கட்டுரை தகவல் ,எழுதியவர்,யோனதன் ஏமோசு,பதவி,பிபிசி அறிவியல் செய்தியாளர்12 அக்டோபர் 2023.... பூமியில் இருந்து 200 கோடி கி.மீ தொலைவில் இருக்கும் ‘பென்னு’ என்னும் சிறுகோளில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை, நாசாவின் ஒசைரிசு ரெகசு விண்கலம் சென்ற மாதம் பூமிக்குக் கொண்டு வந்தது. ஏழு ஆண்டுகள் பயணித்து 700 கோடி கி.மீ. சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு ஒசைரிசு ரெக்சு பூமிக்குக் கொண்டு வந்த பென்னு சிறுகோளின் மண் மாதிரியை இப்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த ஆய்வில், பூமியில் உயிர் எப்படித் தோன்றியது என்னும் மிகப்பெரிய கேள்விக்கான விடை கிடைப்பதற்கான முதற்கட்ட அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன.
9 அக்டோபர் 2023
பென்னு சிறுகோள், ஒசைரிசு ரெக்சு, நாசா, விண்வெளி பட மூலாதாரம்,NASA
சிறுகோளின் மண்ணில் என்ன இருந்தது?
இந்த ஆய்வில், பூமியில் உயிர் எப்படித் தோன்றியது என்னும் மிகப்பெரிய கேள்விக்கான விடை கிடைப்பதற்கான முதற்கட்ட அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன.
இந்த விஞ்ஞானிகள் குழுவில் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி முனைவர் ஆச்லி கிங்-கும் ஒருவர்.
அவர் பிபிசியிடம் பேசுகையில், இதுவரை அவர்கள் ஆராய்ந்திருக்கும் பென்னுவின் மண் மாதிரி மிகவும் ‘அழகாக இருப்பதாகக்’ கூறினார்.
பென்னு சிறுகோளின் இந்த மண் மாதிரி, தற்போது அமெரிக்காவின் டெக்சாசு மாகாணத்தில் உள்ள ஒரு சிறப்பு ஆய்வகத்தில் வைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
"சரியான சிறுகோளை நோக்கித்தான் நாம் சென்றிருக்கிறோம் என்பதை உறுதி செய்துவிட்டோம்," என்று கூறுகிறார் ஆஷ்லி கிங்.
பென்னு சிறுகோளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கருப்புத் தூளில், கரிமம் மற்றும் நீர் நிறைந்த தாதுக்கள் அதிகம் இருந்ததாகக் கண்டறிந்துள்ளது அதை ஆய்வு செய்த குழு.
பென்னு சிறுகோள், ஒசைரிசு ரெக்சு, நாசா, விண்வெளி பட மூலாதாரம்,BBC/KEVIN CHURCH
படக்குறிப்பு,
பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி முனைவர் ஆச்லி கிங் பென்னுவிலிருந்து எடுத்துவரப்பட்ட மாதிரியை ஆராயும் குழுவில் உள்ளார்.
இது நம்பிக்கை தரக்கூடிய கருப்பொருள்.
சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி இளமையாக இருந்தபோது, அதற்கு முக்கிய சேர்மக்கூறுகளை வழங்குவதில் பென்னுவை போன்ற கரிமமும் நீரும் நிறைந்த சிறுகோள்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று ஒரு கோட்பாடு உள்ளது.
பெருங்கடல்களில் உள்ள நீரையும், உயிர்களின் உருவாக்கம் தொடங்குவதற்குத் தேவையான சில சேர்மங்களையும் பூமி எப்படிப் பெற்றது என்பதற்கான விளக்கம்தான் இது. இந்தக் கோட்பாட்டைச் சோதிக்க பென்னு சிறுகோளின் மாதிரிகள் பயன்படும்.
முன்னர் இந்த ஆராய்ச்சி பற்றிப் பேசுகையில், நாசா நிர்வாகி பில் நெல்சன், “நாம் யார், எங்கிருந்து வந்தோம், பிரபஞ்சம் என்று அழைக்கப்படும் இந்தப் பரந்த வெளியில் நமது இடம் என்ன என்பன போன்ற மிகப்பெரும் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முயல்வதாக" கூறினார்.
பென்னு சிறுகோள், ஒசைரிசு ரெக்சு, நாசா, விண்வெளி
படக்குறிப்பு,
பென்னு சிறுகோளின் அளவை விளக்கும் படம்
இந்த அரிய மண் நம்மிடம் எவ்வளவு இருக்கிறது?
ஓசைரிசு ரெக்சு பென்னு சிறுகோளில் இருந்து அதிகப்படியான மண்ணை எடுத்து வந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தாலும், அதன் எடை சரியாக எவ்வளவு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் இன்னும் துல்லியமாகக் கணக்கிடவில்லை.
செப்டம்பர் 24 அன்று அமெரிக்காவின் யூடா பாலைவனத்தில் தரையிறங்கிய பென்னுவின் மண் மாதிரி நிரம்பிய குப்பி திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஓசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் சிறுகோள் மாதிரியைச் சேமிக்கப் பயன்படுத்திய அதன் உள் அறையின் உள்ளடக்கம் இன்னும் முழுமையாகக் காலி செய்யப்பட்டு அதன் எடை அளக்கப்படவில்லை.
மொத்தம் சுமார் 250 கிராம் மண் மாதிரி இருப்பதாக ஆய்வுக் குழு நினைக்கிறது. இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்த இன்னும் சில நாட்கள் பிடிக்கும்.
11 அக்டோபர் 2023
பென்னு சிறுகோள், ஒசைரிசு ரெக்சு, நாசா, விண்வெளி பட மூலாதாரம்,NASA
படக்குறிப்பு,
தொடக்கக்கட்டப் பரிசோதனைகளைச் செய்வதற்காக ஒசைரிசு ரெக்ஸ் கொண்டு வந்திருந்த கொள்கலனின் மூடியைத் திறந்ததும், அதனுள்ளே இந்தக் கருப்பு பொடி கிடந்தது
பூமிக்கு தண்ணீர் எப்படி வந்தது என்பது பற்றிய புரிதல்
ஆரம்பக்கட்டப் பரிசோதனைகளைச் செய்வதற்காக ஒசைரிசு ரெக்சு கொண்டு வந்திருந்த கொள்கலனின் மூடியைத் திறந்ததும், அதனுள்ளே இந்தக் கருப்பு பொடி கிடந்தது. அதைக் கண்ட குழு மிகவும் உற்சாகமடைந்தது என்கிறார் ஆச்லி கிங்.
“முதற்கட்ட ஆய்வுகளுக்கே எராளமான மண் மாதிரி இருந்தது. இது எங்கள் வேலையை எளிதாக்கியது," என்கிறார் அவர்.
இந்த சிறுகோளின் தூசு, ஒரு எலக்ட்ரான் நுண்ணோக்கியின் அடியில் வைத்துச் சோதிக்கப்பட்டது. மேலும் எக்சு-ரே டைஃப்ராக்ஷன் மற்றும் இன்ஃப்ராரெட் சு பெக்ட்ரோசுகோபி ஆகிய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. கூடுதலாக கம்ப்யூட்டட் டோமோகிராபி (CT) இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டது.
இவற்றின் மூலம் இந்த மாதிரியில் கரிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடையால் சுமார் 5% கரிமம் உள்ளது.
இதுவொரு பெரிய கருப்பொருள், என்கிறார் நாசாவை சேர்ந்த ஆய்வாளரான முனைவர் டேனியல் கால்வின். “இந்தத் தரவு கிடைத்ததும், குழுவில் இருந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் கூச்சலிடத் தொடங்கினர்,” என்கிறார் அவர்.
முதல்கட்ட ஆய்வில், கார்பனேட் சேர்மங்கள் மற்றும் சிக்கலான அங்ககச் சேர்மங்கள் கண்டறியப்பட்டன.
ஒசைரிசு-ரெக்சு திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் டான்டே லாரெட்டா, இந்த மாதிரியின் களிமண் தாதுக்களில் நீர் உள்ளடக்கத்தைப் பற்றிக் கூறினார். "அவற்றின் படிக அமைப்புக்குள் தண்ணீர் உள்ளது," என்கிறார் அவர்.
இதுபோன்ற சேர்மங்களின் முலம்தான் தண்ணீர் வந்தது என்று அவர்கள் நினைப்பதாகக் கூறுகிறார். “அதனால்தான் பூமி வாழக்கூடிய கோளாக இருக்கிறது. பென்னுவில் இருந்து வந்த மாதிரிகளில் நாம் பார்க்கும் சேர்மங்களைப் போன்றவர், 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வந்து தரையிறங்கின," என்கிறார்.
பென்னு சிறுகோள், ஒசைரிசு ரெக்சு, நாசா, விண்வெளி பட மூலாதாரம்,NASA
இனிமேல் பிறக்கவிருக்கும் விஞ்ஞானிகளும் ஆராய வழிவகை
ஒசைரிசு-ரெக்சு விண்கலம் 2020ஆம் ஆண்டு அக்டோபர் பென்னுவிலிருந்து மண் மாதிரியை எடுத்தது. அதை பூமிக்குக் கொண்டுவர அதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது.
கொள்கலனில் இருக்கும் மண் மாதிரியை முழுவதும் வெளியே எடுத்த பிறகு, அது உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களோடு பகிர்ந்துகொள்ளப்படும்.
ஆனால் இந்த மாதிரியில் 75% வருங்கால தலைமுறையினருக்காகத் தனது காப்பகத்தில் நாசா பாதுகாத்து வைக்கும். இதை, எதிர்காலத்தில் பிறக்கப்போகும் விஞ்ஞானிகள் இனிமேல் கண்டுபிடிக்கப்பட இருக்கும் கருவிகளை வைத்து ஆராய்வர்.