதிகளாகக் காட்டி இனக் குரோதத்தை தக்க வைத்து எதிர்வரும் தேர்தலில் அரசியல் வியாபாரம் செய்யப் புறப்பட்டுள்ளனர். அதாவது என்றுமே தங்கள் தேர்தல் வெற்றிகளுக்காக இன நல்லிணக்கம் ஏற்பட முடியாத ஒரு சூழலைத் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர்.

அண்மையில் அம்பாந்தோட்டையில் ஒரு மக்கள் சந்திப்பில் உரையாற்றி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் “”புலித்தடை நீக்கம் இலங்கைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு அரசாங்கம் தனியாக முகம் கொடுக்க முடியாது. எனவே அரசுக்கு ஆதரவாக, புலித்தடையை மீண்டும் ஏற்படுத்தக் கோரி மக்கள் திரண்டு எழ வேண்டும்” என்று கூறியுள்ளார். இதே வேளையில் விமல் வீரவன்ஸ “”புலிகளுக்கு எதிராக முகம் கொடுக்க நோஞ்சான் தலைவர்களால் முடியாது . அஞ்சா நெஞ்சரான மஹிந்த­வை னாதிபதியாகத் தெரிவு செய்வதன் மூலமே சர்வதேச சதியை முறியடிக்க முடியும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதாவது அரச தரப்பு தேர்தல் பரப்புரைக்கு புலிகளின் மீள் எழுச்சி ,புலம்பெயர் தமிழர்கள் என இரு விடயங்களையும் பிரதானமாக்கி இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்க்கவுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. அரசாங்கம் மட்டுமன்றி எதிர்கட்சியும் அதே பாதையில் தான் செல்லப் போகிறது என்பதும் திட்டவட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு வரவுசெலவு திட்டம், இனவாதம் என இரு கடைகள் திறக்கப்பட்ட போதிலும்,இதில் இனவாத வியாபாரமே முன்னிலை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.