குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

ஊடக அறமும் தமிழ் ஊடகங்களும் நாகேஸ் நடராசா இக்கருத்தினை குமரிநாடு.நெற் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே

எழுதிய ஒரு இணையம் பலபேயர்களில். 02.10. கி.ஆ 2013-15.09.தி.ஆ2044-அது ஒரு சமாதா னப்  பேச்சுவா ர்த் தைக் காலம். எத்தனையாம் கட்டப் பேச்சுவார்த்தை என்பது ஞாபகம் வரவில்லை.

பேச்சுவார்த்தை க்கு சென்ற நன் பருக்கும் ஞாபகம் இல்லையாம். ஆனால் அது   தாய்லாந்தில் நிகழ்ந்ததாக நினைவு இருக்கிறது என்று மட்டும் சொ ன்னார்.இதனை வாசித்து தமிழ் ஊடகவிய ளார்களின் தரங்களை அறியுங்கள்.நுால் என் றால் என்னென் று தெரியாத வர்கள், சிற்றிதழ் கட்டுரைவகைகள் தெரியாதவர்கள்  ஊடக வியலாளர்கள் என்றாகின்றார்கள்.

அந்த தொடர் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் அனுப வங்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட நாட்களை இப்போது இந்தக் கட்டுரைக்காக மீட்டுப் பார்க்கிறேன்.

அரசாங்கப்பிரதிநிதிகளும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் பேச்சில் ஈடுபட்டு அது முடிவுற்றபின் தனித்தனியான ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவது வழமை. அந்த வகையில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தார். அப்போது  அவரை நோக்கிப் பல்வேறு கேள்விகள் தொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவ்வேளையில்  வழமையாகக்  குண்டக மண்டக்க கேள்விகளைக் கேட்டு கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்கு வெறுப்பேற்றும்  ஒரு ஊடகவியலாளர் (இப்பொழுதும் இங்கே கொழும்பில்தான் அவர் இருக்கிறார்) தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு குறித்த ஒரு விடயம் தொடர்பாக இப்படிச் சொல்கிறது ஆனால் நீங்கள் வேறொரு மாதிரிச் சொல்கிறீர்களே எனக் கேட்டார். அன்ரன் பாலசிங்கமோ  அந்தக் கேள்விக்கு முக்கியத்துவம் கொடுக்காது அடுத்த விடயத்திற்கு சென்றார். ஊடகவியலாளரோ விடாப்பிடியாக  அவர்கள் ஒன்று  சொல்கிறார்கள் அதற்கு  நீங்கள் என்ன சொல்கிறீர்கள் எனப் பாலசிங்கத்திடம் கேட்க அவர் அதனையும் சமாளித்துச் சரி அதுக்கென்னடாப்பா அதுபற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனச் சொன்னார்.

மூன்றாம்  முறையாகவும்  ஊடகவியலாளர் அதே கேள்வியைக்கேட்கக் கடுப்பான பாலசிங்கம்  அவர்கள் "கிழட்டுப் பிள்ளைகள் அவர்களால் தாங்கள் நினைத்தபடி நடக்க முடியாது  நாங்கள் சொல்கிறபடியே அவர்கள் நடக்க வேண்டும்" எனச் சொல்லி விட்டு அடுத்த விடயத்திற்கு சென்று விட்டார். அடுத்த நாள்  குறித்த ஊடகவியலாளர்  கடமையாற்றிய ஊடக நிறுவனத்தின் அனைத்து மொழிச் செய்திகளிலும் பாலசிங்கம் சொன்ன "அவர்கள்  நினைத்தபடி எதனையும் செய்ய முடியாது. நாம் சொல்வதனைத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ய வேண்டும்"  என்ற செய்தி தலைப்புச் செய்தியாக ஒலி ஒளி பரப்பப்பட்டது. இச் செய்தியினைத் தொடர்ந்து மறுநாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி "நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளை அல்ல" என ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதுவே ஆனந்தசங்கரிக்கும் விடுதலைப் புலிகளுக்குமான  தீராத பகையின் ஆரம்பமாக அமைந்தது. இந்த விடயத்தை கவலையுடன் சொன்னவர் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட  எனது ஊடக நண்பர். இது தமிழர் அரசியலில் எத்தகைய பாதிப்புகளைக் கொண்டுவந்தது என்பதனை அனைவரும் அறிவர்.

குறித்த அந்த ஊடகவியலாளர்  இப்படி முறுகு நிலை தோன்றும் என்பது தெரிந்திருந்தும் ஏன் அப்படிச் செய்தார் என்பது இன்றுவரைக்கும் தெரியாதவொன்று.  ஆனால் அது பலத்த வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருந்தது. இந்த விடயம் திரு ஆனந்த சங்கரி அவர்கட்கு நினவிருக்கும் என நினைக்கிறேன். 

இதே போல் அண்மையில் நடந்த மற்றொரு சம்பவம்  மாவீரர் துயிலும் இல்லம் குறித்துத் தமிழ் ஊடகவியலாளர் கேட்ட கேள்வியும் அதற்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரனும் வழங்கிய பதிலும். இவை  பின்னர் திரிவு படுத்தப்பட்டு ஊடகங்களில் வெளிவந்தன.  இந்த விடயம் சம்பந்தமான உண்மையான நிலை என்ன என்ற தெளிவான செய்திக் குறிப்பொன்றை குளோபல் தமிழ்ச் செய்திகளில் பார்வையிட்டேன்.

இன்னுமொரு சம்பவம். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர்கள்  சந்திப்பொன்றில்  உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் பிரசன்னமாகி இருந்தனர். அதில் இளம் ஊடகவியலாளர்  ஒருவர் முக்கியமான பிரமுகர் ஒருவருக்கு அருகில் சென்று மைக்கை நீட்டி 'ஐயா எங்களுக்கு ஒரு பேட்டி  தாங்கோ' எனக் கேட்டு இருக்கிறார். அதற்கு அவர் 'கேள்விகளைக் கேளுங்கோ தம்பி நான் பதில் சொல்கிறேன்' எனக் கூறியிருக்கிறார். அதற்கு அந்த இளம் ஊடகவியலாளர் 'எதையாவது சொல்லுங்கோ ஐயா நான் பதிவு செய்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.  இதைக்கேட்டதும்  'நான் உமக்கு பேட்டி தரமாட்டேன்' என அவர் பதில் சொல்லியிருக்கிறார். இதனால் தடுமாறிபோன அவர்  'உங்களுடைய பெயர் என்ன' எனக்  கேட்டு இருக்கிறார். 'அப்ப என்னுடைய பெயர் தெரியாமலோ என்னிடம் பேட்டி எடுக்க வந்தனீர்' என அந்தப் பிரமுகர் கேட்டு இருக்கிறார். இது குறித்து அருகில் இருந்த முதிய ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பில் என்னிடம் கூறிய போது இப்படியானவர்களை ஏன் பயிற்சி இல்லாமல் ஊடக நிறுவனங்கள் முக்கியமான ஊடகச் சந்திப்புகளுக்கு அனுப்புகிறார்களோ தெரியவில்லை என மனம் நொந்துகொண்டார்.

உதாரணங்களுக்கு எடுத்த  இந்த 3 சம்பவங்களும் எங்கள் தமிழ் ஊடகங்கள் சில இன்றைக்கு என்ன நிலையில் உள்ளன என்பதைக்காட்டுகின்றன.

இது மட்டுமல்ல இன்று அரசியற் கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவோர் தங்களின் உள் முரண்பாடுகளை வெளிக் கொண்டுவர அல்லது பழிவாங்க தமக்கு தெரிந்த ஊடகங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். முன்னரும் இந்த நடைமுறை தொடர்ந்ததாயினும் அப்போது நுற்றுக்கணக்கில் இணையங்களும், சமூக வலைத்தளங்களும் இருந்திருக்கவில்லை.

அண்மைய மாகாண சபைத் தேர்தல் காலத்தை உன்னிப்பாக அவதானித்தவர்கள் நான் மேற்சொன்ன விடையத்தைப் புரிந்து கொண்டிருப்பர்.   தேர்தலுக்கு முன்பாகத்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  ஆசன ஒதுக்கீட்டில் ஈடுபட்டிருந்த போதும் பின்னர்  தற்போது தேர்தல் முடிவடைந்து வெற்றி பெற்ற பின்னரும்   தனிப்பட்டவர்கள் ஊடகங்களைத் தமது தேவைகளை  நிறைவேற்றப் பயன்படுத்துகின்றமையை அவதானிக்க முடிகிறது.

மட்டக்களப்பு சிவில் சமூகம், அம்பாறை நலன் விரும்பிகள், கிழக்குவாழ் தமிழ்ச் சமூகம், கிழக்கு புத்திஜீவிகள், கிளிநொச்சிவாழ் மக்கள், வன்னி நலன் விரும்பிகள், யாழ்ப்பாண மக்கள், சிவில் சமூகத்தவர் போன்ற பெயர்களில் உரிமை கோரப்படாத அனாமதேய பதிவுகள் வெளிவருகின்றன.   கணனி இருப்பவர்களால்  தட்டச்சுச் செய்யப்பட்டு போலிப் பெயர்களில் உருவாக்கப்பட்ட மின் அஞ்சல் மூலமாக இணையத்தளங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் விடையங்களைச் சில இணையங்கள் அப்படியே வெளியிட, அவை பின்னர் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு உண்மைச் செய்திகளாக உருவெடுத்துத்  தாண்டவமாடுகின்றன.

விடுதலைப் புலிகள் மற்றும் கூட்டமைப்பை எதிர்க்கும் தரப்பினரால் அனந்தி எழிலனை அரசாங்கமே திட்டமிட்டு அனுப்பி வைத்ததாக  மின் அஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.  சித்தார்த்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன்  முதலானவர்களை எதிர்க்கும்; தரப்பில் இருந்தும்  அவர்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் கருத்துக்கள்  மின் அஞ்சல்களினூடக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.  இத்தகைய புரட்டுச் செய்திகளின்  உண்மைத் தன்மையை அறியாத ஊடகங்கள் அல்லது அறிந்தும்  பரபரப்பை ஏற்படுத்தி அதிக வாசகர்களை  தமது இணையத்தில் வலம் வர வைப்பதற்காக இத்தகைய செய்திகளைப்  பிரசுரிக்கின்றன.

பெரும்பாலான தமிழ் இணைய ஊடகங்கள்  கிளுகிளுப்பையும் அருவருக்கத்தக்க செய்திகளையும் ஒலி ஒளி வடிவில் அல்லது எழுத்தில் வெளியிடுவதன் மூலமே வாசகர்களைக்  கவரமுடியும் என்ற நிலைக்குப்போய்விட்டன. பொய்யான பரபரப்பை ஊட்டக்கூடிய  விடுப்புகளைச் செய்தியாக்குவது அனேகமான ஊடகங்களின் அடிப்படை இலக்காக மாறிவிட்டது.  இங்கு மக்களின்  நலன் என்பது  ஊடகவியலின் அடிப்படை அம்சம் என்பது மறக்கப்பட்டு விட்டது.

தவிரவும் இப்போது உருவெடுத்துள்ள சில இணைய உலக ஜாம்பவான்கள் எனச் சொல்லப்படுபவர்கள் அல்லது மறுவடிவில் சொன்னால்  இணைய உலக மாபியாக்கள் எனப்படுபவர்கள்... வேறு வேறு பெயரில் பிராந்தியங்களின் பெயரில் 70ற்கு மேற்பட்ட இணையங்களை புளொக்குகளை நடத்துகின்றனர்.அந்த வலையமைப்பில் புலிகளுக்கு மிகச்சார்பான இணையங்கள், புலிகளுக்கு நேரடியான எதிரான இணையங்கள், அரசாங்கத்திற்கு ஆதரவான இணையங்கள், அரசாங்கத்திற்கு எதிரான இணையங்கள், சில கட்சிகளுக்கு சார்பான இணையங்கள், சில கட்சிகளுக்கு எதிரான இணையங்கள், ஆபாச இணையங்கள் என பலதரப்பட்ட இணையங்களை ஒரு சில ஊடக ஜாம்பவான்களே நடத்தும் முழுமையான வியாபாரம் விரிவடைந்துள்ளது. புலிகளுக்கு எதிரான செய்திகளாயின் அதற்குரிய இணையங்களில் அந்த செய்தியைப் பிரசுரிப்பார்கள். புலிகளுக்கு ஆதரவான செய்திகளாயின் அதற்குரிய இணையத்தில் பிரசுரிப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளேயே  சிலரை போட்டுத் தாக்க வேண்டும் எனில் அதற்குரிய இணையங்களில் பிரசுரிப்பார்கள். அவர்களை ஆதரிக்க வேண்டுமாயின் அதற்குரிய இணையங்களில் பிரசுரிப்பார்கள். ஆனால் இவையாவற்றையும் இயக்குபவர்கள் ஒருசில புள்ளிகளே என்பதனை சாதாரண வாசகர்கள் புரிந்து கொள்வதில்லை.

இதேவேளை நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் ஊடகங்களுக்கும் நல்லதொரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது. வடக்கில் மக்களின் நிலைப்பாட்டில் பிரதான பத்திரிகைகளால்  சில தாக்கங்களை ஏற்படுத்த முடியும்; ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலை தகர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஊடக பலத்தைக் கொண்டு தனிப்பட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களைத் தனிப்பட்ட சேறடிப்புகளை  மக்கள் கருத்தில் எடுத்திருக்கவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது.

கடந்த காலத்தில் விக்னேஸ்வரன் மீது  சில தமிழ் ஊடகங்களும் சில புலம்பெயர் இணையங்களும்  கடுமையான அநாகரீகமான விமர்சனங்களை அள்ளி எறிந்தன. அனந்தி எழிலன் மீது அவருக்கு எதிரானவர்கள்  சமூக வலைத்தளங்களில் சேறடித்தனர்.  தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு எதிரானவர்கள் அவருக்கு எதிராகக்  கடுமையான பிரச்சாரங்களை செய்திருந்தனர். ஆனால் மக்கள் இவர்கள் மூவருக்குமே அதிக விருப்பு வாக்குகளை வழங்கியுள்ளனர்.

இப்போ விருப்பு வாக்குகளை இடம்மாற்றியதாக ஒரு பிரச்சாரம் ஊடகங்கள் மூலமாக  முன்னெடுக்கப்பட்டுள்ளது.  ஈபீடீபியிலும்  விருப்பு வாக்குக்கள் இடமாற்றப்பட்டுள்ளதாக  கடுமையான பிரச்சாரங்கள் தொடர்கின்றன. விருப்பு வாக்குக்களை  மாற்றுவதற்கு ஒரு வேளை அரசாங்க கட்சிக்கு  சிறிய வாய்ப்பு இருந்திருப்பினும் கூட  கூட்டமைப்புக்கு அது எப்படி சாத்தியம் என்பதனை இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் இணையங்களோ அல்லது சமூக வலைத்தளப் பதிவாளர்களோ  சொல்வதில்லை.

மாகாண சபையின் அமைச்சர்கள் குறித்தும்  கிடைக்கவிருக்கும் இரு மேலதிக ஆசனங்கள்  குறித்தும் தெளிவான முடிவுகள் எடுக்கப்பட முன்பே  கூட்டணி அங்கத்தவர்களிடையே முரண்பாடுகளைத் தூண்டும் விதமான செய்திகள் ஊடகங்களினூடகப் பரப்பப்பட்டன.

முந்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் வெறுமனே ஊகங்களையும், வதந்திகளையும் சுய விருப்புகளையும் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் வெளியிடுகின்ற ஒரு துர்பாக்கிய சூழல் உருவாகி வருகின்றது.

இத்தகைய ஊடகச்செயற்பாடுகள் தமிழ் மக்களின் ஆரோக்கியமான சமூக  மற்றும் அரசியற்பயணத்திற்கு  உதவி செய்யுமா?  இக் கேள்விக்கு விடைகாணவேண்டிய முக்கியமான வரலாற்றுச் சந்தியில் நாம் விடப்பட்டுள்ளோம். 

மலினமான வக்கிரமான பாலியல் செய்திகளை வெளியிடுவதன் மூலமே வாசகர்களைக் கவர முடியும் என நினைக்கும்  ஊடகவியலாளர்கள் தமது சமூகத்தைப்பற்றி மிகத் தாழ்வான அபிப்பிராயத்தையே கொண்டிருக்கிறார்கள் என்றாகிறது. பரபரப்புகளுக்கும் கிளுகிளுப்புகளுக்கும் இடமளித்து விடுப்புக்களைச் செய்தியாக்கும் வேலையை போராட்ட காலத்தில் மறந்திருந்தோம் ஆனால் இப்போது அதுவே வேலையாகிவிட்டது அது மட்டுமன்றி மக்களின் உணர்வுளைத் தூண்டி உசுப்பேத்தும் குறுகிய நோக்கம் கொண்ட  அரசியற்  செய்திகள் கட்டுரைகளை வெளியிடவேண்டிய தேவை எக்காலத்திலும் இருந்திருக்கவில்லை என்பதுடன் அத்தகைய மாயமான்களைத் தோற்றுவித்ததும் ஒருவகையில் எமது போராட்டத்தை அழிவுக்கு இட்டுச் சென்றது  என்பதை ஊடகங்கள் உணரவேண்டிய காலமிது.

ஊடகங்களில் வெளியிடப்படும் விடையங்களில் (மொழி உட்படத்) தவறுகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை ஒத்துக்கொண்டு திருத்தும் பண்பை அனேகமான ஊடகங்களில் காண முடிவதில்லை. பாரபட்சமற்ற பக்கசார்பற்ற செய்திகளைச் செய்தியாகவே வெளியிடும் பண்பை நாங்கள் வளர்க்க வேண்டிய காலத்தில் நிற்கிறோம். வெளியிடப்படும் செய்திகளுக்கு யாராவது முறையான பண்பான மறுப்புக்களை வெளியிடும் போது அவற்றுக்கு உரிய மதிப்பளித்து வெளியிடும் ஊடக தர்மத்தைக் காணக்கிடைப்பதும் அரிதாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் மீது அனுதாபத்தைக் காட்டுவது போல நமது இணையங்கள் எத்தனை முறை படையினரால் பால்நிலைப்பட்ட வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஃ கொல்லப்பட்ட பெண்களின்  படங்களைப் பிரசுரித்திருப்பார்கள். அவர்களின் நெருங்கிய உறவினர்களின் மனோ நிலையைப்பற்றி இவர்கள் புரிந்திருப்பார்களா?

இவையெல்லாம் தமிழ் ஊடகங்கள் குறிப்பாக  பெரும்பாலான அச்சு ஊடகங்கள், ஒலி, ஒளி ஊடகங்களை விடவும் பெரும்பாலான  இணைய ஊடகங்கள்  மிகத் தெளிவான  ஊடக நெறிமுறையையும் அறத்தையும் கடைப்பிடிக்கவேண்டிய தேவையைப் புலப்படுத்தி நிற்கின்றன.