குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

நெல்சன் மண்டேலாவிடமிருந்து சிறிலங்கா கற்க வேண்டிய வரலாற்று பாடங்கள் என்ன? மொழியாக்கம்-நித்தியபாரதி

14.12.13-நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை, அவர் நீதிக்காக போராடிய உறுதித்தன்மை, ஒரு ஒற்றுமையா ன சமூக த்தை அல்லது தேசத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற அவரது தீர்க்க தரிசனப் பார்வை, இவரது அளவற்ற பெருந்தன் மை மற்றும் மன்னிக்கும் மனப்பான்மை போன்றவை சிறிலங்காவில் வாழும் அனைத் து சமூகத்தவர்களும் சிறந்த ஒரு எதிர்காலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான மிகமுக்கிய வரலாற்றுப் பாட ங்களாக உள்ளன. 'நான் சந்தித்த எல்லா மனிதர்களிலும் நெல்சன் மண்டேலா மிகவும் அற்புதமானவராகத் திகழ்கிறார்' – மல்கொல்ம் பிரேசர்.

 

நெல்சன் மண்டேலா தற்போது உயிருடனில்லை. ஆனால் இவரது வாழ்வியல் அனுபவமானது மக்கள் அனைவரையும் குறிப்பாக இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கின்ற ஒன்றாக உள்ளது. இந்த உலகில் வாழ்கின்ற இளம் தலைமுறையினருக்கு நெல்சன் மண்டேலா ஒரு வழிகாட்டியாக விளங்குகிறார்.

 

நெல்சன் மண்டேலாவால் எழுதப்பட்ட A Long March to Freedom என்கின்ற நூலின் சிங்கள மொழிபெயர்ப்பை நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்த போது நான் மெய்சிலிர்த்தேன். இந்த மொழிபெயர்ப்புப் பணியை யார் செய்திருப்பார்கள் என நான் வியந்தேன். இந்த நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது.

 

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை, அவர் நீதிக்காக போராடிய உறுதித்தன்மை, ஒரு ஒற்றுமையான சமூகத்தை அல்லது தேசத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற அவரது தீர்க்க தரிசனப் பார்வை, இவரது அளவற்ற பெருந்தன்மை மற்றும் மன்னிக்கும் மனப்பான்மை போன்றவை சிறிலங்காவில் வாழும் அனைத்து சமூகத்தவர்களும் சிறந்த ஒரு எதிர்காலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான மிகமுக்கிய வரலாற்றுப் பாடங்களாக உள்ளன.

 

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தை விட தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற யுத்தமானது மிகவும் சிக்கலானது. தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கும் வேறு நாடுகளிலிருந்து குடியேறிய வெள்ளையினத்தவர்களுக்கும் இடையில் மோதல் உருவானது. இது நிறவெறியை அடிப்படையாகக் கொண்டதாகும். இவ்விரு சமூகத்தவர்களுக்கும் இடையில் பொருளாதாரம் மற்றும் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட மிகப்பெரிய வேறுபாடுகள் காணப்பட்டன.

 

இனவெறி உணர்வுகள் மிகவும் ஆழமானதாகவும், மீளிணக்கம் செய்வதற்கு மிகவும் கடினமானதாகவும் காணப்படுகின்றன. சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கிடையில் இன வேறுபாடுகள் இல்லை. இவர்கள் அனைவரும் ஒரேவிதமான 'இன' சாயல்களிலிருந்தே வருகிறார்கள் எனக் கருதமுடியும். மலையகத் தமிழர்களின் பொருளாதாரமானது ஏனைய சமூகத்தவர்களை விடக் கொஞ்சம் குறைவானதாகும்.

 

தென்னாபிரிக்காவைப் பொறுத்தளவில், பெரும்பான்மை சமூகத்தவர்கள் மீது சிறுபான்மை சமூகத்தவர்கள் நேரடி அடக்குமுறைகளை மேற்கொண்டனர். சிறுபான்மை சமூகத்தவர்கள் தென்னாபிரிக்காவின் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர். இதனால் இவர்கள் நேரடியாக பெரும்பான்மை சமூகத்தவர்களான கறுப்பினத்தவர்கள் மீது தமது அடக்குமுறைகளை மேற்கொண்டனர். இதுவே 'தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கொள்கை' என்கின்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டது. மொழியியல் ரீதியாக நோக்கில் 'நிறவெறி' என்பது 'தனிமைப்படுத்தல்' எனக் கருதப்படுகிறது. அரசியல் ரீதியாக நோக்கில் 'இனவாதம்' என்பதே இதன் கருத்தாகும். ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தளவில் இது வேறுபட்டதாகும்.

 

சிறிலங்காவைப் போல 1994ல் தென்னாபிரிக்காவில் பெரும்பான்மை சமூகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிறுபான்மை ஆட்சி நடைபெற்ற போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருந்தது. எனினும், நெல்சன் மண்டேலாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அவரது தலைமைத்துவம் போன்றன பெரும்பான்மை கறுப்பினத்தவர்களுக்கும் சிறுபான்மை வெள்ளையினத்தவர்களுக்கும் இடையில் நிறவெறி ஆட்சிக்குப் பின்னான பிறிதொரு மோதல் ஏற்படுவதைத் தவிர்த்தது. இதற்கு அடிப்படையில் நெல்சன் மண்டேலாவுக்கே நன்றி சொல்ல வேண்டும். நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவை ஒரு 'வானவில் தேசமாக' மாற்றவேண்டும் என்பதை தனது இலட்சியமாகக் கொண்டிருந்தார்.

 

'வானவில் தேசம்' என்பது கறுப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களை மட்டும் கொண்டது எனக் கருதப்பட முடியாது. அதாவது வானவில்லில் பல நிறங்கள் உண்டு. நிறவெறி ஆட்சி நடைபெற்ற போதுகூட, தென்னாபிரிக்காவில் வெள்ளை, கறுப்பு மற்றும் இந்தியன் போன்ற பல்வேறு பாகுபாடுகள் காணப்பட்டன. இந்தப் பாகுபாடுகள் நிறவெறி ஆட்சி முடிவடைந்ததன் பின்னரும் தென்னாபிரிக்க மக்களிடையில் காணப்பட்டது. ஏனைய மக்கள் கலாசாரம், மொழி மற்றும் மதம் போன்றவற்றில் வேறுபட்டவர்கள் எனக் கருதப்பட்டனர். தென்னாபிரிக்காவின் கறுப்பினத்தவர்களுக்குள் பல்வேறு 'இனக்குழுமங்கள்' காணப்பட்டன. இதேபோன்று வெள்ளையினத்தவர்களுள் 'ஆபிரிக்கன், ஆங்கிலேயர் மற்றும் ஏனைய குழுக்கள்' எனப் பல்வேறு வேறுபட்ட இனக்குழுமங்கள் காணப்பட்டனர். இவர்கள் எல்லோரும் நெல்சன் மண்டேலாவின் 'வானவில் தேசத்திற்குள்' உள்ளடங்குகின்றனர்.

 

தென்னாபிரிக்காவின் 'தாய்நாடு' எண்ணக்கருவானது சிறிலங்காவை விட வேறுபட்டதாகும். வெள்ளையினத்தவர்களிடமிருந்து கறுப்பினத்தவர்களை வேறுபடுத்துகின்ற நிறவெறியின் ஒரு பகுதியாக இது காணப்பட்டது. ஆனால் தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி தோல்வியுற்றதால் இந்த நிறவெறிப் பாகுபாடும் முடிவுக்கு வந்தது. தென்னாபிரிக்காவின் பொருளாதாரத்தை எடுத்துப்பார்த்தால், கறுப்பினத் தொழிலாளர்கள் அல்லது கறுப்பின நடுத்தர வர்க்கத்தவர்கள் இல்லாது தொழிற்சாலைகளையோ அல்லது சேவைத் துறையையோ கொண்டு நடாத்த முடியாதிருந்தது. இதனால் தென்னாபிரிக்காவின் பொருளாதார அபிவிருத்திக்கு கறுப்பினத்தவர்களின் ஒத்துழைப்பு தவிர்க்க முடியாததாகக் காணப்பட்டது. இதனால் நிறவெறி ஆட்சி என்பதும் அவர்களின் தாய்நாட்டு எண்ணக்கரு என்பதும் நடைமுறைக்குச் சாத்தியமற்றதாகக் காணப்பட்டது. 1980களில், தென்னாபிரிக்காவானது ஆபிரிக்கக் கண்டத்தில் மிகவும் முதன்மையான பொருளாதார வலுமிக்க நாடாக பரிணாமம் பெற்றது.

 

தென்னாபிரிக்காவில் நிறவெறி என்பது கொலனித்துவம், மற்றும் இனவாதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இனவாதம் என்பதை எடுத்துக் கொண்டால் ஜேர்மனியில் கிட்லரின் ஆட்சியின் பின்னர் தென்னாபிரிக்கா இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது. சிறிலங்காவில் இவ்வளவு மோசமான பாரபட்சங்கள் மற்றும் கொலனித்துவ ஆட்சியின் கீழ் இவ்வாறான அடக்குமுறைகள் காணப்படவில்லை. புராதன மற்றும் மத்திய சிறிலங்காவில், மக்கள் மட்டத்தில் அனைவரும் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்ந்தனர். ஆனால் அரசியல் மட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றன. கொலனித்துவத்திற்கு முன்னான சிறிலங்காவில் மதச் சுதந்திரம் என்பது எப்போதும் மதிக்கப்பட்டது.

ஆனால் தென்னாபிரிக்காவைப் பொறுத்தளவில் கடந்த காலங்களில் இனங்களுக்கிடையில் அமைதியும் சமாதானமும் காணப்படவில்லை. ஆனால் மண்டேலா தனது மனிதாபிமான கருத்தியலின் அடிப்படையில் தென்னாபிரிக்காவில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்கினார். இவர் ஆபிரிக்க தேசிய காங்கிரசைச் சேர்ந்த தனது தோழர்கள் மற்றும் வெளியிலிருந்த பல்வேறு தரப்பினர்களையும் ஒன்றுசேர்த்து தென்னாபிரிக்காவில் அமைதியை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

 

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகளாக அரசியற் கைதியாக இருந்ததன் மூலம் மட்டுமன்றி தனது கடுமையான உழைப்பின் மூலம் தனது நாட்டு மக்களின் மனங்களிலும் உலக மக்களின் மனங்களிலும் தனியான இடத்தைப் பிடித்துக்கொண்டார். தென்னாபிரிக்காவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் நெல்சன் மண்டேலா கடுமையாக உழைத்தார். 1994ல் தென்னாபிரிக்காவில் முதலாவது ஜனநாயகத் தேர்தல் இடம்பெற்ற போது வன்முறை ஏற்பட்டது. ஆனால் நெல்சன் மண்டேலாவின் காலத்திற்குத் தகுந்த மற்றும் அவரது புத்திசாதுரியத் தலையீட்டால் இந்த வன்முறை தோல்வியுற்றது.

 

அதாவது புதிய தென்னாபிரிக்காவானது முற்றிலும் வன்முறைகளிலிருந்தும் தவறுகளிலிருந்தும் மீண்டுவிட்டதாகக் கருதமுடியாது. மனித உயிரினத்தின் சாத்தியமான தகைமைக்கும் ஆளுமைக்கும் அப்பால் இவ்வாறான வன்முறைகள் ஏற்பட முடியும். ஆனால் நீண்டகால நிறவெறி ஆட்சிக் காலத்தில் அடக்கப்பட்டிருந்த தென்னாபிரிக்க பெரும்பான்மை சமூகத்தவர்கள் தம்மை அடக்கிய சிறுபான்மையினருக்க எதிராக வன்முறைகளில் இறங்குவதைத் தடுப்பதற்கு நெல்சன் மண்டேலா அளப்பரிய பங்காற்றினார்.

 

"மக்கள் குற்றங்களை இழைக்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் ஆட்சி முறைமைகள் மக்களை விட அதிகூடிய குற்றங்களை இழைக்கின்றன. நாங்கள் அனைவரும் ஆட்சி முறைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளோம்" என நெல்சன் மண்டேலா குறிப்பிட்டிருந்தார்.

 

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி இடம்பெற்ற போது இறுதியாக அதிபராகக் கடமையாற்றிய F,W,De.கிளார்க்கின் (F. W. de Klerk) மனவுறுதியை நெல்சன் மண்டேலா புகழ்ந்து பாராட்டியிருந்தார். கிளார்க்கின் மனவுறுதி மற்றும் நடைமுறையை ஏற்றுக்கொள்கின்ற இவரது பண்பு போன்றனவே விரைவில் தென்னாபிரிக்கா சுதந்திரம் அடைவதற்கு வழிசமைத்ததாகவும், இல்லாவிட்டால் சிலவேளைகளில் தனது இறப்பின் பின்னர் தான் தென்னாபிரிக்கா சுதந்திரம் அடைந்திருக்க முடியும் எனவும் நெல்சன் மண்டேலா குறிப்பிட்டுள்ளார்.

 

மண்டேலா நீதியை மிக ஆழமாக உணர்ந்திருந்தார். 'பழிதீர்த்தல்' என்பதன் மூலம் நீதியைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதில் மண்டேலா உறுதியாக இருந்தார். ஆனால் உண்மை மற்றும் பொருத்தமான இழப்பீடுகளின் ஊடாக 'தவறுகளைத் திருத்துதல்' மற்றும் 'பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமளித்தல்' போன்றவற்றின் ஊடாக நாட்டில் நீதியை நிலைநாட்டுவதில் மண்டேலா வெற்றி பெற்றார்.

 

தென்னாபிரிக்காவில் 'உண்மை மற்றும் மீளிணக்கப்பாட்டிற்கான' நடவடிக்கையில் நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து பேராயர் டெஸ்மண்ட் ருற்று தனது முக்கிய பங்களிப்பை வழங்கினார். பேராயரின் உண்மையான விசாரணைகளின் இறுதித் தீர்வுக்கு அமைவாக மண்டேலா மிகவும் உறுதியுடன் தனது நகர்வுகளை மேற்கொண்டார். இதற்கமைவாக சட்ட ஆட்சியை நிலைநிறுத்தினார். தனது சொந்த மனைவி அல்லது சொந்தக் குடும்ப உறவுகள் எவ்வாறான தவறுகளை இழைத்தாலும் கூட, தனது உறவுகள் என்கின்ற எவ்வித பாரபட்சமும் காண்பிக்காது அனைவருக்கும் தண்டனை வழங்குவதிலும் தென்னாபிரிக்காவில் நீதியை நிலைநிறுத்துவதிலும் மண்டேலா தன்னை அர்ப்பணித்தார்.

 

தென்னாபிரிக்காவில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டுவருவதில் உள்ளக மற்றும் வெளிக் காரணிகள் அனுசரணையாகச் செயற்பட்டன. ஆனால் தென்னாபிரிக்காவின் ஜனநாய முறைமையை உருவாக்குவதில் உள்ளக சக்திகள் மிக முக்கிய பங்காற்றின. இதுவும் நெல்சன் மண்டேலாவின் விருப்பாகவும் இலட்சியமாகவும் இருந்தது.

 

1984 தொடக்கம் 1991 வரையான காலப்பகுதியில் ஜெனீவாவில் உலக பல்கலைக்கழக சேவையில் எனது பங்கை வழங்குவதில் நான் நல்வாய்ப்பைப் பெற்றிருந்தேன். இதன்மூலம் பாதிக்கப்பட்ட தென்னாபிரிக்கர்கள் மற்றும் நமிபியர்கள் மூன்றாவது நாடொன்றில் தமக்கான உயர்கல்வியைத் தொடர்வதற்கான புலமைப்பரிசிலைப் பெறமுடிந்தது.

 

1980களில் இந்தத் திட்டத்தின் கீழ் 14 நமிபியர்கள் சிறிலங்காவில் தமது உயர்கல்வியைத் தொடர்ந்தனர். உலகப் பல்கலைக்கழக அமைப்பின் மனித உரிமைகளுக்கான பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய போது தென்னாபிரிக்காவில் நிலவிய நிறவெறி ஆட்சிக்கு எதிராக உரையாற்றுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவ்வாறான பல்வேறு உரைகளின் போது நெல்சன் மண்டேலா விடுவிக்கப்பட வேண்டும் என்பதை நாம் எமது கோரிக்கையாக முன்வைத்தோம்.

 

தென்னாபிரிக்காவானது மீளிணக்கப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தனது உள்ளக நடவடிக்கையை ஆரம்பித்தது. இதன்மூலம் தனது நாட்டில் நிலையான அமைதியை எட்டமுடிந்தது. இதேபோன்று சிறிலங்காவும் தென்னாபிரிக்காவின் அனுபவத்தை உதாரணமாகக் கொண்டு தனது நாட்டில் அமைதியை ஏற்படுத்த முன்வரவேண்டும். பாரபட்சங்கள், பிரிவினைகளைக் களைந்து மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சிறிலங்காவில் உள்ள அனைத்துத் தரப்பினரும் தமக்கிடையே விட்டுக்கொடுப்புக்களையும் சமரசங்களையும் மேற்கொண்டு நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும்.

 

இதற்கு நெல்சன் மண்டேலா முதன்மையான எடுத்துக்காட்டாக வழிகாட்டியாக உள்ளார். சிறிலங்காவானது தென்னாபிரிக்கா போன்று உள்ளகத் தரப்புக்களை ஒன்றிணைத்து நாட்டில் நீதியை நிலைநாட்ட வேண்டும். ஆனால் சிறிலங்காவோ அல்லது ஏனைய நாடுகளோ தேவையேற்படின் வெளித்தரப்பினரின் உதவியை நாடமுடியும். சாத்தியப்பாடான வெளிச்சக்திகளின் மனவுறுதியைப் பயன்படுத்த முடியும்.

 

தென்னாபிரிக்காவானது தனது நாட்டில் மேற்கொண்ட சாத்தியப்பாடான மீளிணக்கப்பாட்டு முயற்சியின் ஊடாக இன்று மிகவும் போற்றத்தக்க வரவேற்கத்தக்க ஜனநாயக அரசியல் யாப்பைக் கொண்டு ஆட்சி நடாத்தும் ஒரு நாடாக, அதிகாரங்களைப் பகிர்ந்து, சட்ட ஆட்சியைப் பின்பற்றும் ஒரு நாடாக விளங்குகிறது. இங்கு சுயாதீன நீதிச் சேவை உள்ளது. பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உரிமைகளுக்கு சமவாய்ப்பை வழங்குகின்ற மனித உரிமை முறைமை தென்னாபிரிக்காவில் நிலவுகிறது.

 

இதேபோன்று இங்கு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சமமாக மதிக்கப்படுகின்றன. இவை நெல்சன் மண்டேலாவினதும் அவரது தோழர்களினதும் விடாமுயற்சியின் பயனாக இவர்களின் தூரநோக்கால் இன்று செயலுருப்பெற்றுள்ளது. இன்று தென்னாபிரிக்காவின் பொருளாதாரமானது ஒரு முன்னோடியான பொருளாதாரமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் நெல்சன் மண்டேலா என்கின்ற அற்புத மனிதனின் இழப்பானது பல்வேறு அடக்குமுறைகளிலிருந்தும் மீண்டெழுந்துவரும் நாடான தென்னாபிரிக்காவுக்கு பெரும் இழப்பாகவே உள்ளது.

 

நெல்சன் மண்டேலாவால் கட்டியெழுப்பப்பட்ட தென்னாபிரிக்காவின் வரலாற்றிலிருந்து சிறிலங்கா பின்வரும் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்:

 

01.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இங்கு மீளிணக்கப்பாடு என்பது முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும். பொருளாதாரம் என்பது மீளிணக்கப்பாட்டிற்கு ஒரு ஆதரவுக் காரணியாக உள்ளது என்பது உண்மையாகும். ஆனால் அடிப்படைக் காரணியல்ல.

 

02.

மீளிணக்கப்பாடு என்பது அரசியற் தலைவர்களைப் பொறுத்தளவில் ஒரு அரசியல் விவகாரமாகும். ஆனால் மக்களுக்கு இது ஆதரவு வழங்குகிறது. வெளித்தரப்பின் செல்வாக்குகளுக்காக காத்திருக்காது சிறிலங்காவில் உள்ள தலைவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தம்மால் இயன்றளவுக்கு பங்களிப்பை வழங்க வேண்டும். நெல்சன் மண்டேலா தானாகவே முன்வந்து தென்னாபிரிக்காவின் விடிவுக்காகச் செயற்பட்டது போன்று சிறிலங்காவின் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் முதன்மைப் பங்கையாற்ற வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

 

03.

கிளார்க்குடன் நெல்சன் மண்டேலா நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது போன்று சிறிலங்காவிலும் பாதிக்கப்பட்ட சமூகத்தலைவர்களுடன் இடைத்தரகர்களின்றி பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

04.

நீதி என்பது அடிப்படையானது. நீதி என்பது பழிவாங்குதல் எனக் கருதப்பட முடியாது. ஆனால் பிழைகள் மற்றும் தவறுகளைத் திருத்தி உண்மை மற்றும் பொருத்தமான இழப்பீடுகளின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

 

05.

மீண்டும் நாட்டில் வன்முறைகள் உருவாக வழிவகுக்கப்படக் கூடாது. இது நெல்சன் மண்டேலாவிடமிருந்து கற்றுக் கொள்ளப்பட வேண்டிய அடிப்படைகளாக உள்ளன.

 

*Dr. Laksiri Fernando: Professor of Political Science and Public Policy, is a specialist on human rights having completed his PhD on the subject at the University of Sydney. His major books include, Human Rights, Politics and States in Burma, Cambodia and Sri Lanka; A Political Science Approach to Human Rights; Academic Freedom 1990; Police Civil Relations for Good Governance; Sri Lanka’s Ethnic Conflict in the Global Context among others.

 

Having served as Dean, Faculty of Graduate Studies (FGS-Colombo), he is a promoter of postgraduate studies. He teaches ‘Research and Research Methodology’ and ‘Internal Conflict and

Conflict Resolution’ for undergraduates among other subjects. He is a Visiting Academic at the University of Sydney (Summer School) teaching ‘Ethnicity, Nationalism and Citizenship.’

His current research areas are: ‘Nationalism under Globalization’ and ‘Constitutional Solutions for Sri Lanka’s Ethnic Conflict.’