குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

வீரமா முனிவர் (1680-1747)

இத்தாலி நாட்டுக்காரர்- இயற்பெயர் கொன்ஸ்டான் டைன்; ஜோசப் பெஸ்கி பாதிரியார் என்றும் அழைக்கப்படுவார். கொன்ஸ்டான்ஸ் என்றால் தைரியசாலி என்று பொருள் - பின்னர் வீரமா முனிவர் என்று தனித் தமிழ் ஆயிற்று.

1710இல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழ் மொழி பயின்றார் - இலக்கிய இலக்கண நூல் களைப் பழுதறப் பயின்றார். இவர் படைப்புகளுள் இறவாப் புகழப் பெற்றது சதுர் அகராதியாகும். நான்கு வகைப்பட்ட அகராதி என்று இதற்குப் பொருள். இவர்தான் முதன்முதலாக திருக்குறளை 1730 இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.

 

1) பெயர் அகராதி

2) பொருள் அகராதி

3) தொகை அகராதி

4) தொடை அகராதி ஆகும்.

 

தமிழில் தோன்றிய முதல் அகர முதலி இதுவேயாகும். அவரின் பரமார்த்த குருவின் கதைகள் - தமிழுலகிற்குக் கிடைத்த நகைச்சுவை மணம் வீசும் இலக்கியக் கருவூலமாகும். மதத்தைப் பரப்ப வந்தவர் தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுத்தார். தனது மேலை நாட்டுத் தோற்றத்தைக் தூக்கி எறிந்து தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ப நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொண்டார்.

 

இவரது வாழ்க்கை வரலாற்றினை எழுதிய முத்துசாமிப் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார் (1822). நெற்றியில் சந்தனம், தலையில் பட்டுக் குல்லா, இடுப்பில் காவி திருநெல்வேலி கம்பிச் சேர்மன் போர்வையைத் தலையிலிருந்து தோள் வழியாக உடலை மூடிய படி பாதக்குறடு அணிந்து நடமாடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தின் மொழிக்குக் கொண்டு சென்றார்.

 

திராவிட மொழியியல், அறிஞர்களுள் முதன்மையானவர் வீரமா முனிவரே என்று ஆய்வாளர் கமில் சுவலபில் கணித்துக் கூறுகிறார்.

 

கிறித்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து மதம் பரப்ப இந்தியாவுக்கு வந்ததுண்டு. அத்தோடு கல்வி, மருத்துவம் இவை இந்தியாவுக்குக் கிடைப்பதில் அவர்களின் பங்களிப்பை உதறித் தள்ளி விட முடியாது.

 

அதிலும் சிறப்பாக தமிழுக்குத் தொண்டு செய்ததில் வீரமா முனிவர், கால்டுவெல் போன்றவர்களின் அருந்தொண்டுகள் அருந்தமிழ் வாழு மட்டும் வாழ்த்திக் கொண்டே இருக்கும்.

 

வாழ்க வீரமா முனிவர்!

 

- மயிலாடன்