குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இசைத்தமிழ் வரலாறு


பழந்தமிழ் இசை
********************
இசைக்கருவிகள்

***********************
முரசு 
**********
நமது முன்னோர்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும், 
அதை பலர் அறியும் விதமாகப் பறைசாற்றிச் செய்வார்கள். 

“பறை அடித்தல்” அல்லது “முரசு கொட்டுதல்” என்று அதற்கு பெயர்.

தோற்கருவிகளுள் மிகவும் பெருமை வாய்ந்தது முரசமாகும்.
இத்தகைய முரசம் பலவகைப்படும். 

கொடை முரசு
**************
தான தர்மங்கள் செய்வதை அறிவிப்பது.

மணமுரசு 
**************
மங்கல காரியமான மணம் புரிதலை தெரிவிப்பது.

வெற்றிமுரசு
**************
அரசன் போரில் வெற்றி பெற்றதை அறிவிக்கும் முரசு.

வேள்வி முரசு 
**************
மந்திர வேள்விகள் செய்யும் பொழுது ஒலிக்கும் முரசு.

காவல் முரசு
**************
காவலர்கள் காவல் செய்யும் பொழுது அடிக்கும் முரசு.

வெற்றிமுரசு
**************
போரில் தோல்வியுற்ற பகை மன்னரின் காவல் மரத்தை வெட்டி, முரசமாகச் செய்து வெற்றி முழக்கம் செய்வது வீரமுரசமாகும். 

புலியோடு போராடி, அதனைத் தன் கூர்ங்கோட்டால் குத்திக் கொன்று, கொம்பில் மண்ணுடன் பாய்ந்து சென்று உயிர் விட்ட இடபதத்தின் மயிர் சீவாத தோலைப் போர்த்துச் செய்யப்படுவது மயிர்க்கண் முரசம் என்று நூல்கள் கூறும். 

இதுவும் வீரமுரசத்தின்பாற்படும். 

பண்டைத் தமிழரசர் இம்முரசினைத் தெய்வத் தன்மையுடையதாகப் போற்றி வந்தனர். 

இதனை மலர் பரப்பிய கட்டிலில் வைத்துச் சிறப்புச் செய்வர். 

இதனை நாளும் இசை முழக்கத்துடன் நீர்த்துறைக்கு எடுத்துச் சென்று நீராட்டி, மாலை சூட்டி அலங்கரித்து வழிபாடு செய்வர்.

போர்க்களத்தில் வீரவெறியூட்டும் தோற் கருவிகள் பல இருந்தன.

அவற்றுள் சில பறையும், பம்பையும், தடாரியும், முழவும், முருடும், கரடிகையும், திண்டியுமாம். 

இவ்விசைக் கருவிகள் யாவும் சேர்ந்து முழுங்கும்போது வீரரது தலை சுழலும், நரம்புகள் முறுக்கேறும். போர்வெறி கொண்டு செருக்களம் நோக்குவர். 

“செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி நின்றாள் மறக்குடியிற் பிறந்த மகள்’’ என்று புறநானூறு கூறுவதால் போர் முரசின் இயல்பை அறியலாகும்.

தியாக முரசு
**************
இது பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசு இதுவாகும்.

நியாய முரசு
**************
நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது. 

(மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது)

பம்பை (இசைக்கருவி) 
**************************
பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும் முரட்டு தோல் மூடியுள்ளது. 

பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.

பம்பை என்ற நாட்டுப்புற தோல் இசைக்கருவி நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது. 

நாட்டுப்புற இசைக்கருவிகள் நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது.

திருமணம் மற்றும் கோவில் விழாக்களில் பம்பை இசைக்கப்படுகிறது. நாட்டுப்புற கோவில் விழாக்களில் சக்தி கரகம் அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பம்பையை இசைத்தபடி கதைப் பாடல்களை பாடுகின்றனர். 

மேலும் இந்த இசைக்கருவி நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கும் பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது.

பஞ்சமுக வாத்தியம் (இசைக்கருவி) ****************************************************
பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும். 

குடமுழா, குடபஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு. 

தமிழ்நாட்டில் சில பெருங்கோவில்களில் மட்டும் இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. 

திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

குடபஞ்சமுகி எனும் பஞ்சமுகவாத்தியம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் சோழ மண்டலத்தில் மட்டுமே தோன்றிய தாளக் கருவியாகும்.. 

சோழர்கள் காலத்தில் இருந்த இந்த தாளக்கருவி இன்று அருகி மறைந்து விட்டது. 
இது பெரும்பாலும் கோவில்களில் நித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் இடம்பெறும் போது இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது.
திருவாரூர் கோவிலில் உள்ள பஞ்சமுக வாத்தியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

இதன் அமைப்பு: 
***********************
ஒரு முகம் பாம்பு சுற்றியது போல் உள்ளது. 
மற்றொன்று ஸ்வஸதிக போன்ற வடிவில் அமைந்துள்ளது. 

வேறொரு முகம் தாமரைப்பூ வடிவிலுள்ளது. 
பிரிதொன்று எவ்வித அடையாளமின்றி உள்ளது. 

நடுவில் உள்ள ஐந்தாவது முகம் பெரியதாக இருக்கிறது. 

பஞ்ச முகங்கள் மான் தோலால் கட்டப்பட்டுள்ளன. 

இந்த இசைக்கருவியில் ஒவ்வொரு முகத்திலும் தனித்தனியாக அடிக்கப்படும்போது ஏழு முறையும் 
ஐந்திலும் சேர்ந்து அடிக்கும் போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும்.

இது போன்ற தோல் இசைக்கருவியினை வாசிக்க பயிற்சி தேவைப்படுகிறது. 

இசை நுணுக்கங்களும் உண்டு. பெரும்பாலும் தேர்ச்சிபெற்ற கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கின்றார்கள்.

ஐந்து முகங்கள் கொண்ட அடிப்பக்கம் செம்பு (தாமிரம்) அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். 

மேற்பாகம் தோல் பயன்படுத்தி இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். பஞ்சமுக வாத்தியம் சக்கரம் இணைக்கப்பட்டு இரும்புச் சட்டங்களினுள் அமைக்கப்பட்டிருக்கும். 

இடம் விட்டு இடம் நகர்த்திச் செல்ல ஏதுவாக இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதன் பயன்பாடு மிகவும் அருகி வருகிறது.