குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கடலுக்கு அடியில் தமிழர் நாகரிகம்‘ ...என்ற தலைப்பில் தொல்லியல் அறிஞர் டி.கே.வி.இராயன் பேசியது.

ஆகசுட் - 2015,தினமலர் நாளிதழ். குமரிநாடு.கொம்  இணையத்தில் இடப்பட்ட பக்கல் 29.01.2023

கடலுக்கு அடியில் தமிழர் நாகரிகம்‘ ...என்ற தலைப்பில் தொல்லியல் அறிஞர் டி.கே.வி.இராயன் பேசியது....

மிகப்பெரிய அளவில் பூம்புகார் கடல் அகழாய்வு செய்யவேண்டும் என்றார்.இப்போதுதான் செய்யப்பட்டது.

சங்க இலக்கியம் கூறிய குமரிகண்ட குறிப்புகள் உண்மையா என்பதை கண்டறிய குமரியிலிருந்து மடகாஸ்கர் வரை ஆய்வு பயணம் மேற்கொள்ளவேண்டும் என்கிறார் இராயன்.

கபாடபுரம், பஃறுளி ஆறும் எங்கே என்று கண்டறிய வேண்டும் என்கிறார் மத்திய தொல்லியல்துறை இயக்குனர் தயாளன்.

 

இராயன் ஐயா பேசியது...

" தமிழக நாகரிகம் கண்டறிய ஆழ்கடல் தொல்லியல் அகழாய்வு அவசியம் "

"பிரபல நாணயவியல் ஆய்வாளர் டாக்டர் இரா.கிருச்ண மூர்த்தி கண்டுபிடித்த

பெருவழுதியின் காசுகள், சங்ககால ஆராய்ச்சியின் மிகப்பெரிய திருப்பு முனை;

தமிழர் நாகரிகத்தை முழு மையாக அறிய, கடல் கொண்ட சங்ககால நகரங்கள் குறித்து ஆழ் கடல் தொல்லியல் ஆய்வு நடத்துவது மிக அவசியம்,'' என தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி.இராயன் தெரிவித்தார்.

இந்திய அறிவியல் கண்காணிப்பு அமைப்பின் நிறுவனரும்,

தொல்லியலாளருமான டி.கே.பி.இராயன், கடந்த, 20 ஆண்டுகளாக கண்ணன் குறித்த, சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்திய நாகரிகம் குறித்த

பல நூல்களை எழுதியுள்ளர்.

கடலுக்கு அடியில் தமிழர் நாகரிகம்‘ என்ற தலைப்பில் டி.கே.வி.இராயன் பேசியதாவது

உலகில், தலைசிறந்த நாகரிகங்களில் மிக பழமையானதும், இன்றும் சிறப்பாக இருந்து வருவதும், தமிழ் நாகரிகமே என்பது உலக வரலாற்று ஆய்வாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. ஆனால், கிரேக்க, ரோமானிய நாகரிகங்களை போல், நம்மால் முழு அளவில் கண்டுபிடிக்க முடியவில்லை. சங்க இலக்கியத்தோடு, இணைக்கப்பட்ட இடங்களில் அகழாய்வு நடைபெற்று உள்ளன. அந்த ஆய்வில், தமிழ் பிராமி எழுத்து கொண்ட மண் பாண்டங்கள், சுடுமண் குழாய்கள், செங்கற்சுவர்கள், சங்ககால தமிழர், கிரேக்க – ரோமானிய நாடுகளோடு வாணிப தொடர்பு வைத்துள்ளதற்கான ஆதாரங்களான ஆயிரக்கணக்கில் மணிகள், சங்கு வளையங்கள், பாத்திரங்கள் கிடைத்துள்ளன.

அவற்றின் மூலம், சங்க கால தமிழரின் வாழ்க்கையை ஓரளவிற்கு அனுமானிக்கலாமே, தவிர முழு அளவில் கண்டறிய முடியாது. கடந்த 1903ல், அலக்சாண்டர் ரீ என்ற ஆய்வாளர், துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுாரில் நடத்திய அகழாய்வில் வெண்கல பாத்திரங்கள், இரும்பு கத்திகள், வேல்கள், பொன் பட்டயங்களை கண்டுபிடித்து,

அவற்றை, பெர்லின் அருங்காட்சியகத்தில் வைத்தார். ‘தமிழகம், தெற்காசிய நாடுகளின் நாகரிக தொட்டில்‘ எனவும், அவர் புகழாரம் சூட்டினார். நுாறு ஆண்டுகளுக்கு பின், மத்திய தொல் பொருள் இலாகா சார்பில், சத்யமூர்த்தி தலைமையில், ஆதிச்சநல்லுாரில் மீண்டும் அகழாய்வு நடந்தது. அப்போது, இதன் நாகரிகம் கி.மு., 1,700க்கு முற்பட்டது. இரும்பு, வெண்கலம் உருவாக்கும் ஆலைகள் அங்கே இருந்துள்ளன என்பதும் ஆய்வில் தெரியவந்தது. அங்கு கண்டறியப்பட்ட பனை ஓட்டு ஓவியம் சங்க இலக்கியத்தை பிரதிபலிக்கிறது. பிரபல நாணயவியல் ஆய்வாளரும், ‘தினமலர்‘ நாளிதழ் ஆசிரியருமான டாக்டர் இரா.கிருச்ணமூர்த்தி, சங்ககால அரசனான பெருவழுதியின் நாணயங்களை கண்டுபிடித்தார். இது சங்க கால ஆராய்ச்சியின் மிகப்பெரிய திருப்புமுனையாக விளங்கியது.

மத்திய தொல்லியல் இலாகா இயக்குனர் தயாளன், சங்ககால அரசர்களான அதியமான், ஆய் ஆண்ட இடங்களிலுள்ள குகை கோவில்களை கண்டறிந்தார். சங்க கால ஆராய்ச்சிக்காக பாடுபட்ட இவர்களை போன்ற தகுதியானவர்களை, தமிழகம் என்றும் மறக்காது. நமது நாகரிகம் 4,000 ஆண்டுகள் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

அதன் ஆதாரங்கள் நிலத்தில் கிடைக்கவில்லை. ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியின் வழியாக கண்டுபிடிக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில் காவிரிபூம்பட்டினம் (பூம்புகார்) கடலில் அழிந்ததாக கூறப்படுகிறது. இது, 30 சதுர மைல்கள் கொண்டது. அங்கு ஆழ்கடல் ஆய்வு, 1985 முதல் 1996 வரை, நான்கு கட்டங்களாக சிறிய அளவில் நடந்தது. இதில், 18ம் நுாற்றாண்டில் மூழ்கிய கப்பல் பகுதிகள் கட்டட பகுதிகள் கிடைத்தன.

பூம்புகார் ஆழ்கடல் ஆய்வில் கடலின் தரைப்பகுதியில், மூன்று மைல் பரப்பளவில் கட்டடங்களின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் கடலாய்வு மேற்கொண்டால் கடல் கொண்ட பூம்புகாரை வெளியே எடுத்து விடலாம்‘ என ஆய்வு நடத்திய தொல்லியல் ஆய்வாளர் எசு.ஆர்.ராவ் தெரிவித்துள்ளார். பூம்புகாரை போலவே, வடகோடியில் கடலில் மூழ்கிய மணிபல்லவம் (ஜம்பு கொலப்பட்டினம்), மருங்கூர்பட்டினம் ஆகியவற்றிலும் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட குமரி கண்டம் பற்றி குறிப்புகள் உண்மையா என கண்டறிய குமரியிலிருந்து மடகாசு(ஸ்)கர் வரை ஆய்வுப் பயணம் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமான என்.ஐ.ஓ.டி., கடல் ஆய்வு கப்பலை, தனியார் ஆய்விற்கு அனுமதிக்கிறது. இதற்கான கப்பல் வாடகை, 1.5 கோடி ரூபாய் வழங்க தனியார் அமைப்பினர் தயாராக உள்ளனர். ஆனால், சங்ககால ஆழ்கடல் ஆய்விற்கு மத்திய தொல்லியல் இலாகாவும், வெளியுறவு துறையின் அனுமதி தேவை. அந்த அனுமதியை தமிழக அரசு பெற்று தந்து, கடலுக்கு அடியில் புதைந்துள்ள தமிழ் நாகரிகத்தை ஆராய உதவ வேண்டும்

இவ்வாறு இராயன் கூறினார்.

மத்திய தொல்லியல் இலாகா இயக்குனர் தயாளன் கூறியதாவது: தமிழக அரசர்கள் பல நாடுகளை கடந்து வர்த்தகம் செய்துள்ளதாக சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. நமது அகழாய்வில் கிரேக்கம், யாவா, சுமித்ரா நாட்டினர் நமது நாட்டிற்கு வந்து வர்த்தகம் செய்த தடயங்கள் கிடைத்துள்ளன. கபாடபுரம், பஃறுளி ஆறு, தென்மதுரை போன்ற ஊர்கள் எங்குள்ளன என தெரியவில்லை. கடல் ஆய்வில் பல தொழில்நுட்ப உபகரணங்கள் வந்துள்ளன. அவற்றின் மூலம் ஆய்வு மேற்கொண்டால் பல ஆதாரங்கள் கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார். மறைமலை அடிகளாரின் பேரன் தாயுமானவன் உடன் இருந்தார்.