குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

"ஈழத்தில் சோழர்களின் சுவடுகள்"

இலங்கையில் நீண்ட காலமாக தலை நகராக விளங்கியநகரம் அனுராதபுரம். கி.மு.காலத்தில் இருந்தே இந்த நகரம் மிகவும் பிரபலம் பெற்று விளங்கியதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம் உண்டு.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இலங்கை முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ் மன்னன் எல்லாளன்கூட அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டே இலங்கை முழுவதையும் ஆண்டான் என்று வரலாறு கூறுகிறது.

 

பௌத்தம் இலங்கையில் தீவிரமாகப் பரவத் தொடங்கிய காலத்திலும் கூட அனுராதபுரத்தின் சிறப்பே ஓங்கி இருந்தது.இந்தியாவில் இருந்து புத்த மதத்தின் சின்னமாக கொண்டுவரப்பட்ட அரசமரக் கிளை ஒன்றுகூட அனுராதபுரத்தில் உள்ள விகாரை ஒன்றில்தான் நடப்பட்டு இன்றும் அதன் கிளைகள் அழியாமல் உள்ளன.

 

ஆயினும் இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் என்ற வரலாற்றை முதன் முதலாக மாற்றிய பெருமை சோழர்களுக்கே உரியது..கி.பி.895 இல் ராசராச சோழனின் மகனாகிய ராசேந்திரச் சோழன் என்பவன் இலங்கைமீது படை எடுத்துவந்து (ஆதாரம் 'சோழர் வரலாறு';by ..நீலகண்ட சாஸ்திரி)அனுராதபுரத்தை கைப்பற்றி தலை நகரக் கட்டிடங்களை எல்லாம் தரைமட்டமாக்கி, வெற்றிவாகை சூடினான்.

 

சைவ சமயத்தில் மிகவும் பற்றுள்ள ராசராச சோழனும் அவனது பரம்பரையும் புத்த மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒருபோதும் விரும்பவில்லை..ஆயினும் மனித நேயமுள்ள சோழர்கள் பௌத்தத்தை அழிக்க நினைத்திருந்தால் அனுராத புரத்தில் இருந்த புத்த சின்னங்கள் எல்லாவற்றையும் அழித்திருக்கலாம்.. ஆனால் அப்படிச் செய்யாமல் அரச கட்டிடங்களை மட்டுமே தரைமட்டமாக்கினான்.

 

ராசேந்திரச் சோழன்,இலங்கையின் தலைநகரம் என்னும் பெருமையை அனுராத புரத்தில் இருந்து மாற்றி கிழக்கே நகர்ந்து சென்று பொலநறுவையை இலங்கையின் தலை நகரமாக மாற்றி கோட்டை கொத்தளங்களை கட்டினான் ராசேந்திரச் சோழன்.

 

நீண்ட காலமாக இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் என்று இருந்த வரலாற்றை மாற்றிய பெருமை இந்தச் சோழ இளவரசனுக்கு உரியதாகும். அதுமட்டுமன்றி.பொலநறுவையில் ஒரு பெரிய சிவன் கோயிலையும் கட்டுவித்து வழிபட்டான் இப்பெரு மன்னன்.

 

இன்றும் அந்தச் சிவன் கோயில் அவன் நினைவாக அங்கே உள்ளது.கோயிலின் பட்டயங்களில் ராசேந்திரச் சோழனின் இலங்கைப் படை எடுப்புபற்றி பொறிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி பொல நறுவையை சுற்றி பல குளங்களைக் கட்டுவித்து மக்களை விவசாயத்தில் பெருமளவில் ஈடுபடுத்தி வந்தான் இம்மன்னன்.

 

ராசேந்திரச் சோழன் இலங்கைமீது படை எடுத்து வரும்போது அவனது படையினரும் யானைப்படை,குதிரைப்படை போன்றவையும் கப்பல்கள்மூலம் கொண்டுவந்து தரை இறக்கப்பட்டு பாளையம் அமைத்து இருந்த இடம், வடபகுதியில் உள்ள வடமராட்சி கிழக்கின் செம்பியன் பற்று ஆகும்.சோழருக்கு இன்னுமொரு பெயர் செம்பியன் என்பது ஆகும்.

 

எனவே சோழரின் வரலாற்று பிரதேசமாகவே செம்பியன்பற்று என்னும்பெயர் அன்றில் இருந்து வழங்கி வருகிறது.. செம்பியன் பற்றுப் பகுதியில் பின்னாளில் சிறீலங்கா படைகளின் குண்டுவீச்சில் இருந்து தப்ப மக்கள் நிலத்தை தோண்டியபோது பல இடங்களில் சோழர்களின் காசுகளும் சிவன் சிலைகளும் வேறு சில வரலாற்றுச் சின்னங்களும் மண்ணுக்குள் இருந்து எடுக்கப்பட்டன.

 

செம்பியன் பற்றில் மட்டுமன்றி அதை அண்மிய ஊரான நாகர்கோயிலிலும் இவை பல இடங்களில் கண்டு எடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

 

ஒருமுறை பரப்புரைக்கு நான் அங்கே சென்றவேளை அப்படியான சோழர்களின் காசுகளில் சில என் கையிலும் கிடைத்தன. ராசேந்திரச் சோழன் கட்டைக்காட்டின் ஊடாக படைகளை நகர்த்தி சென்ற வழித்தடத்தின் சில சுவடுகள் கட்டைக் காட்டுக்கும் உடுத்துறைக்கும் இடையில் இருப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.

 

இவ்வாறு சோழர்களின் வரலாற்றுச் சுவடுகள் ஈழத்தில் நிறைய உண்டு. அவையெல்லாம் தமிழர்களின் வீரத்தின் அடையாளம் ஆகும்.