குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

மீண்டும் அயல் நாடுகளுடனான உறவில் அரசியல் நாடகங்களா?

06.11.2014-கடந்த சில மாதங்களில் பெறப்பட்ட சமிக்ஞைகள், தரவுகளின் அடிப்படையில் இந்தியா குறித்த புதிய பார்வையை ஏற்கனவே ஒருசில ஆய்வாளர்கள் குறிப்பிட்டு காட்டி உள்ளனர். அவை மோடி அவர்களின் சொந்த அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையிலும், எதிர்கால நோக்கு அறிக்கைகளையும் மையமாக கொண்டு பார்க்கப்பட்டவையே.

பல்வேறு மேலைத்தேய வெளியுறவு கொள்கை ஆய்வாளர்களால் இந்திய பிரதமர் மோடி அவர்களின் வெளியுறவு கொள்கையின் இலகு மொழியாக்கம் குறித்த முயற்சிகள் அவர் பதவிக்க வந்த காலம் தொட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறன. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்களால் வகுக்கப்பட்டு காலாவதியாகிப்போன நிலையிலும் விடாப்பிடியாக இந்திய தேசிய காங்கிரசாரால் கடந்தகாலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வெளியுறவு கொள்கைகளிலிருந்து மோடி அவர்களின் கொள்கை  மாறுபட்டதாக இருக்கும் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்று இன்னமும் இருக்கிறது.

பழைய அரசின் ஊழல் அரசியலில் அவரவர்களின் தனிப்பட்ட நலன்களாலும், தற்பெருமை முடிவுகளாலும் உருவாக்கப்பட்ட அயலுறவு கொள்கைகளில் இருந்து விடுபட்டு,  அனைத்துலக புவிசார் அரசியல் உண்மை நிலைக்கு ஏற்றவாறு, புதிய அணுகுமுறைகள் கையாளப்படும் என்ற முற்று முழுதான ஏக்கம் மேலை நாடுகளின் மத்தியில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில மாதங்களில் பெறப்பட்ட சமிக்ஞைகள், தரவுகளின் அடிப்படையில் இந்தியா குறித்த பதிய பார்வையை ஏற்கனவே ஒருசில ஆய்வாளர்கள் குறிப்பிட்டு காட்டி உள்ளனர். அவை மோடி அவர்களின் சொந்த அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையிலும், எதிர்கால நோக்கு அறிக்கைகளையும் மையமாக கொண்டு பார்க்கப்பட்டவையே.

தேசியவாதத்தை முன்நிறுத்திய புவிசார்அரசியலும், சாதக பயன்களை மையமாக கொண்ட புவிசார் பொருளாதார நோக்கங்களும் மோடி அவர்களின் வெளியுறவுப் பட்டியலின் முதலிடங்களாக பார்க்கப்படுகிறன. ஆனால் தற்கால அனைத்துலக அரசியலின் இரு(பொய்)முகங்களாக கருதப்படும் சனநாயகமும், மனித உரிமையும் இரண்டாம் பட்ச நிலையில் வைத்தே மோடி அவர்கள் பார்ப்பதாக கருதப்பட்ட போதிலும் இந்தியாவின் முதன்மை போட்டி நாடுகளை மிஞ்சும் வகையில் மோடி அவர்கள் அனைத்துலக சனநாயகத்தை முதன்மையாக கொண்ட ஒரு கொள்கையையே கொண்டிருப்பார்  இது முன்னைய காங்கிரஸ் அரசாங்கத்திலும் பார்க்க வீரியம் மிக்கதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியவாத கருத்துக்கு ஏற்புடையதாக இருக்கும் அதேவேளை மோடி அவர்களின் போக்கில் ஆசிய நாடுகளுக்கிடையில் முன்னணிப்பாத்திரம் வகிக்க வேண்டும் என்ற கனவு உள்ளது. இதிலே அவருடைய அரசியல் பின்பலத்தின் அடிப்படையிலும் மோடி அவர்களின் நடத்தை இயல்புகளின் அடிப்படையிலும் சமுதாய நாகரீகத்தையும் தொன்மை மிகுந்த இந்திய பண்பாட்டையும் பலமாக்க விரும்புகிறார் என்பது முக்கியமானது.

தனது தேர்தலுக்கு முந்திய அறிக்கைகளில் இந்தியா குறித்த பிழையாக மிகைப்படுத்தப்பட்ட வல்லமை நிலையை இல்லாது செய்வதாக கூறி இருந்தார். அதனால் அடிப்படையில் கிராமிய மட்டங்களிலும் உள்ளக சமூக பொருளாதார பல நிலையை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. சொந்த நாட்டை ஒழுங்கமைப்பதன் மூலமே உலக நாடுகள் எம்மால் கவரப்படும் என்ற அவரது கூற்றுக்கு ஏற்ப வல்லமை நிலையை நிறுவும் பொருட்டு பொருளாதார பலமே காத்திரமான வெளியுறவு கொள்கையை வகுக்க வல்லது என்ற நம்பிக்கையில் செயற்படுபவராக உள்ளார்.

பொருளாதார பலநிலையில் சமாதான அயலுறவு நிலையின் முக்கியத்துவத்தை மோடி அவர்கள் உறுதி செய்து கொண்டிருக்க வேண்டிய நிலை உள்ளது. நிரந்தர அமைதி அற்ற அயல் நாடுகள் குறித்த கவனமான பார்வை இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது என்பது மேலைத்தேய ஆய்வாளர்களின் முக்கிய பார்வையாகும்.

தோல்வி அரச நிலையிலிருக்கும் அயல் நாடுகள் இந்திய பொருளாதார வளர்ச்சியில் அதீத அழுத்தத்தை செலுத்தவல்ல காரணிகளாக உள்ளன. தனது பதவி ஏற்பு வைபவத்திற்கு வந்த அயல் நாட்டு தலைவர்களிடத்தில் புதிய வெளியுறவுக் கொள்கை சீரமைப்புகள் குறித்த விடயங்களை அவர் பேச முற்பட்டு இருந்தார்.

தெற்காசிய நாடுகள் மத்தியில் வலுவான முதன்மை நிலையை இந்தியா எப்பொழுதும் விரும்புகிறது. இது பிரித்தானியர்கள் இந்தியாவை ஆண்ட காலம் தொட்டு இருந்த வருகிறது. இந்திய துணைக்கண்டத்தை வேறு எந்த வல்லரசுகளும் உரிமை கோரிவிடாத வகையில் பாதுகாக்கும் பொருட்டு இந்திய கடல் எல்லைகளம் தரை எல்லைகளும் பிரித்தானியாவினால் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இதேபோல சுதந்திர இந்தியாவும் பாதுகாகப்பட வேண்டும் என்ற கோட்பாடு ஒவ்வொரு இந்திய தலைவர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. ஆனால் திபெத்தின் மீதான சீன படை எடுப்பும், பாகிஸ்தானிலும் சிறீலங்காவிலும் அமெரிக்கா காலூன்ற முற்பட்டமையும், பர்மாவின் புரட்சிகளில் சீனா தலையிட்டமையும் இந்திய பாதுகாப்பிற்கும் பொருளாதார வளர்சிக்கும் பெரும் இடையூறாக இருந்துள்ளன.

இன்று புதிய கடல் வழி பட்டுப்பாதை என்ற வகையில் பாகிஸ்தானிலும் சிறீலங்காவிலும் சீன பிரசன்னம் அதிகரித்துள்ளது. சமாதான வெளியுறவுக் கொள்கை என்பது மேலை நாடுகளின் பார்வையில் ஏக பல நிலையிலேயே தங்கி உள்ளது எனலாம். இந்தியா இத்தகைய வெளியுறவ நிலையை இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் பெற முயல்கிறது. தனது பிராந்தியத்தில் இந்தியா பாதுகாப்பு பொருளாதார சுதந்திர நிலையை பெறமுடியாது என்பது இந்திய வெளியுறவு கொள்கையில் முக்கிய அணுகு முறை மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது மேலத்தேய பார்வையாகும்.

அதேவேளை தென்னிந்தியாவில் அரசியல் முக்கியத்துவம் மிக்க மாநிலமான தமிழ் நாட்டு பிராந்திய கட்சிகளின் ஏகபோக வாக்குப்பலம் பிரதமர் மோடி அவர்களின் பாரதீய சனதா கட்சியின் செல்வாக்கை மேலெழ முடியாதவாறு தடுத்து நிற்கின்றன. இந்நிலையில் நேரடியாக பிரதமர் மோடி அவர்கள் தமிழ் நாட்டில் செல்வாக்கை பெற்று கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இது ஈழத்தமிழர் விடயதில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லதாகும்.

1980 களில் ஆங்கில-அமெரிக்க சக்தி வாய்ந்த நாடுகள் டெல்லியை அச்சுறுத்தும் வகையில் அல்லது எரிச்சலை உருவாக்கும் வகையில் இந்திய அயல் நாடுகளில் செல்வாக்கை உருவாக்க முனைந்தன. அன்றைய தலைவர்களான இந்திரா காந்தி பின்பு இராஜிவ் காந்தி தலைமைகள் கொழும்பை பலமுறை எச்சரித்தன. அதேபோல இன்றய நிலையில் சீன தலையீட்டை நெருக்கமாக கொண்டு டெல்லியை எச்சரிக்கும் வகையில் சிறீலங்கா கையாள்கிறது.

கொழும்பு விவகாரத்தில் புது டில்லி மென்மை போக்கை கடைப்பிடிக்கும் போக்கு விரைவில் மாற வேண்டும் என்பது இந்திய ஆய்வாளர்களின் கருத்தாகவும் உள்ளது. சிறீலங்கா ஏற்கனவே பல்வேறு சீன உடன்படிக்கை நிலைக்கு சென்று விட்டது. இந்நிலையில் கடந்த காலம் போல் அலுவலர்களின் தீர்மானங்களும், துதுவர்களின் சொந்த கொள்கை ஆக்கங்களின் நடைமுறைகளையும் தவிர்த்து ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை மீது உண்மையுடன் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனியும் அரசியல் நாடகங்களை தமிழ் நாட்டு தமிழர்களாயினும் சரி ஈழத் தமிழர்களாயினும் சரி ஏற்று கொள்வதற்கு தயாராக இல்லை.