01.04.2023...செல்வராசா வசந்தகுமாரி, முன்னாள் போராளி..!பூநகரி முழங்காவில் பிரதேசத்தில் இருக்கும் குமுழமுனை எனும் கிராமத்தில் வசிக்கிறார். 2009 இறுதி போரின்போது கைதாகி, புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்படுகிறார்.
2010 செப்டம்பரில் விடுதலையான அவர், பாடசாலை ஒன்றில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். அதேவேளை தொண்டு நிறுவனம் ஒன்றிலும் பணிபுரிகிறார். கிராமங்கள்தோறும் சென்று, வாழ்வின் அடிமட்டத்தில் இருக்கும் பெண்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிவது இவரின் பணியாகும்.
கணவனை இழந்த அல்லது கணவரால் கைவிடப்பட்ட பலநூறு பெண்களை வசந்தகுமாரி சந்திக்கிறார். அவர்களோடு பேசுகிறார். அப்பெண்களின் துயரக்கதைகள் இவரின் மனதை வாட்டுகிறது. அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவெடுக்கிறார்.
தொழிற்சாலை ஒன்றை நிறுவி, பலருக்கு வேலை கொடுக்கலாம் எனும் எண்ணம் தோன்றுகிறது. அதன்விளைவாக, ‘எபினேசர் தும்புத் தொழிற்சாலை’ எனும்பெயரின் தனது தொழில்கூடத்தை தொடங்குகின்றார். இடையே வேறொரு தும்புத்தொழிற்சாலையில் இயந்திர இயக்குனராகப் பணிபுரிந்த அனுபவம், வசந்தகுமாரிக்கு கைகொடுக்கிறது.
தொடக்கத்தில் 4 பெண்களுக்கு மட்டுமே அவரால் வேலை கொடுக்க முடிந்தது. ஆனால் தனது தொடர் முயற்சிகளால் தொழிற்சாலையை விரிவாக்கியவர், இன்று 15 பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறார். தும்பு உற்பத்தியுடன் சேர்த்து, கால்மிதி, கயிறு, எண்ணை போன்ற இன்னபிற உற்பத்திகளிலும் ஈடுபடுகிறார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி தனது தொழிலையும் பாதித்ததாக வசந்தகுமாரி குறிப்பிடுகிறார். போதியளவு ஏற்றுமதி வாய்ப்புக்கள் கிடைத்தால், மேலும் பல பெண்களின் வாழ்வாதாரத்தை தன்னால் உயர்த்தமுடியும் என்று நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்.
கடந்த ஆண்டில் ‘சிறந்த தொழில் முயற்சியாளருக்கான விருதும் சான்றிதழும்’ இவருக்குக் கிடைத்திருக்கிறது.
‘பிறப்பும் இறப்பும் மட்டுமே நம்மைத் தேடிவரும். ஏனைய அனைத்தையும் நாமே தேடிக்கொள்ள வேண்டும்’ என்கிறார் நமது முயற்சியாளர் செல்வராசா வந்தகுமாரி.
அதன்படி தானும் முன்னேறி, ஏனைய பெண்களின் வாழ்வையும் முன்னேற்ற நினைக்கும் இவரின் முயற்சிகள் மென்மேலும் வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.