குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

செந்தமிழும் நாப்பழக்கம் மேடைப் பேச்சுக்களின் வைகைகளும் சுவைகளும்.

 26.01.2012- பன்மொழித் திறன் படைத்த அறிஞர்கள் பலர் நம் மத்தியில் உள்ளனர். அவர் தம் மொழித் திறனை வெளிப்படுத்த வாய்க்கும் சந்தர்ப்பங்களில் தம் பேச்சால் கேட்போரின் இரசனைக்குத் தீனி வழங்குவதுடன் சிந்திக்கத் தூண்டும் விதத்திலும் உரையாற்றவும் அவர்களால் முடிகிறது. இடம், பொருள், ஏவல் அறிந்து நிகழ்த்தப்படும் இத்தகைய உரைகள் குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு மட்டுமன்றி சமூக மட்டத்திலும் சிந்தித்துக் செயற்பட வைக்கும் தன்மை கொண்டமை
எந்தவொரு விடயத்திலும், மனிதனின் அனுபவம் அவனது திறமையைப் புடம் போட்டுப் பிரகாசிக்க வைக்கிறது. இதன் அடிப்படையில் அமைந்ததே சித்திரமும் கைப்பழக்கமும்; செந்தமிழும் நாப்பழக்கம்'' என்ற முதுமொழி போலும்.
மேடைப் பேச்சு என்பது, எடுத்துக் கொள்ளும் தலைப்புக்கேற்ப கருப்பொருளை  அப்பழக்கமின்றி சங்கிலித் தொடராக கேட்போரைக் கவரும் விதத்தில், வெளிப்படுத்தும் வேளையிலேயே சிறப்புறுகிறது.

மேடைப் பேச்சு, எல்லோருக்கும் இலகுவில் கை வரும் கலையல்ல. அது இலேசானதொன்றாக அமைவதுமில்லை. சிலர் இதற்கு விதி விலக்கு. அது அவர்களுக்கு  இயற்கையாகவே அமைந்துவிடும் ஒரு சிறப்புத்திறன்.

எந்தவொரு விடயம் குறித்தும் என்னால் எந்த வேளையிலும், தேவைக்கேற்ற  வகையில், சுவாரஸ்யமாக எழுத இயலும். ஆனால் ஒரு சபையில் பார்வையாளர் முன்னால் என்னால் அதனைப் பேச்சாக வெளிப்படுத்த இயலாது எனக் கூறுவோர் பலருண்டு.

இத்தனைக்கும் அத்தகையோர் கற்றறிந்த, கல்வி கேள்விகளில் சிறந்த புத்திஜீவிகளே. இந்த நிலை மேடைக் கூச்சம் என அடையாளப் படுத்தப்படுவதுண்டு. அதேசமயம் இத்தகையோரில் ஒரு தரப்பினரிடம் ஞாபக சக்தி, கிரகித்துக் கொள்ளும் தன்மை அருகிக் காணப்படும். சிந்திக்கும் வேளையில் கூட அத்தகையோருக்கு ஒரு குறிப்பிட்ட தலைப்புக்குள் அடங்க வேண்டிய விடயங்கள் சங்கிலித் தொடராக, ஒன்றுடன் ஒன்று தொடர்புபடும் விதத்தில் சிந்தனையில் வந்து சேரா.

அத்தகைய நிலையில் மேடையில் பார்வையாளர்கள் முன்னிலையில்  அத்தகையோருக்கு எடுத்துக் கொள்ளும் விடயம் குறித்து சங்கிலிக் கோர்வையாகத் தமது கருத்தை வெளிப்படுத்துவது சிரமமாக அமையும்.

அதற்காக எடுத்துக் கொள்ளும் விடயம் தொடர்பாக அவர்களிடம் பரந்த அறிவாற்றல் கிடையாதெனக் கருதுவது தப்புக்கணக்கே.
சொற்பொழிவு அல்லது உரையொன்றை ஒரு மேடையில் பூரணத்துவம் கொண்டதாக, கேட்போருக்குத் திருப்தி தரத்தக்கதாக நிகழ்த்த வேண்டுமானால் பேச்சாளரொருவர் ஒரு சில விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
 
தாம் நிகழ்த்தவுள்ள உரையின் கருப்பொருள் கேட்போரின் தராதரத்துக்கும், நிகழ்வின் சூழலுக்கும் ஏற்புடையது தானா என்பதைப் பேச்சாளர் முதலில் எடையிட்டு உறுதி செய்து கொள்ளல் அவசியம். மறுவகையில் கூறுவதானால், தமது உரை கேட்போரின் வரவேற்புக்கும் இரசனைக்கும் உட்படும் வகையிலான தலைப்பைக் கொண்டது தானா என்பதில் பேச்சாளர் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இல்லையேல் அவர் புள்ளி விவரங்களையும் தகவல்களையும் தேடியெடுத்துக் கோர்வையாகத் தமது உரையை வழங்கினாலும் அது கேட்போரின் வரவேற்புக்கும் திருப்திக்கும் உள்ளாவது துர்லபமே.

அதேவேளை, பேச்சாளரொருவரின் உரையைக் கேட்போரின் திருப்தியும் வரவேற்புமே அப் பேச்சாளருக்கான ஊக்க மருந்து என்பதனையும் மறுதலித்தல் இயலாது.
இந்த காலத்தில் பெரும்பாலான மேடைப் பேச்சுக்கள் அதை நிகழ்த்துபவரால் முற்கூட்டியே தயாரிக்கப்பட்டு மெருகூட்டப்பட்டதாகவே அமைவது வழக்கமாகியுள்ளது.

சில சமயங்களில் இடம், நிகழ்வின் தரம், தேவை என்பவற்றின் அடிப்படையில் முற் தயாரிப்பின்றி பேச்சாளர் திடுதிப்பென்று தமது உரையை நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுண்டு.

அத்தகைய சந்தர்ப்பத்தில், மேடைப் பேச்சு அனுபவம் வாய்ந்த பேச்சாளர்கள் மிக இலகுவாக தமக்கான அல்லது தாம் தேர்ந்தெடுக்கும் தலைப்பில் கேட்போரை  ஈர்க்கும் வகையில் தமது பேச்சை நிகழ்த்துவதில் வெற்றி காண்பார்.

அத்தகைய அனுபவம் குறைந்த பேச்சாளரொருவர், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திடுதிப்பென உரையொன்றை ஆற்ற நேரும்போது, அது கேட்போருக்கு இரசனை  ஏற்படுத்துவதற்குப் பதிலாக அதிருப்தியை ஏற்படுத்துமானால், அது பேச்சாளருக்குச் சங்கடத்தையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்தவும் காரணமாகி விடுவதுண்டு.

பொது நிகழ்வுகள் பல தரப்படும், இலக்கிய, சமயம், அரசியல் பாராட்டு, புத்தக வெளியீடு என அவை பல வகையாக அமையும். இவற்றில் முற்கூட்டியே  தயார்செய்து தரவுகள் சேகரித்து நிகழ்த்த வேண்டிய உரைகள் எனவும் தமக்குள்ள  பொது அறிவாற்றல், மொழியாற்றலுக்கேற்ப முன் ஆயத்தம் செய்யாது தகவல்களைக் கோர்த்து நிகழ்த்தத்தக்க திடீர் உரைகள் எனவும், இவை வெவ்வேறு வகைப்படும்.

எவ்வளவு தான் நினைவாற்றலும், படிப்பாலும் அனுபவத்தாலும் கிட்டும் அறிவாற்றல் வாய்க்கப் பெற்றிருப்பினும், தமது உரையை முன் தயாரிப்பின்றி வழங்கத்தக்க திறன் வாய்த்திருப்பினும், ஆரம்பம் முதல் இறுதி வரை சங்கிலிக் கோர்வை போன்று தொகுத்து வழங்குவதில் தான் பேச்சாளரின் பேச்சின் சிறப்பும் வெற்றியும் தங்கியுள்ளது.

அத்தகைய நிலையிலேயே அவரது உரை கேட்போரின் இரசனைக்கு விருந்தாக அமையும்; நினைவில் நிற்கும்; மனதில் பதியும். கேட்போரின் இரசனையும் பல்தரப்படும் உணர்ச்சிகளைத் தூண்டும் ஆவேசப்பேச்சு, ஹாஷ்யத்தனம் கவர்ந்த பேச்சு ஆற்றொழுக்குப் போன்றமையும் அமைதியான பேச்சும், தரவுகள் புள்ளி விவரங்களைக் கலந்து வழங்கும் பேச்சு என்பவை பேச்சுப் பாணிகள் இவற்றில்  ஏதோவொன்றே குறிப்பிட்ட ஒரு பேச்சாளருக்கு இயல்பாக அமையும் கைவரும் கலை.

அரசியல் சார்ந்த உரையை முன் ஆயத்தமின்றி திடுதிப்பாக ஆரம்பித்து வழங்க இயலுமாயினும் தமது உரை மூலம் வெளிப்படுத்தப்படும் கருத்துக் குறித்து பேச்சாளர் கவனமும் கட்டுப்பாடும் பேண வேண்டி ஏற்படும். இல்லையேல் உணர்ச்சி வேகத்தில் அவர் வெளிப்படுத்தும் கருத்து அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஊறு ஏற்படுத்த இடமுமுண்டு.

கேட்போரால் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, விமர்சனத்துக்கு உள்ளாக நேர்வதுமுண்டு.
முன் ஆயத்தங்களுடனான இலக்கியப் பேச்சும் சரி, சமயப் பேச்சும் சரி சிறப்பாய் அமைய வாய்ப்புண்டு. முன் ஆயத்தம் எதுவுமின்றி எடுத்துக் கொள்ளும் தலைப்பிலிருந்து விலகி வெளிச் செல்லாது, சிறப்பாக ஆற்றத்தக்க திறன் கொண்ட பலர் நம் மத்தியில் உளர்.

இது அவர்களிடம் இயற்கையாய் அமைந்த திறனே. ஒரு வகையில் அனுபவமும் கை கொடுப்பதாகக் கொள்ளவும் இயலும். பன்மொழித் திறன் படைத்த அறிஞர்கள் பலர் நம் மத்தியில் உள்ளனர். அவர் தம் மொழித் திறனை வெளிப்படுத்த வாய்க்கும் சந்தர்ப்பங்களில் தம் பேச்சால் கேட்போரின் இரசனைக்குத் தீனி வழங்குவதுடன் சிந்திக்கத் தூண்டும் விதத்திலும் உரையாற்ற அவர்களால் முடிகிறது. இடம், பொருள், ஏவல் அறிந்து நிகழ்த்தப்படும் இத்தகைய உரைகள் குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு  மட்டுமன்றி சமூக மட்டத்திலும் சிந்தித்துக் செயற்பட வைக்கும் தன்மை கொண்டமைவன.

முன்னரெல்லாம் குறிப்பிட்டதொரு துறையிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளிலோ தமது அறிவாற்றல் திறனை தம் பேச்சினூடாக சமூகத்தில் பரவவைக்கும் திறன் படைத்தோர் சமூக மட்டத்தில் மதிப்பும் கௌரவமும் ஈட்டிக் கொண்டனர். ஆயினும்  இன்றைய நவீன உலகு இலத்திரனியல் கலாசாரத்தை உள் வாங்கி வளர்ச்சி கண்டு வரும் நிலையில், மேடைப் பேச்சின் பிரபல்யமும் இரசிப்பும் சமூக மட்டத்தில் பின்னடைவு கண்டு வருவது கால மாற்றத்தின் விளைவுகளில் ஒன்றே.

மொத்தத்தில் மேடைப் பேச்சை ஒழுங்கமைந்த வகையில், இரசனையுடனும் சிறப்புடனும் வழங்கத்தக்க பேச்சாளர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிட்டும் வரை, அத்தகைய உரைகளை ஆவலோடும் இரசனைத் தனத்தோடும் கேட்டனுபவிக்க  விரும்பும் இரசிகர்கள் இருக்கும் வரை மேடைப் பேச்சுக்கலை நம் மத்தியில் நீண்டு  நிலைத்துவாழும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.