குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

பூநகரி மண்ணித்தலைச் சிவன்கோவில். இந்துக்கள் அல்ல சைவத்தமிழர் வாழ்ந்த இடமே! பூநகரியின் பழமையான அரச

ஆட்சிப்பகுதி. மீண்டும் வெளியிடுகின்றோம். 20..08.2011-த.ஆ.2042- மீண்டும் 30.07.2021 இல் மண்ணின் தலைச் சிவாலயம் யாழ்ப்பாணம் பூநகரியில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழைமையான ஆலயங்களுள் ஒன்று என்கிறார் பேராசிரியர் புசுபரட்ணம்(மலர்ரத்தினம்.!)

 

கட்டடக் கலை, சிற்பக்கலை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வது வித்தியாசமான, சுவையான அனுபவத்தைக் கொடுக்கக் கூடியது. அந்த வகையில் இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் புசுபரட்ணம் அவர்கள் கடந்த 15, 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஆய்வுகள் மூலம் பல மறைந்த உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. அண்மையில் இந்து கலாசார அமைச்சில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பேராசிரியர் புசுபரட்ணம் அவர்களின் கருத்தைத் தொகுத்து வாசகர்களுக்காகத் தருகிறோம்.

 


நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் பேசிய பேராசிரியர் புசுபரட்ணம் அவர்கள் நான் பல்கலைக்கழகத்தில் 1993 ஆம் ஆண்டு விரிவுரையாளராக சேர்ந்த காலப்பகுதியில் மண்ணித் தலை என்னும் இடத்திற்கு மாணவர்களுடன் குளிர்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அந்த இடம் மிகவும் அற்புதமான இடம் ஆகும். அப்படி ஒரு இடம் யாழ்ப்பாணத்தில் உள்ளதா? என பலரும் வியக்கக் கூடிய வகையில் அற்புதமான பிரதேசமாக அது விளங்குகிறது. என்னையும் மண்ணித் தலை எதோ ஒரு ஒரு வகையில் கவர்ந்த காரணத்தால், பூநகரி என்னும் இடம் என்னால் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. பூநகரியில் வெட்டுக்காடு கௌதாரிமுனை மண்ணித்தலை என்பது சுமார் 12 கிலோ மீற்றர் நீளமான, மணற்பாங்கான பிரதேசம் ஆகும். இங்கு பெரும்பாலும் சம தரை நிலங்களை விட, மணல் மேடுகளே அதிகம் காணப்படுகின்றன. அம்மணல் மேடுகள் கூட காலத்துக்கு காலம் மாற்றமடைந்த வண்ணம் உள்ளன. மேடாக இருந்த மணல் மேடுகள் பள்ளமாகவும், பள்ளமாக இருந்த மணல் மேடுகள் மேடுகளாகவும் மாறும் இயல்பு அங்கு உண்டு. நாங்கள் அங்கு சென்ற சமயம் குறிப்பட்ட மண்ணித் தலைச் சிவாலயம் முழுமையான தோற்றத்துடன் காணப்படவில்லை. கோயில் விமானத்தின் ஒரு பகுதியும், கோவில் சுவரின் ஒரு பகுதியும் மட்டுமே தென்பட்டது. அக்கோவிலை முதன் முதலாக நான் பார்த்தபோது, இது ஒரு பழைய கோவில் என்ற எண்ணத்துடன் திரும்பி விட்டேன். ஆனாலும் அந்த இடத்தின் நினைவுகள் என்னை ஏதோ ஒரு வகையில் ஈர்த்தன என்றால் அது மிகையாகாது. எனவே மீண்டும் அங்கு சென்று தொடர்ச்சியாக பல மாதங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டேன் என்று தெரிவித்தார்.


என்னுடன் இணைந்து செயற்பட்ட ஊர் மக்கள் மற்றும் பலரின் இடைவிடாத முயற்சியின் காரணமாகவும், எங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளினாலும் அக்கோவிலின் முழுமையான தோற்றம் வெளிவந்திருக்கிறது. இக்கோயில் அமைந்துள்ள பிரதேசமானது 12 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டதுடன், சில இடங்களில் 3 கிலோ மீற்றர் அகலத்தையும், சில இடங்களில் வெறுமனே 1/2 கிலோ மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தில் வாழ்பவர்கள் அனைவரும் சைவர்கள் ஆவார்கள். குறிப்பிடப்பட்ட அப்பிரதேசத்தின் தொடக்கம் கல்முனை என்பதுடன் அதன் முடிவு எல்லை மட்டுவில் நாடாகும். ஆரம்ப காலங்களில் அங்கு போக்குவரத்து வசதிகள் எதுவும் கிடையாது. அங்குள்ள மக்கள் 12 கிலோமீற்றர் தூரத்தை கால் நடையாகக் கடக்க வேண்டும். ஆனாலும் தற்போதைய சூழலில் சிறிய நகராக இப்பிரதேசம் மாறிவருவதுடன், ஒரு சிறந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமாக இப்பிரதேசத்தை மாற்றக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக படகுகள் மூலமாக அப்பிரதேசத்தை அடைவதாக இருந்தால் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் எடுக்கும். மண்ணித் தலைச்சிச் சிவாலயத்திற்கு தரைவழியாக செல்வதாக இருந்தால் அண்ணளவாக 70 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டும் எனக் கூறினார். இதுதவறு. நாவற்குழி தச்சந்தோப்பு தனங்களப்பு அறுகுவெளி கேரதீவு சங்குப்பிட்டி(புதியபாலம்) பூநகரிஆலடிச்சந்தியால் மேற்குத்திசை வீதியால் செல்வதாயின் 30கிலோமீற்றர் துாரமே என்பதை பூநகரிமைந்தன் என்பதனால் குறிப்பிடுகின்றேன்.பூநகரியில் கோட்டை இருக்கும் வாடியடி மையம்போன்ற பகுதி இங்கிருந்து மண்ணித்தலை 20 கி.மீ .வாடியடியிலிருந்து முளங்காவிலுக்கு அடுத்தே வெள்ளாங்குளம்30கி.மீ(மன்னார்ப்பகுதி) வாடியடியிலிருந்து கிழக்கே பரந்தன் 20கி.மீ வாடியடியிலிருந்து வடகிழக்காக ஆனையிறவை அண்மித்தபகுதி கறுக்காத்தீவு ஆனைகட்டி இது16கி.மீ எனவே பூநகரி வாடியெடியிலிருந்து வடக்கே நாகதேவன் துறைமுகம்( ஞானிடமப்பகுதி)4கி.மீவரும்  இதைவிடவும் இரணைதீவு பாலைதீவும் பூநகரிகரி என்பதையும் பேராசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

அங்கு மேலும் பேசிய பேராசிரியர் 1993 ஆம் ஆண்டு என்னால் இச்சிவாலயம் முதன் முதலாக அடையாளம் காணப்பட்டது. ஆனாலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் மேலும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட கால தாமதமும், யுத்தத்தின் பாதிப்புகளும் இச்சிவாலயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது இச்சிவாலயம் வெடிப்புகளும், இடிபாடுகளும் நிறைந்து தோன்றுவதுடன், முகப்புத் தோற்றம் இடிவடைந்த நிலையிலே காணப்படுகின்றது. இவ்வாலயம் கிட்டத்தட்ட 24 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டது. ஆனாலும் இப்போது 3 அடி நீளமான சுவர்ப் பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளது. இக்கோவில் கட்டடமானது கடலில் இருந்து எடுக்கப்பட்ட கோறைக் கற்களையும், செங்கட்டிகளையும், சுதை, சுண்ணாம்பு போன்றவற்றையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் இக்கோவில் மிகப் பழைமையான கோவில் என்னும் முடிவுக்கு வரமுடியும். இவ்வாலயம் முழுமையான திராவிட கலை மரபைக் கொண்டு விளங்குவதுடன் அத்திராவிடக் கலையை பிரதிபலிக்கின்ற மிகப் பழைமையான கோவில் இது என்பதில் அறிஞர்கள் மத்தியில் எவ்வித முரண்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் கோவில் உருவாக்கப்பட்ட ஆண்டு தொடர்பாக அறிஞர்கள் பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களை முன் வைத்தாலும், அவர்கள் அனைவரும் திராவிட கலை மரபைக் பிரதிபலிக்கின்ற கோவில் இது என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. இக்கோவில் கட்டடத்தில் உள்ள தூண் கிட்டத்தட்ட ஏழு அடி நீளம் கொண்டது. அங்குள்ள சுவர் ஆரம்ப கால சோழர் கலை மரபை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் மாடமானது ஆரம்ப கால பல்லவ, சோழ, பாண்டிய காலத்தை பிரதிபலிக்கின்றன. மிக முக்கிய அம்சமாக மூன்று அடுக்குகளைக் கொண்ட வகையில் இக்கோவில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. அது ஆரம்ப கால பல்லவ, சோழ காலத்தைப் பிரதிபலிக்கின்றது. விமானத்தின் மூன்று தளங்களும் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருப்பதுடன், மேலே தூபி வைக்கும் பகுதியானது வட்ட வடிவமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஏறத்தாழ 14 அடி நீளம் கொண்ட விமானமாக இது கருதப்படுகிறது எனப் பேசினார்.


மேலும் இலங்கைத் தொல்லியற் திணைக்களம் இவ் ஆலயத்தின் பழைமையைக் கருத்திற் கொண்டு இக்கோவிலை மீண்டும் புனரமைத்து ஒரு வரலாற்றுச் சின்னமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஏறத்தாழ 1.4 மில்லியன் ரூபா வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோடியாக இலங்கை இந்து கலாசார அமைச்சு இவ் ஆலயத்தின் பழைமையை காக்கும் எண்ணத்துடன் அவ் ஆலயத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஊர் மக்களும் அவ்வாறான கோரிக்கைகளையே முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே ஆலயத்தைச் சுற்றி ஒரு மண்டபத்தை உருவாக்கி அதன் மூலம் பழைமையான இவ் ஆலயத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனும் செய்தியும் எமக்குக் கிடைத்து.


பேராசிரியர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை தொல்லியற் திணைக்களமானது இவ் ஆலயத்தை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தி, இதேபோன்ற ஆலயம் ஒன்றை அதற்கருகில் உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. யுத்தம் காரணமாக இக் கோயில் விமானத்தின் முன் பக்கம் அழிவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. ஆலய விமானத்தில் வைத்துக் கட்டப்பட்ட கற்கள் வெடிப்படைந்த நிலையிலேயே காணப்படுவதுடன், அது எப்போது விழுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. கர்ப்பக்கிரகத்தில் இருந்து தீர்த்தம் வெளிப்படும் பகுதி கோமுகி எனப்படும். 1993 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நல்ல நிலையில் இருந்த கோமுகி தற்போது அதன் கலை அம்சத்தை இழந்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.


எனவே யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஆலயங்களில் மிகப் பழைமையாக ஆலயங்களுள் ஒன்றாக இம் மண்ணித் தலைச்சி சிவாலயம் இருக்கலாம் என்பதே என்னுடைய கருத்தாகும். இக்கோவில் பல்லவர் காலத்துக்குரிய கோவில் என தமிழக தஞ்சைப் பல்கலைக்கழக கலை வரலாற்றுப் பேராசிரியர் காளிதாஸ் அவர்களின் கருத்து என்பதுடன், இக்கூற்றைத் தமிழ் நாட்டு வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர். இதேவேளை தமிழக தொல்லியற் திணைக்கள ஆய்வாளர் டாக்டர் சிறிதரன் அவர்களின் கூற்றுப்படி இக்கோயில் 10ம் நூற்றாண்டுக்கு உரியது ஆகும். ஆனாலும் அக்கோவில் கட்டப்பட்ட ஆண்டைக் கண்டு பிடிப்பதற்கு உரிய எந்தவொரு கல்வெட்டும் எழுத்து ஆதாரமாக இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனாலும் யாழ்ப்பாணத்து அரசர்கள் காலத்தில் வழக்கில் இருந்த அல்லது அவர்கள் காலத்தில் வழிபடப்பட்ட கோயிலாக இச்சிவாலயத்தை கருதலாம். ஏனெனின் இலங்கையில் அதிகளவு தமிழ் தொன்மைச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாக பூநகரி விளங்குகிறது. கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய பழைமையான குடியிருப்புகளுக்கு ஒத்த சான்றுகள் இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன. தமிழ் மொழியின் தொன்மை இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு இருந்திருக்கலாம் என்பதற்கு இங்கிருந்து பெறப்பட்ட எழுத்துப் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் சான்று பகிர்கின்றன. அம்மட்பாண்ட எழுத்துக்களை தமிழக அறிஞர்களும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்கள். மேலும் என்னால் அங்கு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் மூலம் ஆதிகால மற்றும் இடைக்காலத்தைச் சேர்ந்த 2000 இற்கு மேற்பட்ட தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண அரசு காலத்தில் வெளியிடப்பட்ட 10 வகைப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட நாணயங்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.


கருத்தரங்கில் கொழும்புத்துறை என்னும் பெயர் தொடர்பாகவும் பேராசிரியர் அவர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள கொழும்புத் துறை என்னும் இடத்திற்கு அப்பெயர் வழங்கப்படுவதற்கான காரணம் என்னவெனில் தென்னிலங்கையில் உள்ள கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பூநகரி ஊடாக போக்குவரத்து இடம் பெற்றமையே ஆகும். மேலும் சூள வம்சம், சோழர் கல்வெட்டுகளில் கூறப்படும் சில இடங்கள் இப்பூநகரிப் பிரதேசத்தில் காணப்படுகின்றது. இக்கோவில் தொடர்பான எழுத்து மூலமான ஆவணம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. காரணம் என்னவெனில் அங்கு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சிறந்த சூழல் இதுவரை இல்லாமையே ஆகும். மேலும் கோவில் கோமுகிப் பாகத்தின் (தீர்த்தம் செல்லும் இடம்) நுனிப்பகுதியில் இருந்து குறைந்தது 2 அடி உயரத்திலே சம தரை நிலம் இருக்க வேணடும். அவ்வாறு இருக்கும்போதே தீர்த்தத்தை கைகளில் ஏந்திப்பெற முடியும். ஆனால் அதற்கும் குறைவான உயரமே இங்கு காணப்படுகின்றது. எனவே ஆய்வுக்கு உட்படுத்தாத இச்சிவாலயத்தை ஆய்வு செய்யும் போது பல கல் வெட்டுகள் அல்லது எழுத்து வடிவ ஆதாரங்கள் இங்கு கிடைக்கப் பெறலாம். இவ்வாலயத்தை நான் சிவன் ஆலயம் என்று குறிப்பிடுவதற்கும் முக்கிய காரணம் உண்டு. பொதுவாக வட்ட வடிவில் ஆவுடை அமைக்கும் மரபு பாண்டியர் காலத்தில் இருந்துள்ளது. சதுர வடிவில் ஆவுடை அமைக்கும் மரபு சோழர் காலத்தில் இருந்துள்து. இதனால் இவ்வாலயம் சிவாலயம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். மேலும் இலங்கையில் போர்த்துகேயர் காலம் தொடக்கம் ஒல்லாந்தர் காலம் வரை மத சுதந்திரம் இருக்கவில்லை. ஒல்லாந்தர் காலத்துக்கு பின்னரே இங்கு மத சுதந்திரம் ஏற்பட்டது. தற்போது இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட 2000 ஆலயங்கள் உள்ளன. இவ்வளவு எண்ணிக்கையான ஆலயங்களும் ஒல்லாந்தர் ஆட்சியின் பின்னர் அன்று தொடக்கம் இன்று வரை படிப்படியாகக் கட்டப்பெற்றவை. இவற்றுள் ஒல்லாந்தர் காலத்துக்கு முன்னர் இடிக்கப்பட்ட ஆலயங்களுள் பல புது வடிவம் பெற்றுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது. ஆகவே ஒல்லாந்தர் காலத்துக்கு பின்னர் கட்டப்பட்ட அல்லது புனருத்தாபனம் செய்யப்பட்ட ஏறக்குறைய 2000 ஆலயங்கள் தொடர்பான தகவல்கள் ஏதோ ஒரு வகையில் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே பூநகரிலுள்ள இவ் ஆலயம் ஒல்லாந்தர் காலத்துக்குப் பின்னர் கட்டப் பெற்றிருந்ததால் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் அது ஆவணப் படுத்தப்பட்டிருக்கும் அல்லது ஏதோ ஒரு வகையில் பாதுகாக்கப்பட்டிருக்கும்.


மேலும் அங்கு வாழும் மக்களின் சமூக, பொருளாதார நிலையை ஆய்வுக்கு உட்படுத்திய பொழுது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர் அவ்வாலயத்தை கட்டுவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லாதிருக்கின்றன. அங்குள்ள சமூகம் மிகவும் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படவில்லை என்பதே அதற்கான பிரதான காரணமாகும். மிகவும் பின் தங்கிய நிலையில், வெளி உலக தொடர்புகள் அற்ற நிலையில் அச்சமூகம் காணப்படுகிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைந்த நிலையில் அங்குள்ள மக்கள் உள்ளார்கள். அங்கு குறிப்பிட்ட ஒரு சில சிறிய கட்டடங்களைத் தவிர, வேறெதும் கடந்த 100 ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கவில்லை. எனவே போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சியின் பின்னர் கிடைக்கப்பெற்ற மத சுதந்திரத்தின் மூலம் இவ்வாலயம் கட்டப்பட்டமைக்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்பதே என்னுடைய கருத்தாகும் என அவர் கூறினார்.


ஆகவே இப்பின்னணியில் ஆராயும்போது இவ்வாலயம் 16 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டது என்ற முடிவுக்கு வர முடியும். அத்துடன் வணிகச் செல்வாக்கு உள்ள இடங்களிலேயே ஆலயங்கள் தோற்றம் பெற்றன என்பது பேராசிரியர் பத்மநாதனின் கருத்தாகும். இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கந்தரோடையை விட மிகவும்சிறப்புப் பெற்ற வணிகத் துறையாக பூநகரி விளங்கியுள்ளமை தெரியவருகின்றது. ஆகவே யாழ்ப்பாணத்து அரசு காலத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோவில் சோழர் கலை மரபை பிரதிபலிப்பதாலும், ஆரம்ப பல்லவர் கால கலை மரபை பிரதிபலிப்பதாலும் இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு பராந்தகன் காலம் எனக் கூறப்படுகிறது. மிகவும் நுட்பமான முறையில் சுதை, செங்கட்டி ஆகியவற்றைக் கொண்டு இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

பராந்தகன் காலத்தில் அவனது தலைநகரம் தஞ்சாவூரிலுள்ள மூன்று இடங்களை முக்கியமாக கொண்டு சிறப்புற்று விளங்கியது. குடமுழுக்கியாறு, மண்ணியாறு, நல்லூர் ஆகிய மூன்று முக்கிய இடங்கள் தான் அவை. பூநகரி மண்ணித் தலைச்சிச் சிவாலயம் அமைந்துள்ள இடத்தின் தென் எல்லையாக மண்ணியாறு காணப்படுகிறது. அடுத்து குடமுழுக்கியாறு அமைந்துள்ளது. இவ்விரு ஆறுகளுக்கும் இடையில் நல்லூர் என்னும் இடம் உண்டு. பராந்தகன் காலத்துடன் தொடர்புபடக்கூடிய பல்வேறு ஆதாரங்கள் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக பூநகரிப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தைகைய பின்னணிகளின் அடிப்படையில் கோவில் அமைப்பு, அது அமைந்துள்ள பிரதேசம், ஆலயத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் என்பனவற்றைக் கொண்டு பராந்தகன் காலத்தில் கட்டப்பெற்ற சிவாலயம் இது என்பதே என்னுடைய கருத்து என பேராசிரியர் புசுபரட்ணம் அவர்கள் ஆணித்தரமாகப் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.

உமா பிரகாச்

பூநகரி இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகும். இதனுள் பூநகரி.பல்லவராயன்கட்டு, இரணைதீவு. ஆகிய மூன்றுபெரும்பகுதிகள் இணைந்த உள்ளூராட்சி மன்றப் பிரிவுகள் அடங்குகின்றன. இப்பிரதேசம் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுக் களமும் ஆகும். பூநகரி இறங்குதுறை யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான மாற்றுப் பாதையாகும்.
யாழ்மாவட்டத்தற்கு வெளிலிலும் மிக அருகிலும் இருக்கும் மிகப்பெரிய விவசாய நிலப்பிரதேசமாகும். வனி நிலத்தையும் யாழப்பாணத்தையும் இணைக்கும் இடைநிலப்பகுதியாகவும் யாழநகரத்தின் நெற்கழஞ்சியமாகவும் பூநகரி இருந்து வருவதோடு. தமிழின வரலாற்றில் பழமைமிக்க குடியிருப்புக்கள் இருந்தமைக்கான சான்றுகளுடன்  இன்றும் இருந்துவருகிறது.