குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

புதிய ஆண்டு தமிழர்களுக்கு - எதைக் கொண்டு வரும்? நிலாந்தன்,ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் இந்தியாதான

04.01.2014-தி.ஆ2044-புதிய ஆண்டு தமிழர்களுக்கு - எதைக் கொண்டு வரும்? நிலாந்தன்,ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் இந்தியாதான் யெனீவா, இந்தியாதான் சர்வதேச சமூகம்  இருப்பினும் இந்தியாவை வழிக்கு கொண்டுவர வெளிநாடுகளிலும் இதைவிடதிறன் மிக்கபணிகள் தேவை தமிழர்தரப்பிற்கு. தமிழகத்தில் கட்சிசுயநலத்தன்மை போக்கி உண்மைத்தன்மையை ஏற்படுத்வேண்டு வைக்கோ  சீமான போன்ற தலைவர்கள் பெரும் கட்சிகளுக்கு இரையாகிவிடும் நிலைகள்  மீண்டும் மீண்டும் எழும் பலமில்லாத உண்மைமிக்க நெடுமாறனால் ஏதும் செய்ய முடியாது எந்தப் பெரியகட்சிகளும் அவரைப் பொருட்படுத்தவில்லை. கட்சிகளற்ற தமிழ் இன உணர்வு அதவின் தீவிரம் தமிழகத்தில் தேவை  ஆனால் அது தீவிரவாதமாகமல் பார்ப்பது திறன் என்கிறது குமரிநாடு.நெற்

இப் பெரிய கட்டுரையின்  முக்கியமான விடயமாக குமரிநாடு இதனையே பார்க்கின்றது.எனவே, மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பின்வருமாறு கூறலாம். யுத்த வெற்றி தான் உள்நாட்டில் இந்த அரசாங்கத்தின் பலம். அது போல சீனா தான் அதற்கு அனைத்துலக அரங்கில் பலம். இந்த இரண்டு பலங்களும் ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை. இந்த இரண்டு பலங்களையும் பேணும்போது தமிழர்களைப் பொருட்படுத்த வேண்டிய தேவை இல்லை.மாகாண சபையை விடக் கொஞ்சம் கூடுதலான எதையாவது  கொடுக்கும் அதேசமயம், நீண்ட எதிர்காலத்தில் தமிழ் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நிலைமைகளைச் சுதாகரித்துக்கொள்ள முடியும் என்று இந்த அரசாங்கம் நம்ப இடமுண்டு.

 

கடந்த மாதம் அதாவது, கடந்த ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு கட்சியின் தலைவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் சொன்னார்... அண்மையில் அவர் இலங்கைக்கான ஐரோப்பிய நாடு ஒன்றின் தூதரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்தபோது, அவர் சொன்னாராம், ''இன்றும் சில தமிழ் விசாக் கோரிக்கைகளில் கையொப்பமிட்டேன்' என்று. அதற்கு இவர் கேட்டாராம், ஒவ்வொரு மாதமும் எத்தனை பேருக்கு இப்படி கையொப்பமிடுகிறீர்கள் என்று, அதற்கு அவர் சொன்னாராம், சுமாராக 10இற்கும் குறையாது என்று. இத்தகவலைச் சொன்ன மேற்படி கட்சித் தலைவர் மேலும் சொன்னார்... ''கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களிற்கூடாக ஆண்டுதோறும் தோறும் சுமாராக 1000இற்கும் குறையாத தமிழர்கள் விசாப் பெற்று நாட்டைவிட்டு வெளியேறி வருவதாகவும்...... இவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணமாகிச் செல்லும் பெண்களும் தொழில்சார் வல்லுனர்களும் தான்' என்றும். இப்படியாக சட்டபூர்வமாக புலம்பெயரும் தமிழர்கள் ஒரு தொகை. அதேசமயம், சட்டபூர்வமற்ற வழிகளுடாக எவ்வளவு பேர் மாதா மாதம் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்?...

 

 

இப்படியே ஒருபுறம் தமிழ்க் குடித்தொகையடர்த்தி மெது மெதுவாக நீர்த்துப்போய்க்கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் முல்லைத்தீவும் உட்பட எல்லைப்புறங்களில் தமிழ்க்குடித் தொகையடர்த்தி திட்டமிட்டு நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது என்றும் மேற்படி தமிழ்க் கட்சித் தலைவர் கூறினார்.

 

 

அப்பொழுது நான் அவரிடம் கேட்டேன், ''இப்படியாகத் தமிழ்ச் சக்தி திரைந்து கொண்டு போகும் ஒரு அரசியல் சூழலில் நீங்கள் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?' என்று. அவர் சொன்னார், ''இப்போது எங்களிடம் மிஞ்சியிருப்பவற்றையாவது உறை நிலையில் (Freeze) பேணினாலே போதும்... என்ற ஒரு நிலைதான் காணப்படுகிறது' என்று.

 

 

இது மிகப் பாரதூரமானதொரு நிலை. நீர்த்துச் செல்லும் தமிழ்ச் சக்தியை உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் ஒன்று திரட்டி அதன் பேரம் பேசும் பலத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளின் வேகத்தையும் தமிழ் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் விதத்திலான முயற்சிகளின் வேகத்தையும் ஒப்பிட்டு நோக்கின் எது வேகம் கூட?

 

 

இப்படிப்பட்ட கேள்விகளுடனே ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. அதே மாறாத கேள்விகளுடன் மற்றொரு புதிய ஆண்டு பிறந்திருக்கிறது.

 

 

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலப் பகுதியில் கடந்த ஆண்டு ஒப்பீட்டளவில் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டெனலாம்.

 

 

முன்னைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில, இலங்கை அரசாங்கம் கணிசமான அளவு வீட்டு வேலைகளைச் செய்து முடித்திருக்கும் ஒரு ஆண்டு அது. அதாவது, மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் மகிழ்ச்சியூட்டக்கூடிய பல முடிவுகளும் நகர்வுகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும்கூட ஆண்டின் இறுதிப் பகுதியில் நாட்டிற்கு வந்து போன பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் நாட்டின் தலைநகரில் வைத்தே அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் குறித்து எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்.

 

 

பிரிட்டிஷ் பிரதமரின் எச்சரிக்கையானது தமிழ் லொபியைத் திருப்திருப்படுத்தும் நோக்கிலானது என்று ஒரு விளக்கம் உண்டு. ஆனாலும், அவரைப் போன்ற சக்திமிக்க மேற்கு நாடுகளின் தலைவர்கள் இது போன்ற விவகாரங்களில் தனியே உள்நாட்டு நிகழ்ச்சி நிரல்களை மட்டும் பிரதிபலிப்பதில்லை. எனவே, கமரூனின் எச்சரிக்கையை மேற்கு நாடுகளின் பொது முடிவு ஒன்றின் பாற்பட்டதொரு நகர்வாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பார்த்தால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கை அரசாங்கம் செய்துவரும் வீட்டு வேலைகளால் மேற்கு நாடுகளை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

 

 

ஆம் அதுதான் உண்மை. இலங்கை அரசாங்கம் ஒப்பீட்டளவில் முன்னைய ஆண்டுகளைவிடக் கடந்த ஆண்டில் கூடுதலாக நெகிழ்ந்து கொடுத்திருக்கிறது. ஆனால், மேற்கு நாடுகள் தமக்கு மிக வசதியான ஒரு புள்ளி என்று கருதும் ஒரு புள்ளிவரை அரசாங்கம் நெகிழ்ந்து கொடுக்கவில்லை என்பதே சரி.

 

 

அதென்ன மேற்கு நாடுகளிற்கு வசதியான புள்ளி?

 

 

அதுதான் திருப்பிச் செல்ல முடியாத வளர்ச்சிகளிற்குரிய ஒரு புள்ளியாகும். அதாவது, அரசாங்கம் தான் முன்னெடுத்து வைக்கும் அடிகளின் கூட்டு விளைவாக அது ஒரு கட்டத்தில் இனிப் பழைய இடத்திற்கு திருப்பிச் செல்ல முடியாது என்ற ஒரு வளர்ச்சியை அடையவேண்டும். ஆனால், அப்படி ஒரு திருப்பிச் செல்ல முடியாத ஒரு புள்ளியை அரசாங்கம் இன்னமும் தொடவில்லை. அதைத் தொடும் வரைக்கும் மேற்கும், இந்தியாவும் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்தபடியே இருக்கும்.

 

 

எனது முன்னைய கட்டுரைகள் சிலவற்றில் கூறப்பட்டதுபோல அரசாங்கம் உப பாடங்களில்தான் வீட்டு வேலைகளை அதிகம் செய்துவருகிறது. பிரதான பாடத்தில் அல்ல. இங்கு உப பாடம் என்று கருதப்படுவது இனப்பிரச்சினையாகும். பிரதான பாடம் என்று கருதப்படுவது சீனாவுடனான காதலாகும்.

 

 

கடந்த ஆ;ண்டு முழுவதும் அரசாங்கம் எங்கெங்கு நெகிழ்ந்து கொடுத்திருக்கிறது என்று பார்த்தால் ஒன்று தெரியவரும். அவை அநேகமாக இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய பரப்புக்கள்தான். அதேசமயம் அரசாங்கம் மேற்கு நாடுகளிற்கும், இந்தியாவுக்கும் அரைக் கதவுகளையாவது திறந்துவிட்டிருக்கிறதுதான். ஆனால், இவை எல்லாவற்றையும் செய்தபோதிலும் அது சீனாவுடனான காதலைக் கைவிடத் தயாரில்லை. இங்கேதான் இடிக்கிறது.

 

 

அதாவது, இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளிற்கும் குறிப்பிடத்தக்க அளவுக்கு நெகிழ்ந்து கொடுத்தபோதிலும், சீனாவுடனான தனது நெருக்கத்தைக் குறைத்துக்கொள்ள அரசாங்கம் தயாரில்லை. ஆனால், மேற்கினுடையதும், இநதியாவினுடையதும் இறுதி இலக்கு இந்த அரசாங்கத்தை சீனாவின் மடியிலிருந்து இறக்குவதுதான்.

 

 

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அது விசயத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் ஒரு வெற்றியைப் பெற அவர்களால் முடியவில்லை. அப்படியொரு வெற்றியைத்தான் அவர்கள் திருப்பிச் செல்லவியலாத ஒரு வளர்ச்சிப் புள்ளி என்று கருதுகிறார்கள்.

 

 

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. அப்படியொரு திருப்பிச் செல்லவியலாத வளர்ச்சிக்குப்போக இலங்கை அரசாங்கத்தால் முடியுமா?

 

 

அது மிகக் கடினம். ஏனெனில், தமிழர்களுக்கு நீதி கிடைப்பது, சீனாவுடனான உறவை மட்டுப்படுத்துவது, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுடனான இடைவெளிகளைக் குறைப்பது ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

 

 

வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கம் இது. வெற்றிதான் இந்த அரசாங்கத்தின் ஒரே முதலீடு. அதே சமயம் அதுதான் இந்த அரசாங்கத்திற்குச் சிறையும்கூட. வெற்றியைக் கைவிட்டால் இந்த அரசாங்கமே இல்லை. ஆனால், வெற்றிக்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டவர்களுடன் நல்லிணக்கத்திற்கு வரமுடியாது. எனவே, இந்த அரசாங்கத்தால் தமிழர்கள் கேட்டதைக் கொடுக்கவே முடியாது. தமிழர்களுக்கு நீதி கிடைக்காத வரை டயஸ்பொறாவும் தமிழ் நாடும் கொந்தளித்துக்கொண்டேயிருக்கும். இவையிரண்டும் கொந்தளித்துக்கொண்டிருக்கும் வரை மேற்கு நாடுகளும், இந்தியாவும் இந்த அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கவே முயலும். அல்லது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குத் தமிழர் பிரச்சினையை ஒரு நெம்பு கோலாகப் பயன்படுத்தும். தமிழ் டயஸ்பொறாவும், தமிழ் நாடும் கொந்தளித்துக் கொண்டு இருக்கும் வரை இந்தியாவையும் மேற்குநாடுகளையும் நம்பிச் சீனாவைக் கைவிட முடியாது.

 

 

ஏனெனில், அனைத்துலக அரங்கில் வரக்கூடிய எந்தவொரு ராஜீய ஆபத்தையும் பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்திற்குள்ள ஒரே மாறாத முற்தடுப்புக் கவசம் சீனாதான். தமிழ் லொபி தீண்ட முடியாத நாடும் சீனாதான்.

 

 

எனவே, தமிழ் லொபி அல்லது உணர்ச்சிகரமான தமிழ் இன உறவுகளால் ஏதோவொரு விகிதமளவுக்குக் கையாளப்படத்தக்க மேற்கையும், இந்தியாவையும நம்பி, தமிழ் லொபியால் தீண்டப்பட முடியாத சீனாவைக் கைவிட முடியாத நிலையில் அரசாங்கம் காணப்படுகிறது. அதாவது, வெற்றி வாதத்திற்குத் தலைமை தாங்கும் அரசாங்கம் அதன் தர்க்கபூர்வ விளைவாக சீனாவை நோக்கியே நெருங்கிச் செல்ல வேண்டியிருக்கும். மேற்கை நோக்கி அல்ல.

 

 

சீனா மனித உரிமைகள் குறித்து முன்நிபந்தனைகளை விதிப்பதில்லை. மனித உரிமைகள் பற்றி யாருக்கும் வகுப்பெடுப்பதுமில்லை. போர்க் குற்றம் பற்றியும், அது தொடர்பான விசாரணைப் பொறி முறை பற்றியும் சீனா இதுவரையிலும் எதையும் கூறியதில்லை. தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அது கேட்பதில்லை.

 

 

எனவே, மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பின்வருமாறு கூறலாம். யுத்த வெற்றி தான் உள்நாட்டில் இந்த அரசாங்கத்தின் பலம். அது போல சீனா தான் அதற்கு அனைத்துலக அரங்கில் பலம். இந்த இரண்டு பலங்களும் ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை. இந்த இரண்டு பலங்களையும் பேணும்போது தமிழர்களைப் பொருட்படுத்த வேண்டிய தேவை இல்லை.

 

 

மாகாண சபையை விடக் கொஞ்சம் கூடுதலான எதையாவது  கொடுக்கும் அதேசமயம், நீண்ட எதிர்காலத்தில் தமிழ் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நிலைமைகளைச் சுதாகரித்துக்கொள்ள முடியும் என்று இந்த அரசாங்கம் நம்ப இடமுண்டு.

 

 

இத்தகையதொரு பின்னணியில் மேற்கும், இந்தியாவும் இலக்கு வைத்திருக்கும் திரும்பிச் செல்லவியலாத ஒரு புள்ளிவரை முன்னேறுவதில் இந்த அரசாங்கத்திற்கு அடிப்படையான வரையறைகள் உண்டு. அதாவது, இதை இன்னும் தெளிவாகச் சொன்னால், இந்த அரசாங்கத்தை ஒரு கட்டத்துக்கும் மேல் வளைக்க முடியாது. முறிக்கத்தான் முடியும்.

 

 

இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் மேற்கு நாடுகளும் இந்தியாவும் அப்படி இந்த அரசாங்கத்தை முறிக்க முற்படுவதாகத் தோன்றவில்லை. மாறாக வளைக்கவே முற்படுகின்றன.

 

 

எனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இலங்கை அரசாங்கம் கடக்க வேண்டிய கண்டங்கள் அதிகமாகயிருக்கும். ஆனாலும் எத்தகைய அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அவை அரசாங்கத்தை முறிக்கும் ஒரு எல்லை வரை போக முடியாத ஒரு அனைத்துலக மற்றும் பிராந்தியச் சூழலே தொடர்ந்தும் நிலவுமாயிருந்தால் பெரும் திருப்பகரமான மாற்றங்களைத் தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது.

 

 

அனைத்துலக சமூகம் தன்னை முறிக்க விரும்பவில்லை. வளைக்கத்தான் முற்படுகின்றது என்பதை இலங்கை அரசாங்கம் தனது பேரம் பேசும் சக்தியாகக் கருதுகின்றது. இந்த ஆண்டு இந்தியாவில் ஏற்படக் கூடிய ஆட்சி மாற்றம் அல்லது தலைமைத்துவ மாற்றத்தைக் குறித்த எதிர்பார்ப்புகள் பிராந்திய அளவிலும் அனைத்துலக அளவிலும் அதிகரித்துச் செல்லுமிச்சூழலில் இந்தியத் தலைமைத்துவத்தில் வரக்கூடிய மாற்றங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு மற்றொரு கண்டமாக அமையுமா இல்லையா என்பதைப் பொறுத்தே தமிழர்களுடைய அடுத்த கட்ட அரசியற் தலைவிதியும் அமையும். ஏனெனில் அதன் ஆகச் சரியான பொருளிற் கூறின் ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை இந்தியாதான் ஜெனிவா. இந்தியா தான் அனைத்துலகச் சமூகம்.

 

03-01-2014