குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆனி(இரட்டை) 22 ம் திகதி சனிக் கிழமை .

எந்த உலகத்தில் வாழ்கின்றோம் செப்டம்பர் 27, 2023 அ.ராமசாமி எழுத்துகள்

குமரிநாட்டு .கொம்இல்...25.05.2024....தினசரிப் பேச்சில் பழமொழிகளின் பயன்பாடு அர்த்ததோடு இருப்பதும் உண்டு. அர்த்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ‘ கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழி மிகக்கூடுதலான அர்த்தத்தோடு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கும் பழமொழி என்றே இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கிறோம்.சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் பழமொழியாக இது இருக்கிறது.

கிராமஞ்சார்ந்த வாழ்க்கை என்பது குலத்தொழில் சார்ந்த வாழ்க்கையாகவே ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது. குலத்தொழில் சார்ந்த வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை உண்டான போது மனிதர்கள் இன்னொரு கிராமத்திற்குச் சென்று வாழ முயன்றிருக்கக் கூடும். ஆனால் அதை விடவும் நல்லபடியான வாழ்க்கை நகரத்தில் இருக்கிறது என நம்பும் போது பூர்வீகக் கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களில் வந்து ஏதாவது வேலை செய்து பிழைக்கத் தொடங்கியவர்கள் உண்டாக்கிய பழமொழியே கெட்டும் பட்டணம் சேர் என்பதாக இருக்கக் கூடும். அந்த வகையில் இந்தப் பழமொழியின் அதிக பட்ச வயது நூறைத் தாண்டாது என்பது என் கணக்கு. தமிழில் உள்ள பழமொழிகள் பலவற்றிற்கு நாம் காலத்தைக் கணக்கிட முடியாது. பழமொழி என்பதற்கே பழைமையான சொல் சேர்க்கை என்று தானே பொருள் .

மக்கள் திரளுக்கு எளிமையாக ஒரு கருத்தை எடுத்துச் சொல்ல விரும்பியவர்கள் உண்டாக்கிய அந்தச் சொற்சேர்க்கையின் பயன்பாடு சமூகத்திற்குத் தேவை என்றாகிற போது தொடர்ந்து வழக்கில் இருந்து கொண்டே இருக்கும். சமூக மாற்றத்தால் அது தரும் அர்த்தம் பயனின்றிப் போகும் போது அப்பழமொழிகள் காணாமல் போகும் வாய்ப்புகளும் உண்டு. சாதி ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்ட காலத்தில் ஒவ்வொரு சாதிகளின் இயல்புகளாகக் கருதிப் பழமொழிகள் பல உருவாகியிருக்கின்றன. அவையெல்லாம் இன்றைய காலகட்டத்தில் பொருத்தமுடையன என்று சொல்வதற்கில்லை. அவற்றை எல்லாம் இன்று வெளிப்படையாகப் பயன்படுத்தவும் முடியாது. தமிழில் காணாமல் போன பழமொழிகள் ஏராளமாக உண்டு. கால மாற்றத்தால் காணாமல் போன பழமொழிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. விட்டு விடலாம். அதற்கு மாற்றாகப் புதிய பழமொழிகளை உருவாக்கிச் சமூகம் பயன்படுத்திக் கொள்ளவும் தொடங்கி விடும்.

கெட்டும் பட்டணம் சேர் என்னும் பழமொழியைத் தமிழர்கள் எந்தக் கேள்வியும் இன்றி ஏற்றுக் கொண்டு நகரத்தை நோக்கி நகர்ந்த காலமாகக் கடந்த ஐம்பது ஆண்டுகளைச் சொல்லலாம். அதிலும் குறிப்பாக 1950 களில் ஏற்பட்ட தொழிற்சாலைப் பெருக்கத்தின் காரணமாக உண்டான நகர்மயம் பெருமளவு வேளாண்மைத் தொழிலாளிகளை நகரங்களை நோக்கி நகர வைத்தது. தொழிற்சாலைகளின் பணியாளர்களாகவும், பெருந்தொழில்களின் துணைத் தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும் நகரத்தை நோக்கி நகர்ந்தவர்கள் கூட்டம் என்றால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வேலைகளைச் செய்வதற்கும், சேவைப் பணிகளைச் செய்வதற்குமான உதிரித் தொழிலாளர்களாகவும் நகரங்கள் வீங்கிப் பெருத்துள்ளன.

இதே நேரத்தில் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தரவர்க்க மனிதர்களின் இடப் பெயர்வை இந்தப் பழமொழியால் குறிக்க முடியாது. அவர்கள் கெட்டுப் போனதால் நகரத்துக்கு வந்தவர்கள் இல்லை. நகரத்தின் தேவைக்காக- நகரவாசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நகரத்தின் ஒழுங்குகளையும் விதிகளையும் நாகரிகம் என்ற பெயரில் கற்றுக் கொடுத்து , தனிப்பட்ட திறமைகளை உருவாக்கித் தன் வயப்படுத்தியதால் நகர்ந்தவர்கள் அவர்கள். எனவே அவர்களுக்கு இந்தப் பழமொழி பொருந்தாது

நகரங்களின் மக்கள் பெருக்கத்தை வீங்கிப் பெருத்தது என்று தான் சொல்ல வேண்டும். அப்பெருக்கம் இயல்பான வளர்ச்சி அல்ல. இயல்பான வளர்ச்சி ஆபத்தில்லாதது. வீங்கிப் பெருப்பது ஒருவிதத்தில் நோய். அந்த நோயின் அளவு ஒவ்வொரு நகரத்துக்கும் வேறு வேறு விதமாக இருக்கின்றன. திருநெல்வேலி, மதுரை, தஞ்சை போன்ற பாரம்பரியமான நகரங்கள் அவ்வளவு வேகமாக வளர்ந்தன எனச் சொல்ல முடியாது. ஆனால் தொழில் நகரங்கள் என அறியப்படும் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, தூத்துக்குடி, போன்றனவற்றின் வளர்ச்சி ஆபத்தான வளர்ச்சி. இவை எல்லாவற்றையும் விட பெரும் ஆபத்தோடு தமிழகத்தின் தலைநகர் சென்னை வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நமது அரசு நிர்வாகத்தின் கண்ணிகளில் உள்ளவர்கள் எப்பொழுது உணரப்போகின்றார்களோ தெரியவில்லை. உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்பட வேண்டும் என வேண்டிக் கொள்ளலாம்.

சென்னையில் சந்தித்த அந்த வாடகைக்கார் ஓட்டியைத் திருநெல்வேலியில் சந்திப்பேன் என நினைக்கவில்லை. இங்கேயும் வாடகைக் கார் ஓட்டியாகவே அவரைச் சந்திக்க நேர்ந்தது. சென்னையில் சந்தித்த போது அவரது சொந்த ஊர் திருநெல்வேலிக்குப் பக்கத்தில் உள்ள கிராமம் என்று மட்டுமே சொன்னார். திருநெல்வேலிக்காரனைச் சென்னையில் சந்தித்த மகிழ்ச்சியில் ஒரு காரோட்டி காட்டும் அக்கறையை விடவும் கூடுதலான அக்கறையை என்னிடம் காட்டினார். ஊர்க்கதை, பழைய நினைவுகள் என என்னோடு பகிர்ந்து கொண்ட செய்திகளில் அவரது குடும்ப வாழ்க்கை பற்றி அதிகம் சொல்லவில்லை. திருநெல்வேலியில் சந்தித்த போது எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என நினைத்தவர் போலத் தனது காரில் ஏற்றிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

சென்னையைக் காலி செய்து விட்டுத் திருநெல்வேலிக்கு வந்து விட்டதாகச் சொன்னார்.சென்னையில் காரோட்டியாக இருந்த போது கிடைத்த சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு தான் திருநெல்வேலியில் கிடைக்கிறது என்ற வருத்தம் அவரது பேச்சில் வெளிப்பட்டது. சென்னையில் ஒரு டாக்ஸி டிரைவருக்கு பத்திலிருந்து பன்னிரண்டாயிரம் உறுதி; ஆனால் திருநெல்வேலியில் உறுதியாக மூவாயிரம் கிடைக்கும். அதற்குமேல் கிடைப்பதெல்லாம் அதிர்ஷ்டம் சார்ந்தது. அதிர்ஷ்டம் அதிகமாக இருந்தால் பத்தாயிரம் வரை கிடைக்கலாம். என்றாலும் பரவாயில்லை. இனித் திரும்பவும் சென்னைக்குப் போகப் போவதில்லை என்ற உறுதியாகவும் சொன்னார்.

கணவன் - மனைவி ஒரு குழந்தை என இருக்கும் தனது சின்னக் குடும்பத்தை நடத்துவதற்குச் சென்னையில் கிடைத்த எட்டாயிரம் ரூபாய் சம்பளம் போதவில்லை. அரை மாதத்தைக் கூடச் சமாளிக்க முடியவில்லை. ஆனால் இங்கு கிடைக்கும் இரண்டாயிரம் ரூபாயில் ஓரளவு சமாளிக்கலாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. இனித் திரும்பவும் சென்னைக்குப் போகப் போவதில்லை என்று அவர் தீர்மானமாகச் சொன்னதற்கான காரணம் அவரது சொந்த வாழ்க்கை சார்ந்த தனிப்பட்ட காரணம் அல்ல. அது ஒரு பொதுக் காரணம். சென்னை நகரத்தின் பொதுப் பிரச்சினையாக இருக்கும் அந்தக் காரணம் எல்லாப் பெருநகரங்களின் காரணமாகவும் ஆகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

தான் சம்பாதித்த பன்னிரண்டாயிரம் ரூபாயில் நாலாயிரம் ரூபாயை வீட்டு வாடகைக்குத் தர வேண்டியிருந்தது.4000 வாடகை கொடுத்து இருந்த அந்த இடத்தை நாங்கள் வீடு என்று சொல்லிக் கொண்டோம். உண்மையில் அது வீடு அல்ல; கார் நிறுத்துவதற்குக் கட்டும் அறையைப் போல ஓர் அறை தான். அதைப் போல வரிசையாக இருக்கும் ஐந்து வீடுகளுக்கு ஒரு பொதுக் கழிப்பறையும், குளியலறையும் உண்டு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாள், 1000 ரூபாய் வாடகை பேசி 2000 ரூபாய் முன்பணம் கொடுத்துப் போன வீடு அது. இப்போது அதன் வாடகை 4000 ரூபாய். முன் பணம் 12000 ரூபாய். வாடகையை உயர்த்திக் கொண்டே போன போது செலவுகளைக் குறைத்துக் கொண்டு தர முடிந்தது. ஆனால் முன்பணத்தை மொத்தமாகக் கேட்டபோது தர முடியவில்லை. வேறு வழியில்லாமல் ஊர் திரும்புவது என முடிவு எடுத்தேன் என்றார்.

சொன்னவர் சென்னை நகரத்து மனிதர்களை அச்சுறுத்தும் வீட்டு வாடகைப் பிரச்சினையைப் பற்றிய நீண்ட விரிவுரையைத் தொடர்ந்து நடத்தினார். நான் பேராசிரியரிடம் பாடம் கேட்கும் மாணவனைப் போல கேட்டுக் கொண்டே பயணம் செய்தேன். பத்தாயிரம், இருபதினாயிரம் எனத் தொடங்கி ஒரு லட்சம் ரூபாய் வரை வாடகை கொடுத்து குடியேறும் மனிதர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துக் கொண்டிருப்பதின் விளைவுகள் அப்பாவிகளான டிரைவர்களை ஏன் பாதிக்க வேண்டும் என்பது அவருக்குப் புரியவில்லை. என்னிடம் அதற்கான விளக்கத்தை எதிர்பார்ப்பது போலப் பேச்சை நிறுத்திய போது எனக்கும் புரியவில்லை.

பேச்சை நிறுத்திய அவர் இன்னொருவரின் அனுபவத்தைச் சொன்னார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனம் ஒன்றின் தொழிலாளி. போதுமான சம்பளம் கிடைக்கிறது என்பதால் நடுத்தரவர்க்கத்தின் குறைந்த பட்ச ஆடம்பரப் பொருட்களை தவணைத் திட்டங்களில் நிரப்பியிருந்தாராம். இரண்டு குழந்தைகளையும் மாதம் ஆயிரம் வரை பணம் கட்டிப் படிக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சேர்ந்திருந்தாராம். வாடகை உயர்வு, வாழ்க்கைத் தேவைக்கான அடிப்படைப் பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் உண்டான நெருக்கடியின் விளைவாகக் கணவன் சென்னையில் வேலையைத் தொடர, மனைவியும் குழந்தைகளும் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர். மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் அரசுப் பள்ளியில் படிக்க முடியாமல் தவிப்பதைச் சொல்லி அந்த நண்பர் தினசரி புலம்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கு அவருக்கான பதிலைச் சொல்லும் நபர்கள் இல்லை. இப்படியான மனிதர்களை வழி நடத்தவோ, அணி திரட்டவோ , குரல் கொடுக்கவோ யாரும் இல்லை என்பதுதான் சமூகத்தின் பெருந்துயரம். அவருக்கான விளக்கத்தைச் சொல்ல முடியாத போதும் அவரது அனுபவங்களும் அவரை ஒத்த பலரின் அனுபவங்களும் ஒன்றை உணர்த்தியது. நாம் வாழுங்காலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது என்பதை மறுக்க முடியாது.

தமிழர்கள்/இந்தியர்கள் ஒரே நேரத்தில் வேறுவேறு உலகங்களில் – மூவுலகக் கோட்பாட்டைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று மட்டும் விளங்கிக் கொண்டேன். மூவுலகம் என்பது இந்தியப் புராணங்களும் இதிகாசங்களும் சொல்லும் பூலோகம், மேலோகம், பாதாள லோகம் என்ற மூன்று உலகங்கள் அல்ல. இந்த வேறுபாடுகள் கற்பனையானவை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிவுலகக் கோட்பாடாக இருந்த வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வளராத நாடுகள் என்ற மூவுலகக் கோட்பாடுகளும் அல்ல. இந்த வேறுபாடுகள் தொழில் வளர்ச்சி என்னும் அடிப்படையிலான அரசியல் சொல்லாடல்கள்.

நான் விளங்கிக் கொண்ட மூன்று உலகங்கள் கற்பனையானவை அல்ல. அரசியல் சொல்லாடல்களும் அல்ல. தனிநபர் வாழ்க்கை சார்ந்து நெருக்கடி தந்து கொண்டே இருக்கும் இந்த வேறுபாடுகளின் பின்னணியில் இருப்பன முழுக்க முழுக்கப் பொருளாதாரப் பிரச்சினைகள். வாழும் வெளிசார்ந்த சிக்கல்கள். உலகமயத்தை ஏற்றுக் கொண்ட இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் அதன் துணைப் போக்குகளான தனியார் மயமும் தாராளமயமும் ஒன்றி ணைந்து இந்தியர்களை நெருக்கடி மிகுந்த மூன்றுலகக் கோட்பாட்டிற்குள் தள்ளி விட்டுள்ளன. டாலர்களிலும் அந்நியதேசத்துக் கரன்சிகளிலும் சம்பளம் வாங்கும் இந்தியர்கள்/தமிழர்கள் அமெரிக்க நகரங்களில் அந்நாட்டு நகரங்களில் வாழும் விதம் முதல் வகை உலகம் என்றால், இந்தியப் பெருநகரங்களில் வாழ நேர்வதை இரண்டாம் வகை உலகம் எனலாம். வேளாண்மை சார்ந்த தனது பழைய அடையாளங்களை இழந்த போதிலும், சமூகம் சார்ந்த –சாதி வேறுபாடுகள் சார்ந்த மதிப்பீடுகளை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருப்பது மூன்றாம் உலக வாழ்க்கை எனச் சொல்லலாம்.

இங்கும் அல்லாமல் அங்கும் அல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் கீழ் நடுத்தர- உதிரிவர்க்க வாழ்க்கையை எப்படிப் பகுத்துச் சொல்வது? தாராளமயப் பொருளாதாரம் உண்டாக்கும் இந்த வேறுபாடுகள் பாரதூரமான வேறுபாடுகளாக மாறுகிற போது ‘ கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழி அர்த்தமிழக்கத்தான் செய்யும் .