குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

காது-உயிரியல் கட்டுரை

 

செவி அல்லது காது (ear) என்பது ஒலியை உணரக்கூடிய ஒரு புலன் உறுப்பு ஆகும். மீன் தொடக்கம் மனிதர் வரை முதுகெலும்பிகளின் செவிகள் பொதுவான உயிரியல் தன்மையைக் கொண்டுள்ளன. எனினும் ஒழுங்கு மற்றும் சிற்றினங்களைப் பொறுத்து அமைப்பில் வேறுபாடுகள் உள்ளன.




செவி ஒலி அலைகளைப் பெற்று உணர்வது மட்டுமன்றி, உடல் சமநிலை உணர்வு தொடர்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. உடலின் ஐம்புலன்களில் செவி கேட்க உதவும் ஒரு கருவியாவும் அமைந்துள்ளது.

செவி என்பது சரியானபடி முழுமையான உறுப்பைக் குறிப்பதற்கோ அல்லது வெளியில் தெரியும் செவிப் பகுதியை மட்டும் குறிப்பதற்கோ பயன்படக்கூடும். பெரும்பாலான விலங்குகளில் வெளியில் தெரியும் செவியின் பகுதி இழையங்களினாலான மடல் ஆகும்.


இது புறச்செவி அல்லது செவிமடல் எனவும் அழைக்கப்படும். புறச்செவி மட்டுமே வெளியில் தெரியும் செவியாக இருப்பினும், இது கேட்டல் என்னும் செயற்பாட்டின் பல படிகளில் முதல் படியோடு மட்டுமே தொடர்புபட்டது. இது உடற் சமநிலை உணர்வு தொடர்பில் எவ்விதப் பங்கும் வகிப்பதில்லை. முதுகெலும்பிகளில் தலையின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு செவிகள் இருக்கும். இவ்வமைப்பு ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்கு உதவுகிறது. செவி மூன்று பகுதிகளாக இயங்குகிறது. அவை

புறச்செவி

நடுச்செவி

உட்செவி


புறச்செவி


புறச்செவியில் செவி மடலும் செவிப்பறையை நோக்கிச் செல்லும் செவிக்குழாயும் அமைந்துள்ளன. செவி மடலால் காதுக்கு அழகும் பாதுகாப்பும் தருவதைத் தவிர வேறு பயன் இல்லை. ஆடு மாடு போன்ற பிற உயிரினங்களால், தங்கள் காது மடலைத் திருப்பியும் வளைத்தும் வரும் ஒலியைச் சேகரித்து உள்ளே அனுப்ப இயலும். ஆனால் மனிதனின் காதுகளை தாமே வளைக்கவோ திருப்பவோ முடியாது. இதனால் ஒலி வரும் திக்கை நோக்கிச் செவியைத் திருப்பி ஒலியைப் பெற நேர்கிறது. காது மடலிலிருந்து உள்நோக்கிச் செல்லும் செவிக்குழாய் சுமார் இரண்டு செ. மீ நீளமுள்ளது. இதுவே ஒலியை செவிப்பறை நோக்கிக் கொண்டு செல்கிறது. செவிப்பறை சவ்வு தடித்துப் போனாலோ, நலிவடைந்து போனாலோ கேட்கும் திறன் பாதிக்கப்படும். செவி வெளிக்கால்வாய் தோலிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் சுரக்கிறது. அத்திரவம் உறையும்போது மெழுகுபோன்ற கெட்டிப்பொருளாகி விடுகின்றது. இது குறும்பி எனப்படும். குறும்பி மிக அதிகமாகத் திரண்டால் கேட்பதற்குத் தடையாகவும் இருக்கும்.


நடுச்செவி


நடுச்செவி என்பது ஒரு குறுகிய அறை போன்றாது. இது செவிப்பறைக்கும் உட்செவிக்கும் இடையே அமைந்துள்ளது. இஃது செவிப்பறைக்குழி என அழைக்கப்படுகிறது. செவிப்பறைக்குழி, மூக்கு முன்தொண்டையுடன் நடுச்செவி குழல் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. நடுச்செவி ஒரு கன சென்டிமீட்டர் பரிமாணம் கொண்ட குழியால் ஆனது. நடுச்செவிக் குழியில் ஆறு சுவர்கள் உள்ளன. நடுச்செவி குழல் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் நீளமாகவும் இரண்டு மில்லி மீட்டர் அளவுள்ள துளையும் கொண்டுள்ளது. நடுச்செவியில் சங்கிலி போன்ற அமைந்துள்ள மூன்று எலும்புகள் உள்ளன. இவை காற்றலை அதிர்ச்சிகளை உட்செவிக்கு எடுத்துச் செல்கின்றன. நடுக்காதில் உள்ள காற்றழுத்தத்தை வெளியிலுள்ள காற்றின் அழுத்தத்திற்கு ஏற்ப சமநிலையில் வைத்திருப்பது இதன் முக்கியப் பணியாகும்.

நடுச் செவியில் ஒரு பகுதியில் உள்ள வெஸ்டிபுலர் என்ற அமைப்பும், மூன்று அரைவட்ட கால்வாய்களும் உள்ளன. இந்த உறுப்புக்கள் கண், தசை, மூடடுப்பகுதி மற்றும் மூளையுடன் சேர்ந்து உடல் நிலை மற்றும் அசைவுகளை உணர்வதில் பெரும் பங்காற்றுகிறது. வெஸ்டிபுலர் அமைப்பு சேதமடைந்தால் உடல் சமச்சீர் நிலை இயக்கத்தில் கோளாறுகள், மயக்கம் போன்ற சிக்கல்கள் தோன்றும். வெஸ்டிபுலர் அமைப்பின் மிகையான கிளர்த்தலால் பேருந்து,மகிழுந்து, படகு, விமானம் ஆகியவற்றில் பயணம் செய்யும்போது மயக்கம், வாந்தி முதலான நோயால் பாதிப்பு ஏற்படும்

இடைச்செவியில் நிரம்பும் காற்றானது உறிஞ்சப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இருமும்பொழுது அல்லது கொட்டாவி விடும்பொழுது அல்லது விழுங்கும்பொழுது இந்தக் குழலுக்குள் காற்று பலமாகச் செலுத்தப்பட்டு நிறைவிக்கப்படுகிறது. நிறைவிக்கப்பட்ட காற்றுச் செவிப்பறையின் இருபுறங்களிலும் அழுத்தம் பெற்று சமப்படுகிறது. இதனால் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. தொண்டையில் ஏற்படும் தொற்றினால் இடைச்செவியிலும் தொற்று ஏற்படக்கூடும். இதனால் காற்றுக்குப் பதிலாகச் சீழ் நிரம்பிவிடும். செவிப்பறையில் உள்ள சந்து வழியாகச் சீழ் வெளியேறி செவிப்பறையை குணமடையச் செய்யும். ஆனால், அடிக்கடி நேரிடும் தொற்றினால் செவிப்பறையில் அதிர்ச்சியும், எலும்புகளில் அதிர்ச்சியும் குறைந்த போகும்.இதனால் கேட்கும் திறன் பாதிப்படையும்.


உட்செவி


நடுக்காதுக்கும் அப்பால் உள்ள பகுதி உட்செவியாகும் இது ஒரு சங்கு போன்ற அமைப்பைக் கொண்டது. காது கேட்பதற்கு இதுவே அடிப்படையக அமைகிறது. இப்பகுதி மூளை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது. உட்செவி ஒரு சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் எலும்பு மற்றும் படலத்தாலான இரண்டு வளைந்து செல்லும் அமைப்புகள் (லேபரின்த்) உள்ளன. உட்செவி பாய்மத்தால்(அக நிணநீர் மற்றும் புற நிணநீர்) நிரப்பப்பட்டுள்ளது. பாய்மத்தின் குறுக்கே கேள்விப்புல நரம்பு உள்ளது. கேள்விப்புல நரம்பிற்கு எலும்பின் மூலம் காற்றலைகளின் அதிர்ச்சிகள் (ஒலி) கடத்தப்பெறுகின்றது. மூளைக்குச் செல்லும் நரம்பின் வழி மிகவும் குறுகலானது, ஒலித்தூண்டல்கள் பெருமூளைப் புரணியில் உணரப்பட்டு செவியுணர்வுகள் தோன்றுகின்றன. நடுச்செவியில் உள்ள எலும்புகளை இணைக்கும் சிலேட்டுமப் படலம் (பந்தங்கள்) இறுகிப்போனால் காற்றலைகள் அதிர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால்அரை செவிட்டுதன்மை ஏற்படுகிறது.

செவிப் பாதுகாப்பு



ஒலியுணர்தல்


செவிக்குழல் வழியே வரும் ஒலியானது மிக மென்மையான செவிப்பறையை அடைந்து அதிர்வேற்படுத்துகிறது. செவிப்பறையின் அதிர்வு, அடுத்து அமைந்துள்ள மூன்று சிற்றெலும்புகளையும் அதிர்வடையச் செய்கிறது. இதன் விளைவாக காது பாய்மத்தில் (நீர்)அசைவு ஏற்படுகிறது. இந்த அசைவே நரம்புகள் மூலம் ஒலியை மூளைக்கு அனுப்பி உணரச் செய்கிறாது. இவ்வாறுதான் நாம் ஒலியுணர்வைப் பெறுகிறோம்.

செவிக் குறைபாடுகள் [தொகு]


காதினுள் உள்ள இம்மென்மையான உறுப்புகளில் ஏதேனும் ஒன்று பழுதுபட்டால் கூட நம்மால் ஒலியுணர்வை முழுமையாகப் பெறமுடியாமல் போகிறாது. எதிர்பாராத நிலையில் காது பழுதுபடுவதால் செவிடாக நேரிடுகிறது. உரக்கப்பேசினால் மட்டுமே சிலருக்குக் கேட்கும். குடும்பத்தில் பிறவிச் செவிடர்கள் இருந்தால் இரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் காது கேளாமலிக்க வாய்ப்புண்டு. உறவில் மணம் முடிப்போருக்கு இத்தகைய குறைப்படுடைய குழந்தைகள் பிறக்கலாம் எனக் கூறப்படுகிறது. கேட்கும் திறனை அளவிட்டு செவிக்குறைகள் அறியப்படுகின்றன. இத்தகையவர்கள் ஒலியைப் பெருக்கித்தர வல்ல காதொலிக் கருவியைக் காதில் பொருத்திக் கொண்டால் காது நன்கு கேட்கும். முழுச் செவி குறைபாடு உடையவர்களுக்கு இத்தகைய கருவிகளால் பயனில்லை. கேட்கும் தன்மைக்கேற்ப பேச்சுத்தன்மையும் அமைகிறது. எனவே செவிட்டுத்தன்மையை புறக்கணிக்கக்கூடாது. சிறு குழந்தைப் பருவத்தில் காது கேட்கவில்லை என்றால் அந்தக் குழந்தையின் பேச்சும் பாதிக்கக்கூடும். காலங் கடத்தாது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்ததாகும். அடிக்கடி சளி பிடித்தாலும் தொண்டை வலி ஏற்பட்டாலும் காதின் கேட்புத்திறன் பாதிக்கக்கூடும்.சளி பிடித்து மூக்கிலும் தொண்டையிலும் சளிக்கட்டிக் கொண்டிருக்கும்போது நடுச்செவியையும், தொண்டையையும் இணைக்கும் சிறிய குழாயும் வீங்கிப் போகிறது. இந்த வீக்கத்தினால் நடுச்செவி அடைபடுகிறது. இதன் தொடர் விளைவாக தற்காலிகமாக காது கேட்காமல் போகக்கூடும். மூக்கை, வேகமாகச் சிந்தக்கூடாது. சிந்தினால் முக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச் செவிக்குள் புகுந்து காதைச் செவிடாக்கிவிடக்கூடும்.குழந்தைகளின் காதில் ஒருபோதும் அறையக்கூடாது. அறைந்தால் காதுக்கு ஊறு ஏற்பட்டு செவி கேளாமல் போகக்கூடும். காது குத்தி கொள்ளுவதால் கீலாய்டு என்ற கட்டிகள் சிலருக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடியவர்கள் காதுகுத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.