குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆனி(இரட்டை) 22 ம் திகதி சனிக் கிழமை .

தமிழி எழுத்துக்கள்...05.04.2024.....

05.04.2024......எப்போதும் போல் தமிழர்களின் பழமைக்குச் சான்றாவணமாக இருப்பது சங்க இலக்கியம்தானே... பழந்தமிழர்கள் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர்கள் எழுதிய எழுத்துக்கு ஏதேனும் பெயர் உண்டா.? சங்க இலக்கியம் சான்று தருகிறதா..?ஆம்.. சான்று உள்ளது. பழந்தமிழர்கள் குயிலி என்னும் எழுத்து முறையில் எழுதியதாக அகநானூறு பாடல் ஒன்று கூறுகிறது. தலைவியைப் பிரிந்து தலைவன் காடு வழியே செல்கிறான். வழியில் ஒரு நடுகல். ஆகோள் பூசலில் ஈடுபட்ட ஒருவன் இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்ட ஒரு நடுகல். அந்த நடுகல்லில் அவனது பெயர் குயிலி என்னும் எழுத்துமுறையால் எழுதப்பட்டிருந்தது. அகம் பாடல்.297 "மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல், பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து" ஆகவே.. பழந்தமிழர்களிடம் ஒரு எழுத்து முறை இருந்தது.. சமயவங்க சூத்திரம் என்னும் ஒரு சமண நூல். காந்தாரத்தைச் சேர்ந்த சமணமுனிவர்களால் எழுதப்பட்டது. மகாவீரரின் போதனைகளை சூத்திர வடிவில் எழுதப்பட்ட ஒரு நூல். இந்நூலின் காலம் கி.மு.முதலாம் நூற்றாண்டு என்பது வரலாற்றாய்வாளர்கள் கணிப்பு .. இந்நூலில் அப்போது வழக்கத்தில் இருந்த 18 மொழிகளின் எழுத்துரு பெயர்கள் இருந்தன. அம்மொழிகளுள் இந்தியாவில் வழக்கத்தில் இருந்ததாக மூன்று மொழிகள் அடையாளம் காணப்பட்டன. 1.கரோஷ்டி எழுத்து , 2.பிரமி எழுத்து, 3. தமிழி எழுத்து என்ற மூன்று மொழி எழுத்துக்களை சமயவங்கா சூத்திரம் நூல் கூறுகிறது. பிரமி எழுத்துக்கள் வட இந்தியாவிலும், கரோஷ்டி வடமேற்கு இந்தியாவிலும் தமிழி தமிழகம் மற்றும் இலங்கையிலும் வழக்கத்தில் இருந்தன. ஆரம்பத்தில் பிராமி எழுத்துக்கள் பிராக்ருதம் என்று சொல்லப்படும் பாலி மொழியை எழுதப் பயன்பட்டது. பெரும்பாலும் பௌத்த சமண போதனைகளை எழுதவே பாலி மொழி பயன்பட்டது. அசோகன் காலத்தில் அசோகனது சாசனங்கள் பெரும்பாலும் பாலி என்னும் ப்ராக்ருதத்தில் பிராமி எழுத்தில் எழுதப்பட்டன. ஆகவே இதை அசோக பிராமி எழுத்து என்று ஆய்வாளர்களால் அழைக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் தயிழகத்தில் பிராமி போன்ற வரிவடிவத்தில் மலைக்குகை கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. முதலாவதாக வெளிவந்தது மதுரை மாங்குளம் கல்வெட்டு. இதை பிராக்ருதம் மொழியில் இருக்கும் பிராமி என்று நினைத்து பிராக்ருதம் மொழியைக் கொண்டு வாசிக்க நினைத்தனர். முடியவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது தமிழ் மொழிக்கு உரியது என்று உறுதி செய்து எளிதாக வாசித்தனர். அசோகர் பிராமியை போன்ற எழுத்து வரிவடிவம் இருந்ததால் இதை தமிழ் பிராமி என்று அழைத்தனர். இந்தத் தமிழ் பிராமி கல்வெட்டுகள் அனைத்தும் மலைக்குகைகளிலே கிடைத்தது. அங்கே சமணர் சிற்பங்கள் இருந்ததால் தமிழி எழுத்துக்களை வடக்கே இருந்து சமணர்கள் கொண்டு வந்தனர் என்ற ஒரு கற்பிதத்தை பரப்பினார்கள். தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் காலம் கி.மு.2.ஆம் நூற்றாண்டு. சமணர் சிற்பங்களின் காலம் கி.பி.8 ஆம் நூற்றாண்டு. எப்படி இரண்டையும் பொருத்தினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். தமிழகத்தில் சமணர்கள் உள்நுழைவே கி.பி.3 ஆம் நூற்றாண்டில்தான் ஆரம்பம். இவர்கள் எப்படி கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் தமிழி எழுத்துக்களை கொண்டுவந்தார்கள்.? அதற்குப் பிறகு வெளிப்பட்ட தமிழிக் கல்வெட்டுகள் அனைத்தையும் அசோகன் காலத்தில் உள்ளடக்கி கி.மு.2 ஆம் நூற்றாண்டு என்றே காலம் கணித்தார்கள். பொருந்தல், கொடுமணல் உட்பட பல இடங்களில் நடந்த அகழாய்வில் கீறல்களும், எழுத்துக்களும் கொண்ட பானையோடுகள் கிடைத்தன. சொல்லி வைத்தார்போல் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு என்றே காலம் கணித்தனர். கி.மு.5 ஆம் நூற்றாண்டு வரை செல்லும் என்ற ஒரு சில ஆய்வாளர்களின் கூற்றுகள் பரவலாகப் பேசப்படவில்லை. எப்போதும் அசோகன் பிராமி காலத்தை தமிழி முந்தக்கூடாது என்பது ஒரு கொள்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த சூழ்நிலைநிலையில்தான் கீழடி அகழாய்வு நடைபெற்றது.. கீறல்கள், பழந்தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானையோடுகள் ஏராளமாகக் கிடைத்தன. எழுத்துப் பொறிப்புள்ள பானையோடு ஒன்றின் காலத்தை அறிவியல் முறைப்படி கார்பன் டேட்டிங் செய்தார்கள். காலம் கி.மு.580 என்று உறுதி செய்யப்பட்டது. மகாவீரர் பிறப்பதற்கு முன்பு.. அசோகர் பிறப்பதற்கு முன்பு.. புத்த பௌத்த மதங்கள் தோன்றுவதற்கு முன்பு.. தமிழி எழுத்துக்கள் தமிழகத்தில் இருந்தன என்பது உறுதி செய்யப்பட்டது. கி.மு.6 ஆம் நூற்றாண்டில் இருந்த தமிழி எழுத்து வடிவத்தை ஒட்டியே கி.மு. 3 ஆம் நூற்றாண்டு அசோக பிராமி உருவானது. தாய்க்குத்தானே மகள் பிறப்பாள். குறியீடுகள்.. ஒன்று இரண்டு எழுத்துக்கள்.. பெயர்கள் மட்டும். சிறு சிறு செய்திகள். கொண்ட தமிழி எழுத்துக்கள் கி.மு 6 ஆம் நூற்றாண்டு. நன்கு வளர்ச்சியடைந்த எழுத்துருவாக நீண்ட செய்திகளை கொண்ட ஒரு அரசனது சாசனமாக அசோக பிராமி .. கிமு 6 ஆம் நூற்றாண்டு. வடக்கே அரசனது சாசனமாக மட்டும் பிராமி எழுத்துக்கள் இருந்தன. அதை பொதுமக்களுக்கு வாசித்து காட்டுவதற்கு ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் மக்கள் பேசும் மொழியாக தமிழி இருந்தது. அனைத்து பொது மக்களும் அவர்களாகவே எழுதினார்கள். முழுமையாக சங்கத்தமிழர்கள் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்றிருந்தனர். கீழடி தமிழி எழுத்துக்கள் கி.மு.580 எவ்வாறு உறுதி செய்யப்பட்டது? எந்தக்குழி..? எந்த அடுக்கு..? எவ்வளவு ஆழம்..? என்ன சோதனை.? அனைத்து விபரங்களையும் தமிழகத் தொல்லியல்துறை வெளியிட்ட கீழடி அகழாய்வு அறிக்கையில் விரிவாக விளக்கமாகக் காணலாம். அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி.. ( பக் - 37) --------++++----------------------------- *இந்த அகழாய்வுக் குழியிலுள்ள பண்பாட்டு அடுக்குகளின் படிவு மொத்தம் 360 செ.மீ., இவற்றில் கரிம மாதிரி 353 செ.மீ. ஆழத்தில் சேகரிக்கப்பட்டது, அதாவது இயற்கை மண்ணிற்கு மேலே 7 செ.மீ உயரத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் 300 செ.மீ.ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டன. இந்த பண்பாட்டு அடுக்கில் கரிம மாதிரி சேகரிக்கப்பட்டதற்கும் தொல்பொருள் (தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள்) கண்டெடுக்கப்பட்டதற்கு மான இடைவெளி 53 செ.மீ ஆகும். இந்த 53 செ.மீ மண்ணடுக்கு படிவு உருவாவதற்கு ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கும் குறைவான காலம் எடுக்கும். பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த காலகணிப்புகளின் (AMS -Accelerator Mass Spectrometry) அடிப்படையில் இக்காலவரையறை செய்யப்பட்டது. கீழடியில் கிடைத்த 5 கரிம மாதிரிகள் 353 செ.மீ மற்றும் 207 செ.மீ மண்ணடுக்குகளிடையே சேகரிக்கப்பட்டவையாகும். இதன்வரையறை செய்யப்படாத (uncalibrated) காலம் கி.மு.580 ஆகும். பகுப்பாய்வு வரைபடத்தில் நடு நிலையில் குறிப்பிட்டுள்ளவாறு இதனின் வரையறை செய்யப்பட்ட காலம் கி.மு. 680 ஆகும். காலக்கணிப்பு செய்யப்பட்ட ஐந்து கரிம மாதிரிகளும் 353 செ.மீ மற்றும் 207 செ.மீ இடைப்பட்ட பண்பாட்டு மண்ணடுக்குகளில் இருந்து காலப்பகுப்பாய்வு செய்யப்பட்டவையாகும். இதன் காலம் கி.மு. 580- க்கும் கி.மு 190-க்கும் இடைப்பட்டதாகும். இந்த 146 செ.மீ (353-207 = 146) பருமன் கொண்ட மண்ணடுக்கு உருவாக ஏறத்தாழ 400 ஆண்டுகள் (580- 190=390) ஆகியுள்ளது. இதனடிப்படையில் 40 முதல் 50 செ.மீ படிவு உருவாக ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கு சற்று குறைவான காலம் ஆகியிருக்க வேண்டும் என எடுத்துக்கொள்ளலாம். 353 செ.மீ ஆழத்தில் சேகரிக்கப்பட்ட கரிமத்தின் காலமானது பகுப்பாய்வு வரைபடத்தில் மத்திய எல்லையில் குறிப்பிட்டுள்ளவாறு இதனின் வரையறை செய்யப்பட்ட காலம் கி.மு.680 ஆகும். எனவே 300 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளின் காலம் எளிதாக கி.மு.6-ஆம் நூற்றாண்டு என்று கால வரையறை செய்யலாம். கீழடியில் கிடைத்த ஐந்து மாதிரிகளின் காலக்கணிப்புகளை கொண்டு முதற்கட்ட பண்பாட்டுப் படிவுகளின் காலம் கி.மு . 6-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.மு.3-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலும் (தொடக்க வரலாற்று காலத்தின் முதல் கட்டம்) இரண்டாம் பண்பாட்டுப் படிவுகளின் காலம் கி.மு.3-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி தொடங்கி கி.மு. 1 - 2-ஆம் நூற்றாண்டு வரையிலான ( தொடக்க வரலாற்று காலத்தின் இரண்டாம் கட்டம்) காலகட்டத்தைச் சார்ந்தது எனலாம். -----------------------++--------------- ஆகவே.. இந்தியாவில் காலத்தால் மூத்தது தமிழி எழுத்துக்கள் என்று தொல்லியல் வரலாறு அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நன்றி ஈழத்து வரலாறும் தொல்லியலும்.................