குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

இந்துவாக்கப் பேரலையின் பின்னணியில் ஈழத்துச் சைவத்துக்கும் – சைவசித்தாந்தத்திற்கும் ஒரு ஆவணவெளி

14.03. 2023... மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

இப்போது உலகளாவிய அல்லது அகன்ற இந்துவாக்கப் பேரலையின் தந்திரோபாயங்களுள் ஈழத்துச் சைவமும் சிக்குண்டுள்ளது அல்லது சிக்கவைக்கப்பட்டுள்ளது. அது ஒருவகையில் ஈழச் சைவத்தின் தனியடையாளத்தை பெரும் இந்துப்போர்வை கொண்டு மூடி அதன் தனித்துவத்தை கரைக்கத்தொடங்கியுள்ளது என்பதை எங்களிற் பலர் கவனிக்கத் தவறியுள்ளோம். ஈழச் சைவ மரபுரிமைகளைப் பின் தள்ளி – அகன்ற இந்துவாதத்துள் அதனை அங்கவீனமடையச் செய்யும் இந்த மாற்றத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றல் அல்லது எந்தக் கேள்விகளுமற்று பொதுப்போக்குகளிற்கு பின்னால் ஓடும் மனநிலை முதலியவற்றால் எதிர்கால ஈழச் சமூகத்தில் விரும்பத்தகாத மாற்றங்களும் – சமூக நெருக்கடிகளும் ஏற்படப் போகின்றன; ஏற்கனவே ஈழத்தமிழரின் சமயப் பயில்வுகள் பலவும் மாற்றியமைக்கப்பட்டும், மெல்ல காணாமற் போகவும் தொடங்கிப் பலகாலங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது இந்துவாதப் பேரலை அதன் தனித்துவத்தின் எஞ்சிய சிலவற்றையும் பின்தள்ளத் தொடங்கியுள்ளது.  சமூக அரசியல் மதத் தலைவர்களும் இந்தப் பொதுப்போக்கிற்குள் விகிதாசார வேறுபாட்டோடு சிக்குப்பட்டுள்ளனர் என்பதுதான்  அடுத்த அவலமாகக் காணப்படுகிறது. அது மட்டுமன்றி கல்விப்புலத்திலும் ஈழச்சைவம் பின்தள்ளப்பட்டு இந்துநாகரிகம் என்ற பெயருக்குள் சிக்குண்டு பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. ஈழச் சைவத்திற்கு எம்மிடம் ஒரு புலமை இருக்கை (academic chair). வட மொழியிலுள்ள உபநிடதங்களது மகாவாக்கியங்கள் என சொல்லப்பட்டவற்றிற்கு சமாந்தரமான மகாவார்த்தைகளைப் பகிர்ந்த செல்லப்பா சுவாமிகளுக்கு ஒரு மூலைக்குள் நடக்கும் ‘குருபூசைதினம்’ மட்டுந்தான் எம்மிடமுள்ளது.

சிதம்பரம்-நடராயர்-ஆயிரங்கால்-மண்டபம்

இந்து என்ற மதவகையின் உருவாக்கமானது, காலனிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட கீழைத்தேய மதங்களை வகைநிலைப்படுத்தலின் வழிப்பட்டது. பெளத்தத்தையும், சமணத்தையும் இலகுவாக வகை பிரித்த காலனியவாதிகளுக்கு ஒன்றோடொன்று ஒத்த தன்மையுடைய பலவகையான சமயப் பயில்வுகளுள் காணப்பட்ட கூர்மையான சமூக, தத்துவ, சடங்கியல் வேறுபாடுகள் பற்றிய புரிதல் இன்மையின் பின்னணியில், அவர்கள் முன்பாக இருந்த ‘பெரிய – சிறிய’ சமய மரபுகளையெல்லாம் எல்லாம் ஒன்றாகத் திரட்டி பொதி செய்து அவர்கள் இட்ட பெயரே இன்று நாம் வைத்துள்ள மத வகையீடான இந்து மதமாகும். இந்தவரலாற்று யதார்த்தத்தின் பின்னணியில் தான்,  இந்துமதம் என்ற வகையீடு மீதான மென் பார்வையுடையோர் இந்து மதம் என்ற பெயரிடலுக்குப் பதிலீடாக, முன்பே அவ்வாறான ஒருவகைப்பாடு ‘சனாதன தர்மம்’  என்ற பெயரிடலோடு காணப்பட்டது எனக் கூற முயற்சிக்கின்றனர்.

இத்தகைய பின்னணியில், காலனியம் 19ஆம் நூற்றாண்டில்‘கண்டுபிடித்த’ புதிய மதவகையாக ‘ஹிண்டோ’ அல்லது ‘ஹிந்து’ (Hindoo / Hindu) என்பது சமூக சமயப் புலமைப் பரப்பில் முன்னிலையாகியது. அவ்வகையில், 1877இல் மொனியர் வில்லியம்ஸ் தனது நூலான ‘Hinduism’ என்பதில் ‘இந்து’ என்ற பதத்தைப் பயன்படுத்தி இருந்தார். ஆனால், அதற்கு முன்பதாகவே கிரேக்கர்களும், பாரசீகர்களும் ‘இந்து’ என்ற சொல்லை இந்து கடற்பகுதி சார்ந்த இடத்தைக் குறிக்க உபயோகித்திருந்தனர் என்பதை அவர் எடுத்துக்காட்டியதுடன், இந்துமதத்தை ஆரியர்களது மதமாகவும் பிரேரித்திருந்தார். இதன் மூலம் மதமும் – இனமும் இணைக்கப்பட்டன. இன்னும் ஆழமாகச் சொன்னால் ஹைபர் கணவாய் ஊடாக இந்தியப் பெருநிலத்துள் நுழைந்திருந்த குறிப்பாக இஸ்லாமியர் அல்லாத மக்கள் கூட்டத்துக்கான அதிகாரபூர்வமான மத அடையாளத்தை வழங்குதல் என்ற ஒருதிட்டமும் இதனுள் மறைமுகமாகத் தொழிற்பட்டுள்ளது என வாதிக்க முடியும். அகன்ற ஆரியவாதத்தின் இந்திய நிலைப்பட்ட மதமாக அவ்வகையில் இந்துமதம் நிறுவப்பட்டது எனவும் இம்முயற்சியைக் கூறலாம்.  இந்தப் ‘புதிய’ மத வகையீடும், பெயர் சூட்டலும் காலனிய அதிகாரப் பொறிமுறையின் கல்வி உள்ளிட்ட பல்வேறு கருவிகள் மூலம் சமூகத்தில் ஆழமாகப் பதியப்பட்டன.

மிகவும் குறிப்பாக, பிரித்தானியர்களது பிரித்தாளும் தந்திரத்திற்கான உத்தியாகப் பெரிதும் பயன்படுத்தப்பட்ட எதிரிடை இணைக் கருத்துருவாக்கங்களான இந்து – இஸ்லாமிய, ஆரிய – திராவிட என்ற பிரிப்புகள் ஊடாக இது மேலும் இலகுவாக சமூக – பண்பாட்டு நிலைப்படுத்தப்பட்டது. மெதுவாக சமூகத்தின் பௌதீக – உளவியற் புலத்தின் பொதுப்புத்தியின் ஏற்கப்பட்ட ஒரு நியமமாக அது மாறி ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளாகிவிட்டன. இந்து என்ற ‘மெகா’ உருவாக்கத்துள் பல்வேறு தலையாய மத மரபுகள் காணமற்போயின, கரைந்தன அல்லது கரைக்கப்பட்டன. அது நடைமுறையில் ஒரு படிமுறை – இன்னமும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நகர்வு. நாங்கள் அனைவரும் விரும்பியோ – விரும்பாமலோ அதன் முகவர்கள் ஆகியுள்ளோம். இன்னும் சரியாகச் சொன்னால் இந்த மாற்றங்களை – எமது வேர்களை நாமே பிடுங்கும் வேலைத் திட்டத்தை எங்களை அறியாமலே நாங்களே மேற்கொண்டுள்ளோம் என்பதுதான் அதன் வரலாற்று யதார்த்தம்.

அதேவேளை, வரலாற்றுரீதியாகப் பார்த்தால் மேற்படி காலனிய கால ‘இந்து’ மத உருவாக்கத்திற்கான அடிப்படைகள் அதற்கு பல காலத்திற்கு முற்பட்டன. பல்வேறு புராதன மத மரபுகள், வேத ஆரியப் பண்பாட்டு ஆதிக்கத்தால் அல்லது அரசர்கள் மேற்படி பிராமணிய மதப்பயில்வுகளை ‘உயர் மரபுகளாய்’ ஏற்றுக்கொள்ளத் தொடங்கியதன் பின்னணியில் ஏற்கனவே கலப்படையத் தொடங்கிவிட்டன. அல்லது இத்தகைய அதிகார இடர்களுக்குள் தம்மைத் தக்க வைத்தலுக்கான சமரசங்களை பிராமணிய மதங்கள் அல்லாதவை மேற்கொள்ளலாயின. இத்தகைய பின்னணியிற்றான், தென்னாடுடைய சிவன் பிராமணிய வேதமரபின் ருத்திரனுக்குள் கரைக்கப்பட்டார் என பிஸ்சப் கூறுகிறார். ஆனால், இவை எதுவும் எளிதாக நடக்கவில்லை; தென்னிந்திய மத வரலாற்றை உற்றுநோக்கும் எவரும் இந்த மகாயுத்தத்தின் நுட்பமான தடயங்களை தேவார ,திருவாசகங்கள் தொடக்கம் தெற்கத்தேய தத்துவ மரபுகள் வரை அவதானிக்க முடியும். இத்தகைய பகைப்புலத்தில் ‘தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவருக்கும் இறைவா போற்றி’ என்ற பதிக வரிகளது வரலாற்று  அரசியலை எம்மாற் புரிந்து கொள்ள முடியும். பக்தி இயக்கத்தினை உற்றுநோக்கினால் இந்த மாற்றங்களுக்கு எதிரிடையான போட்டியிடலை எம்மாற் கண்டுகொள்ள முடியும்.” ‘நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்’ என்ற வரிகளுக்கு பின்னால் இயங்கும் சமஸ்கிருத மதமரபுகளுக்கு எதிரிடையான நுட்பமான அரசியலை இந்தப் பகைப்புலத்தில் எம்மால் புரிந்துகொள்ள முடியும்.

அவ்வாறு பார்க்கும்போது வட இந்திய ஆரிய மேலாதிக்கப் பண்பாட்டுப் படர்ச்சியின் ஆதிக்கவழியாக உருவாகத் தொடங்கியிருந்த பிராமணிய மதவாதச் செயற்பாடுகளை மேற்படி காலனிய கீழைத்தேயவாதிகள் ‘இந்து’ என்ற சட்டகத்துள் நிலைநிறுத்திக்கொண்டனர் எனலாம். இந்தச் சட்டகமிடல் ஏற்கனவே குறிப்பிட்டது போல காலனியவாதிகளது சமூகத்தைப் பிரித்தாளுவதற்கான அரசியற் தந்திரோபாயத்திற்கான மிக வாய்ப்பான கருவியாகக் காணப்பட்டது. அதேநேரம் பின்காலனிய அரசியலின் தீர்மானகரமான அரசியல் முதலீடாகவும் அது காணப்படுகிறது.

இத்தகைய நிலைவரங்களூடாக 20ஆம் நூற்றாண்டில் விளைந்த இந்துத்தேசியவாதமானது,  இன்று முதன்மைப்படுத்தப்படும் இந்து அடிப்படைவாத மத நிலவரங்களுக்கான முக்கியமான செயல் ஊட்டத்தினைக் கொடுத்தது. அவ்வகையில் 1930களில் விநாயக் தாமோதர் சார்வாகரது எழுத்துக்கள் – செயற்பாடுகள் ஊடாக அது முன்னிலை பெறுகிறது. சார்வாகருக்கு முன்பதாகவே சந்தாரநாத் பாசு, பால கங்காரநாத் திலகர் முதலியோர் ‘ஹிந்துத்துவா’ என்ற கருத்தாக்கம் தொடர்பிற் பேசியுள்ளனராயினும் சார்வாகருடன்தான் அது மேலெழுச்சி பெறுகிறது. இவர்கள் ஹேபேட் ஸ்பென்சர் வழியுருவான ‘வலியன வாழும்’ (survival of the fittest) என்ற பதாகையின் கீழ் அனைத்துவிதமான அதிகாரப் பொறிமுறைகளையும் நியாயப்படுத்திக்கொண்ட சமூக டார்வினிசக் கோட்பாட்டின் (Social Darwinist) செல்வாக்கிற்குட்பட்ட ஆரிய மேன்மைவாதிகள் என தொமஸ் புளும் ஹன்ஸ்மென் எடுத்துக்காட்டுகிறார்.

கணபதிப்பிள்ளை-சூரன்

‘ஹிந்துத்துவா’ எனப் பொதுவாக அறியப்படும் மேற்படி போக்கு ‘இந்து’ என்ற அகன்ற வட்டத்துள் பௌத்தத்தையும், சமணத்தையும் கூட ஏற்றுக்கொள்கிறது. இந்த இடத்தில் அது காலனியகாலம் உருவாக்கிய மத வகைப்பாடுகளை மாற்றியமைத்து, தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் முகமாக ஒரு சட்டகத்திற்குட் செல்கிறது. அவ்வகையில் அகன்ற இந்துச்சட்டகம் புத்தரையும், பௌத்தத்தையும், பௌத்தர்களையும் தன்னுள் உள்வாங்கிக் கொள்கிறது. ஏனைய இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான மதங்களை தனக்கு எதிர்ப்புறத்தில் நிறுத்திக் கொள்கிறது.

இது பெரியளவில் வெளித்தெரியும் சட்டகமாயினும், நுட்பமாகப் பார்த்தால் இந்து மதப் பெருஞ்சட்டகத்துள் ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ள தனித்துவமான மத அனுட்டான மரபுகள் – தெய்வங்கள் என்பன வேறுவிதமாகப் பின் தள்ளப்பட்டு ஒருவகையான ஒற்றைப்படையான ‘மெகா’ இந்துச் சட்டகத்துள் கரைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கரைப்புக்குள் ஈழச்சைவத்தின் இடமும் – படமும் நுட்பமான மாற்றத்தையடைகின்றன. அதன் தனியிடம் பெரும் இந்து வட்டத்துள் பின் தள்ளப்படுகிறது.

மேற்படி வரலாற்றை மறுபடி வாசிக்கவும், வரலாற்றுநிலைப்படுத்தவும், அதனைப் புலமைசார் – மரபுரிமைசார் வெளிகளுக்கு எடுத்து வரவும் அவை தொடர்பான ஆய்வுகள், எழுத்துக்கள் என்பவற்றுடன் அது சார்ந்த பண்டைய ஆவணங்களது சேகரிப்பும் அவசியமான  உடனடித் தேவையாகவுள்ளது. ஈழச்சைவம் மற்றும் சைவசித்தாந்தம் சார்ந்தெழுந்த ஓலைச்சுவடிகள், அச்சுப்பிரதிகளின் சேகரிப்பு அதில் முக்கியமானது. குறிப்பாக 19ஆம் நூற்றாண்டு, 20ஆம் நூற்றாண்டின் முன்னரைப்பாதியில்  ஈழத்தில் நடந்தேறிய புலமை எழுச்சி மற்றும் அச்சுவெடிப்பு மூலமாக உருவாகிய கருத்தாடல் வெளியை உருவாக்கிய ஆவணங்களை இலக்காகக் கொண்ட ஆவணமாக்கற் செயற்பாடு குறிப்பிடத்தக்கதொன்றாகும். . இந்தக் காலகட்டத்தின் பெரும்பகுதி ஆவணங்கள் மத வழிப்பட்டவை. காலனிய நவீனத்தின் புதிய சமூக பண்பாட்டு நிலவரங்களின் வழிப்பட்டவையும், அவற்றுக்கு எதிர்வினை ஆற்றியவையுமாகும். நாவலருக்கு முற்பட்ட காலகட்டம் தொடக்கம், நாவலர் காலம், அவருக்குப் பிற்பட்ட காலம் வரையான பயணப்பாதையின் வழியுருவாகிய அனைத்து ஆவணங்களும், வரலாறுகளும் தனியொரு பிரிவாக ஆவணப்படுத்தப்பட  வேண்டும்.

ஆவணங்களும், வரலாறுகளும் தனியொரு பிரிவாக ஆவணப்படுத்தப்பட  வேண்டும்.

சைவசித்தாந்த நூல்கள்

அந்தத் தனி ஆவணப்பிரிவு தன்னுள் பல உபகளங்களைக் கொண்டதாக கட்டமைக்கப்படவேண்டும். இதிற் தலையாயது சைவசித்தாந்தத்தின் யாழ்ப்பாணப் பள்ளி சார்ந்த ஆவணங்களை,  ஆவணமாக்கல் செய்தலாகும். குறிப்பாக, சிதம்பரத்தில் ஞானப்பிரகாச குளத்தினை வெட்டுவித்து, அங்கேயே வாழ்ந்து மறைந்த யாழ்ப்பாணம் திருநெல்வேலி சுவாமி ஞானப்பிரகாசரது சமஸ்கிருதத்திலும், தமிழிலுமுள்ள சைவசித்தாந்த நூல்கள், குறிப்பாக அவரது ‘சிவசமவாதக் கொள்கையை’ முன்வைக்கும் ஆவணங்கள் முதல் பொ.கைலாசபதி அவர்களது சைவசித்தாந்த வியாக்கியானத்தை முன்வைக்கும் எழுத்துக்கள் மற்றும் அதன் பண்பாட்டுப் புலமைச்சூழலில் இயங்கிய பண்டிதமணி கணபதிப்பிள்ளை தொடக்கம் பண்டிதர் மு. கந்தையா, அதிபர் சபாரத்தினம் முதலான மேற்படி பள்ளியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பலரதும் எழுத்துக்கள் – கையெழுத்துப் பிரதிகள் ஆவணச்சேகரிப்பு வட்டத்துள் எடுத்துவரப்பட வேண்டியவை.

அதேசமயம் ஆறுமுகநாவலர் சைவசித்தாந்த நூல்களை எளிமையாக வசனபூர்வமாக்கிய முன்னோடியாகக் கருதப்படுபவர் – அவரது அனைத்து எழுத்துக்களும் தொகுக்கப்படவேண்டும். – குறிப்பாக பாடசாலைக் கலைதிட்டத்துள் அவரது ‘பாலபாடம்’ முதலிய நூல்கள் வழியாக சைவசித்தாந்தம் உள்நுழைத்த முறையை முன்னிறுத்தும் எழுத்துக்கள் முக்கியமானவை. ஒருவகையில் அவை பாடசாலைப்பரப்பில் சைவத்தை பாடமாக்கிய முறைக்கான முதல் அடியெடுத்து வைப்பாகக் காணப்பட்டன.  அதேபோலவே காசிவாசி செந்திநாதையரது நூல்கள் தொகுக்கப்படவேண்டும். அவர் தனது எழுத்துக்களில் ‘சைவவேதாந்தம்’ என்ற பதப் பிரயோகத்தை செய்துள்ளார் என்பதுடன் 1902இல் அவர் திருப்பரங்குன்றத்தில் ‘சைவசித்தாந்த வித்தியாசாலையையும்’ நிறுவியுள்ளார். நீர்வேலி சங்கர பண்டிதர், அச்சுவேலி குமாரசாமிக் குருக்கள், ஈழகேசரி பொன்னையா, ஈ. சிவபாதசுந்தரனார், அருணாசலதேசிகர், இணுவில் நடராஜ ஐயர், சுவாமிநாத பண்டிதர், அம்பலவாணநாவலர், திருவிளங்கம், திக்கம் செல்லையாபிள்ளை, கொக்குவில் சபாரத்தின முதலியார், நடேசபிள்ளை உட்பட இம்மரபினைச் சார்ந்தவர்களது எழுத்துக்களும் தொகுக்கப்படவேண்டும்.

வடமராட்சியில் சூரன் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய சைவசித்தாந்தமரபு, ஆகம உரைகள், பத்ததி மரபுகள், பத்ததி மரபுகள் சார்ந்து நிகழ்ந்த மோதுகைகள், சைவக்குருக்கள் மரபு வழி வருகின்ற சடங்குகள் பற்றிய பனுவல்கள் முதலான பல்வேறு எழுத்துக்கள் (இன்று அவர்களும் அவர்களது சடங்குசார் செயற்பாடுகளும் பெரியளவில் பிராமணியப்பட்டு வருகின்றன என்பது இன்னொரு துயரமான யதார்த்தம் – நாவலர் காலத்திலேயே இந்தப் பிராமணியம் நோக்கிய மாற்றம் குறித்து அவர் விசனமடைந்ததை அவரது எழுத்துக்களிற் காணலாம்) எனப் பரந்து விரிந்த களத்தில் அனைத்து  ஆவணங்களும் சேகரிக்கப்படவேண்டும். நேரடியான தத்துவ, சமய, சடங்கியல் நூல்களுக்கப்பால் சோமசுந்தரப் புலவர் முதலிய பலரது சைவசித்தாந்த தத்துவத்தை முன்னிறுத்திய பாடல்கள், நாடகங்கள் முதலியனவும் இச் சேகரிப்புக்குள் வரவேண்டும். இது ஈழத்துச் சைவசித்தாந்தத்தை ஆவணப்படுத்துஞ் செயற்பாட்டின் இரண்டாவது பெரிய களம். பெருந்தொகையான  19ஆம், ஆரம்ப 20ஆம் நூற்றாண்டுப் பனுவல்கள் ஊர்கள் தோறும் பரந்துபடவுள்ளன.  இவை சேகரிக்கப்பட வேண்டும்.

த. கோயிலார் சிவசாமி

இதேநேரம் விலகலான சில உதாரணங்களை விடுத்துப் பார்த்தால் ஈழத்து சித்தர்மரபு என்பது கூட பெரியளவு சைவசித்தாந்த மரபின் செல்வாக்கிற்கு உட்பட்ட ஒன்றாகவே பெருமளவுக்கு இருந்துள்ளது என்பதைக் காணலாம். உதாரணமாக சிவயோகசுவாமிகளது எழுத்துக்கள், செயற்பாடுகளில் அதனை அவதானிக்கலாம். அவ்வகையில் ஈழத்துச் சித்தர் மரபினூடாக வெளிவந்த  சைவ – சைவசித்தாந்த மரபும் எமது ஆவணவெளிக்குள் எடுத்துவரப்பட வேண்டியதே.   சித்தர் மரபுக்கும் – சைவசித்தாந்த மரபிற்குமிடையான ஊடாட்டம் பற்றிய எண்ணத்தை தூண்டிய நிலாந்தன் அவர்களூடான பலகாலங்களுக்கு முற்பட்ட உரையாடலை நன்றியுடன் இவ்விடத்தில் நினைவு கூர்கிறேன்.

அது மட்டுமின்றி  கந்தபுராண உரைகள், இன்றுமுள்ள அதன் வாய்மொழி எடுத்துரைப்பு முறைகள் (புராண படனம், கதாப்பிரசங்கம்) என்பனவும் இந்தப் பெருவட்டத்துள் எடுத்துவரப்படவேண்டும். ஏனெனில் கந்தபுராணம் சைவசித்தாந்த சட்டகத்தினூடாகவே இப்பிராந்தியத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது. விரிவான அர்த்தத்தில் தலபுராணங்கள், தலங்களுக்காகப் பாடப்பட்ட பாடல்கள் என்பனவும் இக் கண்கொண்டு நோக்கப்பட்டு உள்வாங்கப்பட வேண்டும். அது இதன் சேகரிப்பு புலத்தின் மூன்றாம் பெருங்களமாகும்.  அதேசமயம் சைவ, சைவசித்தாந்தப் புலத்திற் தொழிற்பட்ட நிறுவனங்கள் பற்றிய விபரங்கள், அவர்களது வெளியீடுகள் முதலியனவும் இந்த ஆவணமாக்கற் செயற்திட்டத்தினுள் எடுத்துவரப்படவேண்டும். அதனை அதன் நான்காம் களமாக வரையறுத்துக் கொள்ளலாம்.

இந்துசாதனம், திராவிடப் பிரகாசிகை, ஈழகேசரி முதலான பத்திரிகைகள் 20ஆம் நூற்றாண்டின் முதலரை நூற்றாண்டுகால பாடசாலைச் சஞ்சிகைகள் முதலியன வரையான அச்சுடல்கள் தாங்கியுள்ள ஈழச் சைவம் – சைவசித்தாந்தம் பற்றிய கட்டுரைகள் – விவாதங்கள் தொகுக்கப்படவேண்டும் (இன்னொரு புறம் சைவம் இந்துமதச் சட்டகத்துள் கரையத் தொடங்குவதையும் அவ்வெழுத்துக்கள் காட்டுகின்றன. அவ்வகையில் அவற்றுக்குள்  ஒருவகையான இருமைத்தன்மை மயக்கத்தையும் காணக் கூடியதாகவுள்ளது). இவற்றை ஆவணமாக்கற்  செயற்பாட்டின் ஐந்தாம் களமாகக் கொள்ளலாம்.

அதனைவிடவும் மேற்படி செயற்பாடுகள் தொடர்பான அறிமுகங்கள், மீள் வாசிப்புக்கள் என்பனவற்றை ஒட்டிய இன்றுவரையான நூல்கள், கட்டுரைகள், செய்திகள், செயற்பாடுகள் ஆவணப்படுத்தப்படவேண்டும். அதேபோல மீள்பதிப்புக்கள் உட்பட்ட பதிப்பு விபரங்களது பட்டியலாக்கத்தை முன்னிறுத்திய தகவற்பலகையை (data base) உருவாக்கல் என்பவற்றை ஒட்டி ஆவணமாக்கல் பற்றிச் சிந்திக்க வேண்டும். குறைந்தபட்சம் நாளை இந்த ஆவணங்களாவது ஈழச்சைவ – சைவசித்தாந்த வரலாற்றை அறிவதற்கான ஆவணங்களாக மிஞ்சும். இல்லாவிட்டால் குறிப்பாக எமது காட்சி வரலாற்று மரபுரிமைக்கு (கட்டடங்கள், ஓவியங்கள்…) நாங்கள் இழைத்த – இழைக்கின்ற குற்றத்தை அச்சு ஆவணங்களுக்கும், மூலச் சுவடிகளுக்கும் செய்தவராவோம். இதனை ஆவணமாக்கலின் ஆறாம் களமாக எடுத்துக்கொள்ளலாம்.


இந்தக் கட்டுரை ஒரு முன்மொழிவு மட்டுமே; பூரணமான பட்டியல், விபரங்களோடு கூடிய ஒரு கட்டுரையல்ல. திறந்த சிந்தனை மற்றும் செயற்பாட்டினை நோக்கி முன்வைக்கப்பட்ட சுருக்கமாக ஒரு சிந்தனைப் பகிர்வுதான். இந்தப் பின்னணியில்  இந்தச் செயற்பாட்டின் முதன்மைத் தேவையாக இருப்பது இத்துறைசார்ந்த பரந்துபட்ட ஆய்வும், பட்டியலாக்கமுமாகும். ஏற்கனவே பின்வந்தவர்களாலும், சமகாலத்தவர்களாலும் செய்யப்பட்டுள்ள முன் முயற்சிகளை மேலும் விரிவாக்குவதன் மூலம் அதனை மேலுஞ் செழுமைப்படுத்தலாம். இதற்கு தமிழக ஆதீனங்கள் – மடங்களது பிரசுரங்கள் மற்றும் நூலகங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக பாண்டிச்சேரி பிரஞ்சு நிறுவனத்தின் ஆகமம், பத்ததிச் சேகரிப்புக்களைப் பார்வையிடவேண்டும். ஏனெனில், 19, 20ஆம் நூற்றாண்டின் முதற்பகுதி ஈழத்துக்கும், தமிழகத்திற்குமான சமய – தத்துவ புலமை உரையாடல் விரிவானதும், முக்கியத்துவமுடையதுமாகும். அது மட்டுமின்றி பதின்நான்கு மெய்கண்ட சாஸ்திர நூல்களைச் சேகரித்து பதிப்பாக்கம் செய்ய முற்பட்ட காலத்தில் தமிழகத்தில் அப்போது கிடைக்கப் பெறாத நூல்கள் ஈழத்தில் இருந்தே கிடைத்தன என்ற செய்தியும் எமக்கு முக்கியமானது. இச் செயற்பாடுகளின் அடுத்த கட்டமாக காலனியகாலத்து தமிழ் – சமஸ்கிருதச் சேகரிப்புகளை கொண்டுள்ள உலகளாவிய நூலகங்கள் – ஆவணக்காப்பகங்களைப் பார்வைக்குட்படுத்த வேண்டும். இதன் மூலம் பெரியளவிலான ஈழச் சைவத்துக்கும் – சைவசித்தாந்தத்துக்குமான ஆவணவெளியை கட்டமைக்கலாம்.

அதேநேரம் ஈழச் சைவக் கட்டுமானத்துள் நிகழ்ந்த வேறுபட்ட வழிபாட்டு மரபுகளை விளிம்புநிலைப்படுத்தல் – அதன் அதிகாரப் பொறிமுறை, அதன் வரலாற்று அசைவியக்கம் பற்றித் இந்தக்கட்டுரை பேசவில்லை. அது நாம் பேசவேண்டிய மற்றொரு பெருங்களமாகும் என்பதுடன் பேசப்படவேண்டிய இதன் மறுபாதியுமாகும். பிறிதொரு கட்டுரையில் அது பற்றிச் சிந்திக்கலாம்.

எழுநா  ..... பாக்கியநாதன் அகிலன்.

தொடரும்.