குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

விரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் யசுவந்த் சின்கா பாயகவின் கொள்கையில் மாற்றம்-பல செய்திகள் கீழே....

 

15.03.தி.ஆ2044-04.04கி.ஆ2013-சிறிலங்காவில் விரைவில் தமிழீழம் மலரும் என்று பாயக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான யசுவந்த் சின்ஹா சென்னையில் நேற்றுத் தெரிவித் துள்ளார்.

 

இவரது இந்தக்கருத்து, இதுவரை ஒன்றுபட்ட சிறிலங்காவை வலியுறுத்தி வந்த பாயக, தற்போது அந்தக் கொள்கையை கைவிட்டு தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது.

 

தமிழக பாயக சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான சிறப்புக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய யசுவந்த் சின்ஹா-

 

"சிறிலங்கா பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கொல்லப்பட்ட பாலச்சந்திரன் படத்தைப் பார்க்கும்போது யாருக்குத் தான் துன்பம் வராது?

 

பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் குழந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

 

அந்தக் குழந்தை குண்டுகளை முதுகில் வாங்கவில்லை, நெஞ்சில் வாங்கியிருக்கிறான்.

 

வாஜ்பாய் தலைமையிலான அரசு சிறிலங்கா பிரச்சினையை பேச்சுக்களின் மூலம் தீர்க்கப் பார்த்தது.

 

ஆனால் காங்கிரஸ் தான் ஆரம்பத்தில் இருந்தே சிறிலங்கா பிரச்சினையில் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.

 

இந்திரா காந்தி காலத்தில் 1974-ல் கச்சத்தீவு சிறிலங்காவுக்கு கொடுக்கப்பட்டது.

 

ராஜீவ்காந்தி காலத்தில் சிறிலங்காவுக்கு அமைதிப்படை அனுப்பப்பட்டது. இதில் 2009 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 

2005-ல் சிறிலங்காவில் ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு அமைந்ததில் இருந்தே அவர்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.

 

சிறிலங்கா அரசின் அனைத்து வகையான குற்றங்களுக்கும் இதுதான் காரணம்.

 

சிறிலங்காவில் கிடைத்த ஆதாரங்கள், இந்தியாவில் கிடைத்த ஆதாரங்களை வைத்து நாடாளுமன்றத்தில் காங்கிரசை குற்றம்சாட்டி பேசினேன். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் ஒருவர்கூட குறுக்கீடு செய்யவில்லை.

 

அப்படி என்றால் சிறிலங்காவில் நடந்த இனப்படுகொலைக்கு காங்கிரசும் காரணம் என்பதை அக்கட்சினரே கூட ஒப்புக்கொள்கின்றனர் என்று தான் அர்த்தம்.

 

2009-ல் இறுதி யுத்தம் நடந்தபோது ராஜபக்ச அரசுக்கு காங்கிரஸ் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தது.

 

சிறிலங்காவில் ராஜபக்ச, அவரது உதவியாளர், இராணுவ செயலர் கொண்ட ஒரு குழுவும், இந்தியாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான மூவர் குழுவும், இறுதிக்கட்டப் போர் நடந்த போது, பரஸ்பரமாக பேசி இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளனர்.

 

உச்சகட்ட போர் நடந்த போது, மன்மோகன் சிங் செயற்படாமல், "மண்' மோகன் சிங்காக தான் இருந்தார்.

 

இந்தியாவின் உயர்தலைமை வரை எங்களுக்கு உதவியிருக்கிறது என்று சிறிலங்கா அரசு கூறுகிறது.

 

அப்படியென்றால் மன்மோகன் சிங் வரை ஆதரவு என்றுதானே அர்த்தம்?

 

சிறிலங்கா அரசை இந்தியா நிர்பந்தம் செய்யுமானால், சீனா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விடும் என்று மத்திய அரசு இப்போது சாக்குபோக்கு சொல்கிறது.

 

ஆனால் இப்போதும் சிறிலங்காவில் தான் சீனா அமர்ந்துள்ளது. அதைத் தடுப்பதற்கு இந்தியாவால் முடிந்ததா?

 

நட்பு என்பது பரஸ்பரமாக ஏற்பட வேண்டுமே அல்லாமல், நயந்து சென்று பெறுவதாக இருக்கக் கூடாது.

 

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன்.

 

ஆனால் காங்கிரஸ் அரசு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையே நீர்த்துப் போகச் செய்து ஆதரித்துள்ளது.

 

தமிழர் பகுதியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை அகற்ற வேண்டும் என்றும் கோரினேன். ஆனால் செவிமடுக்கப்படவில்லை.

 

சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். அந்தத் தேர்தல் அனைத்துலக கண்காணிப்பின் கீழ்தான் நடத்தப்பட வேண்டும்.

 

இதற்கு சிறிலங்கா அரசு ஒத்துக்கொண்டால் தான் தமிழர்கள் பற்றிய சிந்தனையில் சிறிலங்காவுக்கு மாற்றம் வந்துள்ளது என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியும்.

 

சிறிலங்கா தவிர்த்த மற்ற நாடுகளைச் சேர்ந்த ஒரு குழுவை அமைத்து சிறிலங்காவில் போரின்போதும், போருக்குப் பிறகும் இடமபெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஆராய வேண்டும்.

 

இது தொடர்பாக நடாளுமன்றத்தில் வலியுறுத்தியபோது, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் சிறிலங்காவில் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறோம் என்கிறார்.

 

வீடு கட்டிக் கொடுப்பது மனிதஉரிமைகளைப் பெற்றுத் தருவதாக அமையாது.

 

சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது என்பது இந்தியா முழுவதும் உள்ளவர்களின் கோரிக்கை.

 

இந்தியா நினைத்தால் இதனை எளிதாகச் செய்யலாம். ஆனால் இந்தியா செய்யுமா என்பது சந்தேகம்.

 

அடக்குமுறையின் மூலமாக ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க முடியாது.

 

அடக்குமுறை அதிகரித்தால் அப்பகுதியில் உள்ள மக்களின் சுதந்திர உணர்வும் அதிகரிக்கும்.

 

பாகிஸ்தானின் அடக்குமுறையால் தான் பங்களாதேஸ் உருவானது.

 

வடக்கு சூடான், தெற்கு சூடான் என பிரிந்திருப்பதற்கு ஆட்சியாளர்களின் அடக்குமுறைதான் காரணம்.

 

எனவே, அடக்குமுறையைச் செலுத்தினால் ஈழம் அமைய வெகுநாள் ஆகாது என்பதை ராஜபக்ச அரசுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

 

இன்னும் காலம் இருக்கிறது. அதனால் ராஜபக்ச அரசு திருத்திக் கொள்ள வேண்டும்.

 

தமிழக மீனவர் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரைவார்த்தது தான்.

 

அதோடு பலவீனமான மத்திய அரசு மற்றும் பலவீனமான பிரதமர் இருப்பதுதான்.

 

வருங்காலத்தில் பாஜக ஆட்சி அமையும். அப்போது தமிழர்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

 

புதுடெல்லியில் ரணிலுடன் சல்மான் குர்சித் ஆலோசனை

 

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தை சந்தித்துப் பேசியுள்ளார்.

 

நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

குறிப்பாக, ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த பின்னர், சிறிலங்கா அதிகரித்து வரும் இந்திய எதிர்ப்புணர்வு குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகிறது.

 

முன்னதாக, ரணில் விக்கிரமசிங்க, பாஜக தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஸ்மா சுவராஜ் ஆகியோரையும் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கொரியக் குடாநாட்டில் போர் வெடிக்கும் அபாயம் - கலக்கத்தில் சிறிலங்கா

 

கொரிய குடாநாட்டில் அதிகரித்து வரும் போர்ப்பதற்றம் சிறிலங்காவை கலக்கமடையச் செய்துள்ளது.

 

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தநிலையில் கொரிய குடாநாட்டில் போர் வெடித்தால் அது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அச்சம் கொண்டுள்ளது.

 

தென்கொரியாவில் சுமார் 20 ஆயிரம் சிறிலங்கர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

போர் வெடித்தால், இவர்கள் வேலையிழந்து சிறிலங்கா திரும்பும் நிலை ஏற்படும்.

 

அதனால் பாரிய அந்நியச் செலவாணி இழப்பு சிறிலங்காவுக்கு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு இது பேரிடியாக அமையும்.

 

அதேவேளை, கொரிய குடாநாட்டில் போர் வெடித்தால், தென்கொரியாவில் உள்ள 20 ஆயிரம் சிறிலங்கர்களையும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றி கொழும்புக்கு அழைத்து வருவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

 

இந்த விடயத்தில் அனைத்துலக தொழிலாளர் அமைப்பு, புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக அமைப்பு ஆகியவற்றின் உடனடி உதவிகளைப் பெறுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

 

அதிகளவிலான சிறிலங்கர்களுக்கு தென்கொரியா அண்மைக்காலத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.

 

சிறிலங்காவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சேவை, உற்பத்தி, மற்றும் கட்டுமானத்துறைகளில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 

சீன உதவிப்பாதுகாப்பு அமைச்சரை வியக்க வைத்த கரும்புலிப் படகு

 

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் சோயு குய்ங் தலைமையிலான சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் திருகோணமலையில் பாதுகாப்பு நிலைகளை பார்வையிட்டுள்ளது.

 

சிறிலங்கா கடற்படையின் கிழக்குத் தலைமையகம் அமைந்துள்ள டொக்யார்ட்டுக்கு சென்ற இந்தக் குழுவினர், திருகோணமலைத் துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர்.

 

படகு மூலம் இவர்கள் திருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், அங்குள்ள சிறிலங்கா கடற்படை அருங்காட்சியகத்துக்கும் சென்றனர்.

 

கடற்புலிகளால் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் படகு ஒன்றை பார்த்த சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வியப்புத் தெரிவித்துள்ளார்.

 

கடற்புலிகளின் படகுகள் வடிவமைப்பு மற்றும் அவர்கள் கையாண்ட தாக்குதல் உத்திகள் குறித்தும் சீனப் பாதுகாப்பு அமைச்சர், சிறிலங்கா கடற்படையின் கிழக்கு பிராந்தியத் தளபதியிடம் கேட்டறிந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.