குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

காணாமல் போன சிறுவர்களுக்காக வடக்கில் பல வீடுகள் இன்னமும் காத்துக் கொண்டிருக்கின்றன. பார்த்தீபன்

01.10.கி.ஆ2013-14.09.தி.ஆ2044- ஆரியருடைய கிருச்ணர் ,அனுமான் கோவில்களை பார்க்கிலும் விகாரை பறு வாயில்லை ஆனால் அரசியல் பிரச்சனை.கிழக்கு மாகாண சபையில் இன்று கூச்சல் குழப்பம்-தமிழினம் எடுப்பா ர்கைப்பிள்ளையா!

இன்று உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினமாகும். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலா க வடக்கு கிழக்கில் நடந்த போரின் காரணமாக தமிழ் பேசும் சிறுவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடு க்கின்றார்கள். போர் முடிந்தபோதும் அதன் விளைவுகள் முடியமையினால் எதிர்காலச் சந்ததியினரான சிறுவர்கள் மீது அவை பெரும் பாரச் சுமைகளாக இருக்கின்றன. 

கொல்லப்பட்ட சிறுவர்கள்

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்ட கதைகள் இன்னமும் தாய்மாரிடம் கொடியதொரு நிகழ்வுகளாக, மறக்க முடியாதபடி நெஞ்சுக்குள் கிடக்கின்றன. சுகி மணியங்குளத்தில் வசிப்பவர். மணி அண்ணாவின் மகள் சுகியின் பெண் குழந்தைகள் இரண்டும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டிருந்தனர்.

இரண்டு குழந்தைகளும் முற்றத்தில் தாய் சுகியுடன் நின்றுகொண்டிருந்த பொழுது எதிர்பாராது செல்கள் வந்து வீழ்ந்ததில் குழந்தைகள் பிய்த்துப் போடப்பட்டனர். முதல் குழந்தை கோபிகாவுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இறுதிக்குழந்தை உடல் கிழிந்தபடி கத்திக் கொண்டிருந்தது.

குழந்தைகளின் தாயான சுகியும் செல் தாக்குதலில் பெரும் காயத்திற்கு உள்ளாகிக் கிடந்தாள். அவளது கண்களில் ஒன்றை செல் பிடுங்கிவிட்டது. இறுதிக் குழந்தை உயிரோடு கத்திக் கொண்டிருந்தாம். அம்மம்மா தண்ணி தாங்கோ! என்று அந்தக் குழந்தை கேட்டுக் கொண்டே இருந்தது. அம்மம்மா என்னைத் தூக்குங்கோ!! என்று கத்திக் கொண்டிருந்தது.

அந்தக் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. அது இறுதியில் இறந்து போனது. மூத்த குழந்தை கோபிகாவுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவள் ஏழு வயதுச் சிறுமி. அவள் எங்கேனும் உயிரோடு இருக்கிறளா? அல்லது அவளுக்கு அந்தக் களத்திலேயே ஏதும் நடந்ததா என்று யாருக்கும் தெரியவில்லை.

இப்படிததான் குழந்தைகளின் வரலாறு இருக்கிறது. முள்ளிவாய்க்கால் போரில் இப்படிப் பல பல குழந்தைகள் கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்கால் யுத்தம் என்பது ஏதும் அறியாத குழந்தைகளையும் படுகொலை செய்த மாபெரும் குற்றங்கள் நிரம்பிய யுத்தம். அது குழந்தைகளையும் சிறுவர்களையும் பலி எடுத்தது. தாயின் கருவில் இருந்த குழந்தைகளைகூட திட்டமிட்டுக் கொன்றுபோட்டது.

காணாமல் போன சிறுவர்கள்

திருவிழாவில் குழந்தைகள் காணாமல் போகும் அனுபவம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஆனாலும் காணாமல் போன குழந்தைகளை பெற்றோர் தேடிக் கண்டு பிடித்துவிடுவார்கள். அல்லது குழந்தைகள் பெற்றோர்களைத் தேடிக் கண்டு பிடித்துக் கொள்வார்கள். திருவிழாவிலே குழந்தைகள் காணாமல் போகும் அந்தக் கணங்கள் குழந்தைகளுக்கம் தாய்மாருக்கும் கொடியதொரு பதைபதைப்பாகவே இருக்கும்.

கவிஞர் புதுவை இரத்தினதுரை மாத்திரமல்ல, போராளி ஞானம் மாத்திரமல்ல, ஏழிலன் மாத்திரமல்ல, முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல சிறுவர்களும் காணாமல் போயிருக்கிறார்கள். சனல்4 வெளியிட்ட ஆவணப்படம் ஒன்றில் பல இளைஞர்களுடன் ஒரு சிறுவனும் பின்னால் கை கட்டப்பட்டு இருக்கிறான். அவன் பிறிதொரு படத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கின்ற காட்சியும் வெளியானது.

காணாமல் போன சிறுவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை பாலச்சந்திரன் போன்ற சிறுவர்களுக்கு யுத்த களத்தில் நடந்த கதைகள் உணர்த்துகின்றன. இரக்கமற்ற கொலைவெறிப் படைகள் சிறுவர்கள் என்றுகூட பார்க்காமல் அவர்களின் பிஞ்சு நெஞ்சில் துப்பாக்கியை வைத்து தமது கொலைவெறியை தீர்த்துக் கொண்டன.

அந்தப் பிள்ளை எங்கு போகும்? அதுக்கு என்ன தெரியும்? இப்பொழுது அது எங்கு இருக்கும்? என்று பெற்றவர்களும் உற்றவர்களும் பல சிறுவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் வீட்டில் இருந்தால் அந்த வீடு மகிழச்சியால் நிறைந்திருக்கும். அவர்கள் காணாமல் போன வீடுகளில் கண்ணீர்தான் நிறைந்திருக்கும். காணாமல் போன சிறுவர்களுக்காக வடக்கில் பல வீடுகள் இன்னமும் காத்துக் கொண்டிருக்கின்றன.

அங்கங்களை இழந்த சிறுவர்கள்

போர் சிறுவர்களை கொன்று குவித்துடன் தனது கோரத்தை முடிவுபடுத்தவில்லை. அவர்களை யுத்த களத்தில் காணாமல் போகச் செய்ததுடன் தனது கோரங்களை நிறுத்தவில்லை. அது நிறையச் சிறுவர்களின் அங்கங்களையும் பறித்திருக்கிறது. நேற்றும் கிளிநொச்சி நகரில் ஒரு தாய் ஒரு சிறுவனை அழைத்துச் செல்லுவதைப் பார்ர்தேன். அந்தச் சிறுவனுக்கு ஐந்து அல்லு ஆறு வயது மட்டுமே இருக்கும்.

அவனது வலது கையை காணவில்லை. ஒற்றைக் கையால் தனது தாயின் ஒரு கையை பிடித்தடி போய்க் கொண்டிருக்கிறான். இதுபோல பல சிறுவர்களை தினமும் காண நேரிடுகிறது. யுத்தம் அவர்களின் எதிர்காலத்திலிருந்து கையையும் காலையும் கண்களையும் பிடுங்கி எடுத்து விட்டது. அவர்கள் மிகவும் நெருக்கடிகளைச் சுமக்க வைக்கும ;எதிர்காலத்திற்குள் தள்ளி விட்டுள்ளது.

கயூட்சன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்கின்ற பதினான்கு வயதுச் சிறுவன். அவனுக்கு யுத்த களத்தில் ஒரு கையும் காலும் இல்லாமல் போயிற்று. கையையும் காலையும் இழக்கும்பொழுது அவனுக்கு பத்து வயது. அச் சிறுவனின் தந்ததைiயும் இராணுவத்தினர் வவுனியாவில் வைத்துச் சுட்டுக் கொன்றுவிட்டனர். இப்பொழுது அந்தச் சிறுவன் ஒரு பொய்க்காலை மாட்டியபடி நகரத்தில் நடந்து கொண்டிருக்கிறான்.

கிளிநொச்சி நகரப் பேரூந்து நிலையத்தடியில் ஊன்று கோல்களை ஊன்றியபடி நடந்து சென்று கொண்டிருந்தான் இன்னொரு சிறுவனை ஒரு நாள் கண்டேன். இத்தகைய சிறுவர்களை பார்க்கும் பொழுத அடி நெஞ்சில் ஏற்படும் அழுத்தத்தையும் துயரையும் எப்படிக் கட்டுப்படுத்துவது? யாரை நோவது? எங்கள் துயர நிலவரத்தின் சாட்சிகளாக இந்தச் சிறுவர்கள் எதையோ இழந்தபடி திரிந்து கொண்டிருக்கின்றனர்.



தாய் தந்தையரை இழந்த சிறுவர்கள்

தாயை அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்து தவிக்கும் எண்ணற்ற சிறுவர்களைச் சந்திருக்கின்றேன். அம்மாவின் அரவணைப்பை இழந்து தவித்துத் திரியும் சிறுவர்களின் நிலமை மிகவும் மோசமாக இருக்கின்றது. அவர்கள் அன்பை இழந்து தவிப்பதுடன் தாயின் வளர்ப்பையும் இழந்துள்ளனர்.

கிளிநொச்சி இரத்தினபுரத்தில் வசிக்கின்றார் தனுசன். இவருடன் மேலும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். தாயார் செல்லடியில் இறந்துவிட்டார். தாயார் இந்தக் குழந்தைகளின் படிப்பில் மிகவும் அக்கறையாய் இருந்தவர். அதனால் தனுசன் புலமைப் பரிசில் பரீட்சையில்கூட சித்தியடைந்தார்.

தாயார் இறந்த பின்னர் தந்தையார் மனமுடைந்து போனார். இதனால் குழந்தைகளின் படிப்பு சீரழிந்துவிட்டது. மூத்த மகனான தனுசன் இப்பொழுது படிப்பை விட்டு வாகனப் பழுது பார்க்கும் நிலையத்தில் வேலை செய்கின்றார். தாய் தந்தையை இழத்தல் என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றாக மாற்றி விடுகின்றது. அவர்களின் நம்பிக்கை மிக்க எதிர்காலத்தை இப்படித்தான் திசை திருப்பி விடுகின்றது.

பாடசாலை மட்டத்தில் கணக்கெடுக்கின்ற பொழுது ஒவ்வொரு பாடசாலையிலும் சுமார் 15 முதல் 70 வரையான பிள்ளைகள் தாயை அல்லது தந்தையை அல்லது இரண்டு நபர்களையும் இழந்துள்ளமை தெரிய வருகின்றது. இந்த எண்ணிக்கை சில பாடசாலைகளில் இன்னமும் அதிகமாகவும் உள்ளது. தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள் படிப்பை கைவிடுகின்ற நிலமை காணப்படுகின்றது.

தமிழ்ச்செல்வி கிளிநொச்சியில் விவேகானந்தநகரில் வசிக்கிறாள். அவள் கொடிய யுத்தத்தில் தனது தாயையும் தந்தையும் இழந்துவிட்டாள். தற்பொழுது தனது மிகவும் வயது முதிர்ந்த அம்மம்hவுடன் வசித்து வருகிறாள். தான் கண்ணை மூடிய பின்னர் அந்தச் சிறுமி என்ன செய்வாள் என்ற ஏக்கத்தில் இருக்கிறார் அந்த மூதாட்டி.

தாய் தந்தையரை இழந்த குழந்தைகளின் முகத்தில் அவர்களின் இழப்பின் வலி தெரிகின்றது. அவர்களின் மகிழ்ச்சியை யுத்தம் பறித்துவிட்டது. அம்மா அப்பா இல்லாத வீட்டையும் உலகத்தையுமே யுத்தம் பறிகொடுத்திருக்கின்றது. அது அவர்களை உளவியல் ரீதியாக கடுமையான பாதிக்கும் ஒரு சூழலுக்குள் தள்ளியுள்ளது.

துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு

அண்மையில் நெடுங்கேணியில் பாடசாலை சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி ஒருத்தியை இராணுவச் சிப்பாய் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் பிரதேசத்தில் நடந்தது. வன்புணர்வு செய்த  இராணுவச்சிப்பாயை அந்தச் சிறுமி நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினார்.

இதைப்போல அண்மையில் பிறந்து ஆறுமாதமே ஆனு பெண் குழந்தை ஒன்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்தது. இதையும் இராணுவத்தினரே செய்திருந்தாக கூறப்படுகின்றது. தெற்குப் பகுதியில் அழுத்கம பகுதியில் விடுமுறையில் சென்ற இலங்கை இராணுவ வீரர் ஒருவர் அங்குள்ள சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியிருந்தார்.

போரில் சிறுவர்களை மீட்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அரசாங்கள் வெளியிட்டது. ஆனால் மேற்குறிப்பிட்ட இந்த சம்பவங்கள் இராணுவத்தினர் சிறுவர்களை எப்படிக் கையாள்கின்றனர் என்ன நோக்கத்துடன் அணுகுகின்றனர் என்று உணர்த்துகின்றது. இத்தகைய சூழலிலேயே வடக்கு கிழக்குச் சிறுவர்கள் தொடர்ச்தும் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.

போருக்குப் பின்னர் சிறுவர்கள்மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து வருகின்றது. மேற்குறிப்பிட்ட சம்பவங்களின் பின்னரும் சிறுவர்கள் ஆபத்தான சூழலிலேயே வாழ்கின்றனர். அவர்கள் பாடசாலைக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் இராணுவத்தினரைத் தாண்டியே செல்ல வேண்டியுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான அநீதி

மேற்குறிப்பிட்ட விடயங்கள் ஈழத்துச் சிறுவர்களின் இன்றைய வாழ்க்கையாகவும் அவர்களுக்கு பரிசளிக்கப்பட்ட உலகமாகும் உள்ளது. இவைகளை வைத்துக் கொண்டே இன்றைய சிறுவர் தினத்தை மதிப்பிட வேண்டும். அதாவது உலகளவில் சிறுவர்களுக்கான உரிமையும் முக்கியத்துவமும் எப்படி இருக்கிறது என்றும் அது இலங்கையின் வடக்கு கிழக்கில் எப்படி இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும்.

குழந்தைகளிடையே புரிந்துணர்வையும் பொதுநிலைப்பாடடையும் கொண்டு வரும் நோக்கில் 1954இல் ஐக்கிய நாடுகள் சபையில் சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்படது. அத்துடன் 1989இல் உரிமைகளைப் பற்றிய கொள்ளை பிரகடனப்படுத்தப்பட்டது. 18 வயதுக்கு உட்பட்ட அனைவரையும் சிறுவர்கள் என்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பு அவசியம் என்ற அடிப்படையில் இந்தப் பிரகடனங்கள் செய்யப்பட்டன.

உலகத்தில் உள்ள அனைத்துச் சிறுவர்களுக்கும் அடிப்படை உரிமைகளை நினைவு கூறுதலும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருதல் என்பன இந்த நாளின் நோக்கமாகும். சிறுவர்களின் அடிப்படை உரிமைகளை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சிறுவர் தினத்தில் பேசப்படுகின்றது.

ஈழத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் வன்முறையின் உச்சமாகவும் மீறல்களின் உச்சமாகவும் ஐ.நாவால் சிறுவர்கள் தொடர்பில் கொண்டு வரப்பட்ட பிரகடனங்களைக் கடந்து நிற்கின்றது. ஈழச் சிறுவர்கள் கடந்த முப்பது வருடங்களாக இவ்வாறான துயரங்களை அனுபவித்துக் கொண்டே வருகின்றார்கள். இது தொடர்பிலான பல்வேறு ஆவணங்களும் சாட்சிகளும் உலகமெங்கும் கொண்டு செல்லப்படுகின்றன. ஈழச் சிறுவர்கள் எதிர்கொள்ளும் நிலவரம் உலகம் அறிந்ததே.

ஐ.நாவால் பிரகடனப்படுத்தப்பட்ட சிறுவர்கள் தினம் என்பது அதன் உண்மையான அர்தத்தை ஈழம் போன்ற நாடுகளில் கோருகின்றது. அதாவது சிறுவர்களுக்கான உரிமையை கோருகின்றது. சிறுவர்கள் இரத்தம் சிந்துகின்றனர். அவர்களுக்கு எதிராக துப்பாக்கிகள் நீட்டப்படுகின்றன. ஈழம் மாத்திரமின்றி இன மத முரண்பாடுகளும் வன்முறைகளும் உரிமைப் போராட்டங்களும் வெடித்த பல நாடுகளில் சிறுவர்களின் உரிமை இந்த நிலவரத்திலேயே இருக்கிறது.

உரிமைப் போராட்டத்தை ஒடுக்கவும் இனத்தை அழிக்கவும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களும் மேற்கொள்ளப்படுவதை பல்வேறு சந்தர்பங்களின் ஊடாக மதிப்பிட முடிகின்றது. சிறுவர்களை யுத்தத்தில் அழிப்பதிலிருந்து யுத்தத்திற்கு பிந்தைய சூழல் நிலவரங்கள் யாவுமே இதை தெளிவாக உணர்த்துகின்றது.

பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதியும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அதன் மூலமே யுத்த்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஈழச் சமூகத்திலிருந்து ஆரோக்கியமான அடுத்த சமூகத்தை உருவாக்க முடியும். முக்கியமாக,ஈழத்தைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாழ்க்கைமேம்படுத்துவதுடன் எதிர்காலச் சிறுவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத சூழலையும் உருவாக்க வேண்டியது அவசியமானது. அது ஈழத்தின் அரசியல் நிலவரத்திலேயே தங்கியிருக்கிறது.

வடமாகாண முதலமைச்சருக்கான நியமனக்கடிதத்தை சி.வி.விக்னேசுவரன் பெற்றுக்கொண்டார்.

வட மாகாண சபைக் கட்டிடம் யாழ் கைதடியில் - 15 ஆம் திகதி வட மாகாண சபையின் முதலாவது கூட்டம்

வடமாகாண சபைக்கான தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டவரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியிடமிருந்து  வடமாகாண முதலமைச்சருக்கான நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கை நேரம் முற்பகல் இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உத்தியோகபூர்வமான முதல்வர் நியமனத்தைப்பெற்றார் விக்கி! நியமன கடிதத்தை வழங்கினார் வடக்குஆளுநர் சந்திரசிறி!!

வடக்கு மாகாண சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி இன்று செவ்வாய்க் கிழமை வழங்கி வைத்தார். ஆளுநருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையே நேற்று  நடைபெற்ற சந்திப்பில் நியமனக்கடிதத்தை இன்று வழங்குவது என முடிவாகியது. இதன்மூலம் வடக்கு முதல்வராக விக்னேஸ்வரன் அரசினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்.


மெல்ல மெல்ல விரிவாக்கப்படும் கிளிநொச்சி விகாரை:


கிளிநொச்சி நகரத்தில் உள்ள பௌத்த விகாரை மெல்ல மெல்ல விரிவாக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சியை இலங்கை அரச படைகள் கைப்பற்றியவுடன் இங்கு ஒரு விகாரையை இராணுவத்தினர் அமைத்திருந்தனர். தற்பொழுது அந்த விகாரையை மேலும் விரிவாக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.



இந்த விகாரை கிளிநொச்சி நகரத்தின் பிரதான விகாரையாக விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. குறித்த இடத்தில் 1996இல் இராணுவத்தினர் கைப்பற்றிய பொழுது ஒரு இந்துக்கடவுள் சிலைiயை அகற்றிவிட்டு புத்தர்சிலை ஒன்றை வைத்திருந்தனர். பின்னர் அந்த இடத்தில் புலிகளின் வெண்புறா நிறுவனம் இயங்கியது.



மீண்டும் கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட பின்னர் இந்தப் பாரிய பௌத்த விகாரையும் பர்ணசாலையும் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கிளிநொச்சி நகரப் பகுதிகளில் முகாமிட்டுள்ள இராணுவத்தினரின் தேவைக்காக இந்த பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள இடங்களிலும் புத்தர் சிலைகளை வைத்திருக்கின்றனர். அத்துடன் பல முக்கிய சந்திகளிலும் புத்தர் சிலைகளை வைத்துள்மை இங்கு குறிப்பிடத்தக்கது. 

கிழக்கு மாகாண சபையில் இன்று கூச்சல் குழப்பம்-தமிழினம் எடுப்பார்கைப்பிள்ளையா!

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த பிரேரணைக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டதுடன் சபை நடவடிக்கையும் ஒத்திவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு அதன் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பான தனி நபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றினார்.

13வது திருத்த சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கு தென்னிலங்கை பேரினவாத அரசியல் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை முறியடிக்க வேண்டும் என்று இதன்போது அவர் வலியுறுத்தினார்.

சிறுபான்மையினரின் நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இதனை ஒழிப்பதற்கோ அல்லது 13வது திருத்த சட்டத்தில் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களை குறைப்பதற்கோ கிழக்கு மாகாண சபை ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் ஜெமீல் கேட்டுக் கொண்டார்.

இவரது இந்த உரையைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் குறித்த பிரேரணைக்கு தனது பலமான எதிர்ப்பை வெளியிட்டார்.

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்ட விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதால் அது குறித்து இப்போது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அது மாத்திரமல்லாமல் 13 ஆவது திருத்த சட்ட விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த சபையில் அது பற்றி விவாதிக்க முடியாது என்று தெரிவித்த முதலமைச்சர், இந்த விவாதத்தை நடத்துவதற்கு தன்னால் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீலுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது ஜெமீலுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். அதேவேளை முதலமைச்சருக்கு ஆதரவாக ஆளும் தரப்பு சிங்கள உறுப்பினர்கள் சிலர் கோஷமெழுப்பினர்.

“கிழக்கின் ஆட்சியை இன்றே மாற்றியமைப்போம்” ,“பொம்மை ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்” போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து, சிறிது நேரத்திற்கு தவிசாளர் ஆரியவதி கலப்பதி சபையை ஒத்திவைத்தார்.

இதேவேளை, இவ்விடயத்தில் எமக்கு அநீதியிழைக்கப்படுமானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து புதிய தவிசாளரைத் தெரிவு செய்வோம் என்றும் ஆட்சியை மாற்றியமைப்போம் என்றும் கடும் தொனியில் எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து முதலைமைச்சரும் தவிசாளரும் குறித்த பிரேரணையை விவாதிப்பதற்கு இணங்கி வந்தனர். அதன் பின்னர் ஒத்திவைப்புக்கப்பட்ட சபை தவிசாளரினால் மீண்டும் கூட்டப்பட்டு விவாதம் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.