குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

போரில் மறைக்கப்பட்ட மற்றுமொரு உண்மை!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிந்து போரில் மறைக்கப்பட்ட இன்னொரு உண்மை அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தாக்குதல் ஒன்றில் 500 படையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மறைக்கப்பட்ட உண்மை பற்றிய விபரத்தை கடந்த வாரம் பார்த்திருந்தோம்.

 

அந்த உண்மையை வெளிச்சத்துக் கொண்டு வந்திருந்தவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

 

இது விமானப்படையால் மறைக்கப்பட்ட உண்மை பற்றிய இரகசியம்.

 

இதனை வெளிக்கொண்டு வந்துள்ளவர் விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரியான குறூப் கப்டன் சஜீவ ஹெந்தவிதாரண.

 

இவர் இலங்கை விமானப்படையில் முக்கியமானதொரு அதிகாரியாக இருந்தவர். விமானப்படையின் நான்கு வெவ்வேறு ஸ்குவாட்ரன்களுக்கு ( மேலதிக பறக்கும் பயிற்சி ஸ்குவாட்ரன், பறக்கும் பயிற்சி ஸ்குவாட்ரன், எவ்7 ஸ்குவாட்ரன், மிக்27 ஸ்குவாட்ரன்) தலைமை வகித்த ஒரே அதிகாரி என்ற பெருமையையும் பெற்றவர்.

 

கடந்த மாதம் 17ம் திகதி இரத்மலானை விமானப்படைத் தளத்தில் ஒரு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

அது இலங்கை விமானப்படையின் வரலாற்றை எடுத்துக்கூறும் நூலின் நான்காவது பாகம். இந்த நூலின் பெயர் The Aerial Tribute என்பதாகும்.

 

உளநலத்திற்கான தேசிய பேரவையின் பணிப்பாளராக இருக்கும் மருத்துவர் நிரோஷ மெண்டிஸ் என்பவர் விமானப்படையின் இந்த வரலாற்றை எழுதியுள்ளார்.

 

350 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் குறிப்பாக நான்காவது கட்ட ஈழப்போரில் இலங்கை விமானப்படையின் செயற்பாடுகள், நடவடிக்கைகள், தந்திரோபாயங்கள், பயன்படுத்திய ஆயுதங்கள் என்பன குறித்த விபரங்களும் இடம்பெற்றுள்ளன.

 

இந்த நூல் வெளியீட்டு விழாவில் குறூப் கப்டன் ஹெந்தவிதாரணவும் உரையாற்றியிருந்தார்.

 

அப்போது ஒரு தகவலை அவர் வெளியிட்டார். அது இலங்கை விமானப்படை போரின் போது ஆயிரம் கிலோ எடையுள்ள இராட்சதக் குண்டுகளையும் பயன்படுத்தியது என்ற விபரமாகும்.

 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை விமானப்படை, எம்கே 84 எனப்படும் 1000 கிலோ எடையுள்ள குண்டுகளைப் பயன்படுத்தியது என்பது பற்றிய பதிவுகள் ஏதும் இதற்கு முன்னர் வெளியாகவில்லை.

 

இலங்கை விமானப்படையின் போர்த தளபாடங்கள் பற்றிய எந்த அதிகாரபூர்வ தகவலில் ஆயினும் அல்லது வெளியான போர்த்தள தகவல்களிலாயினும் எம்கே 84 குண்டு பற்றிய எந்தத் தகவலும் இல்லை.

 

ஆனால் 2006ம் ஆண்டு தொடக்கம் இலங்கை விமானப்படை இந்தக் குண்டுகளை வீசி வந்துள்ளது என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. முதல்முதலாக இந்தக் குண்டு வீசப்பட்டது திருகோணமலையில் ஆகும்.

 

2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ம் திகதி விடுதலைப் புலிகள் வசம் இருந்த சம்பூர் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கைகளை அரச படையினர் மேற்கொண்டிருந்தனர்.

 

அப்போது தான் முதல்முதலாக 1000 கிலோ எடை கொண்ட குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ம் திகதி நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் பற்றிய விபரத்தை விமானப்படை வெளியிட்டுள்ள நூலிலும் ஒப்புக்கொண்டுள்ளது.

 

கிபிர் விமானங்களின் அணியான 10வது ஸ்குவாட்ரனின் கட்டளை அதிகாரியே அந்த முதலாவது 1000 கிலோ குண்டை வீசியதாக The Aerial Tribute  நூலும் குறிப்பிடுகிறது.

 

சேருவிலவுக்கு தென்கிழக்கே 10 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கட்டளை மற்றும் தகவல் தொடர்புத் தளம் மீதே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படையின் நூல் கூறுகிறது.

 

முதலாவது 1000 கிலோ எடையுள்ள எம்கே 84 குண்டை குறூப் கப்டன் வீசினார் என்றும் அதேவேளை ஸ்குவாட்ரன் லீடர் 500 கிலோ எடையுள்ள இரண்டு எம்கே 83 குண்டுகளை அதே இலக்கின் மீது வீசினார் என்றும் கூறுகிறது அந்தத் தகவல்.

 

இந்த நூல் வெளிவரும் வரை இலங்கை விமானப்படை தம்மிடம் எம்கே 84 ரக குண்டுகள் இருப்பதாகவோ, அவற்றைப் புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தியதாகவோ  எந்தச் சந்தர்ப்பத்திலும் தகவல் வெளியிடவில்லை.

 

உள்நாட்டுப் போரில் 1000 கிலோ எடையுள்ள குண்டுகள் வீசப்படுகின்றன என்பது வெளிநாடுகளாலும், மனித உரிமை அமைப்புகளாலும் கடுமையாக விமர்சிக்கப்படும் என்பதே அதற்குக் காரணம்.

 

அதனால் இந்தப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பற்றிய பல தகவல்களை அரசதரப்பு மறைத்திருந்தது.

 

1000 கிலோ எடையுள்ள குண்டு என்று பொதுவாக கூறப்பட்டாலும் இதன் உண்மையான எடை 2039 இறாத்தல் அல்லது 925 கிலோகிராம் ஆகும்.

 

இதன் இறக்கை மற்றும் ஏனைய வெடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில் இதன் மொத்த எடை 944.8 கிலோவை எட்டிவிடும். இதில் 428.6 கிலோ எடையுள்ள ட்ரை ரோனல் எனப்படும் உயர்சக்தி வெடிமருந்து நிரப்பப்பட்டிருக்கும்.

 

எம்கே 84 குண்டு ஒன்று வீசப்பட்ட இடத்தில் 50 அடி (15.2மீ) விட்டத்தையும், 36 அடி (11.0மீ) ஆழத்தையும் கொண்ட குழியை ஏற்படுத்தும். 129 அங்குல (328செ.மீ)நீளத்தைக் கொண்ட இந்தக் குண்டு 15 (381.0மி.மீ) அங்குல தடிப்பான இரும்புக் கவசம் அல்லது 11 (3.4மீ) அடி தடிப்பான கொங்கிறீட் தளத்தையும் ஊடுருவும் திறன் கொண்டதாகும்.

 

இந்தக் குண்டு வீசப்படும் உயரத்தைப் பொறுத்து 365.8 மீற்றர் சுற்றளவு கொண்ட பகுதியில் இதன் சிதறல்கள் பரவித் தாக்கும்.

 

ஆனாலும் உள்நாட்டுப் போர் ஒன்றில் இலங்கை விமானப்படை இத்தகைய குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகள் மீது இந்தக் குண்டுகள் வீசப்படவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. போரின் போது இலங்கை விமானப்படை 250 கிலோ, 500 கிலோ எடையுள்ள குண்டுகளை எல்லாம் வீசியது.

 

அதுபற்றிய தகவல்களும் ஏற்கனவே வெளியாகி இருந்தன. ஆனால் 1000 கிலோ எடையுள்ள குண்டுகளும் வீசப்பட்டது பற்றிய தகவல்களை மட்டும் அரசாங்கம் மறைத்திருந்தது. விமானப்படையினர் ஒருபோதும் பொதுமக்களைக் குறிவைத்து தாக்கியிருக்கவில்லை என்று விமானப்படைத் தளபதிகள் பலரும் பெருமையாகக் கூறிக்கொள்கின்றனர்.

 

ஆனால் அவர்களின் இலக்குகளுக்கும் குண்டுகள் வீழ்ந்த இடங்களுக்கும் இடையிலான தொலைவு எந்தளவு என்பதை போருக்குள் வாழ்ந்த மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

 

அதைவிட விமானப்படை குண்டு வீசி அழித்த கட்டிடங்களின் எச்சங்கள் இப்போதும் உள்ளன. அவற்றைக் கொண்டு கூட குண்டு வீச்சின் வலு எத்தகையது என்பதை கணிக்கலாம்.

 

இத்தகைய நிலையில் தாம் சரியாகவே குண்டுகளை வீசினோம் என்ற விமானப்படையின் உரிமைகோரல் நகைப்புக்கிடமானது.

 

ஏனென்றால் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அமெரிக்க விமானப்படை கூட அடிக்கடி இலக்குத் தவறித் தாக்குகிறது.

 

கடந்த வாரம் கூட ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் மீது தாக்குதல் நடத்துவதாக நினைத்து ஆப்கானிஸ்தான் படையினர் மீது குண்டுகளை வீசியது. அதில் 5 ஆப்கானிஸ்தான் படையினர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதுபோலவே 1000 கிலோ எடையுள்ள குண்டுகள் போரின் போது வீசப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் கிட்டத்தட்ட 365 மீற்றர் வரை பரவும் என்ற நிலையில் பொதுமக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்றே கருத இடமுண்டு. ஏனென்றால் புலிகளின் தளங்கள் எப்போதும் தனியான இடங்களில் அமைக்கப்பட்டிருப்பதில்லை.

 

பொதுமக்களின் வசிப்பிடங்களை அண்டியே அவர்களின் தளங்களும் இருந்தன. இந்த நிலையில் புலிகளின் தளங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் இலக்குத் தவறாது போயிருந்தாலும் கூட அந்தப் பகுதியில் வசித்த பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.

 

இலங்கை விமானப்படையின் கிபிர் விமானங்கள், எம்கே 82 ( 250 கிலோ) , எம் 117 (435 கிலோ), எம்கே 83 (500கிலோ), எம்கே 84 (1000 கிலோ),  Haffar 1 உள்ளிட்ட குண்டுகளை போரில் பயன்படுத்தியது என்ற உண்மையை 16 ஆண்டுகளாக விமானப்படையின் கிபிர் விமான பராமரிப்பு பகுதியில் பணி-யாற்றும் விமானப் பராமரிப்பு பொறியியலாளராக குறூப் கப்படன் முடித்த மகாவத்தகே தனது சமூக வலைத்தளமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னரும் அண்மையிலும் போரின் போது இரசாயனக் குண்டுகள் மற்றும் கிளஸ்டர் குண்டுகளை விமானப்படை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த போது அதனை விமானப்படை உறுதியாக மறுத்திருந்தது.

 

கிபிர் விமானங்களில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் பற்றிய இரகசியங்கள் தான் இப்போது வெளியே வந்திருக்கின்றன. மிக் 27 விமானங்கள் மூலமே கிளஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதான குற்றச்சாட்டுக்கள் முன்னர் எழுந்திருந்தன.

 

அது ரஷ்யத் தயாரிப்பு போர் விமானம். அதில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் பற்றிய விபரங்களை இன்னும் யாரும் வெளியிடவில்லை. அது வெளிவந்தால் அதுபற்றிய உண்மைகளும் வெளிவரலாம்.

 

கடைசியாக கிபிர் விமானங்களின் மூலம் 1000 கிலோ குண்டுகள் வீசப்பட்டிருந்தனவே, அவையெல்லாம் எந்த நாட்டுத் தயாரிப்புக்கள் என்று தெரியுமா?

 

அமெரிக்கத் தயாரிப்பானவை. இஸ்ரேல் மூலம் அவற்றை இலங்கை வாங்கியிருந்தது.

 

இந்தப் பாரிய குண்டுகளை இலங்கை விமானப்படை வீசிய போது அமெரிக்கா கண்டுகொள்ளாமலே இருந்தது. அதே அமெரிக்கா தான் இப்போது போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறது.

 

ஒருவேளை, போர்க்குற்ற விசாரணை என்று வரும் போது இந்தக் குண்டுகள் எத்தனை, எங்கெங்கு, எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டன என்ற விபரங்களை அமெரிக்கா கூட வெளியிட முனையலாம்.

 

சுபத்ரா