குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழ்மொழி செம்மொழித்தகுதி பெற்றிருக்கிறதுபேராசிரியர் ந. தெய்வ சுந்தரம்தமிழ்மொழித்துறை

30.07.2011--தி.ஆ.2042--இந்திய மொழிகளிலே முதன்முதலாக இந்திய நடுவண் அரசின் முறையான ஆணையின் கீழ் ஒரு மொழி செம்மொழித்தகுதி பெற்றிருக்கிறது என்றால், அது தமிழ்மொழிதான்.  வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பெருமை தமிழுக்குக் கிடைத்திருப்பதற்கு முழுமுதற்காரணமாக அமைந்தது தமிழக அரசின் இடைவிடாத முயற்சிதான் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்கமுடியாது. ஒரு மொழியின் தொன்மை கருதி, ஆய்வுலகம் அராபிய மொழி, சுவிஷ் மொழி போன்றவற்றிற்குச் செம்மொழித் தகுதியை அளித்துள்ளது. தமிழ் மொழியும் இப்பட்டியலில் அடங்கும். ஆனால் உலகிலேயே ஒரு நாட்டின் அரசாங்கமே முன்வந்து , தனது அரசு ஆணையின்கீழ் முதன்முதலாக ஒரு மொழியைச் செம்மொழி என அறிவித்துள்ளது தமிழ்மொழியைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மொழியின் தொன்மை கருதி, ஆய்வுலகம் அராபிய மொழி, சுவிஷ் மொழி போன்றவற்றிற்குச் செம்மொழித் தகுதியை அளித்துள்ளது. தமிழ் மொழியும் இப்பட்டியலில் அடங்கும். ஆனால் உலகிலேயே ஒரு நாட்டின் அரசாங்கமே முன்வந்து , தனது அரசு ஆணையின்கீழ் முதன்முதலாக ஒரு மொழியைச் செம்மொழி என அறிவித்துள்ளது தமிழ்மொழியைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மொழி பெருமையுடன் வளர்ச்சி அடைவதற்கு இரண்டு தேவை. ஒன்று, அதற்குரிய தகுதியை ( Status) முறையாகப் பெறுவது. இதை மொழியியலில் மொழிவளர்ச்சிக்கொள்கை ( Language Policy) என்பதில் அடக்குவர். ஒரு மொழி தேசிய மொழியா ( National Language) , ஆட்சிமொழியா ( State Official Language) , பயிற்றுமொழியா ( Medium of Instruction) , செம்மொழியா ( Classical Language) என்பதையெல்லாம் தீர்மானிப்பது இதில் அடங்கும். இந்தத் தகுதிகளையெல்லாம் ஒரு மொழிக்கு அம்மொழியைப் பேசுகிற மக்களும், அந்தச் சமுதாயத்தின் அரசியல் கட்சிகளும் தலைவர்களும்தான் பெற்றுத்தரவேண்டும். பெற்றுத்தரமுடியும்.

அந்த வகையில் இன்றைய தமிழக அரசு தனது கடமையைத் தவறாது செய்துள்ளது. தமிழைச் செம்மொழியாக நடுவண் அரசு முறையாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மட்டுமல்லாமல், தமிழை நீதிமன்ற மொழியாகவும், பள்ளிக் கல்வியின் அடிப்படைமொழியாகவும் உச்ச நீதிமன்றம் வரை சென்று ஆக்கியுள்ளது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். செம்மொழித் தமிழின் சிறப்பை உலக அளவில் அறியவைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசின் முயற்சியால் பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுவருவது என்பது தமிழர் அனைவரும் மனமுவந்து பாராட்ட வேண்டிய ஒன்றாகும். தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக உள்ள தமிழைத் தமிழகத்தின் அரசு நிர்வாகத்துறைகள அனைத்திலும் பயன்படுத்த, தமிழ் வளர்ச்சி இயக்ககம் வழியாகப் பல்வேறு முயற்சிகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அறிவியல்தமிழ் வளர்ச்சிக்காகத் தனியாக ஒரு அறிவியல்தமிழ் மன்றத்தை அரசு நிறுவியுள்ளது.

தமிழக அரசானது தமிழ்மொழிக்கு மேற்கூறிய மொழிக்கொள்கை அடிப்படையில் தனது கடமைகள் அனைத்தையும் முறையாக நிறைவேற்றிவருகிறது. இம்முயற்சிகள் அனைத்தும் முழுமையாக வெற்றிபெறுவதற்கு, தமிழக அரசின் முயற்சி மட்டும் போதாது. தமிழறிஞர்களின் பங்கும் மிக முக்கியமானது. தமிழ்ச் சமுதாயமும் தமிழக அரசும் தமிழ்மொழிக்குப் பெற்றுத் தருகிற அனைத்துத் தகுதிகளுக்கும் ஏற்ப , தமிழ்மொழியை அடுத்த கட்டத்திற்கு வளர்த்து எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். தமிழானது தனக்கு அளிக்கப்பட்ட அனைத்துத் தகுதிகளையும் முறையாகப் பயன்படுத்த , சமூகத்திற்குப் பயன்பட , அது அனைத்து அளவிலும் வளர்க்கப்பட வேண்டும். செழுமைப்படுத்தப்படவேண்டும். இதற்கான தெளிவான திட்டத்தை அரசுக்கு அளித்து, அதை நிறைவேற்ற முயற்சி எடுக்கவேண்டியது தமிழ் ஆய்வாளர்களின் கடமையேயாகும். இதற்கான முயற்சிகளை மொழியியலில் மொழிவளர்ச்சித் திட்டம் ( Language Planning) என்பதில் அடக்குவர். மொழிக்கொள்கை ( Language Policy) எந்த அளவு முக்கியமோ, அந்த அளவிற்கு மொழிவளர்ச்சித் திட்டமும் முக்கியமானதாகும். அதுபோன்று, குறிப்பிட்ட மொழியை உலக அளவில் பலரும் கற்க வழிவகுக்கும் மொழிக்கல்வித் திட்டமும் ( Language Teaching) ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். ஆங்கில மொழிக் கல்விக்கு பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனம், பிரஞ்சு மொழிக்கு அலையன்ஸ் பிரான்சிஸ் நிறுவனம், ஜெர்மானிய மொழிக்கு மார்க்ஸ்முல்லர் பவனம் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற முயற்சிகளில்தான் ஈடுபடுகின்றன. தமிழுக்கும் இதுபோன்ற முயற்சிகளை எடுப்பதில் முக்கியமான பங்கானது, தமிழ் அறிஞர்களுக்கு உள்ளது. பழந்தமிழின் பெருமையை மட்டும் பேசிக்கொண்டு இருக்காமல், தமிழை உலக அளவில் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

தனது குழந்தைக்கு ஒரு நல்ல பள்ளியில் இடம் பெற்றுத் தருவது அக்குழந்தையின் பெற்றோரின் கடமை. ஆனால் நல்ல பள்ளியில் இடம் பெற்றபிறகு, தன்னைச் சிறந்த மாணவனாக வளர்த்துக்கொள்வது அக்குழந்தையின் கடமைதானே. அதுபோன்று, தமிழுக்குப் பல தகுதிகளைத் தமிழ்ச்சமுதாயமும் தமிழக அரசும் பெற்றுத் தரும்போது, அதைப் பயன்படுத்தி, தமிழின் தகுதியை மேலும் வளர்த்தெடுப்பது தமிழறிஞர்களின் கடமைதானே. ஆட்சிமொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், பயிற்றுமொழியாகவும் தமிழ் முழுமையாகப் பயன்படவேண்டும் என்றால், அதன் சொற்களஞ்சியம், இலக்கணக்களஞ்சியம் போன்றவையெல்லாம் திட்டமிட்டு வளர்க்கப்படவேண்டும். மொழி பயன்படுத்தும் அனைத்து ஊடகங்களிலும் அது இடம் பெறவேண்டும். குறிப்பாக, இன்றைய கணினி உலகில், கணினியின் அனைத்துப் பயன்பாடுகளிலும் தமிழ் இடம் பெறவண்டும். பழந்தமிழின் சிறப்பை உலக அளவில் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிற தமிழக அரசானது, இன்றைய கணினி உலகில் தமிழைக் கணினிக்கு ஏற்ற ஒரு மொழியாக வளர்த்தெடுப்பதிலும் மிகுந்த கவனம் எடுத்து வருவது பாராட்டுக்குரியது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழானது பல முனைகளில் தன்னைக் கணினிக்கு ஏற்ற ஒரு மொழியாக ஆக்கிக்கொண்டு இருக்கிறது. தமிழக அரசும் தமிழ் இணையம் 99 போன்ற பல கருத்தரஙகுகள் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மென்பொருள் உருவாக்கத்திற்கு நிதி உதவி அளிக்கிறது. சிறந்த தமிழ்மென்பொருளுக்கு ஒரு இலட்சம் பணம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஒத்துழைப்புடன் கணினியின் அனைத்துப் பயன்பாடுகளிலும் தமிழ் இடம்பெற தமிழறிஞர்கள் முன்முயற்சி எடுக்கவேண்டும். தமிழ் எழுத்துரு, பிழைதிருத்தி போன்ற மென்பொருள்கள், ஒளிவழி தமிழ் அறிவான் ( Optical Character Recognizer - OCR), பனுவல் – பேச்சு மாற்றி ( Text to Speech - TTS ) , பேச்சு – பனுவல் மாற்றி ( Automatic Speech Recognizer – ASR) முதல் இயந்திர மொழிபெயர்ப்புவரை ( Machine Translation - MT) பல மென்பொருட்கள் தமிழுக்கு உருவாக்கப்படவேண்டும். ஜெர்மனி நாட்டிற்கு ஜெர்மன் மொழி தெரியாத ஒருவர் சென்றாலும், அவர் ஆங்கிலத்தின்மூலம் ஒரு ஜெர்மானியருடன் தனது செல்பேசியில் பேசலாம். அடுத்த முனையில் இருப்பவர் அதை ஜெர்மானிய மொழியில் கேட்கலாம். அவர் ஜெர்மானிய மொழியிலேயே பதில் அளிக்கலாம். அதை மறுமுனையில் இருப்பவர் ஆங்கிலத்தில் கேட்கலாம். இதற்கான ஒரு மென்பொருளை ( VERBMOBIL ) ஜெர்மானிய அரசானது பல பல்கலைக்கழகங்களின் உதவியுடன் உருவாக்கியுள்ளது. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால், தட்டச்சு செய்யப்பட்ட ஆவணத்தை நாம் பேசுவது போல் பேச்சாக மாற்றும் மென்பொருள் ( Text to Speech – TTS) இன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, நாம் ஆங்கிலத்தில் பேசினால், அதைக் கணிணி தானே புரிந்துகொண்டு, தட்டச்சு செய்துதரும் மென்பொருளும் ( Automatic Speech Recognizer – ASR) இன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பல மொழிகள் பயன்படுத்தப்படுவதால். உடனடி மொழிபெயர்ப்பை அங்கு கணினிமூலம் பெற ( Simultaneous Machine Translation - MT ) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுவருகிறது.இதுபோன்ற மொழிசார் மென்பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பம் ( Language Technology) இன்று கணினிமொழியியல் துறையில் ( Computational Linguistics) வளர்ந்துவருகிறது. அதன் அடிப்படையில் உலகில் பல மொழிகள் கணினியில் அதிக அளவில் பயன்படுகின்றன.

தமிழ்மொழி அமைப்பின் ஒலியமைப்பு, அசையமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு போன்ற தமிழ் இலக்கணக்கூறுகள் தற்கால மொழியியல் அடிப்படையில் ஆராயப்படவேண்டும். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்ட தமிழின் பண்புக்கூறுகள், கணிதம் மற்றும் புள்ளியல் அடிப்படையில் கணினிக்கு ஏற்ற கூறுகளாக ( Computational Grammar ) மாற்றியமைக்கப்படவேண்டும். அப்போதுதான் அதன் அடிப்படையில் தமிழ் மென்பொருள்கள் பலவற்றை உருவாக்கமுடியும். இப்பணியைத் தமிழ் மற்றும் கணினி மொழியியல் ஆய்வாளர்கள் சிறப்பாகச் செய்யமுடியும். மேற்கூறிய துறையில் உயர்கல்வி நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்துவது இன்றைய தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான ஒன்றாகும். தமிழ்மொழி அறிவு, மொழியியல் அறிவு, கணினியியல் அறிவு ஆகிய மூன்றையும் இணைத்து கல்வி ( Computational Linguistics and Language Technology) அளிக்கப்படவேண்டும். அப்போதுதான் தமிழ்மென்பொருள் வளர்ச்சி ஏற்படும். இக்கல்விக்காகத் தனித்துறைகள் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட்டால், கணினித் தமிழ் வளர்ச்சிக்கான மனிதவளம் மேலும் உருவாக்கப்படும். திட்டமிட்டு, தமிழுக்குச் சொல்லாளர் முதல் மொழிபெயர்ப்புவரை பல மென்பொருட்களை உருவாக்கலாம். கணினித் தமிழுக்கான மேற்கூறிய முயற்சிகள் தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படவேண்டும். தமிழ் கற்கும் மாணவர்களுக்கு இதற்கான பயிற்சி முறையாக அளிக்கப்படவேண்டும். தமிழ் அறிஞர்களின் தமிழ் அறிவு , கணினிக்குப் பயன்படும் கணினித் தமிழ் அறிவாக மாற்றப்படவேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் மொழியியல் ஆய்வுப் பிரிவின்கீழ் கடந்த சில ஆண்டுகளாக இதற்கென்று ஒரு தனி முதுகலைப் பட்ட வகுப்பு ( Postgraduate course in Computational Linguistics and Language Technology) தொடங்கப்பட்டுள்ளது. கணினிமொழியியல் ஆய்வுக்கூடம் ஒன்று 15 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளது. கணினிமொழியியல் நூலகம் ஒன்று சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. பல ஆய்வுத்திட்டங்கள் தமிழுக்காக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன . கணினிக்கு ஏற்றவகையில் தமிழ் இலக்கணத்தை எழுதவும், அந்த இலக்கணத்தைக் கணினிக்கு அளிக்கும் மென்பொருட்களை உருவாக்கவும், மாணவர்களுக்கு – குறிப்பாக, தமிழ் மாணவர்களுக்கு – பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆனால் , தனது 150 ஆவது ஆண்டுவிழாவை அண்மையில் கொண்டாடியுள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனியாக மொழியியல் துறை இன்றுவரை நிறுவப்படவில்லை. பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொழியியல் துறைகள் உள்ளன. எனவே, 150 ஆண்டுகால வரலாறு படைத்த தாய்ப்பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணினிமொழியியலுக்கென்று ஒரு தனித் துறையானது நிறுவப்பட வேண்டும் என்பது தமிழறிஞர்களின் விருப்பமாகும்.

தமிழ் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்திவரும் தமிழக அரசு உயர்கல்வித் துறையில் மேற்கூறிய துறைக்கு ஆதரவளித்து வளர்த்தால், அது தமிழை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டுசெல்ல மிகவும் உதவும். சங்க கால அரசுகளின் ஆதரவால் தமிழானது சிறந்த இலக்கியத் தமிழாக வளர்ச்சியடைந்து, இன்று செம்மொழித் தகுதியைப் பெற்றதுபோல, இன்றைய தமிழக அரசின் ஆதரவால் தமிழானது சிறந்த கணினித் தமிழாக வளர்ச்சியடைந்து உலக அளவில் எதிர்காலத்தில் தலைசிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.