குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழ்நாட்டு மாணவர் போராட்டத்தை “ தமிழர் வசந்தம்“ எனக் கொள்ளலாமா?- கட்டுரை

27.03.தி.ஆ2044-17.04.கி.ஆ2013-மத்திய அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கு தி.மு.க வின் நாடாளுமன்ற ஆசனங்கள் போதாது என்றாலும் கூட தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்துடன் தி.மு.க இணைய வேண்டிய தேவையிருந்ததாலேயே இது அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

இவ்வாறு புதுடில்லியிலுள்ள யவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தை சோந்த M S S Pandian and Kalaiyarasan* ஆகியோர் இணைந்து The Economic and Political Weekly சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டு மாணவர்கள் தற்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்த புதிய தலைமுறை மாணவர்கள் தற்போது தமிழ்நாட்டின் முக்கிய மூன்று அரசியற் கட்சிகளின் நிகழ்ச்சித் திட்டங்களில் ஈழத்தமிழர் பிரச்சினையை முதன்மைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மிகவெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர். இந்தக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டு மாணவர்கள் தமது ஈழத்தமிழர் தொடர்பான நோக்கை அடைந்து கொள்வதற்கான போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக் கோரி முதன் முதலாக சென்னை லயோலா கல்லூரியில் மாணவர் போராட்டம் ஆரம்பமானது. இந்தக் கல்லூரியைச் சேர்ந்த திலீபன் [18], பிறிற்றோ [20], அந்தோணி ஜோர்ஜ் [20], றமேஸ் என அறியப்படும் பாவை தாசன் [20], போல் கெனீத் [20], மணிகண்டன் [19], சண்முகப்பிரியன்[19] லியோ ஸ்ராலின் [20] ஆகிய எட்டு மாணவர்களும் மார்ச் 08 அன்று ஏழு அம்சக் கோரிக்கையை முன்வைத்து வரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுட்டனர்.

2009ல் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பாக சுயாதீனமான விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தத்தை வழங்கி இதுதொடர்பில் முதன்மைப் பங்கை ஆற்றவேண்டும் எனவும் இந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழீழத்தைப் பெறுவதற்கு கருத்து வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்படுவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்திய மத்திய அரசாங்கத்திற்கு வரி கட்டவேண்டாம் என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டு மக்களை ஒன்றுதிரட்டும் பணியில் சென்னை லோயலா கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக இருக்கும் பி.சிதம்பரம் இக்கல்லூரியின் பழைய மாணவன் என்பது மிக வேடிக்கையான விடயமாகும்.

இந்த மாணவர்களின் போராட்டம் நான்கு நாட்கள் நீடித்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏனைய கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் மாணவர்களின் ஆதரவுப் போராட்டம் வலுப்பெற்றது. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து தமிழ்நாட்டு மாணவர்கள் பரவலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மாணவர்களில் கலை, விஞ்ஞான மற்றும் பொறியியல், மருத்துவம் போன்ற துறைசார் கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டங்களில் தமிழ்நாட்டின் சிறிய நகரங்கள் கூட விட்டு வைக்கப்படவில்லை. இதில் இளம் மாணவ, மாணவிகள் எவ்வித வேறுபாடுகளுமின்ற சமபலத்துடன் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இவர்கள் பதாதைகள், துண்டுப்பிரசுரங்கள் போன்றவற்றை ஏந்தியவாறும் விநியோகித்தவாறும் போராட்டத்தில் ஈடுபட்ட அதேவேளையில், பேரணிகளாகவும், மனிதச் சங்கிலியாகவும் இவ் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. இதில் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. இந்திய மத்திய அரசாங்கத்தின் செயலங்கள், வீதிகள், தொடரூந்துப் பாதைகள் என்பன முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளை அண்மித்துக் கொண்டிருந்த போது நள்ளிரவன்று லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு விரைந்த தமிழ்நாட்டு காவற்துறையினர் இந்த மாணவர்களைக் கைது செய்தனர். இதற்கு முன்னர் இந்த மாணவர்களைப் பார்வையிடச் சென்ற காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கேவி தங்கபாலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணிகளில், சிறிலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தில் அந்நாட்டு இராணுவப் படையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 12 வயதான பாலச்சந்திரனின் ஒளிப்படங்களை மாணவர்கள் காவிச் சென்றனர். இந்த மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களை ஆசிரியர்களும் பெற்றோர்களும் அங்கீகரித்தனர். லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதமிருந்த இடத்தில் அக்கல்லூரியைச் சேர்ந்த மூன்று மூத்த பணியாளர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

மாணவர்களின் இந்தப் போராட்டம் காட்டுத்தீ போல் இந்தியா முழுவதிலும் மிக விரைவாகப் பரவிக்கொண்டது. இளைஞர்களுக்கான சமவுரிமை மற்றும் சாதிப் பிரச்சினைகளுக்கு எதிராக மட்டும் அதிகாரபூர்வமாக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் IIT-Madras என்கின்ற பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 69 மாணவர்கள் சிறிலங்காவுக்கு எதிரான மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தமது எதிர்ப்பைக் காட்டவில்லை.

வடஇந்தியாவைச் சேர்ந்த 40 மாணவர்களும் தமிழ்நாட்டில் எழுந்த மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகாரைச் சேர்ந்த சட்ட சபை உறுப்பினர் சோம் பிரகாஸ் சிங் மாணவர்கள் மத்தியில் உரைநிகழ்த்தினார். இலங்கைப் போரைச் சித்தரிக்கின்ற பதாதைகள் போன்றவற்றை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பயன்படுத்தினர். துலு உட்பட ஏழு மொழிகளில் இந்தப் பதாதைகள் எழுதப்பட்டிருந்தன.

இதைவிட தகவற் தொழினுட்ப வல்லுனர்கள் இணைந்து மனித சங்கிலிப் போராட்டத்தை மேற்கொண்டனர். 150 வரையான தகவற் தொழினுட்ப வல்லுனர்கள், சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை தொடரூந்துகளில் பயணித்த பயணிகளுக்கு வழங்கினர். இதன் மூலம் இவர்கள் மாணவர்களின் போராட்டத்திற்கு பயணிகளின் ஆதரவைப் பெற்றுக்கொண்டனர்.

1939ல் சென்னை மாகாண அரசாங்கத்தின் முதல்வராகப் the premier of the Madras Presidency பணியாற்றிய சி.ராயகோபாலச்சாரியார் ஹிந்தி மொழியை கட்டாய பாடமாக அறிமுகப்படுத்திய போது அதனை எதிர்த்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதன் முதலாக எல் நடராஜன் என்பவர் சிறையில் மாவீரரானார்.

"இவரது கல்வியறிவின்மையால் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நடராஜன் இறந்துள்ளார். இவரது இறப்பானது இவர் சிறையிலிருக்கும் போது இடம்பெற்றுள்ளது. ஆனால் இவர் சுகயீனமுற்றதற்கு வேறு பல காரணங்கள் உண்டு" என ராயகோபாலச்சாரியார் தெரிவித்திருந்தார். இறந்த ஒருவர் தொடர்பாக இவ்வாறு ராஜகோபாலச்சாரியார் தெரிவித்த கருத்தை பெரிதுபடுத்தாமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சிரித்தார்கள்.

இதேபோன்று 1965ல் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றபோது, "கல்வி கற்காத காடையர்களும் பெரும்பாலான ஏழை வர்க்கத்தைச் சேர்ந்த குறைந்த கல்வியறிவைப் பெற்ற தமிழ் மக்களும் ஆங்கிலம் என்கின்ற மொழியை கற்பதில் காலத்தை கழித்துள்ளனர்" என இந்திய அரசாங்கப் பிரதிநிதியான ரி.என். சேசன் தெரிவித்திருந்தார். ஆனால் இந்தநிலை தற்போது மாற்றமுற்றுள்ளது.

கல்வியறிவற்ற, அரைகுறைக் கல்வி அறிவைப் பெற்ற காடையர்கள் எனக் கூறப்பட்டவர்களின் நிலை மாறியுள்ளது. இன்று கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசிய ஊடகங்கள் மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பாக செய்தி இருட்டடிப்புச் செய்ய முற்பட்டாலும் கூட இந்தியா முழுவதிலும் இதன் உண்மை என்ன என்பது அறியப்பட்டுள்ளது. IIT மற்றும் தகவல் தொழினுட்ப வல்லுனர்கள், தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்துடன் இணைந்துள்ளனர். இந்த ஆதரவுப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான போராட்டங்களுக்கு மக்கள் ஒன்று திரளவேண்டும். இது முக்கியமான விடயமாகும். மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி ஏந்திச் செல்லப்பட்டதுடன், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்களும் ஏந்தப்பட்டன. இது ஆயுதப் போராட்டத்திற்கான அழைப்பாக இருக்கவில்லை. ஆனால் பல பத்தாண்டுகளாகஇலங்கைத்  தீவில் அந்நாட்டு அரசாங்கத்தால் அடக்கி ஆளப்படும் தமிழ் மக்கள் படும் அவலங்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

ஈழம் தொடர்பாக ஈழத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் கருத்துவாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் என தமிழ்நாட்டு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

1977ல் இடம்பெற்ற இலங்கை பொதுத் தேர்தலில் தமிழ்த் தாய்நாடு என்பதை தனது தேர்தல் விளக்கவுரையாகக் கொண்டு போட்டியிட்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் தலைமையில் வெற்றி பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியை நினைவூட்டுவதாக மாணவர்களின் கோரிக்கை அமைந்திருந்தது. இந்திய மத்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடிகளை மாணவர்கள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதானது இந்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்ததற்கு ஒப்பானதாகும்.

பிரபாகரனின் ஒளிப்படங்கள் மட்டுமன்றி போரின் போது படுகொலை செய்யப்பட்ட பாலச்சந்திரனின் ஒளிப்படங்களும் ஆர்ப்பாட்டத்தில் எடுத்துச் செல்லப்பட்டமையானது தமிழ்நாட்டு மாணவர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என பரவலாக எல்லோரது ஆதரவையும் பெறக் காரணமாகியது. சுயமதிப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த போது பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களால் தமிழர்கள் தாழ்த்தப்படுவதை அடையாளப்படுத்துவதற்காக தனது தோழர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட கறுப்புச் சட்டை அணியும் முறைமையை தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் பயன்படுத்தி, கறுப்பு உடைகளை அணிந்தனர். இவ்வாறான பழைய போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட முறைமைகள் தமிழ்நாட்டு மாணவர்களின் தற்போதைய போராட்டத்தில் பயன்படுத்தப்பட்டன.

குறிப்பாக, இந்தப் போராட்டமானது புதிய இளம் தலைமைத்துவம் ஒன்று தமிழ்நாட்டில் உருவாக வழிவகுத்தது. லயோலா கல்லூரியைச் சேர்ந்த செம்பியன் என அறியப்படும் சண்முகப்பிரியன், கலாநிதி அம்பேத்கர் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த திவ்யா ஆகியோர் தொலைக்காட்சி நேர்காணலில் மிகத் தெளிவாக தமது கருத்துக்களை முன்வைத்தமையானது, தமிழர்களின் புதிய தலைமுறையின் தோற்றத்தை வெளிப்படுத்தியது. இந்த மாணவர்கள் அரசியலை மிக ஆழமாகப் புரிந்து வைத்துள்ளனர்.

"இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை. உத்தியோகபூர்வ ஊடகப் பங்காளி - The Hindu" என ஆர்ப்பாட்டத்தின் போது தாங்கிச் சென்ற பதாதை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது இந்த மாணவர்கள் அரசியல் ரீதியாக அறிந்து வைத்துள்ள ஆழமான அறிவைக் காண்பிக்கிறது.

The Hindu ஊடகமானது மகிந்த ராயபக்சவின் இனப்படுகொலையை மூடிமறைக்கின்ற வெட்கக்கேடான ஊடகப் பரப்புரையில் ஈடுபடுவதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த மாணவர்கள் நிறுவனக் கட்டமைப்புக்களின் அடிப்படையில் பணியாற்றினர். இதில் தமிழீழ விடுதலை மாணவர்கள் இயக்கமானது தலைமத்துவம், மாணவர் குழுக்கள் போன்றவற்றின் அடிப்படையில் செயற்படுகிறது.

இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் அகப்பட்டுத் தவித்த பொதுமக்களைப் பாதுகாப்பதாக காண்பிப்பதற்கு மெரீனா கடற்கரை மணலில் நான்கு மணிநேர நாடகத்தை நடாத்திய தி.மு.க தலைவர் எம். கருணாநிதி மத்திய அரசாங்கத்தை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

"தமிழ்நாட்டில் தற்போது எழுந்துள்ள மாணவர் போராட்டம் மிக முக்கிய விவகாரமாகும். இதனை ஓரங்கட்டி எம்மால் தனித்து நிற்க முடியாது" என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் T K S இளங்கோவன் குறிப்பிட்டிருந்தார். மத்திய அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கு தி.மு.க வின் நாடாளுமன்ற ஆசனங்கள் போதாது என்றாலும் கூட தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்துடன் தி.மு.க இணைய வேண்டிய தேவையிருந்ததாலேயே இது அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்ட போது அது தவிர்க்கப்பட முடியாது இழப்பு என விபரித்திருந்த அ.இ.அ.தி.மு.க தலைவியும், தமிழ்நாட்டு முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா, சட்டசபையில் மாணவர்களின் கோரிக்கையை முக்கியப்படுத்தி தீர்மானங்களை இயற்ற வேண்டியிருந்தது. மாணவர்களின் போராட்டத்தை ஏற்பதைத் தவிர ஜெயலிலதா அரசாங்கத்திற்கு வேறு தெரிவுகள் எதுவுமில்லை.

*M.S.S பாண்டியன், புதுடில்லியிலுள்ள சவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுக் கற்கைக்கான மையத்தில் கற்பிக்கிறார். இதேபோன்று கலையரசன் என்பவர் இதே பல்கலைக்கழகத்தில் பிராந்திய அபிவிருத்திக்கான கற்கைத்துறை மையத்தில் PhD பட்டதாரி ஆவார்.