குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கை அதிபரின் அடுத்த குறி ஒடிசா? அப்படியாயின் கலிங்கத்துப் பரணிக்காரர் நாம் சும்மா இருப்பதா?

 

28.02.தி.ஆ2044.18.03.கி.பி.2013-தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்து வரும் நிலையில், இந்தியாவின் ஏனைய மாநிலங்களுடன் உறவுகளை விரிவாக்கிக் கொள்வதில் இலங்கை ஆர்வம் காட்டிவருகிறது.

 

இதன் ஒரு கட்டமாக, புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் கடந்த வாரம் ஒடிசா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு, முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மாநில ஆளுனருடன் பேச்சு நடத்தியுள்ளார்.

முன்னர் ஒரிசா என்று அழைக்கப்பட்ட, ஒடிசா மாநிலத்துக்கும், இலங்கைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகளை மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கிற்குச் சுட்டிக்காட்டி, உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சிகளை இலங்கைக்கு தூதுவர் மேற்கொண்டுள்ளார்.

வரலாற்றுக் காலத்தில் ஒடிசா, கலிங்கம் என்று அழைக்கப்பட்டது.

கலிங்கம் வழியாகவே, புத்தரின் புனிதப்பற்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

முன்னர் இலங்கைக்கும் கலிங்கத்துக்கும் இடையில் கலாசார மற்றும் வர்த்தக உறவுகள் இருந்தாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதையும் இலங்கை தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் புவனேசுவரில் உள்ள மகாபோதி ஆலயம் மற்றும் கலிங்க காலத்து புராதன பௌத்த பகுதிகளான ரத்னகிரி, உதயகிரி ஆகியவற்றுக்கும் சிறிலங்கா தூதுவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகளால், இலங்கை அரசுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் உறவுகள் மோசமடைந்து வருகின்றன.

அதேவேளை, தமிழ்நாட்டுக்குச் சவால் விடும் வகையில், இந்தியாவின் பிற மாநிலங்களுடன் இலங்கை உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது.

இலங்கை அதிபர் மகிந்த ராயபக்ச, திருப்பதி சென்றிருந்த போது ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியையும், சாஞ்சி சென்றிருந்தபோது மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராச்சிங் சௌகானையும், புத்தகய சென்றிருந்த போது பீகார் முதல்வர் நிதீசுகுமாரையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

அதேவேளை, கேரளா, கர்நாடக மாநிலங்களுடன் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்ட, இலங்கை தூதுவர் அடுத்து ஒரிசா மாநில முதல்வரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், கலிங்கத்துக்கும் இலங்கைக்கும் உள்ள வரலாற்று ரீதியான பௌத்த தொடர்புகளை அடிப்படையாக வைத்து, இலங்கை அதிபர் மகிந்த ராயபக்ச அடுத்து, ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்றும் கருதப்படுகிறது.