குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

ஜெனிவாவில் நடந்த இரகசிய பேரம்: அமெரிக்காவுடன் இறுதிவரை இழுபறி யுத்தம் நடத்திய இந்தியா

ஜெனிவாவில் நடந்த இரகசிய பேரம்: அமெரிக்காவுடன் இறுதிவரை இழுபறி யுத்தம் நடத்திய இந்தியா

 

அமெரிக்கா தலைமையிலான நாடுகளால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்த போதும், அதனைப் பலவீனப்படுத்துவதில் இந்தியா பெரும் பங்களிப்புச் செய்தது. 

 

இதுதொடர்பாக ஜெனிவாவில் நடந்த இரகசியபேரங்கள், சந்திப்புகள், ஆலோசனைகள் தொடர்பாக ஆங்கில ஊடகங்களில் வெளியான - தமிழில் வெளிவராத - தகவல்களின் தொகுப்பு இது.

 

தீர்மான இறுதி வரைபு வெளியாவதற்கு பல நாட்கள் முன்னதாகவே, ஜெனிவாவில் இந்திய - அமெரிக்க இராஜதந்திரிகள் இரகசியமான ஆலோசனைகளில் மூழ்கியிருந்தனர்.

 

இதன்போது "ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்ற தீர்மான வரைபு வாசகம் திருத்தப்பட வேண்டும் என்று இந்திய இராஜதந்திரிகள் ஒற்றைக்காலில் நின்றனர்.

 

இந்த பேரத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தவர், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான இந்தியாவின் புதிய தூதுவராக பொறுப்பேற்றிருந்த திலிப் சிங்கா ஆவார்.

 

அவர் ஜெனிவா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு 5 நாட்கள் முன்னதாகவே [ஞாயிற்றுக்கிழமை] புதுடெல்லியில் இருந்து ஜெனிவாவுக்கு வந்திருந்தார்.

 

உடனடியாகவே அவர் ஆழமான ஆலோசனைகளில் இறங்கினார்.

 

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக - செவ்வாய்க்கிழமை இரவு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவருக்கு இராப்போசன விருந்தளித்தார்.

 

ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் இந்த இராப்போசன விருந்தை ஒழுங்கு செய்ததற்குக் காரணம், இந்தியாவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் குறைந்தபட்சம் நடுநிலை வகித்து ஒதுங்கி நிற்குமாறு வலியுறுத்துவதேயாகும்.

 

ஜெனிவாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலராக இருந்தவர் திலிப் சின்ஹா.

 

அவர் அந்த இராப்போசன விருந்தின் போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கோரியபடி இந்தியா நடந்து கொள்வதற்கான வாய்ப்பை உடனடியாகவே நிராகரித்து விட்டார்.

 

உள்நாட்டு விவகாரங்களினால் இந்தமுறை .சிறிலங்காவைக் காப்பாற்ற இந்தியாவினால் வரமுடியாது என்று அவர் கூறிவிட்டார்.

 

இதற்குப் பின்னர் வெளியே வந்த சிறிலங்கா அமைச்சர் ஒருவர், தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கப் போகிறது என்று பகிரங்கமாகக் கூறினார்.

 

அதேவேளை, வாக்கெடுப்புக்கு முதல் நாளான புதன்கிழமை இரவு மிகக் கடுமையான இராஜதந்திர பேரம் பேசல் இடம்பெற்றது.

 

தீர்மான வரைபில் திருத்தம் செய்வதற்கு அமெரிக்கப் பிரதிநிதி எலின் டோனஹேயுடன் பேரம் பேசுமாறு திலிப் சின்ஹாவுக்கு புதுடெல்லியில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

 

ஆனால் சிறிலங்காவை வழிகாட்டும் வகையிலான வரைபில் திருத்தங்களை செய்வதற்கு அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் விரும்பவில்லை.

 

ஆனால், திலிப் சின்ஹா மிகக் கடுமையாக விடாப்பிடிப் போக்குடன் இருந்தார்.

 

ஒரு கட்டத்தில் அவர், அமெரிக்காவின் இந்தப் பிடிவாதம், இந்தியாவை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க நிர்ப்பந்திக்கும் என்று எலீன் டோனயிடம் எச்சரித்தார்.

 

2009ம் ஆண்டு சிறிலங்காவுக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா முன்னின்று தோற்கடித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

கடைசியாக அமெரிக்கத் தூதுவர் எலீன் டோனஹே, இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முன்வந்தார்.

 

இதையடுத்தே, தீர்மான வாசகத்தில், “சிறிலங்கா அரசின் ஒப்புதலுடன், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையம் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கலாம்“ என்று திருத்தம் செய்ய இணக்கப்பாடு எட்டப்பட்டது.

 

அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை ஹங்கேரி, ருமேனியா, நெதர்லாந்து, அவுஸ்ரேலியா, மொனாக்கோ, ஸ்பெயின், லித்வேனியா, பின்லாந்து, சைப்ரஸ், குரோசியா, பல்கேரியா, ஸ்லோவேனியா, எஸ்தோனியா, செக் குடியரசு, லக்சம்பேர்க், கிறீஸ், இஸ்ரேல், ஸ்லோவாக்கியா, மோல்டா, ஜோர்ஜியா, சுவிற்சர்லாந்து, சோமாலியா, கனடா, கமரூன், லிச்சன்ஸ்டைன் , நோர்வே, டென்மார்க், சுவீடன், அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், போர்த்துக்கல், ஒஸ்ரியா, போலந்து, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 40 நாடுகள் துணை அனுசரணை வழங்கியிருந்தன.

 

இவற்றில் 13 நாடுகள் மட்டுமே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிப்பவையாகும்.

 

40 நாடுகளின் ஆதரவுடன் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருந்தாலும், இந்தியாவின் அழுத்தங்களுக்கு அமெரிக்கா பணிந்து போக வேண்டியிருந்ததால், முன்னைய வரைபின் படி - சிறிலங்காவுக்கு அதிக நெருக்குதல்களைக் கொடுக்கும் வகையிலான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது போனது.