குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சேது சமுத்திரத் திட்டம்-தேசநலத் திட்டமே! இரா.திலீபன் -கண்ணந்தங்குடி கீழையூர், ஒரத்தநாடு.

 

06.04.2012-வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்,     இந்திய தீபகற்பம் உலகின் பெரிய நாடுகளில் ஏழாவது நாடு. வளம் நிறைந்த நாடு. கடற்பகுதி மட்டுமே 7517கி.மீ. தூரப் பரப்பளவு இருக்கிறது நம்மிடம். இந்த பரப்பளவில் மொத்தம் 13 துறைமுகங்களே இருக்கின்றன.

இந்தியாவின் கிழக்கு பகுதிக்கும், கிழக்காசிய நாடுகளுக்கும், துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்கள், அரபி கடலிலிருந்து வந்தாலும் சரி, இந்திய பெருங்கடலில் இருந்து சென் றாலும் சரி எல்லா கப்பல்களும் சிலோ னைத் தலைநகரமாகக் கொண்ட சிறீ லங்கா என்னும் தீவு நாட்டின் கட லோரத்தை சுற்றியே செல்கிறது.

 

உலகில் மூன்று பெரிய துறைமுகம் சீனாவின் சாங்காய் நகரத்துறைமுகம், இரண்டாவது சிங்கப்பூர், மூன்றாவது நெதர்லாந்து ரோட்டர்டாம் துறைமுகம். இதில் சிங்கப்பூர் நகரம், அதன் துறை முகத்தை கொண்டே வளர்ச்சியடைந்தது, வளர்ச்சியடைகிறது என்று கூறலாம் . கிழக்காசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, கொரியா, ஜப்பான், தைவான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்கு கப்பல் வழி வணிகம் சிங்கப்பூர் துறை முகத்தை தாண்டித் தான் செல்லுதல் வேண்டும். பூகோள ரீதியாக சிங்கப்பூர் கடல் பரப்பு அதிகம் கொண்டு மேற் கொண்ட அனைத்து நாடுகளுக்கும் இயற்கையான கடல் வழிப்பாதை அமைந்துவிட்டது. அதன் காரணமே சிங்கப்பூரை மய்ய மாகக் கொண்டு பன்னாட்டு சரக்குகள், கப்பல்கள் மூலம் மற்ற கிழக்கு நாடு களுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வணிகம் புரிந்து, அதில் வரும் வரு மானத்தைக் கொண்டு ஒரு நாடே வளம் பொருந்திய நாடாக நல்ல அடித்தளம் கொண்ட கட்டுமானமாக உலக நாடு களின் முன் தலைநிமிர்ந்து நிற்கிறது. சிங்கப்பூரின் கடற்கரைப்பரப்பு நம் இந்தியாவைவிட மிகக் குறைவே. இது யாரும் மறுக்க முடியாத உண்மை.

 

ஆனால் கடல் பரப்பளவும், கடற்கரை பரப்பளவும் அதிகம் கொண்ட இந்தியாவிலோ சிங்கப்பூர், ரோட்டர்டாம் போன்ற துறைமுகங்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.     அய்ரோப்பா நாடு களிலிருந்தும், வளைகுடா நாடுகளிலி ருந்தும் வரும் கப்பல்கள் இந்தியாவைத் தாண்டித்தான் செல்கின்றன. அவ்வாறு செல்லும் கப்பல் யாவும் இலங்கை கடற் பரப்பை சுற்றியே இந்தியாவின் வடகிழக்கு பகுதிக்கோ அல்லது கிழக்காசிய நாடு களுக்கோ செல்கிறது. அதுபோல் இலங் கையை சுற்றி செல்லும் கப்பல்களுக்கு 400 முதல் 470 நாட்டிக்கல் மைல் என்று சொல் லக்கூடிய கடல் மைல்கள் தொலைவு அதிகம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம். ஏன் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பயணித்து செல்லலாமே? கடல்தான் இருக்கிறதே? என்று கேள்வி கள் எழ வேண்டும். ஆம், செல்லலாம், ஆனால் ஒரு குறிப்பிட்ட தொலைவு வடக்கே இருந்து தென்கிழக்கு பகுதிக்கு இந்தியாவுக்கு இலங்கைக்கு இடையில் ஆழம் குறைவான கடல் பரப்பு இருக்கிறது. அதோடு அதே திசையில் மணல் மேடுகளும் இருக்கிறது. இந்த நிலையில் சிறிய படகுகள் செல்லலாமே தவிர, பெரிய வணிக கப்பல்கள் பயணிக்க முடியாது.

பள்ளமான பகுதியில் மண் நிரப்பி வீடு கட்டுவதுபோல மேடான பகுதில் சரிசம மாக்கி பயன்படுத்துவது மனித இயல்பு களில் ஒன்று. அதுபோல் மன்னார் வளை குடாவிலிருந்து பாக். நீரிணைப்பைத் தாண்டி வங்காள விரிகுடாவிற்கு கப்பல் கள் போக்குவரத்தை உண்டாக்க பாக் கடலில்(Palk Bay) உள்ள மணல் மேடு களை வெறும் 20 கி.மீ தொலைவு தேவையான அளவு ஆழமாக்க வேண்டும். அந்த மணல் திட்டுகளே ஆதாம் பாலம் (Adam’s Bridge). இதுவே சேது சமுத்திர கால்வாய். இந்தக் கால்வாயை உண் டாக்கி நிறைவேற்றும் வேலையே சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்.     கன்னியா குமரி வழியே தூத்துக்குடி தாண்டி தனுஷ்கோடிக்கும் மேற்கே இருக்கும் மணல் திட்டுகளை கடந்து பாக் கடல் வழியே வங்காள விரிகுடாவை அடையும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றித் திரியத் தேவை இல்லை. நேரம், பணம் ஆகிய வற்றை சேமிக்கலாம். இந்தியக் கிழக்குக் கடற்கரை துறை முகங்களில் சரக்கு போக்குவரத்து உண்டாக்கலாம். பன்னாட்டு வணிகம் பெருகும், வேலை வாய்ப்பும் பெருகும், இறக்குமதி செலவு குறைவால் விலைவாசி ஏற்றத்தை குறைக்க ஏற்பாடு செய்யலாம்.     தூத்துக்குடிமுதல் விசாகப்பட்டினம் வரையில் உள்ள துறைமுகங்களில் சரக்கு போக்குவரவு பெருகும், மேலும் சிறிய, பெரிய துறைமுகங்கள் கூடும்.

 

மீனவ நண்பர்களுக்கு வாய்ப்பாக மீன்பிடி துறைமுகங்கள் பெருகும். நேரடி வர்த்தகத்தால் அனைத்துத் துறையும் வளர்ச்சியடையும். தூத்துக்குடியில் இயங் கும் அனல்மின் நிலையத்திற்கு தேவை யான நிலக்கரியை சென்னைத் துறை முகத்திலிருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்ல வருடத்திற்கு 24 கோடி ரூபாய் செலவாகிறது. ஆனால் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் கப்பல் நேரடியாக தூத்துகுடி துறைமுகத்திற்கு வருவதால் நிலக்கரியை கடத்தும் செலவு மிச்சம். இதுபோன்று இன்னும் பல துறைகளில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அந்நிய செலாவணி வரவைப் பெருக்கலாம். கால்வாய்த் திட்டத்தால் சென்னையிலிருந்து கொச்சி வரை இந்திய கடற்படையின் பெரிய கப்பல்கள் ரோந்து செல்வது தொடங்கும். இதனால் தமிழகக் கடலோர பாதுகாப்பு பெருகும். கால்வாய் இந்திய கடல் எல்லை வழியே செல்வதால், அங்கு மிதவை ஒளி கம்பங்கள் நிறுத்தப்படும். இதனால் மீனவர்களும் எல்லை தாண்டி தவறுதலாக செல்ல வாய்ப்பில்லை, பாதுகாப்பும் அதிகம் இருக்கும்.

 

 

 

மேற்கண்ட பல நன்மைகளை உள்ளடக்கிய திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முதன்முதலில் 1860இல் பிரிட்டிஷ் இந்தியாவின் கடற்படை காமாண்டரான ஆல்ப்ரெட் டூண்டஸ் டெய்லர் என்பவர் முன் மொழிந்தார். அடுத்த ஆண்டே ஆய்வு செய்து முதல்வழித்தடத்தை வகுத்தளித்தனர். இந்த வழித்தடம் பாம்பனுக்கு கிழக்கில் உள்ள மண்டபம் என்ற இடத்து வழியே செல்வதாக அமைந்தது. ஆனால், அந்நேரத்தில் சாத்தியப்படாமல் வருடாவருடம் கிடப்பில் போடப்பட்டது. இவ்வாறாக 1955இல் சேது சமுத்திர குழு ஒன்று டாக்டர். ராமசாமி முதலியார் அவர்களில் தலைமையில் போடப்பட்டது.

 

இந்தக் குழுவின் படிப்படியான வழித்தடங்களின் இறுதி வழித்தடம் 2005இல் வகுக்கப்பட்டு வேலைகளும் ஆரம்பமானது. இந்தத் திட்டத்தின் வழியே இருக்கும் 152 கி.மீல், ஆதாம் பாலத்தில் 20 கி.மீட்டரும், பாக் நீரிணைப்பில் 39 கி.மீட்டரிலும் 300 மீ. அகலத்திற்கு 11 முதல் 12 மீ. வரை ஆழம் உண்டாக்கப்படுகிறது.     சூயஸ் கால்வாய் போல், பனாமா கால்வாய் திட்டத்தை போல் பல நன்மைகளையும், பயன்களையும் தன்னகத்தே கொண்டுள்ள சேது சமுத்திரத் திட்டம் ஏன்? இத்துணை காலம் தொடங்கியும் முடிவுறாமல் இருக்கிறது என்றால், காரணங்கள் பல இருக்கிறது. தடைகள் அதிகம் இருக்கிறது, தடுப்பான்கள் இருக்கிறது. அந்தத் தடுப்புகள், தடைகள் அனைத்தும் ஒன்றே ஒன்று. பொய்யான, பித்தலாட்டம் நிறைந்த, பகுத்தறிவுக்குப் புறம்பான, அறிவியலுக்கு அநீதியான, வெறும் மதப் புண்ணிய நம்பிக்கை என்னும் சேற்றில் நிற்கும் இராமன் பாலம் என்னும் ஆதாம் பாலமான மணல்திட்டுகள். தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை இருக்கும் மணல்திட்டுகள்தான் மதவாதிகளின் இராமன் பாலம்.

 

 

 

வால்மீகி எழுதிய ராமாயணம் என்னும் புனைவு கற்பனையில் கடலில் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சீதையைக் காப்பாற்ற இலங்கைக்கு செல்ல ராமன் பாலம் கட்டினான் என்ற கதையால் இன்று உலகம் போற்றும் 150 ஆண்டுகால கனவான ஒரு திட்டம் தடுக்கப்படுகிறது. இன்று கடைகளில் கிடைக்கும் எதுவுமே வால்மீகி எழுதிய  இராமாயணம் இல்லை. கி.மு. 400 தொகுக்கப்பட்டது முதல் இன்று வரை இடைச்செருகலால் காலத்திற்கு ஏற்ப மாற்றபடுகிறது.

 

பழங்குடியினர் கதை போல் யார் வேண்டுமென்றாலும் கூறலாம் என்பதால் விளைந்தவையே இந்த இடைச்செருகலால்கள். அவற்றை பவுலா ரிச்சமேன் எழுதிய பல இராமாயணங்கள் (Many Ramayanas) என்ற புத்தகத்தில் காணலாம்.

 

ஆதாம் பாலமான மணல் திட்டுகள், இராமன் பாலம் என்று செயற்கையாக மனிதர்களால் கட்டப்படவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. முதலில் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்றால், அப்பொழுது மனித இனமே இல்லை, பின் எவ்வாறு கட்டப்பட்டது? என்ற கேள்வி ஒரு காரணம். உலகில் ஆவணபடி கிமு. 2650 இல் தான் முதல் பாலம் எகிப்து நைல் நதியில் கட்டப்பட்டது. அதற்கு முன் பாலம் இருந்ததற்கு ஆதாரம் இல்லை. 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வந்த பாலம் என்பதற்கு கரிம படிவம் இருக்கிறது என்ற இந்துத்துவா அமைப்பினரின் பொய்யுரைக்குப் பதிலாக, விண்வெளியில் எடுத்த ஒளிப்படத்தால் பாக். நீரிணைப்பில் உள்ள கடல் படுகை ஒரு காலத்தையோ, பூலோக உருவத்தையோ, மனித உருவத்தையோ, உறுதி செய்ய இயலாது மற்றும் கரிம படிவத்தை நான் இதுவரை கண்டதும் அறிந்ததும் இல்லை, என்று நாசாவின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் ப்ராக்கஸ் கூறியுள்ளார் என்பது மற்றுமொரு ஆதாரம்.     1940 இல் வெளிவந்த த.பரமசிவர் அய்யர் என்றவர் எழுதிய ராமாயணம் மற்றும் லங்கையும் (சுயஅயலயயே யனே டுயமேய) என்ற புத்தகமே ஒரு மிகப் பெரிய சான்று என்று கூறலாம்.

 

சோழர்கள் வாழ்ந்த 10 ஆம் நூற்றாண்டில்தான்  இராமாயண லங்காவும் இன்றைய சிலோனும் ஒன்றாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் அவர். அதன் வழியே பார்த்தால் இராமாவதாரம் எழுதிய கம்பனும் சோழ சாம்ராஜியத்திலே வாழ்ந்ததாகவும் வரலாறு இருக்கிறது. ஆறுகளுக்கு இடையே இருக்கும் மணல் திட்டுகளை லங்கா என்றழைக்கும் போக்கு அக்காலங்களில் இருந்திருக்கிறது எனவும், அதன் காரணமாகவே கோதாவரி லங்கா, சோனா லங்கா போன்ற பெயர்கள் இருந்திருக்கிறது.

 

கி.பி. 1000 முதல் கி.பி. 1100 வரையிலான காலத்தில் ராமேஸ்வரத்தில் கோவில் ஒன்று நிறுவப்பட்ட நாளிலிருந்து ராமன் பாலம் என்று மாற்றப்பட்டதா என்று வினாவும் இருக்கிறது. ஏனென்றால் நர்மதை ஆற்றை தாண்டி ராமன் வந்ததிற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றே கூறவேண்டும் என்கிறார் பரமசிவர் அய்யர்.     அக்காலகட்ட ஆரியப் படையெடுப்பே,  ராமாயணம் என்றும்; மகேந்திர மலைகளிடையே வாழ்ந்த மகேந்திர மன்னர்களை ராவணர்களாகவும்; கோண்டுகள் என்ற பழங்குடியினரை ராட்சதராகவும்; கோர்கர்கள் என்ற மக்களை வானரங்கள் (குரங்குகள்) ஆகவும் சித்தரிக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதையே வால்மீகி ராமாயணம். இமயமலைக்கு முன் அங்கிருந்த டெத்தீஸ் கடலுக்கு வடக்கு பகுதி லவுரீசியா எனவும், மேற்கு கோண்டுவானா எனவும் அழைக்கப்பட்டன என்று புவியலாளர்கள் கருதுகிறார்கள்.    இந்தக் கூற்று முன்பு கூறிய விடயத்துடன் ஒத்துபோகின்றது. கோண்டுவானா- கோண்டுகள் வாழ்ந்த பகுதியாகவும், லவுரீசியா இன்றைய ரசியாவாகவும் என்று விடை காணலாம். இந்த கோண்டுகள், கோர்கர்கள் அனைவரும் கோண்டி மற்றும் முண்டா திராவிட மொழி பேசியவர்கள். ஆனால் ராமனாக சித்தரிக்கபட்டவர்கள் (தேவ மொழி?!) சமஸ்க்ருதத்தைப் பேசியதாகவும் தெரிகிறது. மற்றும் ராமன் கடந்து சென்றது ஒரு ஆற்று நீரைத்தான் எனவும் லண்காவுக்கும் அசோகன் காலத்து கல்வெட்டில் இருக்கும் தம்ரபரணி என்ற இலங்கைக்கும்  எவ்விதத் தொடர்பும் இல்லை. எனவும் இவற்றால் புலப்படுகிறது.   இது போன்ற கற்பனைகளும் பொய்யுரைகளும், புனைவுகளும், கடைந்தெடுத்த முட்டாள்தனங்களும் கதைக்கு வேண்டுமென்றால் சுவாரசியமாக இருக்குமே தவிர, கருத்துக்கும், நடைமுறைக்கும் சாத்தியக்கூறு இல்லை. இந்த மணல் திட்டுகள் போல், அந்தமான் நிகோபர் தீவுகள் நேரே கிழக்கில் இந்தோனேசியா தீவுகளில் சேருவது போலும், நியூசிலாந்து முதல் நியூகினியா வரை ஆஸ்திரேலியா பகுதியில் இருக்கும் கடல் மணல் படுகைகளை எல்லாம் இந்த ராமன் தான், சீதையை கைப்பற்ற கட்டிய பாலமா?     வங்காள விரிகுடாவும், அரபிக்கடலும், இந்தியப் பெருங்கடலும் என மூன்றும் அவ்விடத்தே ஒன்று சேருகிறது.

 

கடல் நீரோட்டங்கள் அவ்விடத்தே எதிர் எதிர் திசைகளில் ஓடுகிறது. அவற்றால் மணல் ஒன்று சேர்ந்து மேடுகள் ஆகின்றன, இதுவே ஆதாம் பாலம் என்றழைக்கப்படுகிறது. இந்த சேது சமுத்திர கால்வாய் திட்டத்தால் பவளப் பாறைக்கோ, மீன்கள் இனத்திற்கோ எந்தவித பாதிப்பும் இல்லை என்று பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதனால் தமிழ்நாடும், தமிழ் மக்களும் பெருத்த பலனடைவார்கள். வாழ்வாதாரத்திற்கு ஆபத்து என்று மீனவ நண்பர்களை பொய்யுரைகள் மூலம் மயக்கி கிளர்ச்சியை உண்டாக்கும் அரசியல் ஆசாமிகளை முளையிலே கண்டு கிள்ளி எறியுங்கள். இல்லையேல் ஆபத்து! நமக்குத்தான். நாட்டினுடைய, மக்களுடைய நன்மைகளை அறிந்தும், நாளொரு அரசியல் நடத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களை கண்டுபிடியுங்கள். மதவாத முட்டுக்கட்டைப் போடும் மதவெறியர்களை கண்டுகொள்ளுங்கள். மக்களே! சரியான நேரத்தில் புறந்தள்ளுங்கள். தமிழ்நாடு பல வழிகளிலும் வஞ்சிக்கப்படுகிறது, தமிழன் என்றும் ஒடுக்கப்படுகிறான். அந்தப் பல தடைகளை உடைத்தெறிய, பல தலைகளை உடைத்தெறிய வாருங்கள் தமிழர்களே!! தமிழின உணர்வாளர்களே! நாளைய தலைமுறையினரே! வாருங்கள்!!

 

சேதுவை கடந்து கப்பல் விடுவோம்!