குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சிறிலங்காவின் முன்னேற்றமும் புலம்பெயர்ந்த இலங்கையர்களும் The Sunday Times மொழியாக்கம் நித்தியபாரதி.

10.01.2014-தி.ஆ2044சிறிலங்காவை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும் ஒருபகுதியாக புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுப்பது அதிகரித்துள்ள போதிலும், இலங்கையர்கள் பல்வேறு காரணங் களுக்காக தமது சொந்த நாட்டுக்குத் திரும்புவதில் தயக்கம் காண்பித்து வருகின்றனர்.

 

சிறிலங்காவில் 2002-03 வரையான சமாதான காலப்பகுதியில், சிறிலங்காவின் வடக்கை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றை வரைவதற்கு புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினர் தமது ஆதரவை வழங்கினர். இத்திட்ட வரைபை வரைகின்ற முயற்சியானது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இங்கு இந்தத் தகவலை வழங்குவதானது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைப் பெருமைப்படுத்தவோ அல்லது துதிபாடவோ அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெற்று அதன்மூலம் சிறிலங்காவில் வாழும் தமிழர்களின் அபிவிருத்திக்கான திட்ட வரைபொன்றை வரைவதற்கான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்டமானது பயனுள்ளதாகவும் முற்றுமுழுதாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகவும் உள்ளது.

இந்தத் திட்டமானது முற்றாக சுதந்திரமடைந்த வடபிராந்தியத்தை மையப்படுத்தி வரையப்பட்டதா அல்லது இல்லையா என்பது முக்கியமானதல்ல. இத்திட்டத்தின் கட்டமைப்பு மற்றும் இதன் முகாமைத்துவம் போன்றன கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய மிக முக்கிய விடயங்களாகும்.

புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த 200 வரையான வல்லுனர்களின் உதவியுடன் வடக்கிற்கான அபிவிருத்தித் திட்டத்தை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகரமாகக் காணப்பட்ட கிளிநொச்சியில் தமிழ் வல்லுனர்கள் ஒன்றிணைந்து இத்திட்டத்தை வரைந்தனர். இவர்கள் வாரக் கணக்கிலல்ல, சில நாட்கள் ஒன்றிணைந்து, தமது சொந்தச் செலவில் சிறிலங்காவுக்குச் சென்று இத்திட்ட வரைபில் பங்கெடுத்தனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு துறைசார் வல்லுனர்கள் ஒன்றாக்கப்பட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தகவல்களைச் சேகரித்து இத்திட்டத்தை வரைந்தனர். இவர்கள் வெளிநாடுகளுக்குத் திரும்பிச் சென்ற பின்னர் அங்கிருந்தவாறு இதனை வழிப்படுத்தினர். சிறிலங்காவில் சமாதானம் முடிவுக்கு வரும்வரை இத்திட்டம் நடைமுறையிலிருந்தது.

அண்மைக் காலத்தில், சிறிலங்காவை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும் ஒருபகுதியாக புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுப்பது அதிகரித்துள்ள போதிலும், வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பல்வேறு காரணங்களுக்காக தமது சொந்த நாட்டுக்குத் திரும்புவதில் தயக்கம் காண்பித்து வருகின்றனர். பொருத்தமான சம்பளம், பிள்ளைகளுக்கான பாடசாலை மற்றும் உயர்கல்வி, வீடமைப்பு, ஏற்புடைய சூழல், சட்ட ஆட்சி, மோதல் மற்றும் இரட்டைக் குடியுரிமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புலம்பெயர் வாழ் இலங்கையர்கள் ஆழமாக யோசிக்கின்றனர்.

சிறிலங்காவின் புலம்பெயர் மக்கள் தொடர்பாக எழுதப்பட்ட புதிய நூலில், இரண்டு அல்லது மூன்று மில்லியன் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக 1-2 மில்லியன் இலங்கையர்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றுகின்றனர். 2006ல் சேகரிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் 62,000 வரையான சிறிலங்காவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்வதாகவும் அவுஸ்திரேலியாவில் உள்ள இனக்குழுமங்களில் இலங்கையர்கள் 16வது இடத்தில் உள்ளதாகவும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2011ல் கனடாவில் 450,000 வரையான இலங்கையர்கள் உள்ளதாகவும் இவர்களுள் 350,000 வரையானவர்கள் தமிழர்கள் எனவும் 75,000 இற்கும் மேற்பட்டவர்கள் சிங்களவர்கள் எனவும் 30,000 வரையானவர்கள் முஸ்லீம்கள் எனவும் மதிப்பிடப்பட்டதாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று சிறிலங்காவில் பிறந்த 300,000 வரையான மக்கள் பிரித்தானியாவில் வாழ்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் 40 சதவீதமான தொழிற்படையினர் புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் நிலையில் இவர்களை ஒன்றிணைத்து இவர்களின் ஆற்றல்களைப் பகிர்ந்து கொண்டு நாட்டை முன்னேற்ற முடியும். இதற்கான அரசியல் தொழிற்படு சூழல் சிறிலங்காவில் நிலவுகிறது.

புலம்பெயர் இலங்கையர்கள் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று அங்கு பணியாற்ற வேண்டுமாயின் முதலில் அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் தலையீடுகள் இன்றி சுதந்திரமாகப் பணியாற்றுவதற்கான பொருத்தமான சூழல் உருவாககப்பட வேண்டும்.

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது போர் முடிவுக்கு வந்த போது, 'விடுமுறையிலிருக்கும் போது பணிபுரிதல்' என்கின்ற ஒரு யோசனையின் கீழ் சிறிலங்காவிற்குச் சென்று அதன் அபிவிருத்திக்காகப் பணியாற்றுவதென புலம்பெயர் இலங்கையர்கள் ஆலோசனை செய்தனர். புலம்பெயர் சிறிலங்கா வல்லுனர்களின் ஆற்றல்கள் மற்றும் ஆளுமைகளுக்கேற்ப தரவுத் தளம் ஒன்றை உருவாக்கி அவர்களுக்குப் பொருத்தமான பணியை, குறுகிய காலத் திட்டத்தில் இந்த நிறுவனங்களின் விருப்பத்தின் பேரில் சிறிலங்கா அரசாங்கத் திணைக்களத்திலோ அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களிலோ தொடர்வதென முன்னர் ஆராயப்பட்டது.

 

சிறிலங்காவின் கொழும்பில் இதற்கான வேலைத்தளம் ஒன்றை நிறுவி அங்கே புலம்பெயர் சிறிலங்கா வல்லுனர்கள் தமது அதிகளவு நேரத்தைச் செலவீடு செய்வதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்களை வரைந்து தாம் வெளிநாடுகளுக்குத் திரும்பிச் சென்ற பின்னர் அவர்கள் அதனை அங்கிருந்தவாறு இத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு வழிகாட்டுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

 

இவர்கள் தாங்கள் தமது விடுமுறைகளைக் கழிப்பதற்காக சிறிலங்காவுக்குச் செல்லும் போது இதனைச் செய்வதெனத் தீர்மானித்ததுடன், முற்றிலும் இது சேவையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இவர்கள் தமது பணியை முடித்த பின்னர் இவர்கள் பணியாற்றிய நிறுவனம் இவர்களின் பணியை உறுதிப்படுத்தி இவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதெனவும் ஆராயப்பட்டது.

 

இந்தக் கலந்துரையாடலானது சில சந்தர்ப்பங்களில் தடைப்பட்டாலும் கூட, இந்த முயற்சியை மீளஆராய்வதற்கான காலம் இதுவாகும். இதனை மீள ஆராய்ந்து புதிய வழிமுறையில் இதனைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. இளம் வல்லுனர்கள் சிறிலங்காவுக்குச் சென்று தமது ஆற்றலையும், அறிவையும் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றுவதென்பது ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும்.

 

சிறிலங்காவானது தன்னை பிறிதொரு சிங்கப்பூர் அல்லது கொரியா மட்டத்திற்கு அபிவிருத்தி செய்வதற்கு புதிய வல்லுனர்களின் ஆதரவும் அவர்களின் அறிவும் பயன்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது. சிறிலங்காவானது இவர்களின் ஆதரவுடன் தனது சொந்த கலாசாரம் மற்றும் சூழல் சார் நியமங்களுடன் தன்னை அபிவிருத்தி செய்து கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.

 

சிறிலங்கா அரசாங்கத்தின் மூலோபாயத்தின் கீழ் கடன் பெறப்பட்டு நாட்டில் துரித கட்டுமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 மேயில் தோற்கடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளின் பின்னர் தற்போது வெளிநாட்டு முதலீடுகள் சிறிலங்காவில் மிகக் குறைவடைந்துள்ளன. தொலைத் தொடர்பாடல், நிதிச் சேவைகள், சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகம் போன்ற பல்வேறு சேவைத் துறைகளில் பாரியளவு வளர்ச்சி காணப்பட்டாலும் கூட, கிராமியப் பொருளாதாரம் தொழில் வாய்ப்புக்கள் போன்றன மந்தகதியிலேயே உள்ளன. சிறிலங்காவின் பொருளாதாரமானது பல ஆயிரக்கணக்கான உள்நாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் வளைகுடாவில் பணிபுரியும் இலங்கையர்களிலும் அதிகம் தங்கியுள்ளது.

 

சிறிலங்காவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றிச் செல்வதற்கு ஏதோவொன்று தவறியுள்ளது போல் தென்படுகிறது. இதனை ஈடுசெய்வதற்கு புலம்பெயர் இலங்கையர்கள் உதவமுடியும். சிறிலங்கா அரசாங்கமானது இந்த முயற்சியைக் கட்டுப்படுத்தாது இதற்கு அனுசரணையாகச் செயற்பட முடியும்.

 

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் சிவில் சமூகத்திற்கும் இடையிலான ஒரு தொடர்பாடலாக இது காணப்படவேண்டும். பௌத்தர்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லீம்கள் என எல்லோரும் ஒன்றிணையும் போது மட்டுமே சிறிலங்காவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.

 

சிறிலங்காவின் அபிவிருத்தியில் சேவை நோக்குடன் கைகோர்க்கும் போது புலம்பெயர் இலங்கையர்கள் நாடு திரும்பி நாட்டின் அபிவிருத்தியில் பங்கெடுக்க வேண்டும் எனக் கோருவதற்கான ஒரு ஆரம்பமாக இருக்கும்.