குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

போருக்குப்பின்னர் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும் சிறுபான்மை இனங்களின் ஒற்றுமையின் அவசியமும்

போருக்குப் பின்னர் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும் சிறுபான்மை இனங்கள் ஒற்றுமைப்பட வேண்டிய தன் அவசியமும்...எப்.எச்.ஏ. ஷிப்லி - விரிவுரையாளர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழ கம் -ஒலுவில். சனத் தொகை மதிப்பீட்டின்படி 1911 முதல்  2012 வரையான நூறு ஆண்டில் சிங்களவர்கள் 10 வீதத்தினால் அதிகரித்துள் ளனர், தமிழர்கள்  10 வீதத்தால் குறைந்துள்ளனர், முஸ்லிம்கள் வெறும்  2 வீததால் மட்டுமே அதிகரித்துள்ளனர்.21.0.2014-தி.ஆ.2045

பல்லின சமூகங்கள் செறிந்து வாழ்கின்ற இலங்கையில் இன ஒற்றுமை என்பது அவ்வப்போது சிதைக்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த கொடூர யுத்ததுக்குப்பின்னர் சிறுபான்மை மக்கள் தங்கள் வாழ்வையும் இருப்பையும் உறுதிப்படுத்துவதில் பல சவால்களை சந்திக்கின்றனர். முஸ்லிம்களும் தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையான வாழ்வை தொடங்கி, பன்மைத்துவங்களின் வழியே ஏதோ ஒரு அடிப்படையில் சீர்பட்டு சேர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் எதிர்பாராவிதமாக சில பெரும்பான்மை இனக்குழுக்களால் சிறுபான்மை சமூகம் அல்லல்படும் ஒரு புதிய போக்கு சில ஆண்டுகளாக உருவெடுத்துள்ளது. சிங்கள ராவய, பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் சிறுபான்மை சமூகத்தின் இயல்புவாழ்வை பாதிக்கின்ற செயல்களில் அதிகமாக ஈடுபடுவதை கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக நாட்டில் அண்ணளவாக 10% சனத்தொகையை கொண்டுள்ள முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருப்பது வேதனையைத்தருகிறது.

தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல், கிராண்ட்பாஸ் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை செயற்பாடுகள், முஸ்லிம் பெண்கள் அணியும்யியாபுக்கு எதிரான போராட்டங்கள், இன்னும் முப்பதுக்கும் அதிகமான பள்ளிவாசல்களில் அவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல் சம்பவங்கள், ஹலால் தொடர்பிலான பிரச்சினைகள், காளி கோட்டுகள் (காதி நீதிமன்றம்) தொடர்பான எதிர்வாதங்கள், இஸ்லாமிய வங்கிமுறை தொடர்பிலான தவறான செய்திகள், என்று நீண்டு இம்முறை அளுத்கம நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான வன்முறை சம்பவங்களும் முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரத்தையும், இருப்பையும் கேள்விக்குறியாக்கிகொண்டிருக்கிறது.

உலகில் அதிகரித்து வரும் இஸ்லாத்தின் பாரிய வளர்ச்சியும், முஸ்லிம்களிடம் அதிகரித்துவரும் மார்க்க அறிவும் பற்றும், பௌத்த மதத்தின் வீழ்ச்சியும், சில தீவிர மதவாதிகளுக்கு அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இந்த அச்சம் கலந்த எச்சரிக்கையால் மத உணர்வில் ஊறிய சில படித்தவர்களும் பாமரர்களும் முஸ்லிம் விரோத உணர்வுக்கு உடன் ஆட்படுகின்றனர்.

இலங்கையின் போர் இல்லாத சூழல், போரில் பெற்ற வெற்றி இவைகளை சாதகமாக்கி, இலங்கையின் பல்லினத் தன்மை இல்லாமலாக்கப்பட்டு இலங்கை ஒரு தூய பௌத்த தேசமாக வேண்டும் என்ற மதப் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க சிலர் முற்படுகின்றனர். ஏனைய சமூகத்தின் மத அடையாளங்களை வரலாற்றுத் தடங்களை அழிப்பதன் ஊடாக இந்த இலக்கை நோக்கி பாமர மக்களை திசை திருப்புகின்றனர்.

மனிதன், மதவுணர்வு கலந்து தூண்டப்படும்போது அதற்கு இலகுவில் ஆட்பட்டு விடுகின்றான். இலங்கையின் இன்றையப் பிரச்சினையில் இது ஒரு முக்கியமான, அதேநேரம் மிகவும் ஆபத்தான காரணமாகும்.

BBS மற்றும் ஏனைய தீவிர இனவாத அமைப்புக்களின் தோற்ற வரலாறை உன்னிப்பாக அவதானித்தால் அங்கு அதன் முன்னணியில் நிற்பவர்களின் அரசியல் பொருளாதார சுயநலன் பின்னணியில் இருப்பதை கண்டுகொள்ளலாம். விளம்பரம், புகழ் யுக்திக்காக இலங்கையின் பல ஊடகங்கள் இனவாதப் போக்குடன் நடந்துகொள்கின்றன, உண்மையை மறைக்கின்றன, சிறியதைப் பெரிதாக்குகின்றன, நிலைமையை மோசமாக்குகின்றன என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாகவேண்டும்.

இவ்வாறாக முஸ்லிம்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதை அல்லது நடைபெறும் வாய்ப்பை அவதானித்தால், இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி அவர்களின் உரையொன்றில் குறிப்பிடப்பட்டது போல உடன் போலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செயப்படுவதுடன், மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்புக்கள், நிலையங்களிலும் பதியப்பட வேண்டும் அத்தோடு ஊடகங்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கப்பட வேண்டும் மேலும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், ஏனைய அரசியல்வாதிகள், மாற்றுமத நியாயமான அரசியல்வாதிகள், சிவில் சமூகத் தலைவர்கள் அனைவருக்கும் தகவல்கள் ஏற்றிவைக்கப்பட வேண்டும். இவர்களூடாக அரசின் உயர்மட்ட உறுப்பினர்கள் உரிய அதிகாரிகளுக்கு செய்திகள் சேர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கத் தூண்டப்பட வேண்டும் மேலும் வெளிநாட்டு தூதுவராலயங்கள் குறிப்பாக முஸ்லிம் நாடுகளின் தூதுவராலயங்களுக்கு உடன் தகவல்கள் ஏற்றிவைக்கப்பட வேண்டும். உண்மையில் அரசியல் தலைவர்களினதும், போலீஸ் செயற்பாடுகளிலும் மக்கள் அதிருப்தி அடைந்திருந்தாலும் நியாயமான அதிகாரிகள் மூலம் ஓரளவு தீர்வை பெறுவதற்கான வழிமுறைகளை கண்டடைய முடியும்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட மதப்பிரசாரம், கட்டாய மதமாற்றம் காரணமாக இலங்கை முஸ்லிம்களின் விகிதாசாரக் கட்டமைப்பு அதிகரித்து வருகின்றது என்றும், 2020, 2031 களில் இலங்கை முஸ்லிம் நாடாகப் போகின்றது என்றும் பிரச்சாரம் செய்கின்றார்கள். இலங்கையின் 1981- 2011 வரையான சமூக வளர்ச்சியில் சிங்களவர்களின் வளர்ச்சி – 38.4 வீதம், தமிழர்களின் வளர்ச்சி – 35.5 வீதம், முஸ்லிம்களின் வளர்ச்சி – 76.4 வீதம் என்ற ஒரு கணக்கை காட்டி இதன்பின்னணியை திரிபுபடுத்தி சிங்கள மக்களை அச்சாமூட்டுகின்றனர்.

இலங்கையின் 1911 இனப்பரம்பல் கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் – 60.25 வீதம், தமிழர்கள் – 22.85 வீதம், முஸ்லிம்கள் – 6.91 வீதமாகும். அதேநேரம் இலங்கையின் 2012 ம் ஆண்டின் அண்மைய இனப்பரம்பல் கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் – 70.19 வீதம், தமிழர்கள் – 12.61 வீதம், முஸ்லிம்கள் – 9.7 வீதமாகும்.

1911 ஆண்டு முதல் 2012 வரையான நூறு வருடத்தில் சிங்களவர்கள் – 10 வீதத்தினால் அதிகரித்துள்ளனர், தமிழர்கள் – 10 வீதத்தால் குறைந்துள்ளனர், முஸ்லிம்கள் வெறும் – 2 வீததால் மட்டுமே அதிகரித்துள்ளனர்.

கொடிய போரினால் தமிழ் சமூகத்தில் பலர் உள்நாட்டில் இறந்தும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தும் போனதால் அவர்களின் விகிதாசாரம் வீழ்ச்சிகண்டதன் விளைவு முஸ்லிம் விகிதாசாரம் சற்று உயர்வுகண்டுள்ளது. அதுவும் வெறும் இரண்டு வீதத்தால். இதை மதத்துடன் இணைத்து சில பிக்குகள் பிழையாகப் பாடம் நடத்துகின்றனர். சமூகத்தையும் பிழையாக வழிநடத்துகின்றனர். இதுவும் திறந்த ஊடகங்கள் வாயிலாகத் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

தமிழ்-முஸ்லிம் இனங்களுக்கிடையில் அவசியமாக உணரப்படும் நெருக்கம்

முஸ்லிம்கள் மீது இடம்பெறும் வன்முறைகளை அடிப்படையாகக் கொண்டு இன்னுமொரு வாதமொன்று மெல்ல மெல்ல வேர் பிடிப்பதை அவதானிக்கலாம். அதுதான் சில தமிழ்-முஸ்லிம் உறவுகளுக்கிடையில் மெதுவாக வேர்பிடிக்கும் புரிந்துணர்வின்மை. இது அடிப்படையிலேயே களையப்பட வேண்டும். பிரபல சமூக வலைத்தளங்களில் சில சாரார் நேரடியாகவே மோதுவது மிகுந்த மனவேதனையை தருகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒற்றுமையே பலம். அதை விடுத்து மென்மேலும் இனவாத கருத்துக்களை கக்கி ஒருவரை ஒருவர் தாக்குவதால் எந்தப்பலனுமில்லை. சிங்களவர்களோ, தமிழர்களோ, முஸ்லிம்களோ.. யாராயினும் எல்லோரும் மனிதர்கள்தானே... நாமெல்லாம் ஒருவருக்கொருவர் சகோதரர்கள்.நமது சகோதரன் துன்புறும்போது கைகொட்டிச் சிரிப்பதும் அவனைக் கொன்று விடத்துடிப்பதும் ஐந்தறிவுகளிடம் கூட இல்லாத பண்புகள். இதனால் பாதிப்புறுவது நமது வாழ்க்கைத் தரமும் தேசத்தின் வளர்ச்சியும் தானே..? நமது தாயின் சேலை உருவப்படும்போது நாம் பிரிவினையைத் தூக்கிக் கொண்டாடுவது எந்த வகையில் நியாயமானது?

தமிழ் முஸ்லிம் உறவு குறித்து மிக மிக ஆழமாக பேச வேண்டிய இக்கட்டான காலகட்டம் இது. இந்த இன ஐக்கிய விரிசலுக்கு இருதரப்புமே கால்கோள். அதில் ஒவ்வொரு தரப்பும் வேறு வேறு வகிபங்கை ஏற்றிருக்கின்றன. அடிப்படையில் தமிழ் இனவாதக்குழுக்கள் இழைத்த தவறுகளை ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமுமே இழைத்தது என்ற தவறான எண்ணக்கரு முஸ்லிம்களிடமும், முஸ்லிம் அரசியல்வாதிகளும், ஒரு சில சுயநலவாதப் போக்குக் கொண்டவர்களும் இழைக்கும் தவறுகளை முழு முஸ்லிம் சமூகமும் புரிந்து கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டில் தமிழர்களும் தவறான அர்த்தங்களை தம்மகத்தே கொண்டுள்ளனர்.அப்பாவி மக்களை இவர்களிடமிருந்து கோடு பிரித்துக்காட்ட முடியாமலிருப்பதுவும் இன விரிசலுக்கு அடிப்படையாக அமைந்துவிடடது. தமிழ்-முஸ்லிம் உறவு முன்பு வலுப்பெற்றிருந்தது.தென்கிழக்கு பிராந்தியத்தில் மட்டுமன்றி முழு கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்துப்பார்க்கவே முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு இரு சமூகத்தவர்களும் ஒன்றிணைந்த அடிப்படையிலேயே தமது சமூக வாழ்வை வகுத்திருந்தனர்.

தமிழ் முஸ்லிம் ஒற்றுமையானது எப்போதுமே இன மத மொழி வேறுபாடுகளைத் தாண்டிய ஒன்றாகவே காணப்பட்டது.ஆரம்ப காலங்களில் சமய நிகழ்வுகள், சடங்குகள், கலை, கலாசார அம்சங்கள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார அரசியல் முன்னெடுப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்திருந்ததனை வரலாற்றினூடே தௌள்ளத்தெளிவாய் நோக்க முடியும்.

முஸ்லிம் சமூகத்தச்சேர்ந்த ஆண்கள் தமிழ் சமூகத்திலிருந்த "முக்குவர்" குலப்பெண்களை ஆரம்ப காலத்தில் திருமணம் முடித்திருந்தனர். இது அப்போதைய இன நல்லுறவை இறுக்கமாக்கியிருந்தன. முஸ்லிம்களின் திருமண வைபவங்களில் இன்றும் கூட பின்பற்றப்படும் பல்வேறு சடங்கு முறைகள் தமிழ் சமூகத்தவர்களின் சடங்குகளுடன் ஒத்துப்போகின்றன. தாலிகட்டுதல், கால் கழுவுதல், ஆராத்தி எடுத்தல், பால்-பழம் கொடுத்தல், குரவையிடுதல் போன்ற பல அம்சங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இன்னும் கல்முனையில் வருடாவருடம் இடம்பெறும் முஸ்லிம்களின் கொடியேற்ற நிகழ்வில் தமிழர்கள் கலந்து கொள்வதும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய தீப்பள்ளத்தின் போது முஸ்லிம்கள் அதைப்பார்க்கச் செல்வதும் இரு சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை வளர்த்த அம்சங்கள். ஆயினும் இத்தகைய நெருக்கமான உறவுகளை அடிக்கடி பேசுவதன் மூலம் மீளவும் உறவு கட்டியெழுப்பப்படும் என்பது வெறும் மேலெழுந்தவாரியான அலசலன்றி வேறில்லை.

தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல பின்னப்பட்டிருந்தார்கள் என்பது போன்ற புளித்துப்போன பழைய கருத்துக்கள் பிரச்சினையின் சரியான பரிமாணத்தை சுட்டி நிற்காது. எது எவ்வாறாயினும் இரு சமூகங்களிலுள்ள முற்போக்கு சக்திகளுக்கு, அறுந்து போன இந்த உறவை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது. இது குறித்து தென்கிழக்கு  பல்கலைக்கழக பழைய மாணவர் சிராஜ் மஷ்ஹீரின் வாதங்கள் மிக முக்கியமானவை. அவரது கட்டுரையொன்றின் பிரகாரம் இப்பரஸ்பர உறவு சீர்குலைந்து போனதற்கான அடிப்படைக் காரணிகளையும் பின்னணிகளையும் வேர் வரை ஆராய்ந்து அடையாளம் காண்பதன் ஊடாக வரலாற்றுக் கடமைகளை செவ்வனே செய்ய முடியும். இவ்விடயம் தொடர்பில் ஆழ்ந்த தெளிவில்லாது முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் வெறும் கானல் புரட்சியாகவே கிடப்பில் போடப்பட்டுவிடும்.

கடந்த காலங்களில் இதற்கு ஏராளமான சரித்திர உதாரணங்கள் உள்ளன என்று சிராஜ் மஸ்ஹீர் விளக்குவது முற்று முழுதாக ஏற்கவேண்டியவையே. தமிழ்-முஸ்லிம் மக்களிடையேயான உறவை வளப்படுத்த இலக்கியம் மிக முக்கிய ஊடகமாக தொழிற்பட்டு வருகிறது.இன்று வரை தமிழ்-முஸ்லிம் உறவு பற்றி பேசுபவர்கள் இலக்கியவாதிகளே. எது எவ்வாறாயின் இரு தரப்புக்குமான இடைவெளியை குறைப்பதில் இருதரப்புமே தற்போது ஆவல் காட்டிய வண்ணமுள்ளனர். பிரச்சினைகளின் அடிப்படையிலிருந்து ஒற்றுமைக்கான ஆரம்பம் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் இரு தரப்பு இனவிரிசல்களுக்கு  விரைவில்  சாவுமணியடிக்க முடியும்.

 

எப்.எச்.ஏ. ஷிப்லி

விரிவுரையாளர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

ஒலுவில்