குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நுால் எழுதுவதுபற்றி

வெளியில் இருந்து பல நூல்களைப் படித்துவிட்டு ஒரு நாடு, அங்கு வாழும் மக்கள் பற்றி எழுதுவதைவிட அந்த நாட்டைச் சுற்றிப்பார்த்துவிட்டு எழுதுவது வரவேற்கத்தக்கது. அப்படி எழுதும்போது அந்த எழுத்தில் வாய்மை இருக்கும். மேல் நாட்டவர்கள் ஒரு நாட்டைப்பற்றியோ அல்லது அந்த நாட்டின் வெவ்வேறு மாநிலங்கள் பற்றியோ எழுத வேண்டும் என்றால் அந்த நாட்டுக்கே சென்று மாதக்கணக்கில் அந்த மண்ணையும் மக்களது வாழ்க்கை முறையையும் நேரடியாகப் பார்த்து பட்டறிவோடு எழுதுகிறார்கள். அதற்கான பணச் செலவை சில அறக்கட்டளைகள் கொடுத்து உதவுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரளா சென்று அந்த மாநிலத்தைப் பற்றி ஒருவர் எழுதிய புத்தகத்தைப் படித்த நினைவு இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்களுக்கு இந்த வாய்ப்பும் வசதியும் இல்லை. தாமாகவே முயற்சி செய்து எழுத வேண்டியுள்ளது. மேலும் ஒரு மேல்நாட்டவர் எழுதும் நூல் பல்லாயிரக் கணக்கில் விற்பனை ஆகிறது. ஒரு புத்தகத்தை எழுதி கோடிக் கணக்கில் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள். அமெரிக்க சனாதிபதி ஓபாமா (1) Dreams from My Father: A Story of Race and Inheritance ; (2) The Audacity of Hope: Thoughts on Reclaiming … (3) Of Thee I sing - A Letter to my Daughters ஆகிய மூன்று நூல்களை எழுதியுள்ளார். அதன் மூலம் அவருக்கு ஆண்டு தோறும் கிடைக்கும் றோயல்ரி 4 மில்லியன் ஆகும்! இதே போல் ஹிலாரி கிளின்டன் எழுதிய Living History என்ற நூல் எழுதுவதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட முற்பணம் 8 மில்லியன். அந்தப் பணத்தில் நியூயோர்க்கில் ஒரு ஆடம்பர வீடு ஒன்றை வாங்கினார். தமிழர்களுக்கு இம்மாதிரியான வசதி வாய்ப்புக் கிடையாது. புத்தகம் எழுதினவர்தான் புத்தகத்தை வெளியிட வேண்டும். இந்தத் தொடர்கூட ஒரு நூலாக வந்தால் பலருக்கு - அடுத்த சந்ததிக்கும் - பயனாக இருக்கும். யூதர்களைப் பற்றித் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் மறைந்த வி.நவரத்தினம், பா.உ. EXODUS என்ற புத்தகத்தை அய்ம்பதுகளில் தமிழில் மொழிபெயர்த்து சுதந்திரனில் தொடராக வந்தது. அது நூல் உருப்பெற்றதாகத் தெரியவில்லை.