குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் நம்பிக்கை அளிக்கின்றன!- நக்கீரன்

“தடைக் கற்கள் உண்டெனினும் தடந்தோள்கள் உண்டு” என்று கவிஞர் பாரதிதாசன் பாடியிருப்பதற்கு ஒப்ப தெசோ மாநாட்டை கலைஞர் கருணாநிதி வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்.

இந்த மாநாடு நடப்பதைத் தமிழ்த் தேசியவாதிகளும் சிங்கள – பவுத்த பேரினவாதிகளும் எதிர்மறைக் காரணங்களுக்காக எதிர்த்தார்கள்.

தமிழக அரசும் காவல்துறையும் சேர்ந்து மாநாட்டுக்குத் தடா போட்ட நிலையில் தெசோ மாநாடு நடக்குமா? நடக்காதா? என்ற  கேள்வி எல்லோர் மனதிலும் பூதாகரமாக எழுந்து நின்றது.  போதாக்குறைக்கு உள்துறை அமைச்சு கடைசிக் கட்டத்தில் ஒரு குண்டைப் போட்டது. ” ஈழம் என்ற சொல்லைக் கைவிட்டால் மட்டுமே மாநாட்டுக்கு அனுமதி” என்று தெசோ மாநாட்டு அமைப்பாளர் ஒருவருக்கு உள்துறை அமைச்சின் துணை இயக்குநர் ஒருவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

 

“The Ministry has no objection from political angle for the proposed international conference, with foreign participants, with the proviso that ‘Eelam’ may be dropped from the title of the conference and subject to clearance of Ministry of Home Affairs and other competent authorities,” the communication from R K Nagpal, Deputy Secretary (Coordination) in the Ministry said.

 

ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என  வெட்டொன்று துண்டிரண்டாக உள்துறை அமைச்சு சொல்லவில்லை. ஈழம் என்ற சொல்லின் பயன்பாட்டை தவிர்த்தால் நல்லது” என்ற கருத்துப்பட உள்துறை அமைச்சு அறிவுரை  வழங்கியது.

 

ஈழம் என்ற சொல் நேற்று அல்லது அதற்கு முதல் நாள் தோன்றிய கற்பனைச் சொல் அல்ல அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்றில்  இருந்து வரும் சொல் என்பதை கலைஞர் கருணாநிதி எடுத்துச் சொன்ன பின்னர் உள்துறை அமைச்சு ஒத்துக் கொண்டுவிட்டது.  தனது கருத்தை எண்பிக்க கலைஞர் கருணாநிதி  பத்துப்பாட்டில் ஒன்றான  பட்டினப்பாலையில் புலவர்  கடியலூர் உருத்திரங்கண்ணனார்     சோழன் கரிகாற்பெருவளத்தானின் பெருமைகளைப் புகழ்ந்து  பாடிய பாடலை மேற்கோள் காட்டினார்.

 

பட்டினப்பாலை பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்புகிறது.  கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னைய தமிழ்நாட்டின் பெருமை, தமிழர் நாகரிகத்தின் உயர்வு, தமிழர்களின் வீரம், பண்பாடு இவற்றையெல்லாம் இந்தப் பட்டினப்பாலையில் காணலாம்.

 

காவிரியாற்றின் சிறப்பு, சோழநாட்டின் நிலவளம், காவிரிப்பூம்பட்டினத்தின் சுற்றுப்புறங்களின் செழிப்பு, காவிரித்துறையின் காட்சி, செம்படவர்களின் வாழ்க்கை, பொழுதுபோக்கு இவைகளை இந்நூல் விரிவாகக் கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே அக்காலத்தில் நடைபெற்ற வாணிகம், அந்நகரத்திலே குவிந்திருந்த செல்வங்கள், அங்கு நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வாணிகம், வாணிகர்களின் நடுவுநிலைமை, பண்டங்களைப் பாதுகாக்கும் முறை இவைகளையெல்லாம் இந்நூலிலே காணலாம்.

 

பட்டினப்பாலையைப் பாடிய உருத்திரன்கண்ணனாருக்கு கரிகாற்பெருவளத்தான் பதினாறு நூறாயிரம் கழஞ்சு (பொன்) பரிசளித்தான் என்ற செய்தி இவனுடைய தமிழ்ப்பற்றை விளக்குவதாகும்.

 

பூம்புகார் கடற்கரையில் வந்து நின்ற கப்பல்களில் இறக்குமதி ஏற்றுமதிக்காக வந்த பொருள்கள் என்ன என்பதைக் குறிக்க “ஈழத்து உணவும் காழகத் தாக்கமும்” என்ற  வரி இடம் பெற்றுள்ளது.  எனவே “ஈழம்” என்பது இல்லாத சொல் அல்ல.  கற்பனைச் சொல்லும் அல்ல. வரலாற்றில் இடம் பெற்ற ஒரு சொல். மதுரையில் வாழ்ந்த சங்க காலப் புலவர் ஈழத்துப் பூதந்தேவனார் என அழைக்கப்பட்டார். ஒல்லாந்தர் காலத்தில் வாழ்ந்த நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் ‘ஈழ மண்டல நாடெங்கள் நாடே’ என்று பாடியிருக்கிறார்.

 

ஈழம் என்ற சொல் பொன், கள், கள்ளி ஆகியவற்றையும் குறிக்கும். தெசோ மாநாட்டால் ஈழம் என்ற சொல் பிரபலத்துக்கு வந்துள்ளது.

 

முதல் தெசோ மாநாடு 1986 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் மதுரையில் நடைபெற்றது. அதில்  வாஜ்பாய், என்.டி.ராமராவ், பகுகுணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைத்து ஈழத் தமிழ் மற்றும் போராளி குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இருபத்தாறு ஆண்டுகள் கழித்து மீண்டும் இரண்டாவது மாநாடு சென்னையில் நடந்தேறியுள்ளது.

 

ஈழப் போர் 4 முடிவுக்கு வந்த பின்னர் தமிழ்மக்களுக்கு ஒரு நியாயமான, நீதியான, நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்படும் என்ற தமிழ்மக்களது எதிர்பார்ப்புப் பொய்த்துவிட்டது. போர்க் காலத்தில் வி.புலிகளுக்கு இராணுவத் தீர்வு  விடுதலைப் புலிகளின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு என்ற மகிந்த இராசபக்சே சொன்னார். ஊரையும் உலகத்தையும் ஏமாற்றவே அவர் அப்படிச் சொன்னார் என்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

 

போர் முடிந்த பின்னரும் சிங்கள அரசு தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள  இராணுவ அடக்குமுறைகள், நில அபகரிப்பு, மொழி அழிப்பு, கலாசார சீரழிவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கலைஞரது தமிழில் சொல்ல வேண்டும் என்றால் “இலங்கையில் போருக்கு முன்பும், போருக்கு பின்பும் தமிழர்கள் இரண்டாந்தார குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்குச் சட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஈழத்தமிழர்கள் புரிந்த தியாகங்கள் அற்புதமானவை. அவர்கள் அனுபவித்த சித்ரவதைகளும் அடக்கு முறைகளும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதவை. தமிழர்களின் அன்றாட வாழ்வில் திட்டமிடப்பட `சிங்களமயமாக்கல்’ எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதையும் தமிழர்கள் மீது ஏவப்படும் சட்டமீறல்களையும் கொடுமையான இடையூறுகளையும் இவை தெளிவு படுத்துகின்றன. தமிழர்கள், தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான பாதையில் முட்புதர்களும் புதைகுழிகளும் நிறைந்துள்ளதை இவை காட்டுகின்றன.”

 

இந்தப் பின்புலத்திலேயே தெசோ மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழீழ மக்களின் சிக்கலுக்கு சுதந்திர தமிழீழமே நிரந்தரத் தீர்வு என்ற தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்படா விட்டாலும் நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மானங்கள் நம்பிக்கை தருவதாக இருக்கின்றன.  “முடிந்தால் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் பற்றி தெசோ மாநாடு ஒரு பன்னாட்டு விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டட்டும்  பார்க்கலாம்” என்று அறை கூவல் விடுத்தவர்களது வாயை அடைக்குமாப் போல் அது பற்றிய தீர்மானம் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டுள்ளது.

 

சுருக்கமாகச் சொன்னால் தெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நம்பிக்கை தருவதாக இருக்கின்றன. உலகப் பந்தில் தமிழீழச் சிக்கல் பேசாப் பொருளாகப் போய்விடாமல் பேசும் பொருளாக எழுந்து நிற்கிறது.

 

இலங்கை சிங்களவர்களுக்கு எவ்வளவு சொந்தமோ அதற்குச் சற்றும் குறையாத உரிமை தமிழ்மக்களுக்கு உண்டு.  விஜயன் உட்பட இலங்கையை ஆண்ட பண்டைய மன்னர்கள் யாரும் சிங்களவர்கள் அல்ல. நாகர், தமிழர், இயக்கர், கலிங்கர் ஆகியோரே இலங்கையை ஆண்டு இருக்கிறார்கள். நாக மற்றும் தீசன்  என்ற ஒட்டுப் பெயரோடு 9 ஆம் நூற்றாண்டுவரை பல மன்னர்கள் இலங்கையை ஆண்டிருக்கிறார்கள். பவுத்த மதத்தின் செல்வாக்குக் காரணமாக இவர்கள் எல்லோரும் பிற்காலத்தில் சிங்களவர்கள் என இன மாற்றம் செய்யப்பட்டு விட்டனர்.

 

சென்னை இராயப்பேட்டை வைஎம்சிஏ  திடலில் நடைபெற்ற  தெசோ  மாநாட்டில் ஈழத் தமிழ்களின் துயர் துடைக்க அய். நா. அவையும் அனைத்துலக நாடுகளும் இந்திய அரசும் முன்வர வேண்டும் என வலியுறுத்தி 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

– இலங்கையில் 2009 இல் நடைபெற்ற போரில் தமிழர்கள் கூட்டம், கூட்டமாக கொல்லப்பட்டனர். போர்க் குற்றங்கள் வெளியே தெரியாமல் இருக்கத் தடயங்களை அழிக்கும் முயற்சிகளும் நடைபெற்றன. அய். நா. பொதுச்செயலர் பான் கீ மூன் அமைத்த மூவர் குழு இது குறித்த விசாரணை நடத்தி அளித்த அறிக்கை வெளியாகி ஓராண்டு கடந்த பின்னரும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய சுயேச்சையான  பன்னாட்டுக்  குழு அமைக்கப்படவில்லை. எனவே,  அய்.நா. மனித உரிமைப் பேரவையின் சார்பில் பன்னாட்டுக்  குழு ஒன்று அமைக்கப்பட்டு போர்க்குற்றங்கள் கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

 

– தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்.

 

– அண்டை நாடான இலங்கையில் அமைதியும் சமத்துவமும் நிலவுவதற்கு உரிய பணிகளைச் செய்ய வேண்டிய கடமையும் உரிமையும்  பொறுப்பும் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால், மத்திய அரசு கண்டும் காணாமலும் இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழர் நெஞ்சங்களில் எழுகிறது. எனவே, இலங்கையின் தற்போதைய சூழல் மாறி ஈழத் தமிழர்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்டெடுத்து சமத்துவமும்  அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ள மத்திய அரசு முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்.

 

இலங்கைத் தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு அய்.நா  மன்றத்தில் இந்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும். இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை அய்.நா. அவையில்  இந்தியா கொண்டுவர வேண்டும்.

 

– தமிழ் இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை அழித்து அவற்றின் வேர்களையும் சிதைக்கும் கொடுமையான முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதிதான் சிங்கள மக்களை ஈழப் பகுதிகளில் குடியமர்த்தும் முயற்சியாகும். ஈழத் தமிழர்களின் இந்துக் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவை அழிக்கப்பட்டு வருகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளை அய்.நா. அவை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

 

– ஈழப் பகுதிகளில் தமிழ் மக்களின் நிலங்களும், வீடுகளும் வன்பறிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சம்பூர், மன்னார், வவுனியா போன்ற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் கொடுமைக்கு முடிவு கட்டும் முயற்சிகளை அய்.நா. அவை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

 

– தமிழீழப் பகுதிகளிலிருந்து உடனடியாக இராணுவத்தை சிங்கள அரசு விலக்கிக் கொள்வதற்கு அய்க்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இராணுவம் திரும்பப் பெறுவதை நேரடியாகக் கண்காணிக்க அய்க்கிய நாடுகள் அவை  ஒரு பன்னாட்டுக் குழுவையும் உருவாக்க  வேண்டும்.

 

-  தமிழர்களின் இயல்பு நிலை வாழ்வை ஏற்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள இலங்கை அரசை, அய்.நா. அவை வலியுறுத்த வேண்டும்.

 

– அகதிகளாக வெளிநாடுகளுக்குச் சென்று சிறைகளில் வாடும் தமிழர்களை விடுதலை செய்வதில் அய்.நா அகதிகள் அவை  தலையிட வேண்டும்.

 

– பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களை உடனடியாக அய்க்கிய நாடுகள் அவையின் ஏதிலிகளுக்கான ஆணையரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளையும், பயண உரிமை ஆவணங்களையும் பெற்றுத்தர  அய்.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும். அகதிகள் தொடர்பான அய்.நா வின்  உடன்பாட்டை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.

 

– ஈழத் தமிழர்கள் தன்மானத்தோடும்  உரிமையோடும் வாழ்வதற்கு அய்.நா அவை  மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஈழத் தமிழர் சிக்கலை தெற்காசிய  சிக்கலாக அறிவிக்கப்பட வேண்டும்.

 

– தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இலங்கைச் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும்.

 

– தமிழர் மறுவாழ்வுக்கு இந்தியா அளித்த 500 கோடி ரூபாயை இலங்கை அரசு உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.

 

– தமிழக மீனவர் படுகொலைக்கு முடிவுகட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும்.

 

– தமிழர் பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளைக் கண்காணிக்கப் பன்னாட்டுக் குழு  அமைக்க வேண்டும்.

 

– இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இலங்கைப் படையினருக்குப் பயிற்சி கொடுக்கக் கூடாது.

 

தெசோ மாநாட்டின் முக்கியத்துவத்துக்குக் கைமேல் பலன் கிடைத்துள்ளது. சிங்கள பேரினவாதிகள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். கலைஞர் கருணாநிதி,  மாநாட்டுக்குப் போகாத இரா சம்பந்தன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரது உருவப் பொம்மைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

 

தமிழீழ விடுதலை என்பது கல்லும் முள்ளும் கண்ணீரும் செந்நீரும் கலந்த நீண்ட காலப் பயணம். அதனை ஒரே நாளிலோ அல்லது குறுகிய காலத்திலோ பெற்றுவிட முடியாது.  இன்றைய புவியரசியலில் தனித் தமிழீழத்துக்கு ஆதரவு இல்லை என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பொருள் அந்த வேட்கையைக்  கைவிட வேண்டும் என்பதில்லை. இல்லாத பாகிஸ்தானைக் கேட்டு வாங்கிய மொகமது ஜின்னாவுக்கு இருந்த காரணிகளை விட  தமிழர்களுக்கு தமிழீழத்தை மீளுருவாக்கம் செய்வதற்கு ஆயிரம் காரணங்கள்  உண்டு.

 

இன்றைய உலக அரசியலில் வைத்தால் கொண்டை வழித்தால் மொட்டை என்பது மாதிரி நடந்து கொள்ள முடியாது.  எல்லாம் வேண்டும் இல்லையேல் ஒன்றுமே வேண்டாம் (All or nothing)  என்பது மாதிரியும் நடந்து கொள்ளக் கூடாது. ஒரு நேரத்தில் ஒரு அடி (One step at a time)  என்ற உத்தியைக் கைக்கொள்ள வேண்டும். எதிரிகளின் எண்ணிக்கையைக் கூட்டாமல் நண்பர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும் என்ற அரசியல் இராச தந்திரம் எமக்குத் தேவை.

 

தெசோ மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதோடு கடமை முடிந்து விட்டது என்று கலைஞர் கருணாநிதி நினைப்பார் என யாரும் நினைக்கத் தேவையில்லை. ” என்னுடைய கனவுகள் நிறைவேறும் வரை உங்களை அரவணைத்துபோராடுவேன்” என அவர் சூளுரைத்துள்ளார்.

 

கலைஞர் கருணாநிதிக்கும் திமுக வுக்கும் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு, மத்திய அரசோடு உள்ள உறவு, வட மாநிலத் தலைவர்களோடான நட்பு  போன்றவற்றை அவர் காத்திரமான முறையில் பயன்படுத்தி தெசோ மாநாட்டுத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எடுக்கப்படும் என உலகளாவிய தமிழர்கள் நம்புகிறார்கள்.

 

இனிமேலாவது தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வெவ்வேறு திசைகளில் முகத்தை வைத்துக் கொண்டாலும் ஈழத்தமிழர் சிக்கலில் ஒன்றாக செயல்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு,  ஆசை,  அவா,  விருப்பம் எல்லாம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.