குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வேண்டாம் அகதி அடையாளம் - டி.அருள் எழிலன்

மிழக அகதி முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியா தப்ப முயன்ற 120 ஈழ அகதிகள் கைதாகினர். இலங்கையில் போர் முடிந்த இந்த நான்கு ஆண்டுகளில் தமிழக முகாம்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் அகதிகள்வெளி நாடுகளுக்குத் தப்பிச் சென்று காவல்துறையிடம் பிடிபட்டு இருக்கிறார்கள். சிக்கியவர்கள் எத்தனை பேர் என்பது ஒருபுறம், தப்பிச் சென்றவர்கள் எத்தனை பேர் என்பதையும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் க்யூ பிரிவு காவல்துறையினர். இலங்கையிலாவது போர் முடிந்தும் துன்பம் நீங்கா நிலையில் ஈழ மக்கள் தப்புகிறார்கள். ஆனால், தஞ்சம் தேடி வந்த தமிழகத்தில் பல ஆண்டுகள் அகதிகளாக இருப்பவர்கள் ஏன் தப்பி ஓடவேண்டும்?

1983 - ஜூலைக் கலவரங்களையொட்டி ஈழ அகதிகள் தமிழகத்துக்கு வருகை தரத் தொடங்கி, 2010-ம் ஆண்டு வரை வந்தார்கள். இப்படி வருகை தருபவர்களின் பெயர்கள், ஊர்கள் உள்ளிட்ட விவரங்களை மண்டபம் முகாமில் பதிவார்கள். தமிழகம் முழுக்க இருக்கும் 111 அகதிகள் முகாம்களில் ஏதாவது ஒன்றில் அவர்கள் தங்கவைக்கப்படுவர். கடந்த 30 ஆண்டுகளில் விரும்பியோ, விரும்பாமலோ இங்கேயே வாழ்ந்து இந்த மண்ணுக்கு வந்த பின்னர் உருவாகியிருக்கும் புதிய தலைமுறை இந்த அகதி வாழ்வை விரும்பவில்லை.

தொப்புள்கொடி உறவுகளுக்காகக் கொந்தளிக்கும் தமிழகத்திலிருந்து ஏன் இவர்கள் தப்பிச் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு விடை தெரிய, ஒரு முறை உங்கள் அருகில் இருக்கும் ஏதேனும் அகதி முகாம் ஒன்றுக்குச் சென்று பாருங்கள்... அதன் காரணம் புரியும்.

''எண்பத்து மூன்றாம் ஆண்டு கலவரத்தின் பின்னர் நான் தமிழகம் வந்தேன். அப்போது எங்களுக்குக் கொஞ்சம் மரியாதை இருந்தது. ஆனால், அப்போது வாழ்க்கைத் தரம் எப்படி இருந்ததோ, இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. துளி முன்னேற்றம்கூட இல்லை. ஒரு காக்கை, குருவி, ஆட்டுக்குட்டிக்குக் கூட நிரந்தரமான வாழ்விடம் உள்ளது. இப்போதைய தமிழக அரசு பணமும், அரிசியும், ஓய்வுத்தொகையும் கொடுக்கிறது. ஆனால், எங்களுக்கு இந்தியக் குடியுரிமையை யார் கொடுப்பார்கள்?'' எனக் கேட்கிறார் தன் 60 வயது ஆயுளில் பாதியை அகதியாகக் கழித்த சுரேந்தர்.

சுரேந்தரைப் போன்று அவரது அடுத்த தலை முறை, அகதி என்ற இழிவைச் சுமக்கத் தயாராக இல்லை. அதே நேரம் இலங்கைக்கு திரும்பிச் செல்லவும் விரும்பவில்லை. குடியுரிமையற்ற இந்தியாவில் இருக்கவும் விரும்பவில்லை. புகலிடம் தந்து குடியுரிமையும் தரும் நாட்டைத் தேடி ஆபத்தான கடல் வழியே எல்லை கடந்து ஆஸ்தி ரேலியாவுக்குச் செல்கிறார்கள். ஆனால், இப்படிச் செல்கிறவர்கள் கதி, இந்தத் துன்பியல் கதையின் விவரிக்க முடியாத துயரப் பெருங்கடலில் ஒரு சிறு துளிதான்.

வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட அகதிக் குடும்பம் ஒன்று இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கி, ஓர் இரவில் யாருக்கும் தெரியாமல் தங்கள் மூத்த மகனை படகில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியது. இப்போது ஒரு வருடமாகிவிட்டது. தன் மகன் ஆஸ்திரேலியா சென்று சேர்ந்தானா... அல்லது கடலிலேயே காணாமல் போனானா? படகும் படகில் சென்றவர்களும் என்ன ஆனார்கள் என எதுவுமே தெரியாமல் வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல் தவித்து நிற்கிறது அந்த ஏழைக் குடும்பம். இந்த மாதிரி, தங்கள் பிள்ளைகளை ரகசியமாக அனுப்பியவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் முகாம்களில் உண்டு.

சென்னைக்கு அருகே உள்ள புவனாவின் கதை இன்னும் வேதனையானது. அவர் ஆஸ்திரேலியா சென்ற தன் கணவனைத் தேடி கைக் குழந்தையோடு ஒரு படகில் கிளம்பினார். அவரைப் படகில் ஏற்றி கேரளக் கரைக்கு அழைத்துச் சென்றார்கள். மறுநாள் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 150 ஈழ அகதிகள் கொல்லத்தில் கைது என்று ஊடகங்களில் பிரதான இடம் பிடித்த செய்தியில் புவனாவும் இடம் பிடித்தார். புவனா தப்பிச் செல்ல முயன்றதற்காக அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இப்படி எல்லை கடக்கும் அகதிகளுக்கு நமது பொது அகராதியில் நாம் வைத்துள்ள பெயர் 'கள்ளத்தோணிகள்’!

ஆஸ்திரேலியாவுக்கு அவர்கள் போவதும், அப்படிப் போவதற்கான முயற்சியில் பிடிபடுவதும்தான் செய்தி. ஆனால், எத்தனையோ குடும்பங்கள் கணவனை, மகனை, மகளை, குழந்தைகளை அனுப்பிவிட்டு 'ஆஸ்திரேலியா விலிருந்து போன் வரும்’, 'கனடாவில் இருந்து தகவல் வரும்’ என்று காத்திருக்கிறார்கள். தகவல் வந்தால் சென்று சேர்ந்தார்கள் என்று அர்த்தம். தகவலே இல்லாமல் போனால்? அது பெருங்கடல் மட்டுமே அறிந்த ரகசியம்.

''2009-க்குப் பிறகு நாங்கள் இங்கிருந்து எப்போது வேண்டுமானாலும் பலவந்தமாக இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சம் எங்கள் மக்களிடம் நிலவுகிறது. எங்கள் உறவுகளை, வீடுகளைத் தேடி இலங்கைக்குச் சென்றால் திரும்பி வரக் கூடாது என்று சொல்கிறார்கள். அப்படிச் சென்று திரும்பி வந்தவர்களின் அகதிப் பதிவுகள் நீக்கப்பட்டு, அவர்கள் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள். நாங்கள் நாடற்றவர் களாகிவிடுகிறோம். அதனால்தான் இலங்கையும் வேண்டாம், இந்தியாவும் வேண்டாம் என, குடியுரிமை தரும் நாடொன்றைத் தேடி கடல் கடக்கிறார்கள் எங்கள் மக்கள்'' என்கிறார் கொங்கு மண்டல அகதி முகாமில் உள்ள மூத்த அகதி ஒருவர்.

80-களில் இலங்கையிலிருந்து இந்தியா வந்து இங்கிருந்து ரஷ்யா சென்று, போலந்து வழியாக ஜெர்மனுக்குள் நுழைந்து, தாங்கள் தஞ்சமடையும் நாட்டைத் தாய்நாடாக்கிவிடுவார்கள் ஈழஅகதிகள்.

ஒரு முறை போலந்தின் எல்லை கடந்து பெர்லினுக்குள் வந்த கன்டெயினரைத் திறந்தபோது அதற்குள் 30-க்கும் மேற்பட்ட ஈழ அகதிகளின் பிணங்கள் மட்டுமே இருந்தன. ஆக்சிஜன் இல்லாமல் உயிர் மரித்த அந்த ஈழ அகதிகளைத்தான் நாம் 'கள்ளத்தோணிகள்’ என அடையாளப்படுத்துகிறோம்! இப்போது இந்தியாவில் வாழும் ஈழ அகதிகளுக்கு இருக்கும் ஒரே வாசல், ஆஸ்திரேலியாதான்.

ஆனால், ஆஸ்திரேலியாவும் இப்போது தனது நாட்டுக்குள் அகதிகள் வந்து குடியேறுவதை விரும்பவில்லை. இலங்கையில் போர் முடிந்து சமாதானம் வந்துவிட்டது எனச் சொல்லி ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களைத் திருப்பி அனுப்புகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிலிருந்து வெகு தூரம் விலகியிருக்கும் கிறிஸ்மஸ் தீவிலோ அல்லது பசிஃபிக் கடலில் இருக்கும் நவ்ரூ, பபுவா நியூகினியா தீவுகளில் அடைத்து, அவர்களாகவே வெறுத்துப் போய் திரும்பிச் செல்லும் மன நிலையை உருவாக்கிவிடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் பல லட்ச ரூபாய் செலவு செய்து இலங்கையில் தமிழ் மக்கள் வசிக்கும் பிரதேசங்களில், 'இனிமேல் ஆஸ்திரேலியாவுக்கு வராதீர்கள். நாங்கள் அகதிகளை ஏற்பதில்லை!’ என்றெல்லாம் விளம்பரம் செய்கிறது ஆஸ்திரேலிய அரசு. ஆனாலும் ஐ.நா. அகதிகள் சாசனத்தில் கையப்பமிட்ட நாடு என்ற வகையில், ஆஸ்திரேலியா தஞ்சமடைவோரில் கொஞ்சம் பேரையாவது ஏற்றுக்கொள்கிறது. மீதிப் பேரைக் கொழும்புவுக்கு அனுப்பிவிடுகிறது. இந்த உண்மைகள் எதுவுமே தெரியாத தமிழக ஈழ அகதிகள், இந்து மகாசமுத்திரத்தைக் கடந்து பசிஃபிக் கடல் வழியே பாழடைந்த ஒற்றைப் படகில் பல இரவுகளையும் பகல்களையும் கடந்து பயணிக்கிறார்கள்.

''ஏன் இப்படித் தப்பி ஓடுகிறார்கள். இப்படிக் கடல் கடப்பது சரியா?'' என்று சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசியபோது,

''80-களில் ஐரோப்பாவுக்குச் சென்றவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. அவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக வளர்ந்திருக்கிறார்கள். ஆனால், தாய் நிலம் என்று சொல்லக்கூடிய தமிழகத்துக்கு வந்த ஈழ அகதிகளில் மருத்துவராக உருவான ஓர் ஈழ அகதியைக்கூட நீங்கள் பார்க்க முடியாது. இதுதான் இங்கு அவர்களின் நிலை. இதை எல்லாவற்றையும்விட மிகப் பெரியக் கொடுமை க்யூ பிரிவு போலீ ஸாரின் துன்புறுத்தல்கள்தான். தொடர்ந்து கண்காணிப்பது, அச்சுறுத்துவது, மிரட்டுவது, பொய் வழக்குகள் போடுவது எனத் தொடர்கிறது க்யூ பிரிவு போலீஸாரின் மனித உரிமை மீறல்கள். இன்னொரு பக்கம் ஐ.நா- வுக்கான அகதிகள் சாசனத்தில் இந்தியா கையெழுத்திடாத காரணத்தால், இந்த அகதி களுக்கு எந்த உரிமையும் வழங்காமல் குற்றப்பரம்பரையினரைப் போல வைத்திருக் கிறார்கள். இந்தியா கையெழுத்திடாத காரணத்தால் இந்த அகதிகள் விஷயத்தில், ஐ.நா-வும் தலையிட முடியாது. இத்தனை துன்பங்களையும் தாங்கி இங்கே அன்றாடம் செத்துச் செத்து வாழ்வதைவிட, கடல் தாண்டி சுயமரியாதையான ஒரு வாழ்வைத் தேடிச் செல்கிறார்கள். மரணம் உடன்வரும் பயணம் என்று தெரிந்துதான் கடல் கடக் கிறார்கள் என்றால், அதைவிட இந்த வாழ்வைத் துன்பமாக நினைக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை!'' என்கிறார் புகழேந்தி.

அகதி என்ற ஓர் அவமானத்தைச் சுமந்து எந்த நேரமும் இலங்கைக்குத் துரத்தப் படலாம் என்ற அச்சத்தோடு வாழும் ஈழ அகதிகளில் 15 ஆண்டுகளாக இங்கு வாழ்வோரின் விருப்பத்தைக் கேட்டறிந்து அவர் களுக்குக் குடியுரிமை கொடுக்க வேண்டும். இல்லையெனில், துயரப் பெருங் கடலில் நாடற்றவர்களாக மிதந்துகொண்டிருக்கும் ஈழ அகதிகளின் கனவுகளை, கடலில் கரைத்த பாவிகளாகியிருப்போம். ஆகவே மத்திய மாநில அரசுகளே... இந்த மக்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள்!

அகதிகளுக்கு தமிழக அரசு என்ன செய்கிறது?

குடும்பத் தலைவருக்கு மாதம் 1,000 ரூபாய். 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 750 ரூபாய். 12 வயதுக்குக் கீழானவர்களுக்கு 400 ரூபாய். பெரியவர்களுக்கு நாளன்றுக்கு 400 கிராம் அரிசி.

எட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு 200 கிராம் அரிசி. சமீபமாக 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. முதியவர்களுக்கு 1,000 ரூபாய் ஓய்வூதியம். சர்க்கரை, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை ரேஷனில் பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

ஏன் ஆஸ்திரேலியா?

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல 30-ல் இருந்து 35 லட்சங்கள் வரை ஆகும். ஆனால், ஆஸ்திரேலியப் பயணத்துக்கு அதிகபட்சம் இரண்டு லட்ச ரூபாய் போதும். இலங்கையில் போர் முடிந்த பின்னர் தஞ்சம் கோரி சன் சீ என்ற கப்பல் கனடாவில் கரையேறியது. அந்தக் கப்பல் ஆடுகளை ஏற்றி இறக்கப் பயன்படுத்தப்பட்ட கப்பல். சற்றே பெரிய ஆழ்கடல் மீன்பிடியிலிருந்து 'ஓய்வளிக்கப்பட்ட’ பழைய படகுகள் வரை இவர் களின் தொலைதூரக் கடல் பயணத்துக்குப் பயன் படுகிறது. ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல 20-ல் இருந்து 22 நாட்கள் வரை ஆகும். இந்த நாட்களுக்கான உணவுகள், குடிநீர், டீசல் போன்றவற்றைச் சேமித்துக்கொண்டு மீன் பிடிக்கக் கிளம்புவதுபோலக் கிளம்புகிறார்கள். தொழில்முறை படகோட்டிகளோ நீச்சலில் தேர்ந்தவர்களோ இல்லா ததால், தவறி கடலில் விழுபவர்களைக் காப்பாற்றுவதற்கான வழிவகைகூட இல்லாமல் அப்பாவி அகதிகளை ஏற்றியபடி செல்கின்றன இந்த அகதிப் படகுகள். பிரமாண்ட கப்பல்களே தவிர்க்கும் கொந்தளிப்பான கடல் பரப்பைக் கடந்தால் மட்டுமே, சென்று சேர வேண்டிய அந்த கனவுத் தீவை இவர்கள் அடைய முடியும்!