குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

சங்க காலப் பெண்கவிஞர்கள்: சமூகக் கட்டமைப்பு உருவாக்கமும் அதற்கான எதிர்வினைகளும் - செ.ரவீந்திரன்

14.03.2045-05.04.2014-இதுவரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையுடன் செவ்வியல் இலக்கியங்கள் குறித்து இருநூற்றுக்கு மேற்பட்ட கருத்தரங்குகள், பயிலரங்குகள் தமிழகத்தின், புதுச்சேரியின் பல்கலைக் கழகங்சங்க காலப் பெண்கவிஞர்கள்: சமூகக் கட்டமைப்பு உருவாக்கமும் அதற்கான எதிர்வினைகளும் - செ.ரவீந்திரன்கள், கல்லூரிகளில் நடைபெற்றிருந்தாலும் இன்னும் தமிழ் மொழி இலக்கிய வரலாற்றின் பன்முகப் பரிமாணங்கள் நம் சொல்லாடல்களுக்கு உட்படாத நிலையிலே உள்ளன. இவற்றுக்கும் மேலாக நம் பல்கலைக் கழகங்களில் முனைவர், இளமுனைவர் பட்டங்களுக்காக செவ்வியல் இலக்கியங்கள் குறித்து மேற்கொள்ளப் பெற்ற ஆய்வேடுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. இந்நிலையில் சங்க காலப் பெண்கவிஞர்கள் அவர்தம் கவிதைகள் பற்றிய ஆய்வுகள் எல்லாம் நுணிப்புல் மேய்ந்த நிலையிலே தொடக்கம் கொண்டுள்ளன. பெண்ணியக் கோட்பாடுகள் பெரிதும் பேசப்படும் இன்றைய தமிழ்ச் சூழலில் சங்க காலப் பெண்கவிஞர்கள் உருவாக்கிய கவிதை மரபு அதன் தொடர்ச்சியாக இன்றைய பெண்கவிஞர்களின் கவிதை மரபு பேசப்பட வேண்டும்.

 

ஒரு மொழியின் கவிதை மரபு பற்றிய சொல்லாடலுக்கான களமாக அம்மொழியின் கவிதையியல் (Poetics) அமையும் என்பது பொது நியதியாகும். கிரேக்க மொழியில் அரிஸ்டாட்டிலின் கவிதையியல் போல், தமிழில் தொல்காப்பியத்தினைச் சொல்ல முடியுமா என்பது கேள்வி. தொல்காப்பியரின் தொல்காப்பியம் தமிழ்க் கவிதையியல் குறித்து முழுமையாக எழுதப்பட்டதொரு நூல் அன்று என்றாலும் அதன் மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரம் கவிதையியலும் செய்யுளியலும் இணைந்த (Poetics and Prosody) ஒன்று எனச் சொல்லவேண்டும். கிரேக்கமொழியில் ‘Poesis’ என்னும் சொல்லுக்கு ‘to create’, ‘to compose’ முதலான சொற்பொருள்கள் உண்டு. பொருளதிகாரத்தில் தமிழ்க்கவிதை மரபில் அகம் புறம் சார்ந்த பாடல்கள் புனையப் பெறும் பொழுது அவற்றுக்கான திணை, துறைக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கம் பெற வேண்டும் என்பதே தொல்காப்பியரின் கவிதைக் கோட்பாடு தரும் தொல்காப்பியர் காலத்து பாட்டு, உரை, நூல், பிசி, வாய்மொழி, முதுசொல், அங்கதம் என எழுவகை இலக்கிய வகைமைகள் (Literary Genres) வழக்கில் இருந்தாலும் அவரைப் பொறுத்த வரையில் அகம் புறம் பாடல் மரபே முதன்மைப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்பதே பொருளதிகாரத்தின் எட்டாவது இயலான செய்யுளியலே (Prosody) பின்னாளில் யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை போன்ற இலக்கண நூல்கள் தோன்றுவதற்கான வழிவகுத்தது என்று சொல்லவேண்டும். யாப்பருங்கலம் தோற்றுவித்த செய்யுளியல் மரபே இன்று பல்கலைக் கழகங்களில், தமிழியற் புலங்களில் கவிதையியல் மரபாக நிலைத்து விட்டது என்பது ஒரு பெரும் சோகம்.

 

உண்மையில் ஒரு மொழியில் உருவாக்கம் பெற்ற கவிதையியல் அம்மொழி வழங்கப்படும் சமூகத்தின் மேல்நிலைச் சமூகக் கட்டுமானத்தின் ஆதிக்கக் குரலாகவே இருக்கும். ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ எனத் தொல்காப்பியர் கூறுவதும் இதுவே. இந்த நிலையில் பெண் கவிதையியல் (Woman’s Poetics) எனப் பேசுவதன் பொருத்தப்பாடு என்ன என்பதை கேள்வி. மேற்கத்திய காடுகளின் கவிதையியலுக்கு எண்ணம் முன்னோடியாக அரிஸ்டாட்டிலின் கவிதையியல் அடையாளப் படுத்தப்படுவதைக் காணலாம். இதற்கு எதிர்நிலையில் கருப்பு அழகியல் (Black Poetics) உருவெடுத்திருப்பதைக் காணலாம். இந்தியாவில் சமஸ்கிருதப் பெருமரபு உருவாக்கிய கவிதையியலுக்கு எதிராக தலித் அழகியல் உருவெடுத்திருப்பதையும் காணலாம். இதன் தொடர்ச்சியாக எழுபதுகளுக்குப் பின்னர்த் தோன்றிப் பெண்ணிய எழுத்துக்களின் வரவை ஒட்டி பெண் அழகியல் (Woman’ Poetics) ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பின் கவிதையியலுக்கு எதிரான கலகக் குரலாக உருவெடுத்திருப்பதைக் காணலாம். பெண் தன்னைப் பேசுதல் மூலம் பிறரின் உலகினை அறிதல் (Perceiving the world others) என்ற நிலையில் சமூகப் பொதுவெளியில் படைப்புக்கள் வெளிவருவதே பெண்கவிதையியலின் கோட்பாட்டு நிலையாகும்.

 

இது ஒரு வகையில் ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கிய குடும்பம் என்னும் கட்டமைப்பின் படிநிலைகளில் ஆண் முதலிடம் பெற பெண் அவனுக்கு அடுத்த இடம் வகுக்கிறாள். இதனை ஒட்டியே கற்பு பெண்ணுக்கு உரிய ஒழுக்கமாக பண்பாட்டு அடையாளமாக முன்னிறுத்தப் படுகின்றது. பொருளியல் வாழ்வின் அங்கமாகக் களவு வழிப்பட்டதோர் கற்பை சங்ககாலப் பண்பாட்டு அடையாளமாக சங்கப்பாடல்களில்  வெளிப்பாடு கொண்டுள்ளதைக் காணலாம். ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நலனே’ என்னும் ஔவையாரின் புறப்பாடல் வரிகள் உணர்த்துவனவும் இதே நிலைப்பாட்டினை எனலாம். எங்கெல்லாம் மக்கள் வாழிடங்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் உள்ள ஆடவர்கள் நல்லவர் எனில் அச்சமூகக் கட்டமைப்பில் பெண்களின் இடம் என்றும் போற்றப்படுவதும் பாதுகாப்பானதும் ஆகும். எங்கு பெண் முதலிடம் பெறுகிறாளோ அங்கு கலை வளரும் என்பர் பாரதி.

 

உலகெங்கிலும், குறிப்பாக மேலைத் தேயத்துப் பெண்கவிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகக் கிரேக்க தேசத்தில் பெண் கவிஞரான சாப்போவைச் (Sappho)  சொல்ல வேண்டும். இவரின் கவிதைகள் கட்டற்ற காதல் உணர்ச்சிப் பாடல்களாக இருப்பினும் அவற்றின் பாடுபொருள் ஓரினக்காதல் பற்றியதாக (Lesbian love) உள்ளது. லெஸ்பியன், லெஸ்பியனிஸம் என்னும் சொல்லாக்கங்கள் ‘எல்லாம் சாப்போ பிறந்த இடமான ‘Lesbus’ என்னும் அவர் பிறந்து வளர்ந்த தீவின் பெயரை ஒட்டியதாக மொழியகராதியில் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.

 

இந்தியாவில் வேதகாலத்து, உபநிஷத் காலத்துப் படைப்புக்களின் பெண்களின் கவிதையாக்கங்கள் வெளியிட்டிருப்பதைக் காணலாம். இதைப் போலவே புத்தப் பெண் துறவிகளின் பாடல்கள் தொகுப்பாக நூல்கள் வடிவில் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் விவரணங்களை, அவைபற்றிய ஆய்வுகளை Woman worships in Budha என்னும் தொகுப்பு நூலின் முதல் தொகுதியில் பரக்கக் காணலாம். அ.மங்கையின் மொழிபெயர்ப்பாகப் பெண்புத்தத்துறவிகளின் கவிதைகளின் தொகுப்பு ஒன்று தமிழில் வெளிவந்திருக்கிறது. இதுமட்டும்தான் என் நினைவில் உள்ளது.

 

இங்கு ஒரு கேள்வி. இப்படி உலகம் முழுயதிலும் பெண்கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பாக, அவைபற்றிய ஆய்வுகளாக, விமர்சனங்களாக வெளிவந்திருப்பினும் அவர்கள் கல்வி கற்ற முறைமை செய்திகள் இன்றும் நாம் ஆய்வுக்கு உட்படாதவைகளே உள்ளன. சாக்ரடீஸின் மாணவர்களாக உள்ளவர்களில் பெண் சீடர்கள் யாரேனும் உண்டா? கிரேக்கப் பெண்கவிஞரான சாப்போவின் கல்விப் பின்னணி என்பது இன்னும் ஒரு கேள்வியாகவே உள்ளது. இந்திய, தமிழகக் குருகுல கல்வி அமைப்பில் பெண்களுக்கான இடம் என்ன என்பது நாம் ஆய்வுக்கு உட்பட வேண்டிய ஒன்று.

 

மீண்டும் ஒரு கேள்வி உலகில் தோன்றிய இலக்கியங்கள் எல்லாம் முதல் வாய்மொழி மரபு இலக்கியங்களாகத் தோற்றம் கொண்டு பின்னர் எழுத்துமரபு இலக்கியங்களாக உருமாற்றம் கொண்டிருக்கும் என்னும் நியதியை ஓட்டி Orality to Textuality என்னும் கோட்பாடு நாட்டாரியல் வல்லுநர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வின் உச்சகட்ட வெளிப்பாடாகத் துளசி. இராமசாமியின், ‘பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே’ என்னும் நூலினைச் சொல்லவேண்டும். விழிகள் வெளியீடாக 2012-இல் வெளிவந்த இந்நூலில் எழுப்பட்ட வினாக்களுக்கு வெளியிடப் பெற்ற தரவுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டிய இடங்கள் இருப்பினும் இந்நூல் தமிழியற் புலங்களில் இருட்டடிப்புக்க்குட்படுத்தப்பட்டது ஓர் அவலமே. அத்தகைய தரவுகளில் சில: ‘பழந்தமிழ் இலக்கியங்கள் 1193 பாடல்கள் பாணர் பாட்டோ புலவர் பாட்டோ இல்லை’ , ‘இவை எழுத்துப் பண்பாட்டிற்கு முன் ஆயிரம் ஆண்டுகளாகப் பாடப்பட்டு வந்தவை. வீரநிலைப் பாடல்கள் இல்லை’ இத்தரவுகளை இந்நூலின் பின் அட்டைக் குறிப்பில் காணலாம். முதன் முதலாக வாய்மொழிப் பாடல்களாகச் சங்ககாலப் பெண்கவிஞர்கள் பாடிய பாடல்கள் பின்னர்த் தொகை நூல்களைத் தொகுத்தவர்கள் ஓட்டுப்பிரதி வடிவம் பெற்றன எனக் கொள்ளலாமா?

 

இக்கேள்விக்கான பதில் ஆம் என்றால் எழுத்தறிவு இல்லாத, அல்லது எழுத்தறிவு பெறுவதற்கான வாய்ப்பில்லாத பழந்தமிழ்ச் சமூகப் பெண்கள் தாம் பட்டறிவின் வெளிப்பாடுகளை பாடிய வாய்மொழிப்பாடல்களே பின்னாளில் எழுத்துவடிவம் பெற்றிருக்கவேண்டும். “கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவன் அவன் கீழ்ப்படுமே” என்னும் சட்டகத்தின் வழியே சமூகப்படிநிலைகளில் கீழ்நிலையில் உள்ள ஒருவன் கல்வி கற்பதன் வழியே அவன் மேலாதிக்கச் சமூகத்தின் படிநிலைக்கு உயர்த்தப்படுவான் என்பதனை ஓர் நியதியாகக் கொள்ளலாம். இங்குக் கல்வியானது ஒருவனுக்கு மேலாதிக்கச் சமூகப்படிநிலைகளில் இடம்பெறுவதற்கான காரணிகளுள் ஒன்றாக உள்ளது. பழந்தமிழ்ச் சமூகத்தில் கல்வி பற்றிச் சேவியர் தனிநாயகம் அடிகளார் பழந்தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் கல்வி கற்பதற்கான சூழல், வாய்ப்பு பற்றிச் சொல்லியுள்ளாரா என்பது தெரியவில்லை. இந்தியாவின் முதல் பல்கலைக் கழகம் எனப்போற்றப்படும் நாளந்தாப் பல்கலைக்கழகத்திலும் பெண் மாணவிகள் சேர்க்கப்பட்டனரா என்பது இன்னும் அகழ்வாய்வு நிலையிலே உள்ளது.

 

உள்ளபடியே நாம் கே.என்.சிவராஜ பிள்ளைக்கு  நன்றி சொல்ல வேண்டும். அவரின் ‘Chronology of the Early Tamils’ என்னும் நூலே இன்றளவும் சங்ககாலச் சமூகத்தின் குல கல்வி குடிவழிக் காலவரிசை பற்றிய முதல் நூல் என்றே சொல்லவேண்டும். இதனைத் தொடர்ந்தே துரை.அரங்கனாரின் சென்னைப் பல்கலைக்கழக தமிழாக்கம் ஒன்றும் வெளிவந்தது. சங்ககாலக் குடிப்பெயர்களும் சிறப்புப் பெயர்களும் என்னும் தலைப்பு என நினைக்கிறேன். இவ்வளவும் சொல்வதற்கான காரணம் இன்னும் தமிழ் ஆய்வுலகில் சங்ககாலப் பெண்புலவர்கள் பற்றிய முழுமையானதொரு வரலாறு இல்லை என்பதை உணர்த்துவதற்காகவே. ஏனெனில் தமிழ் ஆய்வுலகில் இன்னும் தமிழிலக்கிய வரலாற்றியல் (Histriography) இன்னும் முழுமையாக எழுதப்படவே இல்லை. கார்த்திகேசு சிவத்தம்பியின் தமிழிலக்கிய வரலாற்றெழுத்தியல் குறித்த நூலும் ஒரு முன்முயற்சியே.

 

இன்று தமிழ் அறிஞர்களிடையே சங்ககாலப் பெண்கவிஞர்களின் எண்ணிக்கைக் குறித்த கருத்து வேறுபாடுகள் உண்டு. 1986-இல் டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலைய வெளியீடாக வந்த ‘சங்ககாலக் கவிஞர்கள்’ என்னும் நூலில் சங்கக் காலப் பெண்கவிஞர்களாக நாற்பத்தியொரு பெயரைப் பட்டியலிட்டுள்ளார். ஓட்டுமொத்தத்தில் 473 சங்ககாலப் புலவர்களில் 41 பெண்கவிஞர்கள் என்பது ஓர் ஆறுதலான செய்தி. பெண்கவிஞர்களின் எண்ணிக்கையும் தேர்வும் குறித்து ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…; சங்கப் பெண்கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை’ என்னும் தலைப்பில் தொகுப்பும் உரையுமாக ஒரு நூலினை வெளியிட்டுள்ள ந.முருகேசப்பாண்டியன் கூறுவது: “பெண்கவிஞர்களின் எண்ணிக்கையினை உ.வே.சா. 38 எனவும் எஸ்.வையாபுரிப்பிள்ளை 30 எனவும் ஔவை துரைசாமிப்பிள்ளை 44 எனவும் புலவர் கா.கோவிந்தன் 27 எனவும் ஔவை நடராசன் 41 எனவும் ந.சஞ்சவீ 25 எனவும் தாயம்மாள் அறவாணன் 45 எனவும் குறிப்பிடுகின்றனர். சங்கப் பெண்கவிஞர்களைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்ட ஔவை நடராசன் தர்க்கரீதியில் சங்கப்பாடல்களை ஆராய்ந்து பெண்கவிஞர்களை வரையறுப்பது ஏற்புடையதாக உள்ளது. எனவே இத்தொகுப்பில் ஔவை நடராசன் வரையறுத்துள்ள 41 பெண்கவிஞர்கள் எழுதியுள்ள 181 கவிதைகள் மட்டும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன (2010, பக்.14). பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள பொருநராற்றுப்படையின் ஆசிரியரான முடத்தாமக்கண்ணியார் ஒரு பெண் என இதுகாறும் பரவலாக அறியப்பட்டார். இதுபோன்று பலகவிஞர்களின் பால் அடையாளம் கேள்விக் குறியாகவே இத்தொகுப்பில் உள்ளது. புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடாக 1998-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற ‘பெண்ணிய ஆய்வுகள்’ என்னும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள எம்.சுதர்சனின் ‘சங்கப் பெண்பாற் புலவர்களும் பெண் அடையாளப் பதிவுகளும்’ என்னும் கட்டுரையே இதுவரை வெளிவந்துள்ள சங்கப் பெண்பாற் கவிஞர்கள் பற்றித் தமிழில் எழுதப் பெற்ற கட்டுரைகளுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரே கட்டுரை எனச் சொல்ல வேண்டும்.

 

2008-இல் திராவிடப் பல்கலைக் கழகம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதில் ‘Women Poets of Sangam Age: Construction of Women’s Poetics’ என்னும் தலைப்பில் ஒரு ஆங்கிலக் கட்டுரை ஒன்று படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழவன் எனப்படும் முனை எஸ்.கார்லோஸ் ‘சங்க இலக்கியக் கருத்தரங்கக் கட்டுரையில்’ என்னும் தொகுப்பு ஒன்றினைக் கொண்டுவந்தார். அதில் மேலே சொன்ன கட்டுரை இடம் பெற்றது. அக்கட்டுரை தந்த உந்துதலே ‘சங்ககாலப் பெண்கவிஞர்கள்: சமூகக் கட்டமைப்பு உருவாக்கமும் அதற்கான எதிர்வினைகளும்’ என்னும் இக்கட்டுரை. இது சங்ககாலப் பெண் கவிஞர்கள் பற்றிய முழுமையான ஆய்வன்று; அவ்வாய்வுக்கான ஒரு தொடக்கப் புள்ளியே.

 

எந்தவொரு சமூகத்திலும் அந்தச் சமூகத்தில் தோன்று கலையிலக்கியப் படைப்புகள் அனைத்தும் அச்சமூகத்தின், மனித குலத்தின் ஓட்டுமொத்தப் பண்பாட்டு உணர்வின் அடிப்படையில் உருவாக்கம் பெறுபவைகளே. இதற்கு என ஓர் படைப்புக்கோட்பாடு எழுதப்படாத நியதியாக உண்டு. கிரேக்க மொழியில் தோன்றிய அரிஸ்டாட்டிலின் கவிதையியலும் அத்தகைய கோட்பாட்டு நிலையில், படைக்கப்பெற்ற ஒன்றே. இதற்கு இணையாகத் தொல்காப்பியரின் தொல்காப்பியமும் தமிழ் மொழியின் படைப்புக் கோட்பாட்டு நிலை பற்றிப் பேச எழுந்த ஒன்றல்ல என்றாலும் அதன் மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரம் தமிழ்க்கவிதையியல் யாப்பியல் அத்துடன் மரபியல் பேசவந்த எனலாம். ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்பதுவே தொல்காப்பியம் உணர்த்தும் செய்தியாகும். இனக்குழுச் சமூகம் அரசு உருவாக்க நிலைக்கு இடம்பெயரும் பொழுது அச்சமூகத்தின் கலை இலக்கியப் பண்பாட்டு ஒழுகலாறுகள் அரசு ஆதிக்கச் சக்திகளால் கட்டமைக்கப்படும் ஒன்று என்பது வரலாறு. அம்மொழியில் உருவாக்கம் பெறும் கவிதையியலும் ஆதிக்கச் சக்திகளைப் பிரதிநிதித்துவம் படுத்தும் ஒன்றாகவே எப்பொழுதும் இருக்கும். மேலைத்தேய மொழிகளில் உருவாக்கம் பெற்றுள்ள கவிதையில்களுக்கு எதிரான எதிர்ப்புக் குரலே ‘Black Poetics’ என அடையாளப்படுத்தப்பட்டதைக் காணலாம். இந்திய சமூகத்திலும் இந்தியக் கவிதையியல் என்னும் உருவாக்கத்திற்கு எதிராக எழுந்த ஒன்றை தலித் கவிதையியல் 1980-களில் பெண்ணிய சிந்தனைகள் எழுச்சி பெற்ற காலகட்டத்தே ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பு உருவாக்கிய கவிதையியலுக்கு எதிரான ஒன்றே பெண்ணிய கவிதையியல் (Feminist Poetics). ஆனால் பெண்கவிதையியலே (Woman’s Poetics) எனச் சொல்வதே ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பு உருவாக்கத்திற்கான ஓர் எதிர்வினை எனக் கொள்ளவேண்டும்.

 

சங்கப் பெண்கவிஞர்களின் பாடல்களில் காதல், காமம் என்னும் இருசொற்களின் வேறுபாட்டினை ஓட்டிக் காமம் என்னும் சொல்லையே கவிதைமொழி யாக்கியுள்ளனர். அள்ளுர் நன்முல்லையாரின் குறுந்தொகைப் பாடலில் (32) “காலையும் பகலும் கையறுபாலையும், ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுகிப், பொழுது இடை தெரியின் பொங்கிய காமம்’ எனக் காமம் பற்றிய உளவியல் சொற்சித்திரம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. இன்னொரு சொற்சித்திரம். “நெமை ஓங்கு உயர்வரை இமயத்து உச்சி, வாஅன் இழிதரும் வயங்கு வென் அருவிக், கங்கைஅம் பேர்யாற்றுக் கரைஇறந்து இழிதரும், சிறைஅரு கடும்புனல் அன்ன என், நிறைஅரு காமம் நீந்துமாறே” (நற்.369) இது மதுரை மேலைக் கடையத்தார் நல்பென்னையாரின் நற்றிணைப் பாடலின் இறுதி ஐந்து வரிகள். இங்குப் பெண்ணின் மொழி அவள் அறிந்த நிலப்பரப்புக்கு உட்பட்ட எல்லை ஓட்டிய விவரணங்கள் கொண்டிருக்க வேண்டும் எனத் தொல்காப்பியர் வழி இருக்க, இமயம், கங்கை கரை இறந்து செல்லும் அதன் நீர்ப்பெருக்கு இதுவே காட்சிப் படிமமாகக் காம பெற்றத்தைக் குறியீடு கொள்கிறது. காமம் பற்றிய சொல்லாடலின் முத்தாய்ப்பாக வெள்ளிவீதியாரின் நற்றிணைப் பாடலின் (335) இறுதிவரி: “காமம் பெரிதே களை ஏகுநரே இலரே” இங்குக் காமத்தைக் களையும் தலைவன் இல்லையே என்பது ஒரு பொருள் இருக்க, காமம் என்ற பாலியல் உணர்வை களைபவர் இவ்வுலகில் யார் எனப் பொதுமைப்படுத்தப் படுவதைக் காணலாம். இன்று கழல் உள்ளம் சார்ந்த ஒன்று எனவும் காமக் உடல் சார்ந்த ஒன்று, வெறி (Lust) என்னும் பொருள்மாற்றம் (Semantic shift) பெற்றுள்ளது. திருக்குறளின் காமத்துப்பால் இன்பத்துப் பாலாகப் பதிப்பிக்கப்படுகிறது. வாத்ஸாயனரின் காமசாஸ்திரம் உலகின் பல்வேறு ஊடகங்களில் பெரிது படுத்தப்படுகிறது. ஔவையாரின் ‘மெய்ம்மலி காமம்’ என்னும் நற்றிணைப் பாடலின் (147) தொடர் இங்கு நினைவு கொள்ளவேண்டும். இது ஓர் அரசியல் என்றாலும் தமிழ் சமஸ்கிருத மொழிகளில் வழக்கில் உள்ள ‘காமம்’ என்னும் சொல்லின் மூலமொழி என்ன என்பதே நம் கேள்வி. காதல் என்னும் சொல்லை விட காமம் என்னும் சொல்லை சங்கப் பெண்கவிஞர்களின் பாசாங்கு அற்ற மொழி வழி அறியலாகும் பாலியல் உலகமாகும்.

 

ஆட்டனத்தி ஆதிமந்தியின் காதல் கதை எப்பிடியிருப்பினும் ஆதிமந்தியின் குறுந்தொகைப் பாடல் (31) ஒன்று ஆண் பெண் இருவருக்கும் இடையே உயர்வு தாழ்வு இல்லை என்பதைச் சுட்டுவதாகவுள்ளது. பால் பேதம் அற்ற பாலியல் சமத்துவமே (Gender Equality) ஆதிமந்தியின் பாடல் தொனியாக உள்ளது. என் உள்ளம் கவர்ந்தவனாகிய ‘பீடுகெழு குரிசிலும் ஓர் அடுகள மகனே’ எனச் சொல்லும் பொழுதே “யானுமோர் ஆடுகளமகளே” என உரிமைக் கொண்டாடத் தூண்டுகிறது ஆதிமந்தியின் கவியுள்ளம். மன்னர் விழாக்களிலும், மகளிர் ஆடும் துணங்கைகளிலுமே என் தலைவனைக் காணமுடியும் என்னும் குறிப்பு, மொழி மூலம் அவன் ஓர் விளையாட்டுப்பிள்ளை, ‘Play boy’ என்னும் அங்கதத் தொனியும் இக்கவிதையில் வெளிப்பாடு கொண்டுள்ளது.

 

எண்பதுகளில் பின்னை – நவீனத்துவப் பாலியல் (Post – Modern sexuality) சொல்லாடல்கள் களம் கொள்ளும் பொழுது பெண்களுக்கு எனத் தனித்ததோர் இலக்கியம், “a literature of their own” படைப்புப் பரிணாமம் கொள்ளத் தொடங்கியது. இதன் ஒரு வெளிப்பாடு உடலைக் கொண்டாடுவது என்னும் நிலையை ஓட்டி ‘உடல் மொழி’ (Body Language) கவிதையாக்கத்தில் படைப்பு மொழியாக உருக்கொண்டது. “எதிர்த்த தித்தி முற்றா முலையள்” எனக் கழார்க்கிளன் எயிற்றியாரின் நற்றிணைப் பாடல் (312) வரி இதற்கோர் எடுத்துக்காட்டாகும். தன்னைப் பிறர்போல பிரதிநிதித்துவப்படுத்தல் மூலம் ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்புகளை எதிர்வினையினை சங்கப் பெண்கவிஞர்களின் கவிதைகளில் காணலாம். புலவர் மரபாக வடிவமாற்றம் பெற்றபொழுது பத்துப்பாட்டு மற்றும் புறநானூறு, பதிற்றுப்பத்து முதலான தொகை நூல்களில் வரும் ஆற்றுப்படைத்துறைப் பாடல்களின் மூலம் புலவர்கள் தங்கலைப் பாணர்களாக, விறலியாக, பாடினியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் தானும் பாணர் மரபின் அம்சமாக நில்லாவுலகில் நிலைத்ததோர் உள்ளமயினை உணர்த்துபவர்களாக உருமாற்றம் கொள்கின்றனர். “ஏந்துஎழில் மழைக்கண் வளைந்துவரல் இளமுலை, பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல் மின்குறை விறலியர் நின்மறம் பாட….. உயர்நிலை உலகத்துச் செல்லாது இவண்நின்று,   இருநில மருங்கின் நெடிது மன்னியரோ” எனக் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் விறலியர் மரபின் பிரதிநிதித்துவமாக தன்னைப் புனைவு வெளியில் ‘பல் உறுப்புக்கள் திரண்ட வழிப் பெறுவதோர்’ அழகுப் பெட்டமாகப் பதிற்றுப்பத்து ஆறாம்பத்தின் 54ஆம் பாடலில் வெளிப்படுத்திக் கொள்வதைக் காணலாம்.

 

ஆண் பெண் இணைந்து வாழும் வாழ்வின் தொடக்கமாக முதலில் குடும்பம் அதனை நடத்துவதற்கான பொருள் மீதான பிரிவை வெளிப்படுத்துவதில் பெண்கவிஞர்களின் குரல் பழந்தமிழ்ச் சமூகத்தில் ஆணாதிக்கச் சமூகத்தில் கட்டமைக்கப் பெற்ற அறம்/பொருள் என்னும் இணை எதிர்நிலைகளில் பொருளைக் காட்டிலும் ‘காதலறமே’ பெரிது எனக் கலகக் குரலாக வெளிப்படுவதைக் காணலாம். இக்குரல் பெரும் எதிர்ப்புக் குரலாக இல்லாமல் ஒரு முணங்களின் ஓலமாக முணுமுணுப்பாக ‘Cries anda whispers” வெளிப்பாடு கொண்டுள்ளதைக் காணலாம்.  “பொருள்வயின் பிரிதல் ஆடவர்க்கு பொருளே” எனக் காமக்காணிப் பசலையாரின் நற்றிணைப் பாடல் (243) வரிகள் மனித வாழ்வில் காதலறத்தை முதன்மைப்படுத்துவதாக உள்ளது.

 

பொருளீட்டல் ஆடவர் செயலாக உள்ளபோது அதன் இன்னொரு நிலையே சமூகப் புறவாழ்க்கையில் பெண்களுக்கான இடத்தையும் ஆணாதிக்கச் சமூகம் எழுதப்படாச் சட்டமாகப் பெண்களுக்கு வழங்கியுள்ளது. இந்து அடிப்படையில் பெண்கவிஞர்களின் புறப்பாடல் பற்றிய நம் பார்வை விரிவடைய வேண்டும். பெண்கவிஞர்களின் பாடல்களின் எண்ணிக்கை 181 ஆக இருக்க, அதில் மூன்று ஒரு பங்கு. 63 பாடல்கள் புறத்திணை சார்ந்த ஒன்றாக உள்ளது. புறப்பாடல்கள் அதிகம் பாடியவர்களாக ஔவையார், காக்கைப்பாடினியார் நச்செள்ளையாரைச் சொல்லவேண்டும். பெண்கவிஞர்கள் புறப்பாடல்களின் துறைகளை வரிசைப்படுத்தப்பொழுது அவை புரவலனாகிய அரசன் பரிசிலனாகிய புலவர் இவர்களுக்கு இடையே ஒட்டிய உறவு நிலையை வெளிப்படுத்துவனவாக உள்ளன. அரசவாகை, இயன்மொழிவாழ்த்து, பரிசில் கடாநிலை, பரிசில் நிலை எனத் துறையில் அமைந்த பாடல்களே அதிகம். அதிலும் பெண்கவிஞர்கள் தான் சார்ந்திருந்த அரசன், அவனின் வாளின் வெற்றி, தானையின் சிறப்பு முதலானவைகளைக் குறிப்பிடும் பாடற்துறைகளாகிய தானைமறம் (புறம் 87,88,89,90) வாள்மங்கலம் (புறம். 95) முதலானவற்றில் அமைந்த பாடல்களே ஔவையார் அதிகம் பாடியுள்ளார்.

 

பாண்மரபுவின் எச்சமாக இலக்கியமாக விளங்கும் விறலியாற்றுப்படை பாடல்களாகப் பதிற்றுப்பத்தில் (10) காக்கைப் பாடினியார் நச்செள்ளையாருடைய பாடலும் புறத்தில் (102) ஔவையாரின் பாடலும் இடம்பெற்றுள்ளன. கணவனை இழந்த நிலையைப் பகரும் தாபதநிலைப் பாடல்கள் பெண்கவிஞர்களின் ஆண்பெண் வாழ்வியல் நிலையில் ஆணின் இழப்புப் பற்றிப் பொதுமைப்பட அதனால் உருவாக்கப்படும் சமூகக் கட்டுகளின் இறுக்கம் மீதான எதிர்வினைகளாகவே உள்ளன. பூதப்பாண்டியன் தேவியின் ‘பல்சான்றீரோ பல்சான்றீரே’ எனத் தொடங்கும் புறப்பாடல் பன்முகச் சொல்லாடலுக்கு உரிய ஒன்று. ‘பல்சான்றீரே’ என்னும் பெயரில் நாடகம் ஒன்றினை உருவாக்கியுள்ளார் என்பதை இங்கு நினைவு கொள்ளவேண்டும்.

 

பெண்கவிஞர்களின் இரண்டு புறப்பாடல்கள் தொல்காப்பியத் திணை துறைப்பாகுபாட்டுக்குள் அடங்காதனவாக உள்ளன. காவற்பெண்டு என்னும் பெயரில் புறத்தில் பதிப்பிக்கப் பெற்ற பாடலில் என்மகன் எங்கே இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது என்ற பொழுதிலும் “தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே” எனச் சொல்வதாகப் பாடல் (86) முடிகிறது. இங்கு வரலாற்றில் பெண் என்னும் அடையாளம் கட்டமைக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் “புலி சேர்ந்து போகிய கல்லனை போல ஈன்ற பயனோ இதுவே’ ஒரு பெண் ‘தாய்’ என்னும் பால் அடையாளம் பெறுகிறான். இது ஆணாதிக்கச் சமூக அமைப்பில் ஒரு பிள்ளையின் தாய் தந்தை என்னும் உறவு நிலையில் தாயின் நிலைப்பாடு அதுவும் இனக்குழுச் சமூகம் அரசு உருவாக்கம் பெறும்பொழுது அவன் தான் சமூகத்துக்கான போர்காரனாகப் பெற்றெடுத்தயே என்பது பாடலின் பொருளாக இருக்கிறது. எந்தவொரு சமூகத்திலும் தாய்மை போற்றப்பட வேண்டிய ஒன்று. அவனே ஆக்கலும் அழித்தலுக்கான ஆதித் தொன்மத்தாய் வடிவில் உள்ளான். இப்பாடலின் திணை துறை அரசவாகை, ஏறாண்முல்லை எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது. இது புறநானூறு தொகுக்கப் பெற்றவர்களால் பிரிக்கப்பெற்ற ஒன்றாகவே இருக்கவேண்டும். புறநானூற்றுப் பழையவுரைகாரர் காலத்தை ஓட்டிய புறப்பொருள் வெண்பா மாலையில் இது குறித்த பதிவு உண்டா என்பது நம் ஆய்வுக்குட்பட வேண்டிய ஒன்று.

 

இதனை இன்னுமொரு பாடல் பொன்முடியாருடையதாகும். இப்புறப்பாடலின் (312) திணை துறை வாகை, மூதின் முல்லை எனக் குறிப்பிடப் பெற்றுள்ளன. சமூகம், குடும்பம் என்னும் நிலைகளில் தாய், தந்தை, கொல்லன், வேந்தன், மகன் – இவர்களின் சமூகக் கடன்  என்ன என்பன இப்பாடலின் செய்தியாகும். இப்பாடலின் ஆசிரியர் பொன்முடியார் “ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” எனஒரு தாயின் மொழியாக, சான்றாகத் தொடங்கும் இப்பாடல் ஆணாதிக்கச் சமூகம்  பெண்ணுக்கு எனக் கற்புக் கோட்பாட்டின் அடையாளமே முல்லைத் திணைக் கோட்பாடும் அதன் உரிப்பொருளான இருத்தல் என்னும் பண்பாட்டு வரன்முறையாகும். ‘முல்லை சான்ற கற்பு’ அடைமொழி பெண்ணுக்கு உரிய ஒன்றாகிறது. பொருள் அடிப்படையில் பார்க்கும் பொழுது மூதின் முல்லை என்றும் தொடர் பழமையான, தொன்மையான முல்லை எனச் சொல்லலாம். தொல்பழங்குடியில் ஒரு பெண்ணின் கடமை அக்குடிக்கான இனப்பெருக்கத்தை உருவாக்கிப் பேணிக் காத்தலே, அங்கும் பெண் தாய் என்னும் அடையாள உறவுகளை முதலிடம் பெறுகின்றன. இதனை முன்னிறுத்துவதற்காக எழுந்த ஒன்றை பொன்முடியாரின் ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ எனத் தொடங்கும் புறப்பாடல் எனக் கொள்ள வேண்டும்.

 

தொல்காப்பியத்தில் கைக்கிளைக் காதல் ஆண்பாற்பட்டதாக, அவனின் சொல்லாடலாக வெளிப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் புறநானூற்றில் இடம் பெற்றுள்ள பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையாரின் பாடல்கள் (85,86,87) பெண்ணின் காதற்குறிப்பாக இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களின் திணை துறைக் குறிப்புக்களை இவை கைக்கிளைப் பாடல்கள், எனவே அன்பின் ஐந்திணை பற்றிய பாடல்களின் தொகுப்புகளில் இடம்பெறாமல் புறத்தில் சேர்க்கப்பட்டுள்ள எனக் கொள்ளலாம். அன்னைக்கு அஞ்சுவதும், அவைக்கு நாணுவதுமான ஒருவன் மீது தாம் கொண்ட காதல் உள்ளக்கிடக்கையை சொல்லமுடியாத நிலையைச் சொல்லமுடியாத நிலையைக் கவிதையாக்கிய எதிர்வினையே இப்பாடல். “என்போல் பெருவிதுப்புறுக என்றும், ஒருபாற் படாஅ தாகி, இருபாற்பட்ட இம்மையல் ஊரே” எனப் பாடல் முடிவு ஒரு பெண்ணின் காதல் உணர்வை ஏற்றுக்கொள்வதில் மதிப்பதில் குடும்பம் சமூகம் என்னும் இருநிறுவனங்களுக்கு இடையேயான முரண்பாட்டினைச் சுட்டுவதாக அமைந்துள்ளது. ஒரு பக்கம் குடும்பம் சமூகம் உருவாக்கிய மதிப்பீடுகளின் வரன்முறைகளை கட்டிக்காக்கும் நிறுவனமாக இருக்கும் வரை, சமூகப் படிநிலைகள் இறுக்கம் கொண்டுள்ள வரை, ஒரு பெண்ணின் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையாரின் புறப்பாடல்கள் நிறுவனமயமாக்கப் பெற்ற குடும்பம் அவை (பஞ்சாயத்து) இவற்றுக்கான எதிர்வினைகளே; எதிர்ப்புக் குரலின் வெளிப்பாடுகளே எனச் சொல்லவேண்டும்.

 

உலகெங்கிலும் கையறுநிலைப் பாடலுக்கு (Elegy) என தனித்ததோர் இலக்கிய மதிப்பு உண்டு இது தனிமனிதனின் இழப்பின் உலகப் பொதுமைக் குணத்தை எட்டுகிறது என்று சொல்ல வேண்டும். இங்கு ஔவையாரின் ‘சிறிய கட் பெறினே எமக்கு ஈயும் மன்னே’ எனத் தொடங்கும் புறப்பாடல் (235) ஒன்று அதியமானின் இழப்பைச் சொல்வது என்ற நிலையில் அரசன் புலவர் அதுவும் பெண்பாற்புலவர் என்ற நிலையில் எக்காலத்தும் நிலைத்து நிற்கும் கவிதைப் படைப்பாக உருவாக்கப்பட்ட ஒன்று எனல் வேண்டும். அதிகமான் மட்டுமல்ல அவன் பொகுட்டெழினி பற்றிய பாடல்களும் பாடிய ஔவையார் அதியமானின் நட்பு அவள் பெண் என்ற நிலையைத் தாண்டிய ஒன்று. ஆனால் ஔவையார் பற்றிய வரலாறு புராணமயமாக்கப்பட்ட ஒன்று. சங்ககால ஔவையார், ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் பாடிய ஔவையார் திருமுறையில் காணும் ஔவையார், ஜெமினி ஔவையார் பன்முகம் கொண்டது ஔவையார் பற்றிய வரலாறு. ஔவையாரின் வரலாற்றினை மறுவாசிப்புக்குட்படுத்திய ஒன்றாக இன்குலாபின் ஔவையார் நாடகத்தினைச் சொல்ல வேண்டும். அறுபதுகளின் இறுதியில் தமிழ்ப் பேராசிரியர் ஔவையார் அதியமானின் வைப்பாட்டியே என்னும் பொருளில் சிறுநூல் ஒன்றும் வெளியிட்டுள்ளார் என்பதை என்னவென்று சொல்வது?

 

அற்றைத்திங்கள் அவ்வெண் நிலவின்

 

எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்க்கொளார்

 

இற்றைத் திங்கள் இவ்வெண்நிலவின்

 

வென்று எறிமுரசின் வேந்தர் எம்

 

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே

 

என்னும் பாரி மகளிரின் புறப்பாடலானது (112) கையறுநிலைத் துறையில் அமைந்த ஒன்று. அரிஸ்டோபோனஸின் லிஸிஸ்டிராட்டா /Lysistrata/ கிரேக்க நாடகத்தினை உலகின் யுத்த எதிர்ப்பு நாடகம் (Anti war play) என்பது இதற்கு இணையாக பாரிமகளிரின் “அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்” எனத் தொடங்கும் பாடலே உலகின் முதல் யுத்த எதிர்ப்புப் பாடல் (Anti-war Poetry) எனச் சொல்ல வேண்டும் காலந்தோறும் உலகில் நடைபெற்ற நாடு, மொழி, மதம், இனம் இவற்றின் பெயரால் நடைபெற்ற மனிதப் படுகொலைக்குப் பலியானவர்களின் குழந்தைகளின் இழப்பு, வாழ்வின் சொல்லொண்ணா சோகம் இவற்றின் குறியீட்டு நிலையில் காட்சிப்படிமம் கொண்டுள்ளது பாரிமகளிரின் கையறுநிலைப் பாடல் என்று சொல்லவேண்டும். ஈழ இனப்படுகொலைக்குள்ளான தந்தையரை, தம் சொந்த மண்ணை இழந்து, ஈடுகட்ட முடியாத இழப்புக்குள்ளான ஈழத் தமிழ்க் குழந்தைகளின் இதயக் குமுறலின் வெளிப்பாடாக இக்கவிதை இன்றளவும் உயிர்த்துடிப்புடன் காட்சி கொள்கின்றது. தனிமனிதனின் துயரக் குரலை உலக மக்களின் துயரத்தின் பொதுமைக் குரலாக ‘ஓலம்’ (The Cry)  என்னும் ஓவியத்தின் உணர்த்திய எட்வர்டு மஞ்சு (Edward Munch) ஓவியத்துக்கு நிகரானது பாரிமகளிரின் அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் கையறுநிலைப் பாடலாகும்.

 

சங்ககாலப் பெண்கவிஞர் அகப்பாடல்களுள் வெள்ளிவீதியார், ஔவையாரின் பாடல்களின் சித்திரிக்கப் பெற்றுள்ள பெண்ணிற்கே உரிய பெண்மொழி பற்றிய ஒருசில செய்திகளோடு இக்கட்டுரை நிறைவு பெறுவதுபொருத்தம் எனலாம். வெள்ளிவீதியாரின் “கன்றும் உண்ணாது கலத்தினும் படாஅது, ஆன் தீம்பால் நிலத்து உக்காஅங்கு, எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது, பசலை உணீஇயர் வேண்டும் தீதலை அல்குல் என்மாமைக் கவினே” என்னும் குறுந்தொகை பாடல் (27) காதலனால் முழுமையாக இன்பம் துய்க்கப் பெறாது தீம்பால் நிலத்தில் சிதறியதுபோல திதலை அல்குல் பொலிவிழந்தது எனச் சொற் படிமம் தலைமகனின் பாலியல் பெருவிருப்பினை பூர்த்தி செய்ய முடியாத இயலாமை (Sexual incompatability) பற்றிய பகடி (Parody) எனலாம். இதன் இன்னொரு உச்சகட்ட வெளிப்பாடுதான் வெள்ளிவீதியாரின் குறுந்தொகைப் பாடலில் (38) “கைஇல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கள் போலப் பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே”

 

முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? என்னும் குறுந்தொகைப் பாடலின் (28) இறுதி வரி “என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கு” மூலம் ஆணின் மீது கொண்ட பெண்ணின் ஆராக்காதல் அறியாது துஞ்சும் ஊரை முட்டி மோதி அடித்து உதைத்துச் சாடுவேன் என்னும் வேட்கைப் பெருவெறி பெண்ணிய மொழியாக மாற்றியுள்ளார் ஔவையார்.

 

நலம்கவர் பசலை நலியவும் நம்துயர்

 

அறியார் கொல்லோ தாமே? அறியினும்

 

நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்

 

நம்முடைய உலகம் உள்ளார் கொல்லோ?

 

யாங்கு என ஊர்கோ யானே வீங்குபு

 

தலைவரம்பு அறியாத் தகைவரல் வாடையோடு

 

முலையிடைத் தோன்றிய நோய்வளர் இனமுளை

 

அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி

 

ஊரோர் எடுத்த அம்பல் அம்சினை

 

ஆராக்காதல் அவிர்தளிர் பரப்பி

 

புலவர் புகழ்ந்த நாரில் பெருமரம்

 

நிலவரை எல்லாம் நிழற்றி

 

அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரை

 

என்னும் அகநானூற்றுப்படை (273) மூலம் ஔவையார் பெண் உலகம் வீடு எனவும் ஆண் உலகம் சமூகம் எனவும் பாகுபாட்டிற்கு மேலாக, ‘I tune and world’ நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆணாதிக்கச் சமூகப் பொதுவெளியில் ஆணின் ஆதிக்கம் ஆட்சி செலுத்துகின்ற பொழுதும் பெண்ணின் அகவுலகில் ஆணின் இடம் என்றும் கேள்விக்கு உரிய ஒன்றே. புலவர் புகழ்ந்த நாண் இல் பெருமரம் என்பதே சரியான பாடலையும் இந்தியப் பண்பாடே ரிச்சர்டு லென்ஹாய்க்கு (Richartd Lenhry) ஒரு பேசும் மரம் (Speaking Tree) இதனை யொத்த பெண்ணின் உள்ளத்தினை துளிர்த்து எழுந்த நாண் இல் அடங்காக் காமமே ஆணிற்கான சவாலாக என்றும் உள்ளது. இது ஒருவகையில் பின்னை நவீனத்துவப் பாலியலின் (Post –Modern sexuality) வெளிப்பாடு எனலாம். பெண்ணிற்கு வழித்துள்ள தளைகளை எல்லாம் கட்டுடைத்தலின் பூரண வெளிப்பாடே ஔவையாரின் இக்கவிதை. இக்கவிதை மரபு போற்றப்படவேண்டும். இது இன்றைய பெண்கவிஞர்களின் கவிதை மரபாக பரிணாமம் கொள்ளவேண்டும் என்னும் உந்துதலின் வெளிப்பாடே ‘சங்ககாலப் பெண்கவிஞர்கள்: சமூகக் கட்டமைப்பு  உருவாக்கமும் அதற்கான எதிர்வினைகளும்’ என்னும் இக்கட்டுரை.

 

முருகேசபாண்டியன்.ந. (2010):  அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…

 

சங்கப் பெண்கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை தொகுப்பும் உரையும் நாகர்கோவில்,

 

காலச்சுவடு பதிப்பகம்.