குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

ஆசான் திருவள்ளுவர் காட்டும் மெய்யுணர்தல்..!

07.11.கி.ஆ2013-தி.ஆ2044-மெய்யுணர்தல் எனில் உண்மையான் உணர்தல். இது எவ்விடத்தும் எக்காலத்தும் அழியாது நிற்பதை உணர்தலாகும். இதனைத் "தத்துவஞானம்' என வடநூலார் குறிப்பிடுவர். உலகம் பொறியுணர்வால் உணரப்படுவது. இறைவன் மன உணர்வால் உணரப்படுகின்றவன். இருவகை உணர்வுகளாலும் உலகையும் இறைவனையும் உணரும் தன்மையது உயிர். இம்முப்பொருள் உண்மையினை மன உணர்வால் உணர்தல் மெய்யுணர்தலாகும் என்கின்றனர் சான்றோர் பெருமக்கள்.

மெய்யுணர்தலில் மனமே அடிப்படை. மனம் ஒருபொருட்கண் மன்னியிருத்தலும் மன்னாதிருத்தலுமாக இரு நிலைகளிலும் விளங்குகிறது. உயிரையும் உடம்பையும் அலைப்பது மனமே. தானிருந்த இடத்திலிருந்தவாறே ஆட்டுவிக்கிறபொருள் மனதைத் தவிர வேறில்லை. மனதைப் பொறுத்தே அது உடையானுக்குப் பெருமையும் சிறுமையும் உண்டாவதாகும். இத்தகைய மனம் செம்மையுற்றால் உயிர்கள் நன்மை பெறும் என்பதை "மனமது செம்மையுற்றால் மந்திரம் செபிக்க வேண்டா' எனும் தொடரால் அகத்தியர் வலியுறுத்துகிறார்.

கடலலையாய் அலையாது, தெளிவான நிலையில், பன்நூலறிவால் நிறைந்து, குற்றமற்றதாய் விளங்கும் மனம் முக்தியுலகிற்கு வழிகாட்டும் என்கிறது திரிகடுகம். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றில்லாமல் எது உள்ளது, எது இல்லது, எது உண்மை, எது பொய்மை எனக் கண்டறிதலுக்குச் சிறப்புப் பண்புகள் அமையப்பெற்றிருக்க வேண்டும். நடுநிலைமை, பற்றற்ற தன்மை, தூயமனம், அருளுள்ளம் உடைய சான்றோர்க்கே அது சாலும்.

அனைத்துப் பொருள்களுக்கும் நிகழ்வுகளுக்கும் தோற்றத்தாலன்றி உள்ளமைந்த மெய்ப்பொருள் என்பதொன்று உண்மை. இதை உணர்தலில் ஏற்படும் தடையே முரண்பாடுகளின் தோற்றம். விழுமிய எண்ணமுடையோர் தம் அறிவாற்றலால் காணும் பொருள்களில் செம்பொருளை உணர்ந்து நல்வழி காட்டுவர். மெய்யுணர்தல் என்பதற்கு,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள்-355)

எனும் குறட்பாவில் திருவள்ளுவர் விளக்கம் தருகிறார். எப்பொருள் எத்தன்மை உடையதாகத் தோன்றினாலும் அந்தத் தோற்றத்தை உண்மையெனக் கொள்ளாமல், அதன் மெய்த்தன்மையைக் காண்பதே மெய்யுணர்தலாமென்பது இக்குறட்பாவின் கருத்து. உலகோர் ஒவ்வொரு பொருளுக்கும் கற்பித்து வழங்கும் கற்பனைகளை விட்டுவிட்டு, அதன்கண் உள்ள உண்மையைக் காண முயல வேண்டும். இதை ஒரு சொற்றொடர் மூலம் பரிமேலழகர் தெளிவாக்குகிறார்.

கோச்சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனக்கூறுமிடத்து, அரசன் என்பதோர் ஜாதியும், சேரமான் என்பதொரு குடியும், வேழ நோக்கினை உடையான் என்பதொரு வடிவும், சேய் என்பதொரு இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதொரு சிறப்புப் பெயரும் ஒரு பொருளின்கண் கற்பனையாகலின், அவ்வாறுணராது, நிலம் முதல் உயிரீறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து அவற்றை நிலம் முதலா தத்தம் காரணங்கள் ஒடுக்கிக்கொண்டு சென்றால், காரண, காரியங்கள் இரண்டுமின்றி முடிவாய் நிற்பதனை உணரலாம் என்கிறார். இதுவே மெய்யுணர்தலின் இலக்கணமாகும்.

மெய்யுணர்தலுக்கு மனம் அடிப்படையாதல் போல், அறியாமை அகற்றலும் அவசியத் தேவையாகும். அறிவுக்கு முரணானது அறியாமை. அதுவே துன்பகரமான பிறப்பிற்கும் முதல் காரணமாகிறது. எனவே, பிறப்பிலிருந்து விடுபட அறியாமையை நீக்க வேண்டும். அப்போதுதான் பொருள்கண்ணுள்ள உண்மைநிலை தெரியலாகும். அத்தெரிதலே அறிவாகும். இதனால்தான் வள்ளுவர் பிறப்பை பேதமை என்றும், பிறவாமையை சிறப்பென்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும் 
செம்பொருள் காண்ப தறிவு (குறள்-358)

பிறப்புக்கு முதற்காரணமாகிய அவிச்சை (அறியாமை) கெட, வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது என விளக்குகிறார் பரிமேலழகர்.

அறியாமையை நீக்குவதால் உணரப்படும் மெய்யுணர்தல் பிறப்பறுக்கிறது. அறிவுடையோர் தோற்றத்தாலன்றி பொருளின் மெய்த்தன்மை காணவே விழைவர். இதனால் அவர்கள் வீடுபேற்று நிலையடைவர். மெஞ்ஞாணக் குருவின் துணையோடு கசடறக்கற்று மெய்ப்பொருளைக் கண்டோர் பிறவாமை பெறுவர். ஒருவனுள்ளம் பொருளை ஆய்ந்தறிந்து அதன் முதற்பொருளை உணருமாயின் அவர் பின்னைப் பிறப்புண்டு என நினைக்க வேண்டா. இக்கருத்தை,

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 
மற்றீண்டு வாரா நெறி (குறள்-356)

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (குறள்-357)

என்னும் குறட்பாக்கள் விளக்குகின்றன.

"அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என மானிடப் பிறப்பின் உயர்வை ஒளவையார் போற்றியுரைப்பார். பிறப்புக்குப் பெருமை தருவது அறிவே. அறிவினால் ஏற்படும் மெய்யுணர்வு இல்லையேல், மனிதப் பிறப்பும் மதிப்பற்றதாகிவிடும் என்பதை,


பொருளல் லவற்றைப் பொருளென்று உணரும் 
மருளான்ஆம் மாணாப் பிறப்பு (குறள்-351)

எனும் குறளால் திருவள்ளுவர் உறுதிபடக் கூறுகிறார்.

பிறப்பிலும் வருத்தும் நோய்கள் பல உள்ளன. அவை வினைப்பயன்களாலும் பிறப்பாலும் தொடர்பவை. இவை ஐவகையாயினும் முதன்மையாகக் கருதத்தக்கவை அறியாமை, ஆசை, சினம், எனும் மூன்றே, ஒருவரிடத்து இம்முப்பெரும் குற்றங்களும் இல்லாது போயின், அவரைப் பிறவித் துன்பம் அணுகாது.

காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன் 
நாமம் கெடக்கெடும் நோய் (குறள்-360)

எனும் குறள், இம்மூன்றினது நாமம் போக வினைபோம் என்கிறது.

எவ்வகையில் நோக்கினும் வள்ளுவர் காட்டும் மெய்யுணர்தல் அறியாமையை நீக்கி, அறிவால் செம்பொருள் காண வழிகாட்டுகிறது. அதன் நிமித்தமாய் துன்ப மயமான பிறப்பினின்று நீங்கி, பிறவாமை அடைய உதவுகிறது.

- தமிழ்ப் பெரியசாமி
— mit Ganesh Ganesh.
Gefällt mir ·  · Teilen
  • Murugaverl Poonagari Ponnampalam