23.08.2012-சுவிட்சர்லாந்தில் புகலிடம் நாடி விண்ணப்பித்த ஐரோப்பிய நாட்டினரை இனி அதிக நாட்கள் காக்க வைப்பதில்லை. இரண்டே நாட்களில் அவர்களுக்கான முடிவு தெரிவிக்கப்படும் என மத்திய புலம்பெயர்வுத் துறையின் தலைவர் மரியோ கட்டீகெர்(Mario Gattiker) தெரிவித்துள்ளார்.
பேசெல் நகரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பால்கன் தீபகற்பத்தில் இருந்து புகலிடம் நாடி வருவோருக்கு இனி ஆதரவளிக்கப்போவதாக கட்டீகெர் கூறினார்.
மசிடோனியாவின் ரோமா, செர்பியா, போஸ்னியா போன்ற பால்கன் நாடுகளிலிருந்தும் ஹெர்ஸிகோவினாவில் இருந்தும் வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக கட்டீகெர் குறிப்பிட்டார்.
கடந்த 2010ம் ஆண்டில் இருந்து இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் சுவிட்சர்லாந்துக்குள் வந்து போகும் உரிமை பெற்றுள்ளனர். யூலை மாதத்தில் மட்டும் மசிடோனியாவில் இருந்து வரும் விண்ணப்பங்கள் முந்தைய மாதத்தை விட 83 சதவீதம் அதிகரித்துள்ளன. செர்பியாவிலிருந்து வரும் விண்ணப்பங்கள் 68 சதவீதம் அதிகரித்துள்ளன.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த நாடுகளிலிருந்து 4593 பேர் விண்ணப்பித்ததில் இருபது பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அதிகமானோருக்கு அனுமதி வழங்க பேசெல் நகரில் உள்ள மத்திய விண்ணப்பம் அலுவலகம் மற்றும் நடவடிக்கை மையம் முடிவு செய்துள்ளது.
புகலிடம் நாடி விண்ணப்பித்தவர்களிடம் நடக்கும் முதற்கட்ட நேர்காணல், தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்புதல், தாய்நாட்டின் ஒத்துழைப்பு ஆகியவற்றில் உள்ள கடுமையான சட்டதிட்டங்களை குறைக்க புலம்பெயர்வுத்துறை தீர்மானித்துள்ளது.
ஒத்துழைக்காதவர்களும், திரும்பிப் போக மறுப்பவர்களும், பலமுறை நியாயமில்லாமல் விண்ணப்பித்தவர்களும் இனி சுவிட்சர்லாந்துக்குள் வர அனுமதி மறுக்கப்படுவர். இந்த அனுமதி மறுப்பு ஷென்கன் பகுதிக்கு உரியதாகும். இத்தடை ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும் என புலம்பெயர்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
விவசாயியைக் குத்திக் கொன்ற காளை சுவிற்சர்லாந்தில் பரிதாப மரணம்.
20.08.2012-சுவிட்சர்லாந்தில் ஒரு விவசாயியை அவர் வளர்த்த காளைமாடு குத்திக் கொன்றுவிட்டது.
இவர் பிச்வில் - ஓபர்வில் பகுதியில் உள்ள பண்ணையில் தன் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, மேய்ச்சல் போதும் என்று கருதிய இவர் தனது மூன்று பசுக்களையும், இரண்டு காளைகளையும் அந்தப் பகுதியிலிருந்து வெளியே வரச் செய்தார்.
அப்போது ஒரு காளைமாடு மட்டும் அவரது அழைப்புக்கு இணங்காமல் மேலும் மேலும் மேய்ச்சலுக்குச் சென்றது. விவசாயி அதனை மறுபக்கமாகசென்று அதட்டினார். இதனால் கோபம் கொண்ட அந்தக் காளை அவரைக் நோக்கி வெறியுடன் சென்று தன் கொம்புகளால் குத்திக் கொன்றது.
மாடு குத்தியதால் அலறிய அவருக்கு அருகில் உள்ள வயலிலிருந்து மற்றொரு விவசாயி உதவிக்கு ஓடிவந்தார். சரிந்து விழுந்த அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
உடனே வான்வழி மீட்புப் படையினர் ஹெலிகொப்டரில் வந்து அவருக்கு மருத்துவ உதவி அளித்தனர். எனினும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. ஒரு வேட்டைக்காரன் மூலம் காளை சுட்டுக் கொள்ளப்பட்டது. பின்பு டிராக்டரில் வைத்து அதனை அப்புறப்படுத்தினர்.